கற்பக விநாயகம்
‘உமய்யணன் துப்பாக்கியைத் தவறாகக் கையாண்டு மாண்டான் என்பது அவனது புகழுக்கு இழுக்காகாதா’ என ராமச்சந்திரன் கேட்டுள்ளார். ‘கல்வெட்டில் ஒருவன் பெயர் வந்து விட்டாலே அவன் ஈடு இணையற்ற வீரன் தான்’ என முன்முடிவு செய்வதனால்தான் இத்தகைய அய்யப்பாடுகளெல்லாம் வருகின்றன. உமய்யணனை மாபெரும் வீரன் என்றெல்லாம் ராமச்சந்திரனைத் தவிர எவரும் கருதுவதில்லை. அநியாயச் சாவெய்திய ஒருவனின் மீதுள்ள பிரியத்தாலோ என்னவோ அங்கு ஒரு கல்தூண் நிறுவப்பட்டுள்ளது அவ்வளவே.
ராமச்சந்திரன், தனது வரலாறு.காம் இணையத்தில் அச்சாவு நிகழ்ந்த ஆண்டாக 1882ஐக் குறித்துள்ளார். அப்போது சிதம்பரனாருக்கு வயது ஒன்பது மட்டுமே. சிதம்பரனாருக்கு அப்போது ஓலை வெடி / கேப்பு வெடி ஆகியவை மட்டும் தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகுதி. ஆண்டுக்குழப்பத்தால், சமீபத்திய கட்டுரையில் உமையணன் சாவை 1899க்கு நகர்த்தி, வ.உ.சிக்கு வயதைக் கூட்டி, அவ்வெடிச் சம்பவத்தை, சுதந்திரப்போருடன் இணைக்க அவர் முற்படுவது பொருத்தமற்றதே.
கவர்னகிரி,வெள்ளறம் ஆகிய ஊர்ப்பெயரை அலசி ஆய்ந்து அவை வெடிபொருட்களுடன் சம்பந்தப்படுத்துவதும் சரியான விசயமாகத் தெரியவில்லை.
வெள்ளறத்தை, தற்போது ஆவணங்களும், விளம்பரப் பலகைகளும் வெள்ளாரம் எனப் பிழைபடக் குறிப்பிடுவதால், ஊர்ப்பெயரை வெண்மை+ஆரம் எனப் பிரித்துப் பொருள் கண்டு, விபரீத முடிவுகளுக்கு ராமச்சந்திரன் வந்து சேர்கிறார்.
ஆனால், வெள்ளறம் ஊரின் மேல் இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வெண்பா பாடியுள்ள ஆண்டான் கவி ராயர் கூட, ‘வெள்ளறம்’ என்றே குறிப்பிட்டுள்ளார். ஆண்டான் கவி ராயர் எனும் வசைப்பாடல் வல்லுநரைப் பற்றி உ.வே.சா. அவர்களே அச்சில் முதன் முதலில் பதிவு செய்தவர். ஆண்டான் கவி ராயர், ஆறுமுக மங்கலம் மேல் பாடிய வசைக் கவியைத் தனது ‘என் சரித்திரம்’ நூலில் பதிவு செய்துள்ளார். பத்தாண்டுகட்கு முன்பு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தசரதன் என்பவரால் தொகுக்கப்பட்ட ‘ஆண்டான் கவி ராயர் வசைப் பாடல்களை’ வெளியிட்டது. அத்தொகுப்பு முற்றும் முழுவதுமாய் இல்லாது உள்ளது. அந்நூல் வெளியானபோதே அதற்கு இதனைச் சுட்டிக்காட்டி ஒரு கடிதம் எழுதி இருந்தேன். அந்நூலுக்கு இன்னும் மறுபதிப்பு வந்திடவில்லை. அந்நூலில் விடுபட்ட வெள்ளறம் சம்பந்தப்பட்ட பாடல்:
“வெள்ளறத்தில் நாலிரண்டு வெள்ளாளர் வீடொழிய
உள்ளகுடி யத்தனையும் ஓட்டிவிடு உள்ளத்தே
கள்ளம்வைத்து உறவிருந்தே குடிகெடுக்கும் கள்ளமனம்
வெள்ளறத் தூரார் காண்.”
