அசுரன
அணு என்றாலே இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சும் அதனால் மக்கள் அடைந்த துயரங்களும் நம் கண்முன் தோன்றுகின்றன. அந்த கொடூரத்தை யாரால் மறக்க முடியும்?.
அதுபோல அணுஉலை விபத்து என்றாலே உலகைக் குலுக்கிய சோவியத் ரஷியாவின் செர்னோபில் அணுஉலை விபத்துதான் நெஞ்சில் நிழலாடுகிறது. இதனால் இன்றுவரையிலும் தோல்புற்று நோய், இரத்தப் புற்று நோய் உட்பட வகைவகையான நோய்களால் இலட்சக்கணக்கானோர் உயிர் இழந்து உள்ளனர். பல இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த மண்ணில் இருந்து பிடுங்கி எறியப்பட்டு புதிய இடங்களில் துன்புற்று வாழ்கின்றனர்.
1986 ஏப்ரல் 29 ஆம் நாள் நடைபெற்ற செர்னோபில் அணுஉலை வெடிப்பால் சோவியத் ஒன்றியம் மட்டும் அல்லாது முழு ஐரோப்பாவுமே பாதிக்கப்பட்டது. ஆபத்தில் தத்தளித்த சோவியத் ஒன்றியத்திற்கு நட்பு நாடாக இருந்த இந்தியா அப்போது சுமார் 17,000 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. செர்னோபில் விபத்து நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகி கதிர்வீச்சின் பாதிப்பு குறித்த உண்மைகள் மிகத் தீவிரமாக வெளிப்பட்டு கொண்டு இருந்த ஒரு கொடூரமான நேரத்திலேயே 1988 நவம்பர் 20 – இல் இராஜிவ்காந்திக்கும் கோர்பசேவுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதுதான் வேதனை. இதன்படி 1000 மெகாவாட் திறனுடைய இரு அணுஉலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அணுகதிர் வீச்சு குறித்த ஆபத்தான விளைவுகளை நன்கு அறிந்து இருந்த மக்கள் இதற்கு எதிராக கொதித்து எழுந்தனர். சேவை அமைப்புகள், மாணவர் அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், விவசாயிகள், அறிவுஜீவிகள், சில அரசியல் கட்சிகள் போன்றவர்களின் அமோக ஆதரவுடன் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் எங்கும் பற்றிப் படர்ந்தது. குறிப்பாக அப்போதைய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினராகிய திரு. வைகோ நாடாளுமன்றத்திலேயே பிரதமர் இராஜிவ்காந்தியிடம் நேருக்குநேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இத்தகைய கடுமையான எதிர்ப்பின் விளைவாக இராஜிவ் காந்தியின் அப்போதைய தமிழகச்சுற்றுப் பயணத்தில் திட்டமிடப்பட்டிருந்த கூடங்குள அணுமின் நிலைய அடிக்கல்நாட்டு விழா அரசால் கைவிடப்பட்டது, 90களில் சோவித் ஒன்றியம் உடைந்து சிதறியதால் இத்திட்டம் கனவாகவே இருந்தது.
என்றாலும் 1997 இல் இந்திய பிரதமராய் இருந்த தேவகெளடா புதிய இரசிய அதிபரான புதினுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இத்திட்டம் மீண்டும் உயிரூட்டப்பட்டது. 2001 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராய் இருந்த வாஜ்பாய் ரஷ்ய அதிபர் புதினுடன் ஒப்பந்தம் செய்து தன்பங்குக்கு திட்டத்தை உறுதிபடுத்திக் கொண்டார். அதன் பின்னர்தான் திட்டம் வேகம் பிடித்தது. கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட 1994 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்திற்கு மாறாக இத்திட்டம் மேற்கொள்ளப்படுவது தான். அச்சட்டப்படி 50 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட எந்த ஒரு திட்டமும் உரிய சுற்றுச்சூழல் ஆய்வுகள் நடத்தப்பட்டு அதன் சாதக, பாதக அம்சங்கள் மக்கள் மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டுதான் நிறைவேற்றப்பட வேண்டும்.
