அதிகாரத்தை நிறுவும் ஆதாரங்களை கொலை செய்வோம்

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

ஹெச்.ஜி.ரசூல்


எனது பின்நவீன ஜிகாதும் தலித்தும் – கட்டுரைக்கான எதிர்வினையை திரு நேசக்குமார் அவர்கள் மிகவும் விரிவானதொரு விளக்கக் கட்டுரையாக திண்ணையில் எழுதியிருந்தார். எனக்கு உடன்பாடான பகுதிகள் பல உண்டு என்றாலும் மறுப்பிற்கும், தொடர் விவாதத்திற்குமான பல பகுதிகள் அதில் இருந்தன.

முதலில் ‘ஜிகாத்’ என்ற கருத்தாக்கத்தை ஒற்றைப்பரிமாண அணுகு முறையில் அர்த்தப்படுத்துவது, அதற்கு வேறு அர்த்தங்கள் எதுவும் கிடையாது என்று நிரூபணம் செய்ய முயல்வது ஒரு ஜனநாயக அணுகுமுறையாக இருக்காதென எண்ணுகிறேன். எல்லாவித அடிப்படைவாதத்திற்கும் மாற்றாக ஜனநாயகத்தையே இங்கே முன் வைக்கலாம்.

நபிகள் நாயக கால ஜிஹாத், மத்திய காலத்தில் இஸ்லாமிய ஆட்சி விரிவாக்க அதிகாரம் சார்ந்த ஜிகாத், தற்கால சூழலில் முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்கு எதிரான ‘பின்நவீன ஜிகாத்’ – என அர்த்த மாறுபாடுகளை கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. இதுவே ஒரு கருத்தியல் பிரதியின் சூழல்சார்ந்த அர்த்தமாக (Contextual meaning) உருவாகிறது. இஸ்ரேல். அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான சொல்லாடலாகவே ”பின்நவீன ஜிகாத்” இங்கே அர்த்தம் பெறுகிறது.

இரண்டாவது ஒரு கருத்தை நிலைநிறுத்த மூலப்பிரதிகளான திருக்குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து ஆதாரங்களை கண்டெடுத்து கட்டியமைத்து விவாதிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அதே விதமான அணுகுமுறையை நேசக்குமாரும் பின்பற்றுவது ஆச்சரியமாக இருக்கிறது. இஸ்லாம் வன்முறையை போதிக்கவில்லை, சமாதானத்தையே வலியுறுத்துகிறது என்பதற்கு 6666 திருக்குர்ஆன் வசனங்களில் நண்பர் நேசக்குமார் சொன்ன ஓரிரு திருக்குர்ஆன் வசனங்கள் தவி¡த்த பிற ஆயிரத்துக்கு அதிகமான வசனங்களிலிருந்தும், 7275 புகாரி ஹதீஸ்களில் சில தவி¡த்து பிற ஹதீஸ்களான வாய்மொழி வரலாற்றிலிருந்தும் எடுத்து வைப்பது மிகவும் எளிதான காரியமாகவே படும். ஜிஹாத் உட்பட பிற அனைத்து விவாதங்களுக்கும் இந்தவிதமான அணுகுமுறைகளையே இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பின்பற்றுகின்றனர். எனவே ஒரு ஹதீதின் குர்ஆனிய வசனத்தின் வரலாற்றுப்பின்னணி, சமூகவியல் சார்புத்தன்மை, நோக்கம், உள்ளிட்ட பல காரணிகளையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. அதிக’ரங்களை நிறுவும் ஆதாரங்களையே மீள்வாசிப்புக்கு உள்ளாக்க வேண்டியுள்ளது.

மூன்றாவது ஒரு சொல்லில் அடிப்படைவாதிகள் உருவாக்கியிருக்கும் அர்த்தத்தை தலைகீழாய் கொட்டிக்கவிழ்த்து அதன் அதிகாரத்தை உடைத்தெறிவது இன்றைய பன்முகவாசிப்பின் ஒரு அணுகுமுறையாக இருக்கிறது. மத்திய காலச் சிந்தனையாக விசுவரூபமெடுத்த ”இஸ்லாமிய அரசை” நிறுவுவதற்கான புனிதப்போரென ஜிகாதை சில அடிப்படைவாத இயக்கங்கள் ஒற்றைப்படுத்தும்போது அது மனஇச்சைக்கு எதிரான போர் (ஜிகாத்-ஏ-நப்ஸ்) அமைதிவழிப் போராட்டம், கருத்துப் பிரச்சாரப்போர் தற்காப்புக்கான போர் என்பதான பிற அர்த்தங்களின் வழியாக அடிப்படைவாத கருத்தியலை தலைகீழாக்க வேண்டியுள்ளது.