ஆண்டான் கவிராயர், வெள்ளறத்தில் தனது வயிற்றுப்பசிக்காக, அங்கிருந்த மக்களிடம் யாசித்ததாகவும், ஆனால் மக்கள் அவரை ஏளனம் செய்து அவரைக் கோபப்படுத்தியதாகவும், அப்போது அங்கிருந்த வெள்ளாளர்கள் அவருக்கு உதவியதாகவும் ஒரு சொல்கதை உலவுகிறது. அதனால் அக்கவி, வெள்ளாளரைத் தவிர மற்ற குடியெல்லாம் ஒழிந்துபோக வேண்டுமென அறம் பாடினார் என்றும் அதனால்தான் ஊருக்கு வெள்ளறம் எனப்பெயரும் வந்தென்பதும் கருத்து. ஆனால் அவர் பாடிய அறத்தில் ‘வெள்ளாளர் வீடொழிய’ என்று வந்ததால், அவ்வூரில் வெள்ளாளரும் ஒழிந்து போயினர் என்றும் பாடமுண்டு.
எனவே ராமச்சந்திரன் ‘ஆரம்’ என்று வலிந்து கூறும் பொருள், வெள்ளறத்துக்குப் பொருந்தவில்லை.
##################################################################################################
கவர்னகிரி எனும் ஊரை, அவ்வூரின் வடகிழக்குத் திசையில் இருக்கும் சந்திரகிரி எனும் ஊருடன் சேர்த்து ஆய்வதே பொருத்தமாயிருக்கும். சந்திரகிரி ஊரில் வாழ்ந்த ‘சந்திரகிரி முதலாளி’ எனும் தெலுங்கு சாதிக்காரர் ஒருவருக்கு சொந்தமான நிலங்கள், கவர்னகிரி எல்லை வரை, நில உச்ச வரம்பு சட்டம் வரும் வரை இருந்ததையும் (45 ஸ்டாண்டர்டு ஏக்கர் புன்செய் நிலமே வரம்பு), அவ்வட்டாரத்தில் கிரி எனும் ஒட்டுடன் இவ்விரண்டு ஊர்கள் மட்டுமே இருப்பதையும் ஒப்பு நோக்க வேண்டும். கிரி என்பது மலையைக் குறிப்பிடும் சொல். கவர்னகிரியிலோ, சந்திரகிரியிலோ மலைகளோ, குன்றுகளோ இல்லாதபோது ஏன் அப்பெயர்கள் வந்தன?
கிருஷ்ண தேவராயர் காலத்தில் தமிழகத்தில் இருந்த 5 ராஜ்யங்களில் ஒன்று சந்திரகிரி ராஜ்யம். இதில் சந்திரகிரி ராஜ்யம் என்பது, தற்போதுள்ள செங்கல்பட்டு, சித்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும். சந்திரகிரியை ஆண்டவர்களில் சாலுவ நாயக்கரும் அவருக்குப் பின் ஆண்ட நரச நாயக்கரும் முக்கியமானவர்கள். மத்திய தமிழகத்தைக் கடைசியாக ஆண்ட தமிழ் மன்னன் கோனேரிராயனை வீழ்த்திய நரச நாயக்கரே, தமிழ்நாட்டுக்குள் தெலுங்கு அரசை நிறுவ வழி செய்தவராவார். அவருக்குப் பின் ஏராளமான தெலுங்கு மக்கள் குடியேற்றம் தொடர்ச்சியாக தென் தமிழ் நாடு வரை நிகழ்ந்துள்ளது. அவ்வாறு நிகழும்போது புதிதாய் உருவாக்கப்படும் ஊர்களுக்கு, ஆந்திராவில் எந்த ஊரில் இருந்து புலம்பெயர்கிறார்களோ அவ்வூர்ப் பெயரே சூட்டப்பட்டிருக்கலாம். அதனால்தான் மலைகளே இல்லாத இடங்களிலும் சந்திரகிரியும், கவர்னகிரியும் உண்டாகின.
கவர்னகிரி, வெள்ளறம் ஆகிய பகுதிகளில் சூட்டைத் தாங்கும் சீனிக்கல் கிடைக்கும் ஒரே காரணத்தால் அப்பகுதியில் வெடிபொருள் தொழில் நுட்பம் இருந்திருக்கலாம் என முடிவுக்கு வருவது சரியான செயலாகாது. ஆதாரங்கள் ஏதும் இல்லாதபோது வெறும் அனுமானங்களால் வரலாற்றை வாசித்து விட முடியாது.