கூடங்குளம் அணுஉலை 1988 இல் திட்டமிடப்பட்டாலும் அதற்கும் தற்போது நடைமுறை படுத்தப்படுகின்ற திட்டத்திற்கும் தொடர்பே இல்லை. இரண்டும் வெவ்வேறான அம்சங்களைக் கொண்டவை. பழைய ஒப்பந்தப்படி அணுஉலைக்கு குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் எடுத்துக் கொள்ளப்படும், ஆனால் இப்போது செயல் படுத்தப்படுவது எப்படி என்றால் உலைக்கு தேவையான நீர் முழுவதும் கடல்நீரை சுத்திகரிப்பதன் மூலம் பெறப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு சுத்திகரிப்பு ஆலை அமைக்க டாட்டா நிறுவனத்துடன் 116 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. (சட்டப்படி இதற்கே மக்கள் கருத்தாய்வு நடத்தப்பட வேண்டும்). முதல் ஒப்பந்தப்படி அணுஉலையில் இருந்து வரும் கழிவுகளை சோவியத் ஒன்றியமே எடுத்துக் கொள்ளும், ஆனால் இப்போதைய நிலவரப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அந்த கதிர்இயக்க கழிவுகளை நாம்தான் கட்டியாள வேண்டும். முதல் ஒப்பந்தம் போடப்பட்ட பின்னர் நெல்லை மாவட்டங்களின் பல இடங்களில் உருகிய பாறைக்குழம்புகள் மேலே வந்ததன, நிலநடுக்கமும் ஏற்பட்டது போன்ற அனுபவங்களும் உள்ளன.
ஆனால் இவற்றையேல்லாம் மூடி மறைத்துவிட்டு மோசடித்தனமாக இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் மட்டும் முனைப்பு காட்டுகிறது நம் அணுமின் உலை கூட்டம். இவ்வாறு திருட்டு தனமாக இரு அணுஉலைகளைக் கட்டிக்கொண்டு இருக்கும் அதே வேளையில் தீராத தாகத்துடன் இனியும் எதிர்க்க மாட்டார்கள் என்ற நினைப்பில் இந்த வளாகத்திலேயே மேலும் நான்கு அணுஉலைகளை அமைக்க திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக கடந்த குடியரசு தின விழாவின் போது இந்தியாவுக்கு வந்த இரஷிய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
இப்புதிய ஒப்பந்தப்படி அணுஉலைகளை அமைப்பதற்காக மக்கள் கருத்தைக் கேட்டுநிற்கிறது அணுமின் துறை. இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை படித்த பாதுகாப்பான சுற்றுசூழலுக்கான மருத்துவர்கள் குழுவை சார்ந்த டாக்டர். ரமேஷ் தெரிவிக்கும் தகவல்கள் நம் விஞ்ஞானிகளின் மோசடித்தனத்தை அம்பலப்படுத்துகின்றன. இந்த அறிக்கையில் அணுஉலையில் இருந்து எவ்வளவு கழிவு வெளியேறும், அந்த கதிர் இயக்க கழிவுகளை எப்படி பாதுகாக்க போகிறார்கள் என்று கூட சொல்லவில்லை. இத்தகைய அடிப்படை விஷயங்களைக் கூட தெரிவிக்காத இவர்கள் நாளிதழ்களில் முழுபக்க வண்ண விளம்பரங்களை வெளியிட்டு ஆதரவு திரட்டுகிறார்கள். அவற்றின் உண்மை நிலையை பார்ப்போம்.
மிகத் தொலை நோக்கு பார்வையில் பார்க்கும் போது 35 அல்லது 40 ஆண்டுகள் மின்சாரம் கிடைக்கும் என்பதற்காக உலகிற்கே ஆபத்தான கதிரியக்கக் கழிவை பல்லாயிரம் ஆண்டுகள் மடியில் கட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டுமா? நியாமாகப் பார்த்தால் ஆபத்தான அணுஉலைகளில் செய்யும் மூதலீட்டை காற்றாலைகளில் செய்தாலே பாதுகாப்பாக மின்சாரம் தயாரிக்க முடியும்.
நமது குடியரசு தலைவர் எதிர்காலத்தை பற்றிதான் கனவு காணச் சொன்னாரே தவிர பகல்கனவு காணச் சொல்லவில்லை. 2032 ஆம் ஆண்டு அணுசக்தி மூலம் 63000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆசைப்படுகிறது அணுசக்தி துறை. 87 ஆம் ஆண்டுக்குள் 25000 மெகாவாட் 2000த்தில் 45000 மெகாவாட் என்று கனவு கண்ட நம் அணுசக்திதுறை பல்லாயிரம் கோடி ரூபாய்க்களை விழுங்கி விட்டு இன்று வரையிலும் 3310 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்திச் செய்கின்றது.
