அண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue


அண்டார்டிகா உருகிறது. இது மெல்ல மெல்ல கடலின் மட்டத்தை உயர்த்திக்கொண்டு வருகிறது.

ஐரோப்பிய தொலை உணர்வு துணைக்கோள் (European Remote Sensing Satellite) மூலம் கிடைத்த செய்திகளைக் கொண்டு அறிவியலாளர்கள் அறிந்த செய்திகள் அதிர்ச்சி தருபவை. சுமார் 36 கன மைல் பனிப்பாறைகள் மேற்கு அண்டார்டிகாவிலிருந்து சென்ற பத்தாண்டுகளில் உருகி இருக்கின்றன என கண்டறிந்திருக்கிறார்கள். இது உலகெங்கும் சுமார் ஒரு செ.மீட்டரில் மூன்றில் ஒரு பாகம் அளவுக்கு கடல் மட்டத்தை உயர்த்த வல்லது.

‘இந்தப் பனிப்பாறைகள் வெகுவேகமாக குறைந்து வருகின்றன ‘ என்று கலிபோர்னியாவில் இருக்கும் நாஸா ஜெட் பரிசோதனச்சாலையில் பணிபுரியும் டாக்டர் எரிக் ரிக்னாட் கூறுகிறார். இந்த முடிவுகளை அமெரிக்க புவியியல் பெளதீக கூட்டமைப்பில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்கள்.

முன்பு அண்டார்டிகாவில் பனி சேர்கிறது என்று முன்பு பூமியிலேயே இருந்து கொண்டு வந்த முடிவுக்கு மாறாக இந்த முடிவுகள் வந்திருக்கின்றன.

துணைக்கோள் கருவிகள் நிலத்தின் வடிவமைப்பு மாறுதல்களையும் கணக்கெடுத்துக்கொண்டு பார்க்கும் படி அமைக்கப்பட்டிருந்தன. இந்த கருவிகள் எந்த இடத்திலும் பனி சேர்வதை காண்பிக்கவில்லை. மேற்கு அண்டார்டிகாவில் இருக்கும் பைன் தீவும், த்வாயிட் பனிஆறும் கரைந்து வருகின்றது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். மீதமுள்ள அண்டார்டிகா நிலையாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கடலின் மட்டம் ஒரு நூறாண்டுகளுக்கு சுமார் 6 இஞ்ச்கள் உயர்கிறது என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதற்கு பெரும்பாலான காரணம், நம் வாயுமண்டலத்தின் வெப்பம் அதிகரிப்பதால் தண்ணீர் விரிவடைவதுதான். சுமார் 20 சதவீதம் பனி ஆறுகளிலிருந்து கடலுக்கு வரும் தண்ணீர். மீதமுள்ள 30 சதவீத உயர்வுக்குக் காரணம் மர்மமாகவே இருந்தது. ஆனால் சமீபத்திய இந்தக் கண்டுபிடிப்புகள் இதற்குக் காரணமென அண்டார்டிகாவை குறிப்பிடுகின்றன.

துணைக்கோளில் இருக்கும் இன்னொரு கருவியைக் கொண்டு டாக்டர் ஆண்ட்ரூ ஷெப்பர்ட் அவர்கள் இதே முடிவுகளுக்கு வந்திருக்கிறார். அருகில் இருக்கும் பனி ஆறான ஸ்மித் பனிஆறு (Smith Glacier) இன்னும் வேகமாக கரைந்து வருகிறது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏன் இப்படி உருகுகிறது என்பதற்கான வெளிப்படையான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.

Series Navigation

செய்தி

செய்தி