இவ்வாறெல்லாம் மிகைப்படுத்தித்தான் சுந்தரலிங்கத்துக்கும், அவரின் ஊருக்கும் பெருமை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அன்னிய காலனி ஆட்சிக்கு அவ்வீரன் காட்டிய எதிர்ப்பு, இன்னமும் நம்மிடம் கனன்று கொண்டுதான் உள்ளது. அன்று ஒரே கிழக்கிந்தியக் கம்பெனி. இன்று உலக வங்கி, ஐ.எம்.எப்., உலக வர்த்தகக் கழகம் தலைமையிலான பலம் வாய்ந்த காலனி ஆட்சி. எதிர்க்கத்தான் சுந்தரலிங்கங்கள் உருவாகிடாமல் தடுக்க எக்கச்சக்கமான ஓட்டுப் பொறுக்கிக் கும்பல்கள் உள்ளனவே.
####################################################################################################
வெள்ளறம் ஊரே, 19ஆம் நூற்றாண்டில் ஒரு முறை கடும் மழையால் அழிந்திருக்கின்றது. இப்போதிருக்கும் ஊரே வடக்கில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் நகர்ந்து மேட்டுப்பகுதியில் புதிதாக உருவானதுதான். 1984 வரை தற்போது வயல்களாய் இருக்கும் பகுதியில் மண்மேடாகிப்போன சிவன் கோவில் ஒன்றும் அதன் முன்புறம் அரண்மனை நீராவி (நீர் வாவி) ஒன்றும் இருந்து, அது ஆக்கிரப்பாளர்கள் சிலரால் நிரத்தப்பட்டு வயலாகி உள்ளது. அவ்விடத்தில் அகழ்வாய்வு செய்தால் நிறைய உண்மைகள் தெரிய வரலாம்.
திருநெல்வேலி கெசெட்டியரில், 1810, 1811 ஆகிய ஆண்டுகளில் திருநெல்வேலி மாவட்டத்தை உலுக்கிய பெரும் மழை பற்றிய குறிப்பு உள்ளது. அப்பெருமழையில் தேரிக்காடுகளில் இருந்த பனைகள் கூட தேங்கிய வெள்ளத்தில் அழுகிப்போயினவாம். அப்போது வந்த வெள்ளத்தில் வெள்ளறம் ஊர் அழிந்து போய் சிவன்கோவிலும் பெருமாள் கோவிலும் தகர்ந்திருக்கலாம். கோனார் சாதியினர் மூலம் பெருமாள் கோவில் மீண்டும் 1920களில் உயிர்த்தெழுந்தது. ஆனால் சிவன் கோவில், இன்று இருந்த இடம் தெரியாமல் தரைக்குள் அடங்கிப் போய்விட்டது. மக்கள், சற்றே தெற்கே நகர்ந்து மேடான பறம்பில் ஊரை உண்டாக்கி விட்டனர். சிவன்கோவில் எந்த மன்னர் காலத்தில் கட்டப்பட்டது என்பதும் அறியாத செய்தியாய்ப் போனது. (கடைசியாக அப்பகுதியினை ஆண்ட மன்னன், கயத்தாறு வெட்டும் பெருமாளா?)
இவ்வூருக்கு மேல்புறமாக இருக்கும் ஊரான வெங்கடேசபுரமும், வடபுறமாய் இருக்கும் குமாரெட்டையபுரமும் எட்டையபுரம் ஜமீன் தாரின் பெயரால் உருவாக்கப்பட்டிருக்கலாம். வெள்ளறம் ஊரார், வெங்கடேசபுரத்தை மேலூர் எனக்குறிப்பிடுவதால் ஆதியில் அவ்வூரும் வெள்ளறத்தின் ஒரு பகுதியாய் இருந்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் பெரிய ஊர்களின் உள்ளே இருக்கும் மேற்குத்திசையில் அமைந்த சிற்றூரை மேலூர் என்பது வழக்கம். (உதாரணம்;- தூத்துக்குடியின் மேலூர், கீழூர்)
#######################################################################################################
தூத்துக்குடிக்கு அப்பெயர் வந்திடக் காரணமே, அவ்வூரில் 80 வருடங்களுக்கு முன் நிலவிய கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடேயாகும். திருமந்திர நகர் என்பதே அவ்வூரின் பழைய பெயர் என்பதை வ.உ.சி.யும் தந்து சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். குடிக்கும் நீருக்காக மண்ணைத் தோண்டி (தூற்றி)க் குடித்தமையால் அவ்வூர் தூற்றுக்குடி என்றாகி, மக்கள் தமிழில் அது பின்னர் தூத்துக்குடியானது. அவ்வூரின் நெடுநாள் துயரை ‘குரூஸ் பர்னாந்து’ என்பார் தீர்த்துவைக்க, வல்லநாடு அருகில் இருந்து தாமிரபரணித் தண்ணீரைக் குழாய்மூலம் கொண்டு வந்தார், 1930களில். அன்னாரின் அருந்தொண்டை அவ்வூர் மக்கள் பாராட்டி அவருக்கு ஊரின் நடுவே கிரேட் காட்டன் சாலையில் முழு உருவச் சிலை வைத்துள்ளனர். (இங்கு குறிப்பிடப்படும் காட்டன் என்பதை பஞ்சு எனப்பொருள் கொள்ளலாகாது. அவ்வூருக்கு சில நல்ல காரியங்கள் செய்திட்ட நெல்லை கலெக்டர் காட்டன் என்பாரின் பெயர் அது.)