முதலில் அமைக்கப்படும் இரு அணுஉலைகளுக்கு கடும்எதிர்ப்பு இருந்து வரும் போதும் மேலும் நான்கு உலைகளுக்கு தேவையான தண்ணீரை கடல்நீரை சுத்திகரித்து எடுக்கிறார்கள். இந்த சுத்திகரிப்பு கழிவுநீரையும் கடலில்தான் விடப்போகிறார்கள். இதில் பயன்படுத்தப்படும் குளோரின் போன்ற வேதிப் பொருட்களால் அவ்வட்டாரம் கடல்மீன்கள் வாழத்தகுதி அற்றதாக மாற்றப்படும்.
இன்று தமிழகத்தின் மின் தேவை அதிக பட்சம் 8000 மெகாவாட்தான். ஆனால் இப்போது உற்பத்தி ஆவது 10100 மெகாவாட் மின்சாரம் ஆகும். அப்படி இருக்கும் போது ஆபத்தான அணுஉலைகள் எதற்காக என்ற கேள்வி எழுகிறது. கூடங்குளத்தில் உள்ள கான்கீரிட் ஆய்வுக் கூடம் ஐஎஸ்ஓ – 9001 தரச்சான்று பெற்றுள்ளது என்று அணுசக்தி துறை பெருமைப்பட்டு கொள்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மின்னணு கட்டுபாட்டிற்கு என கூடங்குளத்தில் கட்டப்பட்டு வந்த இருமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தார்களே. இதுதான் இவர்கள் பெருமைப்பட்டு கொள்ளும் கான்கிரீட்டின் தரம்.
கதீர்விச்சு மக்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று இவர்கள் சொல்வதை எப்படி நம்புவது. உலகு எங்கும் செய்யப்படும் ஆய்வுகளால் அணுஉலையில் இருந்து குறிப்பிட்ட தொலைவிற்குள் வாழுகின்ற மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. சென்னைக்கு அருகிலுள்ள கல்பாக்கம் அணுஉலைகளின் அருகிலும் கூட ஆறு விரல்களுடன் குழந்தை பிறப்பது மிகக் கொடூரமான மல்டிபிள்மைலோமா எனப்படும் கதிரியக்க புற்று நோய் போன்றவை ஏற்பட்டுள்ளதை டாக்டர். புகழேந்தி வெளிப்படுத்தி உள்ளார்.
இவை எல்லாவற்றையும் விட வேதனை என்னவென்றால் 460 மெகாவாட் திறனுடைய கல்பாக்கம் அணுஉலையிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் அப்பகுதியின் கடல் 10 டிகிரிக்கு மேல் சூடாகும் நிலையில் இங்கு அமைக்கப்படும் 6000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் உலைகளிலிருந்து வெளியேறும் தண்ணீர் மட்டும் கடலை 7 டிகிரி மட்டும் தான் சூடாக்கும் என்று கதை சொல்லுகிறார்கள்.
எல்லாவற்றிற்கும் உச்சகட்டமாக ஜப்பானில் கஷிவசாகி கரிவா என்ற இடத்தில் டோக்கியோ மின் உற்பத்தி நிறுவனம் என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ள உலையை நமக்கு உதாரணமாகக் காட்டுகிறார்கள் கூடங்குளம் அணுவிஞ்ஞானிகள்.
1985 ஆம் ஆண்டு முதல் அங்கு இயங்கிய ஏழு உலைகளால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகிறது அணுசக்தி துறை. உண்மையில் அங்கு 1990 முதல் 2002 ஆம் ஆண்டு வரை பல சிறிய. பெரிய விபத்துகள் நடந்துள்ளன. அவற்றை நிர்வாகம் மறைத்து வந்துள்ளது. மைய உலைகலன்களில் ஏற்பட்டு இருந்த பல சிறிய, பெரிய கீறல்கள் தண்ணீர் குழாயில் இருந்த வெடிப்புகள் வெளியே சொல்லாமல் மறைக்கப்பட்டுள்ளன. இதனை சரிசெய்ய எடுத்த வீடியோவை கூட திருத்தம் செய்தே அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த உண்மைகளை எல்லாம் அந்நிறுவனப் பணியாளர் ஒருவர் வெளியே சொல்ல பெரும் போராட்டம் வெடித்தது. மக்களின் கொந்தளிப்பை தாங்க இயலாமல் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து அணுஉலைகளும் இழுத்து மூடப்பட்டன. அப்பகுதிக்கு வந்த ஜப்பான் நிதியமைச்சர் அங்கு கூடியிருந்த வட்டார மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அந்நிறுவனத் தலைவரும் மக்கள் முன் தரையில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். ஜப்பானைப் பொறுத்தளவில் இவ்வாறு மன்னிப்பு கேட்பது உச்சப்பட்ச இழிவான தண்டனையாகக் கருதப்படுகிறது. இந்த உலையை உதாரணமாக சொல்லிக் கொண்டிருக்கிற நம் விஞ்ஞானிகளும் இப்படிதான் எதிர்காலத்தில் மன்னிப்பு கேட்பார்களோ?