இஸ்லாம் அல்லாதவரை இஸ்லாமாக்கும் புனிதப் போர்தான் ஜிகாத் என தீர்மானமாக சொல்வதும், இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்துள்ள அனைத்துப் போர்களும் ஆக்கிரமிப்பு வகை சார்ந்துள்ளது என்று கூறுவதும் வரலாற்றுப் பிழையை உருவாக்கிவிடும்.

1. ஜிகாத் என்ற அரபிச் சொல்லுக்கு கடும் முயற்சி செய்தல் என்பது தான் மூல அர்த்தம். இது ஜுஹ்த் என்ற வேர்ச் சொல்லிலிருந்து உருவானது. ஜூஹ்த் என்பதற்கு முயலுவது, விடாப்பிடி முயற்சி என்றே பொருள். இது நேரடியாக போர் என்ற அர்த்தத்தை தருவிக்காது. சூழ்நிலைகளின் நிர்ப்பந்தங்களில் நிகழும் போர்களுக்கு அரபியில் ‘கித்தால்’ என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.

2. நபிகள் நாயகம் பழங்குடி மக்கள் பகுதி மேய்ச்சல் வாழ்வு, பதூயின்களிடமிருந்து உருவாகி குறைஷி குலம் சார்ந்து இயங்கி பல்வேறு இனக்குழுக்களின் சண்டைகள், அழிவுகளுக்கு மத்தியில் ஒற்றுமைப்படுத்தி புதிய அறவியல் ஒழுக்கங்களை முன்வைத்தபோது, பதின்மூன்று ஆண்டுகால எதிர்கொள்ளல்களை சந்தித்து கொலை முயற்சிகளுக்கு ஆட்படுகிறார். இறுதியில் மக்காவிலிருந்து, மதிநாவிற்கு ஹிஜ்ரத் என்னும் புலம் பெயர்தலை செய்கிறார். நபிகள் நாயகத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறையையும் நாம் கவனத்திற் கொள்ளலாம்.

3. மதிநாவின் வணிக குழுமங்கள், அன்சாரிகள் ஆதரவோடு ஆட்சி அதிகாரம் உருவாக்க முயலுதல். இரண்டு ஆண்டுகளில் நிகழ்வுறுகிறது. அப்போது நடைபெற்ற போர்கள் தற்காப்பு சார்ந்தும், அதிகாரத்தை நிலை நிறுத்தவும் இருநிலைகளில் நடைபெற்றுள்ளன. நபிகள் நாயகத்தின் இறுதிக்காலம், பிறகான கலிபாக்களின் காலம், மத்திய கால இஸ்லாமிய ஆட்சி விரிவாக்கத்திற்கான யூத கிறிஸ்தவத்தோடான போர்களாகவும் இவை வடிவம் கொண்டுள்ளன.
நபிகள் நாயகத்தின் காலத்தில் மொத்தம் 57 போர்கள் நடைபெற்றுள்ளன. இதில் நபிகள் நாயகம் கலந்து கொண்ட போர்களின் எண்ணிக்கை பத்தொன்பது. இதற்கு கஸவாத் என்று பெயர். நபிகள் நாயகம் கலந்து கொள்ளாமல் படைத்தளபதிகளை கலந்து கொள்ளச் செய்த போர்கள் 38. இதற்கு சரிய்யா என்று பெயர். பத்ரு, உஹது, கன்தக் எனும் அகழ், முரய்சியூ, தாத்துல்கரத், உள்ளிட்ட பல போர்கள் நபிகள் நாயகம் தன் முஸ்லிம் குழுமத்தை தற்காத்துக் கொள்வதற்காகவும், அழிவிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளாகவுமே இருந்தன.