#######################################################################################################
ஆறுமுகநேரி வட்டாரத்து சான்றோர்களும் சரி, ஆத்தூர், முக்காணி வட்டார சான்றோர்களும் சரி, இன்று வரையில் கட்டபொம்மன், அம்மக்களை சாதி ரீதியில் இழிவுபடுத்திய, துன்புறுத்திய நிகழ்வுகளைப் பேசிக்கொண்டுதான் உள்ளனர். ராமச்சந்திரனும் இதை ஒப்புக்கொள்கிறார். ஆனால், கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட கொஞ்ச காலத்துக்குள்ளேயே (ஓராண்டுக்குள்) ஊமைத்துரையினிடம் சான்றோர்கள் ராசியாகி விட்டனர் என்று கருதிக்கொள்வது எந்த ஆதாரத்தின் பேரில்?
########################################################################################################
ராமச்சந்திரன் அவர்கள் குறிப்பிடுவது போல கரிசல் சீமையில் விளைந்த கருங்கண்ணிப் பருத்தியின் தரம் லங்காஷயர், மான்செஸ்டர் வரை புகழ் பெற்று விளங்கியதும் உண்மை. அப்பருத்தி விளைச்சலின் உள்ளே பொதிந்திருக்கும் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் சுரண்டலும் உண்மை. பருத்தி விளைவிப்பதால், ஏராளமான அளவில் பருத்தி ஏற்றுமதியின் மூலம் பிரிட்டிஷாருக்கு கொள்ளை லாபம் கிடைத்து வந்தது. வானம் பார்த்த பூமியான பாஞ்சாலங்குறிச்சிச் சீமை (இன்றைய ஓட்டப்பிடாரம் தாலுக்கா) பருத்தியைப் பேரளவில் பயிரிட்டு, தனது உணவுப்பயிரான கம்பு,திணை,குதிரைவாலி,கேப்பை ஆகியவற்றைப் புறக்கணித்திட மக்கள் வெள்ளை அதிகாரத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டனர். விளைவு, மழை பொய்த்தாலும் ஓரளவு விளைச்சலைத் தந்து வந்த இந்த மானாவாரி உணவுப்பயிர்கள் கடும் தட்டுப்பாடுக்கு உள்ளாகி, செயற்கையான பஞ்சங்கள் உருவாகின.
1770 இல் ஏற்பட்ட ஒரு கடும் பஞ்சம் லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்துச் சென்றதை அருட்தந்தை.பெர்த்ராம் எழுதியிருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் 1811லும், 1847லும் வந்து பலரைக் காவு கொண்ட பஞ்சம், மீண்டும் தாது வருசப் பஞ்சமாக 1877ல் வந்து சேர்ந்தது. அப்பஞ்சம்தான், வெள்ளை ஆதிக்க அரசின் தேயிலைத் தோட்டங்களுக்கு, தமிழர்களைக் கூலிகளாக்கிக் கப்பலில் ஏற்றி நாடு கடத்தியது. பிரிட்டிஷ் ஆவணங்கள் பதிவு செய்துள்ள நெல்லை மாவட்ட பட்டினிச் சாவான அய்ம்பத்து நாலாயிரத்தில், அதிகப் பேரைச் சாவுப் பட்டியலுக்கு தந்தது ஓட்டப்பிடாரம் வட்டமே. அந்தத் தாலுக்காவில் 1877, மே மாதத்தில் கடைசி இரண்டுவார சாவுக் கணக்கு மட்டும் 492.