நம் நாட்டுத் தலைவர்கள் தான் கூடங்குள அணுஉலை விசயத்தில் அமைதியாக இருக்கிறார்களே தவிர பிறர் அப்படி இல்லை. உதாராணமாக ஆஸ்திரிய வெளியுறவுத் துறை அமைச்சர் எழுப்பி உள்ள கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மின்சாரம் தயாரிக்க ஏராளமான மாற்றுவளங்கள் இந்தியாவில் உள்ள நிலையில் கூடங்குளத்தில் ஏன் அணுஉலை அமைக்க வேண்டும் என்று அந்த அம்மையார் எழுப்புகின்ற கேள்வி நம்மவர்களின் செவிகளை எட்டுமா? இனி அமைக்கப்பட இருக்கின்ற உலைகள் எல்லாம் வெளிநாட்டு யுரேனியத்தை நம்பியே தொடங்கப்பட இருக்கின்றன.
கூடங்குளத்தில் ஏற்கனவே கட்டப்படும் இரு உலைகளுக்கும் கூட ரசிய யுரேனியம்தான். இத்தகையச்சூழலில் அணுசக்தியில் இந்தியா தீவிர ஆய்வுக்கு முனைந்தால் இவர்களெல்லாம் யுரேனியத்தை தர மறுக்கும் சூழல் நிலவுகிறது. ஆக பழைய அணுஉலைக்கு ரசிய அடிமையாகவும் புதிய அணுஉலைகளுக்கு அமெரிக்கா அடிமையாகவும் மொத்தத்தில் இந்திய அரசு அடிமைத்தனத்துடன் குடியிருக்கும் நிலை ஏற்படும்.
நீண்ட நாள் நட்பு நாடாகிய ஈரானை இக்கட்டான நேரத்தில் கைகழுவிய ரசியா நம் உதவிக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. நிலைமை இப்படி இருக்கும் போது எப்படியாவது இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என்று தமிழக அரசு மூர்க்கமாக களமிறங்குவது தமிழக மக்களுக்கு எந்த வகையில் பாதுகாப்பானது என்கிற அச்சமே நம்மை வாட்டுகிறது.
எதிர்பாராமல் ஒரு விபத்து ஏற்பட்டுவிட்டால் உலையிலிருந்து 70 கி.மீ வரையிலான மக்கள் நிரந்தரமாக நம் வாழிடத்தைவிட்டு வெளியேற்றப்படும் சூழலில் பழந்தமிழரின் தாயகமான குமரி கண்டத்தையும் இன்னுயிரை ஈந்து பெற்று பாதுகாத்தப் பகுதிகளையும் பற்றிய நினைவுகளுடன் நிரந்தர அகதிகளாக தென் மாவட்ட மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். 133 அடி உயரத்தில் வானளாவ நிற்கும் தமிழர்களின் அறிவாசான் திருவள்ளுவர் ஆளரவம் இன்றி அநாதையாய் நிற்கும் காட்சியை எண்ணி கலங்கப் போகிறோமா?
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
கூடங்குளம் அணுமின் திட்டம்: மக்கள் கருத்தாய்வு கூட்டம்
ஒரு பார்வை.