4. நவீன யுகச் சூழலில் இஸ்லாமிய கிலாபத்துக்கள் நொறுங்கிப் போயுள்ளன. மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளின் உள்நாட்டுப்போர் எண்ணெய் அரசியலை முன்வைத்த நவீன காலனிய ஆதிக்க ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி சின்னாபின்னமாகி அடிப்படைவாதமும், ஜனநாயகத்திற்கு எதிரான இயக்கங்களும் வலுப்பெற்றுள்ளன.
ஈராக்கிற்கு எதிரான வளைகுடா யுத்தத்தில் 28 நாட்டுப் படைகளோடு ஈடுபட்ட அமெரிக்காவின் தாக்குதலில் சுமார் 75,050 ஈராக்கிய வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் செத்து மடிந்தனர். தொலைதொடர்புகள், குடிநீர்வசதி, மின்தொடர்பு, மருத்துவமனைகள் அழிக்கப்பட்டன.
இதுபோல் அமெரிக்கப்பட விமானகுண்டு வீச்சுகளாலும் ஏவுகணை தாக்குதல்களாலும் ஆப்கன் மண் ரத்தக் களரியானது.
ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தாக்குதலெனக் கூறி இஸ்ரேலில் குண்டு வீச்சுகள் லெபனிய மக்களை அழித்தொழிக்கின்றன.
ஐந்து லட்சம் பேர் வீடு வாசல்களை இழந்துள்ளனர். விமான தளங்கள், மின்சார நிலையங்கள், மருத்துவமனைகள், எண்ணெய் கிணறுகள் நகர இணைப்பு பாலங்கள் என அடிப்படைக் கட்டுமானங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன.
பலஸ்தீனத்தின் மேற்குக் கரை காஸா பிரதேசமும், கிழக்கு ஜெருசலம், சிரியாவின் கோலான்குன்றுகள், லெபனானின் சீபா பண்ணைப் பகுதிகளை சர்வதேச சட்டவிதிகளை மீறி ஆக்ரமித்திருக்கும் இஸ்ரேல் – அமெரிக்க ஆதிபத்தியத்திற்கு எதிராகவே பலஸ்தீன ஹமாஸ் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கங்கள் உருவாகி போராடிக் கொண்டிருக்கின்றன.
இந்த அழிவுகளிலிருந்து முஸ்லிம்களைக் காப்பது ஒரு ஜனநாயக மனிதநேயக் கடமையாகவே உள்ளது. கையறுநிலையிலேயே இஸ்லாமிய இயக்கங்கள் அமெரிக்க – இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆயுதப் போராட்டங்களையும் கைக்கொள்கின்றன.
இது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான புனிதப் போரல்ல உயிர் வாழ்தலுக்கும், இருப்பிற்குமாக நடத்தப்படும் புனிதப்போர்.

5. எனது கட்டுரை தலித்துகளை இஸ்லாமாக்கும் நிலைபாடு குறித்து எதையும் பேசவில்லை. அப்படி பேசியதான தொனியை நண்பர் நேசக்குமார் தெரிவித்திருந்தார். ஜாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான தலித்தின் போராட்டமும் ஒரு வகையில் உள்காலனீய வகைப்பட்ட ஆக்ரமிப்புக்கும், அநீதிக்கும் எதிரான போராட்டமாகவே உருவாகியுள்ளது. இதனை பின்நவீன ஜிகாத் – கருத்தாக்கத்தோடு பொருத்தியும் பார்க்கலாம் என்பதாகவே எனது அவ்வரிகள் அமைந்திருந்தன.

6. இதுபோல்தான் நண்பர் நேசக்குமார் ‘காபிர்’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாத நிராகரிப்பாளர் என அடிப்படைவாதிகள் அர்த்தப்படுத்தும் பாணியிலேயே முன்வைக்கிறார். ‘காபிர்’ என்ற சொல்லுக்கு அப்படி ஒன்றும் நிரந்தர அர்த்தம் கிடையாது.
‘காபிர்’ என்பதற்கு ”ஒரு விஷயத்தை மறுப்பவர்” என்று அர்த்தம். உதாரணத்திற்கு முஸ்லிம்களின் பார்வையில் பத்திரகாளியம்மனை கும்பிடுபவர்கள் காபிர்கள். ஏனெனில் உருவமற்ற கடவுளை முஸ்லிம்கள் நம்புவதற்கு மாற்றமாக இருப்பதால்.
இதேபோல் பத்திரகாளியம்மனை கும்பிடுகிற மக்களின் பார்வையில் முஸ்லிம்களும் காபிர்கள். ஏனெனில் உருவமுள்ள அம்மனை வணங்குவதை முஸ்லிம்கள் மறுத்து விடுவதால்.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்