நாடெங்கும் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளிய 1877 பஞ்சத்தில் 50 லட்சம் இந்தியர்கள் குடிக்கக் கஞ்சியின்றி இந்தியா முழுவதும் பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் பொருளாதாரக் கொள்கையால் மாண்டனர். அப்போது தெற்கே பருத்தியாலும், வடக்கே அவுரியாலும் இப்பஞ்சம் பெருமளவில் மக்களைக் கொள்ளை கொண்டபோது, வெள்ளை ஏகாதிபத்தியம் ஒரு வேளைக் கஞ்சி தந்து மக்களின் உழைப்பைச் சுரண்டி சென்னையில் பக்கிங்காம் கால்வாயை வெட்டி, அவர்களது பின்னி மில் துணி மூட்டை வியாபாரத்துக்கு வழி செய்து கொடுத்தது.
இன்றும் இந்தியாவில் அதே பொருளாதாரச் சூழலை இன்றைய நவீன மறுகாலனி ஆட்சியின் எடுபிடிகள் செய்து வருகின்றனர். பஞ்சாபில் கோதுமை உபரியாக விளைந்து கிடக்கும் சூழலிலே ஒரிஸ்ஸாவில் பட்டினிச் சாவுகள் தினசரி நிகழ்கின்றன. உள் நாட்டில் உணவு தானியங்கள் வாங்குவாரின்றிக் குவிந்து கிடக்கையில், வெளி நாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது இந்திய அரசு. இவ்வாறு நம் இந்திய விவசாயிகளைப் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கும் மறு காலனி ஆதிக்க சூழலில் இருந்து கொண்டு, அந்தக் காலத்திலேயே நம்மிடம் தொழில் நுட்பம் நல்லா இருந்தது எனப் போலியாகப் பெருமை பேசிக் கொண்டிருப்பது எவ்விதத்திலும் சரியில்லை. அன்று பாஞ்சாலங்குறிச்சி வட்டாரத்து விளை பொருளான பருத்திதான், அம்மக்களின் உயிரைப் பறித்த பஞ்சத்துக்கும், அம்மக்களை அரை சாண் வயிற்றுக்காக தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், இலங்கை நோக்கி அகதிகளாகத் துரத்தியதற்குமான குறியீடு. இன்றும் அம்மக்கள் தமது வறுமைக்கான காரணம் தெரியாமல், ஏகாதிபத்திய நலன்களுக்காக வண்ணப்பூக்கள், மூலிகைப் பயிர்கள், மருந்துக் காய்கள் என ஏற்றுமதிப் பொருளாதார நலன்களுக்கான பயிரிடலுக்கு மாற்றப்பட்டு அவர்களின் உணவுப்பயிருக்கான இடம் பறிக்கப்பட்டு, உணவுக்காக கப்பலை நம்பிக்கொண்டிருக்கும் சூழல் உருவாக்கப்படுகின்றது.
ஏற்கெனவே அம்மக்களின் உபதொழிலான கால்நடை வளர்ப்பிற்கு சாவு மணி அடிக்க பால்பொருட்களை வரைமுறையின்றி இறக்குமதி செய்து ஹெரிடேஜ் மற்றும் ஆரோக்யா என்ற பெயர்களில் மக்களிடையே பிரபலமாக்கி உள்நாட்டு பால் உற்பத்தி முடக்கப்பட்டு வருகின்றது.
இச்சூழலில் மான்செஸ்டரை மயக்கிய கருங்கண்ணிப் பருத்திக்காக நாம் பெருமைப்படுவது, ‘எங்க தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ எனப் பேசுவது மாதிரிதான்.
#######################################################################################################
அதே நேரத்தில், பருத்தியின் விளைவால் நிகழ்ந்த சமூகவியல் அசைவையும் இவ்விடத்தே நினைவு கூறத்தான் வேண்டும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதி வரையில் பொருளாதார, சமூக ரீதியிலாக கடும் ஒடுக்குமுறைக்கு ஆளான சாணார் சமூகம், பருத்தி வாணிபத்தில் இடைத் தரகர்களாகவும் சிறுவாணிபர்களாகவும் பரிணமித்து தன்னைப் பொருளாதார ரீதியாக உயர்த்திக்கொண்டது.
