அனைத்துலகத் தமிழிலக்கிய அடையாளமும் இப்போதைய விவாதங்களும்

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

தமிழவன்


நான் சமீபத்திய இலங்கைத் தமிழ்க் கவிதைகளைக் கன்னட மொழியில் மொழிபெயர்ப்பதற்குச் சிலர் மூலம் ஒரு முயற்சியைச் சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டிருந்தேன். பின்பு சுமார் முன்னூறு பக்கமுள்ள அத்தொகுப்பு வெளிவந்தபோது பலர் கவனத்தை அத்தொகுப்பு கவர்ந்தது.தற்கால இந்திய இலக்கியத்தில் கன்னட மொழிதான் முன்னணி வகிப்பது என்பது எல்லோரும் அறிந்த உண்மை.அம்மொழியின் இலக்கிய விமர்சகர்களும் கவிஞர்களும் அத்தொகுப்பை மிகவும் புகழ்ந்தனர்.கன்னட மொழியில் அதுபோல் தொகுப்பு ஏதும் இல்லை என்று ஏகமுகமாகக் கருத்துச் சொல்லப் பட்டது.அதன் வெளியீட்டு விழாவில் கானடாவிலிருந்து வந்து சேரன் கலந்துகொண்டார்.அதுபோல் பிற இந்திய மொழிகளுக்கும் அக்கவிதைகளை மொழிபெயர்த்தால் எந்த இந்திய மொழியிலும் இல்லாத விதமான போராட்டக் கவிதைகளாக அவை இருக்கும் என்று கூறப்பட்டது.

ஈழக் கவிதைபோல் மலேசியத் தமிழ் கவிதைகளையும்,சிங்கப்பூர் தமிழ்க் கவிதைகளையும்

தொகுக்க முடியுமா என்ற என் தேடலுக்குப் பதிலாகக் கிடைத்த எதிர்வினை ஏமாற்றமடையச் செய்வதாக இருந்தது.மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தமிழிலக்கியம் ஏன் இலங்கை போலவோ, தமிழகம் போலவோ வளரவில்லை ? மலேசிய,சிங்கப்பூர் சூழ்நிலைக் கேற்றவிதமான கவிதை,நாடகம்,இலக்கியத் திறனாய்வு,நாவல் போன்றன ஏன் வளரவில்லை ?பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கு இலக்கியம் வளர்ந்திருக்கிறது என்ற பாவனையில் இராமையா என்பவர் எழுதிய மலேசிய இலக்கிய வரலாறு(நூல் பெயர் ஞாபகத்திலிருந்து எழுதப்படுகிறது) என்ற நூலைப் படித்த போதும் இந்த என் கருத்து உறுதிப் பட்டது.தற்காலத் தமிழிலக்கியம் மலேசியா,சிங்கப்பூரில் வளரவில்லை.இந்த வகையில் மிக நல்ல ஓர் பேட்டியைச் சிங்கப்பூர் நாடகத்துறையைச் சேர்ந்த இளங்கோவன் ‘ கட்டியம் ‘ நாடக இதழின் சமீபத்திய இதழ் ஒன்றுக்கு அளித்திருந்தார். அவருடைய பேட்டியைப் படித்தபோது அங்குத் திராவிட எழுத்துக்களின் போலி பாதிப்பிலிருந்து தமிழ் எழுத்து விடுபடாதது தற்காலத் தன்மை கொண்ட தமிழ் இலக்கியம் உருவகாததற்கு ஒரு காரணம் என்று புரிந்தது.வேறு காரணங்களும் உள்ளன.

இன்று உலமெங்கும், இலக்கியம் முக்கியமான ஒரு ஆழ்மன வரலாற்று ஆவணமாக எல்லோராலும் அங்கீகரிக்கப் படுகிறது.பின்நவீனத்துவ ஆராய்ச்சிகள் அடிப்படை தரவாக இலக்கியத்தைப் பயன் படுத்துகின்றன. தமிழ் அடையாளம் என்பதில் தமிழ் இலக்கியம் முக்கியமான பங்கு வகிக்கிறது.மலேசிய, சிங்கப்பூர் தமிழிலக்கியம் அந்த மண்ணின் இயல்புக்கு ஏற்ற இலக்கியமாக வந்தால் உலகத் தமிழ் அடையாளம் அதன் அடிப்படைகளைக் காண எளிதாகும்.