– அசுரன் (asuran98@gmail.com)
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான பணிகளை கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி இந்திய அணு மின் உற்பத்தி கழகம் தொடங்கியது. இதற்கு 1988 முதலே மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கூடங்குளத்தில் மேலும் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக நான்கு அணு உலைகள் அமைக்க இந்திய அணு மின் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கடந்த ஆண்டு அக்.6ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அணு உலை வேண்டாம் என்று பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே கூடங்குளத்தில் அணுஉலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் 2ம் முறையாக ஜன.31ல் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமும் அலுவலக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. 3வது முறையாக மார்ச் 31ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. பின்னர் வ.உ.சி. மைதானத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடுகள் தயாரான நிலையில், தமிழகம் முழுவதும் மார்ச் 31ம் தேதி பந்த் அறிவிக்கப்பட்டதால் 3வது கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 4வது முறையாக ஜூன் 2ம் நாள் காலை 11 மணிக்கு நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) கண்ணப்பன் தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் பத்திரிகையாளர் பிரபுல் பித்வாய் உள்ளிட்டோர் நெல்லை வந்துள்ளனர். இதனிடையே கூடங்குளத்தில் அணு உலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சூன் 2ஆம் நாள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நெல்லை மாவட்டத்தில் மீனவ கிராமங்களான கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தங்குளி, உவரி, தோமையார்புரம், கூட்டப்பனை, கூடுதாழை மற்றும் பெரியதாழை ஆகிய பகுதியைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், இது சம்பந்தமாக நடைபெறும் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் நெல்லைக்கு சென்றுவிட்டதால் எப்போதும் பரரப்பாக காணப்படும் மீனவ கிராமங்களின் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடியது. மேலும் அணு உலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளத்தில் வியாபாரிகள் கடையடைப்பும் நடத்தினர். இதனால் கூடங்குளம் முழுவதும் பந்த் போன்று காட்சியளித்தது.
நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்தனர். கைக்குழந்தைகளுடனும் பெண்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வந்திருந்தனர். அணுஉலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் அவற்றில் விவரத்தை பூர்த்தி செய்து கொடுத்தவண்ணம் இருந்தனர். ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் வந்திருந்தனர். சுமார் 30 வண்டிகளில் சற்று தாமதமாக வந்த கூடங்குளம் மக்கள் அனைவரும் அரங்கிற்கு வெளியேயே நிறுத்தப்பட்டனர். (உள்ளே அவர்களின் எதிர்காலம் குறித்த அனல்பறக்கும் விவாதங்கள் நடந்துகொண்டிருந்தன).
பல்லாயிரக்கணக்கில் இலத்திகளுடனும் துப்பாக்கிகளுடனும் குவிக்கப்பட்டிருந்த போலீஸ் கும்பலைப்பார்த்து மக்கள் மிரள, சுற்றி சுற்றி வீடியோ எடுத்து மிரட்டிக்கொண்டிருந்தனர் போலீசாரும் அணுவாற்றல் துறையினரும். இதனால் வெகுண்ட முனைவர் எஸ்.பி. உதயகுமார், “நாங்களெல்லாம் என்ன பயங்கரவாதிகளா?, அல்லது கிரிமினல்களா?” என்று மாவட்ட ஆட்சியரிடம் கேட்க அவரோ எதுவும் தெரியாத அமுல்பேபி போல “நெக்ஸ்ட்… நெக்ஸ்ட்…” என்று கூட்டத்தை நடத்துவதிலேயே குறியாக இருந்தார்.
கூட்டத்தின் நோக்கம் குறித்து ஆட்சியர் பேசிய உடன், “கோஸ்டல் ஆக்ஸன் நெட்வொர்க்’கை சேர்ந்த என். ஜீவா பேசியபோது, “கடந்த ஆண்டு அக்டோபர் 6ல் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தின்போது ஆட்சியர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை முழுவதையும் தமிழில் தரவில்லை. அண்டை மாவட்டங்கள் மூன்றிலும் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யவில்லை. திட்ட வளாகத்தில் உள்ள கடல் நீர் சுத்திகரிப்பு ஆலைக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தவில்லை” என்றார். அவரின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் அரங்கிற்குள் இருந்தவர்கள் முழக்கமிட்டனர். அதற்குப் பதிலளித்த ஆட்சியர், அந்த அறிக்கையின் முழுப்பிரதியை விதிமுறைப்படி எல்லாருக்கும் கொடுக்க இயலாது என்றும், தேவைப்படுவோர் அணுமின் திட்ட அலுவலகத்திற்குச் சென்று பார்வையிடலாம் என்றும் தெரிவித்தார்.