பஞ்சங்களால் பாதிப்பு பெரிய அளவில் இச்சமூகத்துக்கு ஏற்படவில்லை. கடம்பூர், ஒட்டநத்தம், கோவில்பட்டி ஆகிய இடங்களில் பருத்தியை பஞ்சு, கொட்டை எனப் பிரித்தெடுக்கும் ஆலைகள் உருவாகிட இச்சமூகத்தினர் முன் நின்றனர். இவ்வாணிபர்களின் சுரண்டல் அதிகரித்ததும், சமூகத்தில் தன்னை விடத் தாழ்வான நிலையில் இருந்த ஒரு சமூகம் முன்னை விடப் பலமாய் எழுந்து நின்றதும், மறவர், வடுகர், வேளாளர் ஆகிய ஆதிக்க சாதியிடையே புகைச்சலை உண்டுபண்ணியது. அமெரிக்க உள்நாட்டுப் போர், பருத்திக்கு அமெரிக்காவில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கிடவே, திருநெல்வேலி மாவட்டப் பருத்தி ஏற்றுமதி வாணிபம் பெரிய அளவில் விருத்தி அடைந்தது. இவ்வியாபாரத்தில் வெள்ளையர்களுக்கு நிகரான லாபத்தை சாணார்கள் எனப்பட்ட நாடார்கள் ஈட்டி, மகமைப் பேட்டைகளையும் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கினர். அடுத்தபடியாக இச்சமூகம் கோவில்களில் நுழையவும், கோவில்களில் பார்ப்பனப் பூசாரிகளை நியமிக்கவும், தம்மை சத்திரியர் எனக்கூறிக் கொண்டு பூணூல் அணியவும் தொடங்கியது மறவர்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.
இதன்விளைவாக உருவானதே கழுகுமலை, சிவகாசிக் கலகங்கள். சிவகாசிக் கலகத்தில் கலவரக்காரர்களை வழிநடத்தியவர், பசும்பொன் வெள்ளைச்சாமித்தேவர். சிவகாசியில் நாடார்கள் தாக்கப்பட்டதற்கும் பருத்தி வியாபாரத்துக்கும் தொடர்பு இருந்தது. அக்கலகத்தில் சில இடங்களில் தேவேந்திரர்கள் நாடார்களுக்கு உதவிக்கரம் நீட்டினர். ஆனால் ஏனைய ஆதிக்க சாதி இந்துக்கள் அனைவரும் அவர்களுக்கு எதிராக ஒத்த கருத்துடன் இருந்துள்ளனர். சிவகாசியில் ஆரம்பித்த தாக்குதல், மேற்கே பரவி தென்காசி வரை தொடர்ந்தது. அக்கலகத்தில் இஸ்லாமியர்கள் தென்காசி வட்டத்தில் நாடார்களுக்கு ஒத்தாசனை செய்துள்ளனர். ஆயிரம் நாடார் குடும்பங்கள் அக்கலகம் நடந்த பின்னர், இசுலாமுக்கு மாறியுள்ளனர்.
பின்னாளில் நாடார்கள் மற்றும் தேவேந்திரர்களுக்கு எதிராக தேவர்களைத் தூண்டிவிட்டுக் கொம்பு சீவிய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் முத்துராமலிங்கத் தேவர், அப்போதைய முதலமைச்சர் காமராசரை ஒவ்வொரு மேடையிலும், அவரின் சாதியை இழிவு செய்து திட்டியிருக்கிறார்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கூட ‘கரிசக் காட்டுல வந்து எந்த விருதுநகர் சாணான் வந்து பருத்தி எடுத்தான்? எந்த சாணாத்தி, பருத்திக்கு கூறு வைக்க வந்தா? நாம கொளுத்தும் வெயிலிலே பருத்திய எடுக்கிறோம். விருதுநகர் காரன் நம்மளக் கொள்ளை அடிக்கிறான். அவன் பொஞ்சாதி கழுத்திலேயும் காதிலேயும் நக நட்டா மின்னுது’ என்கிற ரீதியில்தான் அவரின் பேச்சும் இருந்தது.
ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே பருத்தி ஈறான வணிகத்தால் மிகப்பெரும் மாற்றத்தை அடைந்த நாடார்களின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தியதும் பருத்தியே. ஏனைய மக்களை மொரீசியசுக்கும், இலங்கைத் தேயிலைத் தோட்டத்துக்கும் துரத்தியதும் பருத்தியே. இலங்கை முதலான நாடுகளுக்குப் பஞ்சம் பிழைக்கப் போனதால் 1871 மக்கள் தொகையை விட 1881 மக்கள் தொகை நெல்லை ஜில்லாவில் குறைந்து விட்டதை கலெக்டர் பேட், பதிவு செய்துள்ளார். அம்மக்களை அன்னிய நாடுகளுக்கு ஏற்றிச் செல்ல தூத்துக்குடிக்குப் போடப்பட்ட இருப்புப்பாதை உதவியது. தூத்துக்குடியில் கப்பல் ஏறும் முன்பாக அவர்களை மருத்துவப் பரிசோதனை செய்ய ஓர் ஊரில் 3 நாட்கள் தங்க வைத்தனர் கங்காணிகள். அவ்வூரே இன்றும் கேம்ப் தட்டப்பாறை என்று அழைக்கப்படுகிறது. வீரலச்சுமி எனும் கப்பல் ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகளை ஏற்றிச் செல்லும்போது கடலில் மூழ்கி அனைத்து மக்களும் மாண்டுபோன சோகத்தை ச.தமிழ்செல்வன் பதிவு செய்துள்ளார். டைட்டானிக் கப்பலைத் தெரிந்த நமக்கு வீரலச்சுமி கப்பலைத் தெரியாது.