இன்றைய சூழ்நிலையைப் பார்க்கும்போது தென்கிழக்காசியாவில் இந்தியத் தமிழ் இலக்கியமே முன்னணியில் இருப்பதாகத் தயக்கமின்றிக் கூறலாம்.கவிதையைப் பொறுத்தவரையில் ஈழ-தமிழகத் தற்காலக் கவிதைகள் இரு பெரும் ஆழமான மரபுகளாக கவர்விட்டுப் பிரிந்து போகின்றன என்பது என் கணிப்பு.நாவலைப் பொறுத்தவரையில் தமிழகம் சென்றுள்ள மட்டத்தை எட்ட ஈழ எழுத்துக்குப் பல காலமாகலாம்.இலண்டனில் ஒரு முறை இக்கருத்தை நான் பத்மனாப ஐயர் ஏற்பாடு செய்த இலங்கை எழுதாளர்களின் ஒரு கூட்டத்தில் கூறியபோது என்கருத்தை ஏற்கிற முறையிலேயே அங்குப் பலரின் எதிர்வினை இருந்தது. என்போன்றதான ஒரு கருத்தை என் நண்பர் யமுனா ராஜேந்திரன் கூட அவர்கள் மத்தியில் தெரிவித்து வருவது பற்றிக் கூட அங்குக் கேள்விப் பட்டேன்.பழந்தமிழிலக்கியத்தில் அனைத்துலக மட்டத்தில் வேறு நூல்கள் மூலம் கொடுப்பினை செய்துள்ள கைலாசபதி,எழுதிய ‘தமிழ் நாவல் இலக்கியம் ‘ முக்கியமான நூல் என்றாலும் இலங்கையில் நாவல் தோன்றாததற்கு அந்தப் புத்தகமும் ஒரு காரணம்.தமிழகத்திலும் முற்போக்கு வட்டாரத்தின் தடுமாற்றத்துக்கு அந்த நூல் ஒருகாரணம்.கைலாசபதியின் நூல் என்ன விளைவை ஏற்படுத்தினாலும் அந்த நூல் இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகளில் வந்தது ஒரு முக்கியமான நிகழ்ச்சி என்பதை மறுக்கமாட்டேன்.கைலாசபதியின் இதுபோன்ற ஒருநூலை மலேசியா,சிங்கப்பூரிலிருந்து எதிர்பார்க்க முடியாது.இவ்வளவுக்கும் தற்கால இலக்கியத்தில் ஈடுபாடுள்ள தமிழ்ப் பேராசிரியராக அக்காலத்தில் அறியப்பட்ட இரா.தண்டாயுதம் சென்னையிலிருந்து போய் மலேசியாவில் தமிழ்ப் பேராசிரியரக இருந்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். பின்பு பேராசிரியராக இருந்த திரு.கோவிந்தசாமி தற்காலத்தமிழ் இலக்கிய உணர்வு கொண்டிருந்தவர். இவ்விரு நாடுகளிலும் உள்ள தமிழர்கள்,தற்கால இலக்கியத்திற்கு அடிப்படையை நல்கும் ஆங்கில அறிவை இந்தியத் தமிழர்களைவிட உயர்ந்த வகையில் பெற வாய்ப்புப் பெற்றவர்கள்.ஆனால் தற்கால இலக்கியம் ஏன் அங்கு ஆரம்பத்தைத் தாண்டி வரவில்லை ? இலக்கியம் என்பது மேசை,நாற்காலி போல் பயன் படுபொருள் என்ற தமிழ்ப் பண்டித அறியாமையை இன்னும் கொண்டிருக்கிறவர்கள் இருக்கிற நாடுகள் இவை என்ற எண்ணமும் பலரிடம் இருக்கிறது.இப்படிப்பட்ட சக்திவாய்ந்த தடைகளைத் தாண்டி நவீனத் தமிழிலக்கியமும் நவீன உலகத் தமிழ் அடையாளமும் இந்த நாடுகளில் இருந்து கிடைக்கும் வழிவகைகளே இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது.