கோட்டாறைச் சேர்ந்த பரமார்த்தலிங்கம் பேசுகையில், “அணுமின் திட்டத்தை நிறுத்தாவிட்டால் தினமும் 3 பேர் வீதம் தீக்குளிப்போம்!” என்றார். உடனே “அணு உலை வேண்டாம்’, “அணு உலை வேண்டாம்’ என அங்கிருந்தவர்கள் முழக்கமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளிக்கு இடையே திட்டத்தை ஆதரித்து இந்திய கலாசார நட்புறவுக் கழகத் தலைவர் ராமையா பேசுகையில், அணு உலையால் ஆபத்து வராது என்றும் இதனால் பல நன்மைகள் உண்டும் என்றும் தெரிவித்தார். ஆதரவாகப் பேசிய இராமையாவை அடிக்க பெண்கள் செருப்புகளுடன் பாய்ந்தனர்.
இடிந்தகரையைச் சேர்ந்த என். சுரேஷ் என்பவர் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அவரது கருத்துகளுக்கு எதிர்ப்புக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளரான ஆன்டன் கோமஸ் ஆட்சேபம் தெரிவித்தார். உடனே, அரங்கிற்குள் இருந்தவர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துத் தெரிவித்துப் பேசியவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டு குறிப்பெடுத்த இளைஞர் ஒருவருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சிலர் அந்த இளைஞரைத் தாக்கினர். போலீஸார் அந்த இளைஞரை மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். ஆதரவாகப் பேசிய இளைஞருக்கு பெண்களின் செருப்படியும் அடி, உதைகளும தாராளமாகக் கிடைத்ததன.
இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் விஞ்ஞானி லால்மோகன் பேசுகையில், மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றார். பத்திரிகையாளர் பிரபுல் பித்வாய் பேசுகையில், “அணு உலைக் கழிவுகளால் ஆபத்து ஏற்படும் என்றும், விபத்து நடக்காது என்பதற்கான உத்தரவாதம் இல்லை!” என்றும் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்து இந்திய அணுமின் கழகத் திட்ட இயக்குநர் (மும்பை) எஸ்.கே. அகர்வால் பேசுகையில், கழிவுப் பொருள்கள் மீண்டும் பயன்படுத்தப்படும் என்றார். அப்போது எதிர்ப்பாளர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இவ்வாறு அவ்வப்போது எதிர்ப்பாளர்கள் முழக்கமிட்டுக் கொண்டே இருந்ததால் அரங்கில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் திடீரென்று கூட்டம் முடிந்துவிட்டது என்று அறிவித்தார். இவ்வாறு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அரைகுறையாக நடந்து முடிந்தது.
இதுபற்றி நெல்லை மாவட்ட ஆட்சியர் பிரகாஷ், “கூடங்குளம் அணுமின் திட்டத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைப்பது தொடர்பாக பொது மக்களின் கருத்தை கேட்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள், மீனவர்கள், அவர்களது பிரதிநிதிகள், கல்வியாளர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்து கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.
அவர்கள் பெரும்பாலும் 3 பிரச்சினைகளை அடிப்படையாக கொண்ட கேள்விகளை கேட்டனர். அதில் ஒன்று இந்த திட்டத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுமா? என்பது தான். கூடங்குளம் அணுமின் திட்டத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து ஒரு சொட்டு அளவு கூட தண்ணீர் எடுக்கப்பட மாட்டாது. ஏனெனில் இந்த திட்டத்துக்கு தேவையான தண்ணீர் முழுவதும் கடலில் இருந்தே எடுக்கப்படுகிறது. இதற்காக அணுமின் திட்டத்தினர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமைத்து உள்ளனர். இந்த அமைப்பை நமது ஜனாதிபதியே வந்து பார்த்து சென்று உள்ளார்.
மேலும் அணுமின் திட்ட குடியிருப்புகளுக்கும் அந்த தண்ணீரே குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. அணுமின் திட்டத்துக்காக பயன்படுத்தப்பட்ட தண்ணீரை, மீண்டும் கடலுக்குள் விட்டால் கடல் மீன்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள். அதற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லை.
அடுத்து அவர்களது கேள்வி இடப்பெயர்ச்சி பற்றியது. கூடங்குளம் அணுமின் திட்டத்தில் கூடுதலாக அமைக்கப்படும் 4 அணு உலைகளுக்காக மேற்கொண்டு எந்த நிலமும் கையப்படுத்தப்படமாட்டாது. இப்போது அவர்கள் வசிக்கும் இடத்திலேயே அனைவரும் வசிக்கலாம். எந்தவித இடப்பெயர்ச்சியும் இருக்காது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையில் அறிக்கை 750 பக்கங்களை கொண்டது. அதை முழுமையும் படிக்க முடியாது என்பதால் அதன் சுருக்கத்தை தமிழில் மொழி பெயர்த்து பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. அதை யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். கூடங்குளம் அணுமின் திட்டம் உலக தரத்தில் பல்வேறு நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த திட்டம் பற்றி மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியதில்லை. 4 அணு உலைகளுக்கான கருத்து கேட்பு முடிந்து விட்டது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் தொகுக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் கூறினார்.