#######################################################################################################
‘தஞ்சை நாயக்கர்களின் காலாட்படையினர் ஈட்டி, வாள்,வில், அம்பு முதலியவற்றுடன் அக்கினியந்திரங்களைக் கொண்டு சென்றனர்’ என்கிற வரலாற்றுக் குறிப்பைத் தூக்கிப் பிடித்து, பார்! அன்றே நாம் பீரங்கித் தொழில் நுட்பத்தில் பிஸ்துக்கள் என்று சவடால் அடித்திடல் சரியான செயல்தானா?
இக்குறிப்பில் சுட்டப்படும் அக்கினியந்திரம், தீயை உமிழும் பீரங்கிதான் என்றாலும், அது நமது கைச்சரக்கல்ல என்பதும் உண்மை. தஞ்சை நாயக்கர்களின் ஆட்சிக்காலம் 1532க்குப் பிறகே ஆரம்பமாகிறது. அவர்களுக்கு முன்னரே இந்தியாவில் பானிப்பட் போரில் (1526) பாபர் பீரங்கியைப் பாவித்ததையும், பின்னாளில் தக்காணம் வரை பரவிய முகலாயர்களின் தொடர்பினால் தஞ்சை நாயக்கருக்குப் பீரங்கி அறிமுகம் ஆக்¢யிருக்க வாய்ப்புக்கள் மிகுதி என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
1689-1706 காலகட்டத்தில் ராணி மங்கம்மாளின் ஆட்சியில் பீரங்கி சுடுவதற்கு என்று ஐரோப்பியர் இருவர் வேலைக்கு அமர்த்தப்பட்ட செய்தியில் இருந்தே நம்மவர்களின் தொழில் நுட்ப அறிவு (?) வெட்டவெளிச்சமாகிறது.
#######################################################################################################
கட்டுரையாளரின் நோக்கம், இந்தியாவிலே அந்தக் காலத்திலேயே எல்லா வகைத் தொழில் நுட்பமும் வெகு சிறப்பாக இருந்தன. அவற்றினை நமது பாரம்பரியக் கல்விமுறையே காப்பாற்றி வந்தது என்பதுமாகும். இதே மாதிரியான வாதங்களைப் பலர் (ராமச்சந்திரன் அல்ல) ‘இந்தியாதான் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தது’ என ஆரம்பித்து ‘ரிக் வேத மந்திரங்கள், ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டைப் பேசுகிறது’ என்றும் ‘அப்போதே நம்மிடம் விமானம், ஏவுகணைத் தொழில் நுட்பம் இருந்தன’ எனப் பேசத் தொடங்கி விடுகிறார்கள்.
இந்தியாவில் இத்தகைய நுட்பங்களும், அறிவியலும் வளர்ந்தது உண்மை என்றால் ஏன் இந்தியாவில் தொழிற்புரட்சி நடக்கவில்லை?
பாரம்பரியமாக காப்பாற்றி வந்த கல்வி முறையை தங்களுக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொண்டு, ‘மற்றவர்களுக்குக் கல்வியை மறுத்ததன் மூலம் தம்மை அறிவாளிகளாக்கிக் கொண்ட’ (சொன்னவர் காரல்மார்க்ஸ்) அந்த ‘தகுதி’,’திறமை’ புகழ் பிராமணர்கள் இந்திய அறிவியலில் கண்டுபிடித்த கருவிகள்தான் எவை?
தற்போழுது கிராமங்களிலிருந்து மக்கள் நகரத்துக்கு (நகரம் ஆறு மாதம், கிராமம் ஆறு மாதம் என்பது போல்) அத்துக் கூலிகளாக வருவதையும். தொழில்நுட்ப வளர்ச்சி என்று இவர்கள் சொல்லுவது எல்லாம் இந்திய வளங்களைக் கொள்ளையிட அன்று பிரிட்டிசுக்காரன் போட்ட ரயில், மின்சாரம் வசதி போன்றதுதான்.