இந்தியத் தமிழில் கூடத் தற்கால இலக்கியம் தோன்றுவதை பழம் பண்டிதர்கள் ஆதரிக்கவில்லை.இப்போதுகூட தமிழகத்தில் தற்காலத் தமிழ் இலக்கியம், தமிழை மரபாகப் படிக்காதவர்களாலேயே உருவாக்கப் படுகிறது.தமிழகத்தில் இருக்கும் கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியர்கள் பழைய இலக்கியத்தைப் போதிப்பதாகக் கருதப்படுகிறது.ஆனால் அங்கு நடப்பது பழைய மொழிநடையைப் பரிச்சயப் படுத்துவதுதான்.இலக்கியத்தைப் போதிப்பது அல்ல.நவீன இலக்கியக் குணம் கொண்ட எழுத்து உரைநடையில் தான் அதிகம் உள்ளது.கல்லூரிகளிலோ பல்கலைக் கழகங்களிலோ அதிகம் பயிற்றுவிக்கப் படுவது உரைநடை அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.தமிழகத்தில் இலக்கியம், சிறுபத்திரிகை என்ற பல்கலைக் கழகத்தில் தான் அதிகம் பேர் படித்தார்கள்;இன்றும் படிக்கிறார்கள்.ஏன் இலக்கியம், தமிழகக் கல்லூரித் தமிழுக்குள் நுழையவில்லை ?தற்கால இலக்கியம் எப்போதும் பிராமணர்களால் உருவாக்கப்படுகிறது என்ற எண்ணம் தமிழ்ப் பேராசிரியர்களுக்குள் இருந்தது.ஆரம்பக் கட்டத்தில் இது ஓரளவு உண்மையாக இருந்தாலும் இன்று இது உண்மை அல்ல.இன்னொரு எண்ணம் தற்காலத் தமிழ் தேவை இல்லை என்பது.தேவை இல்லை என்று எப்போதும் யாரும் சொன்னதில்லை.ஆனால் பழையதின் மீது ஒரு மதவுணர்வு இவர்களை அறியாமல் இருந்தது.இந்த உணர்வை ஆயும் எண்ணம் யாரிடமும் இருக்கவில்லை ஆதலால் அவர்களுக்குள் இருப்பது ஓர் நுட்பமான மதஉணர்வு என்று இவர்கள் நினைக்கவில்லை.

இந்தப் பின்னணியில் ஓர் விஷயம் தெளிவாகும்.எந்தத் தமிழ்க்குணவிசேசங்கள் இலக்கியத்தை, கல்லூரிக்குள் அனுமத்திக்கவில்லையோ அதே குணவிசேசங்கள் தான் இலக்கியத்தை மலேசிய,சிங்கப்பூர் தமிழுக்குள் நுழையவிடவில்லை என்று சொன்னால் தவறாகாது.

இப்படித்தானா பிற இந்திய மானிலங்களில் என்று ஒருகேள்வி தோன்றும்.பழைய இலக்கியப் பெருமைப் பொதுவாகத் தடையாக இருந்தாலும் கர்நாடகம் போன்ற மாநிலத்தில் தற்கால இலக்கிய வாதிகள்,நாவலாசிரியர்கள் மொழிப் பேராசிரியராக இருக்கிறார்கள்.