ஆக, அரைகுறையாக நடத்தப்பட்ட கூட்டங்களின் முடிவாக அரசுக்கு சார்பான வகையில் அறிக்கையை அனுப்பி வைப்பதே மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்டுள்ள பணி என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால், “எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் உரிய பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்ததை இந்த நூற்றாண்டின் உலகின் மிகப்பெரிய நகைச்சுவையாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.
இப்படியாக பல இலட்சம் மக்களின் எதிர்காலம் குறித்த இந்த மக்கள் கருத்தாய்வானது வெறும் ஒன்றே முக்கால் மணி நேரத்தில் நடந்து முடிந்தது. கொளுத்தும் நெல்லை வெயிலில் மதியம் பட்டினி வயிறுகளுடன், தங்கள் எதிர்காலம் பற்றி என்ன முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பதே தெரியாமல் அபலைகளாய், திக்கு தெரியாத காட்டில் விடப்பட்டவர்களைப் போல அந்த அப்பாவிகள் கலைந்து சென்ற காட்சி நெஞ்சை உலுக்குவதாய் இருந்தது.
சனநாயகம் என்ற பெயரில் நம் நாட்டில் நடக்கும் மக்கள் விரோத அரச செயல்பாட்டின் மற்றொரு சாட்சியமாக இந்த கருத்தாய்வு கூட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். (மற்றொரு அண்மைய எடுத்துக்காட்டு சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பான மக்கள் கருத்தாய்வு கூட்டங்கள்). வாழ்க சனநாயகம்!.
(asuran98@gmail.com)
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – படக்கவிதைப் பிரிவு
- காதல் நாற்பது (24) வாழ்வு வாழ்வதற்கே !
- தி.மு.க அரசின் தவறுகளில் மற்றொன்று!
- குருவும் சீடனும் (ஞானத்தேடலின் கதை) – புத்தக அறிமுகம்
- நளாயினியின் கவிதைவெளி – நளாயினி தாமரைச் செல்வனின் ‘உயிர்த்தீ’ மற்றும் ‘நங்கூரம்’
- கோயில்களில் பிறமதத்தார் – ஒரு முரண் பார்வை – பாகம் 1
- தமிழக அரசியலில் உள்ள வேண்டாத போக்குகள்
- அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த படக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் ஆசிப் மீரான் கருத்துரை
- California Tamil Academy (CTA)(a non-profit organization)in the Bay Area
- அக்கறையும் ஆதங்கமும் இணைந்த குரல்
- போரின் தடங்கள்
- The Elephant and Tree (யானையும், மரமும்)
- சிவாஜி படத்திற்கு மற்றுமொரு “பில்டப்பு”
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 20
- கடிதம்
- சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியம் – நேற்று, இன்று, நாளை ” கருத்தரங்கமும், கலந்துரையாடலும்
- கனவு – சேவ் – திருப்பூரில் குறும்படப் பயிற்சிப் பட்டறை
- மெய் எழுத்து மாத இதழ் வெளியீடு
- கடிதம் – ஆங்கிலம்
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 13
- பசோலினி : கலையும், விளையாட்டும்
- ஈ. வே. ரா பற்றிய திரைப்படத்தால் தெரியவரும் தகவல்கள்
- தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் – இன்றைய சித்திரம்
- 2008 ஆண்டுக்குள் வெண்ணிலவைச் சுற்றப் போகும் இந்தியாவின் மனிதரில்லா விண்ணூர்தி
- ராஜ முக்தி
- ;
- தமிழக அரசியல் – இன்று!
- கூடங்குளம் அணுமின் திட்டம்: மக்கள் கருத்தாய்வு கூட்டம் – ஒரு பார்வை
- அணுவுக்கு உலையா? வாழ்வுக்கு உலையா? கூடங்குளம் அணுமின் திட்டம்
- கால நதிக்கரையில் …. – அத்தியாயம் – 9
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 4
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதின்மூன்று: வேலை வேண்டும்!