கல்வியையும் கூட நமது நாட்டுக்கு தேவையான விவசாயம் போன்ற துறைகளில் படிக்க விடாமல் அவனது பிள்ளைகளுக்கு வீட்டுபாடம் எழுத உதவி செய்யும் BPO(சமீபத்திய செய்தி), அவனது மென்பொருள்களுக்கு சேவை செய்யும் தகவல் தொழில்நுட்பத்துறை என்று நமது அறிவை உபயோகமில்லாதவற்றுக்கு செலவழிக்க வகை செய்துள்ளான்.
சமூகத்தின் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாக தனது அறிவை தனக்கு விருப்பமான வழிகளிலெல்லாம் சிந்தித்து வளர்ப்பதற்கான ஆரோக்கியமான சிறு முதலீடுகளுக்கான சூழல் இன்று இல்லை. நமது பொருளாதாரம் முற்று முழுதாக MNC-க்களின் சந்தை தேவையை நம்பியுள்ள சூழலில் அப்படிப்பட்ட ஆரோக்கியமான சூழல்(ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழிற்புரட்சி காலகட்டத்தில் இருந்தது போல்) வராது. இப்படிப்பட்ட சூழலுக்கான அதாவது இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான ஆரம்பக் கூறுகள் பரிணமிக்கத் தொடங்கிய காலத்தில் அது ஏகாதிபத்திய வேட்டைக்கு இரையானது. அது இன்று வரை தொடரும் போது இந்தியா வளர்கிறது என்ற போலி பிராச்சாரத்துக்கு ஒளி வட்டம் கட்டுவதாகத்தான் இந்தியாவின் பழைய தொழில்நுட்ப அறிவு பற்றி போலியான கற்பிதங்களைப் பரப்புவது இருக்கும்.
########################################################################################################
vellaram@yahoo.co
- திரைப்படங்கள் புதியவை – விடயங்கள் பழையவை
- பெரியபுராணம் – 94 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- சுவரில் ஒரு சி(ரி)த்திரம்;;
- பூம்புகார்ச் செல்வி கண்ணகி மீது புகார்!
- வடக்கு வாசல் இசை விழா
- கடவுள்களின் கலக அரசியல்
- நெய்வேலியில் ஆனந்த மழை!( 25-6-06)
- சமூக நீதியும், இட ஒதுக்கீடும் – சில மாற்றுச் சிந்தனைகள்
- செர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா? -10
- மயக்கம் தெளியவில்லை
- முறிவு
- கபாவில் சமாதியா
- சுரதா
- கடிதம்
- காலம் 26 வது இதழ் வெளிவந்துவிட்டது
- கழிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே !
- தேசிய பாரம்பரியக் கலை பாதுகாப்பு மையம்
- கேப்டனும் பேண்டேஜ் பாண்டியனும்
- கடித இலக்கியம் -11
- கல்மரம் ஆசிரியர் – திலகவதி
- யாமறிந்த மொழிகளிலே…(கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஐந்தாமாண்டு இயல்விருது விழா)
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 6. சட்டங்களும் அரசியலும்
- மறைக்கப்பட்ட வரலாறு:அனார்ச்சாவின் கதை
- அபத்தம் அறியும் நுண்கலை – 2
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-7)
- கீதாஞ்சலி (79) மனவலியைத் தாங்குவேன்!
- கேள்விகளும் பதில்களும்
- கா எனும் குரல்…
- தாஜ் கவிதைகள் .. 1
- பறவையின் தூரங்கள்
- உதட்டில் மூட்டும் கொள்ளியடுப்பு
- இட ஒதுக்கீடு
- அந்தக் காலத்தில் புஷ்பக விமானங்கள் இருந்தன
- அருந்ததி ராய்
- மங்களவரி சுங்கபாண்டி – கருப்பு ஆப்பிரிக்காவின் பாரம்பரிய கணிதம்
- தமிழகத் தேர்தல் 2006 – சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ அமோக வெற்றி!
- தமிழினத்தின் அழுகுரல் ..தமிழ்முரசுவுக்கு “நச்”சுனு இருக்கா..??
- அணு சோதனையால் மாசுபட்ட மண் – வெளிவரும் சூழலியல் பயங்கரம்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 27