ஆழமாகத் தமிழ் படித்தவர்கள், அந்த அளவு தமிழ் படிக்காதவர்களிடம் இலக்கியத்தை விட்டுள்ளதால் சில காரியங்கள் நடக்கின்றன: ஒன்று தமிழ் நாவலில் மலையாளம் படித்தவர்களின் ஆதிக்கம் அதிகம்.இதனால் மூலத்தமிழின் உள்ளோட்டங்கள் அற்ற, மத்திய காலத்திய சமஸ்கிருத பாதிப்புக்குள்ளான அர்த்த தொனிகளைப் புனைகதையாய் மாற்றம் செய்யும் காரியங்கள் நடக்கின்றன.இதில் மலையாளத்திலும் எழுதும் நீல.பத்மனாபனின் ‘ தலைமுறைகள் ‘ ஒரு மாற்றுவழியைக் காட்டுகிறது.அது மலையாள ஆதர்சத்தைத் தமிழ் மூலத்தின் உள்நோக்கிய பாய்ச்சலாக மாற்றிய படைப்பு.பிறமொழித்தொடர்பு நல்லது என்று கூறவைக்கும் தன்மையது இந்த நாவல்.மீரானுடையதும் பெரிய படைப்பாக இல்லாவிட்டாலும் ஒரு செகுலார் மரபு தமிழில் வர பயன் படுகிறது.இந்த மாதிரியான ஒருவகை மாயைசார் ஆதிக்கம் மா.அரங்கநாதன் போன்ற தமிழ் மூலத்தின் வேரோடு ஒட்டிய உயர்ந்த படைப்பாளி ஒருவரை இன்றைய மைய இலக்கிய சர்ச்சையிலிருந்து ஒதுக்குகிறது.அவருடையது மாயமும் கடினமும் கொண்ட படைப்புத்தத்துவம்.ஒரு இலக்கிய சர்ச்சை கூட அரங்கநாதனிடம் நெருங்காதது தமிழின் துரதிருஷ்டம்.அது தமிழ் அழகியல் பற்றிய அறியாமையைத் தங்கவைக்கும் இன்றைய தேவையின் அத்தாட்சி.மா.அரங்கநாதனின் வழி ஓர் இலக்கியச் சர்ச்சை நடந்தால் தமிழ் அழகியலின் இன்னொரு சாத்தியம் எப்படி புனைகதையாகும் என்பது தெளிவாகும்.இப்போது ஒன்றிரண்டு நபர்களைச் சுற்றி இலக்கியச் சர்ச்சையை வடிவமைக்க இந்த நபர்களின் ஆதரவாளர்களும் எதிரிகளும் தெரியாமல் துணைபோய்க் கொண்டிருக்கிறார்கள்.இதனால் தமிழுக்கு நஷ்டம்.

தமிழிலக்கியம் எப்படி, ஏன் ஒரு சிலரின் ஒரு குறிப்பிட்டநோக்கங்களுக்காக மீண்டும் மீண்டும் ஒரு வட்டத்தில் சுழல்கிறது ?

தமிழில் தற்கால இலக்கியம் தமிழ் சார்ந்த உள்ளோட்டங்களில் தன் சக்தியை மீள்கண்டுபிடிப்பு செயவதும் அது பிரதேச எல்லைதாண்டி ஓர் அனைத்துலக அடையாளத்தைப் பெறுவதும் தொடர்புடைய விசயங்கள்.எனவே மலேசியா,சிங்கப்பூர் தற்காலத் தமிழ் இலக்கியம் வளருமானால் அங்குள்ள சீனமொழியோடும் மலாய் மொழியோடும் தமிழ்தொடர்பு கொண்டு உண்மையான அனைத்துலகத் தமிழ் படைப்பு இலக்கியம் கிடைக்கும்.இந்தியாவில் பிறமொழிகள் மீதும் தமிழ் மீதும் மறைமுகமாக இந்திமொழியாதிக்கம்(இது மூன்றாம் மொழிப்போர் நடத்துபவர்களுக்குக் கூடத்தெரியாதது அவலம்) எப்போதையும் விட இன்று ஒற்றைத் தேசியத்துவ வளர்ச்சி என்ற பெயரில் தீவிரப்பட்டிருக்கிறது.இந்தச் சூழலில் பெனடிக்ட் ஆண்டர்சனின், நாவல் எழுத்தின் மூலம் தேசியத்துவம் கட்டப் படுகிறது என்ற கோட்பாடு சரியாகுமென்றால் தமிழ்த்தனமான நாவலிின் பல்வேறு சாத்தியபாடுகள் மட்டும் தான் எதிர்கால தென்கிழக்காசியாவில் பரவும் இந்திக் கருத்துருவத்துக்கு (Hindi Ideology) மாற்றுக் கருத்துருவத்தை உருவாக்கும்.(இது தற்சமயத்துக்கு மிகை எளிமைப் படுத்தப் பட்ட ஒரு பார்வைதான்.தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு இந்திமொழிக்கும் இந்தி கருத்துருவத்துக்கும் உள்ள வேறுபாட்டையும் ஒற்றுமையும் யாரேனும் விளக்கினால் நல்லது.)இப்போது தமிழில் நடக்கும், ‘நீ பெரிய ஆளா,நான் பெரிய ஆளா ‘ என்று இலக்கியத்தைத் தனிநபர் விவகாரமாய் மட்டும் நடத்தும் விவாதத்தின் மோசடிதன்மையும் விளங்கும்.

**

carlossa253@hotmail.com

Series Navigation

தமிழவன்

தமிழவன்