சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
முன்னுரை: யந்திர யுகத்திற்கு வந்துள்ள இந்தியா மீண்டும் பசுமை யுகத்துக்கு மீளாது. பரிதிக்கனல், காற்றாடி, கடலை, கடல்வெப்பம், பூதளக்கனல், பயிர்வளச் சக்கை, உயிர்வளக் கழிவு போன்ற மிள்பிறவி எருக்களை மின்சக்தியாக மாற்றுவதற்கும் திறமை மிக்க விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணர்களும், நுணுக்கமான யந்திர சாதனங்களும் இந்தியாவுக்குத் தேவை. அசுரன் கூறுவதுபோல் வெறும் அறிவாளிகள் மட்டும் இருந்தால், இந்திய யந்திரங்களை எள்ளி நகையாடுவதைத் தவிர சக்கரங்களை வேகமாய்ச் சுற்றி மின்சக்தி உண்டாக்க முடியாது! மோட்டர் வாகனங்கள், யந்திரச் சாதனங்கள், ஆகாய விமானங்கள், அண்டவெளிக் கப்பல்கள், அணுமின் நிலையங்கள் போன்றவை ‘உடன்படும் அபாய எதிர்பார்ப்புக் கணிப்புகள் ‘ [Acceptable Risk Assessments] என்னும் விதி முறைக்கு உட்பட்டுதான் வடிவம் பெற்று உலகம் எங்கும் இயங்கி வருகின்றன. உருவாக்கிய மனிதருக்கு யந்திரங்கள் பிரதிப் பலன்களை அளித்து வருகின்றன. பூரணத் திறமில்லா மனிதர்கள் தவறுகள் இழைத்தோ, அவர் வடித்த யந்திரங்கள் பழுதடைந்தோ அபாயங்கள் நிகழ்வதை முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் அவற்றை நிச்சயம் பேரளவு குறைக்க முடியும். விபத்துகளில் பாடங்களைக் கற்றுக் கொண்டு எதிர்காலத்தில் தவறுகளை எவ்விதம் குறைப்பது, யந்திரப் பழுதுகளை எவ்விதம் அகற்றுவது என்பதில் மனித இனம் முழு ஆற்றலைச் செலுத்தி, யந்திர யுகத்தில் தப்பிப் பிழைக்க வேண்டும்.
அமெரிக்காவில் மோட்டர் வாகன விபத்துகளில் ஆண்டுக்குச் சராசரி 50,000 பேர் மரணம் அடைகிறார்கள்! அணுயுகம், அண்ட வெளியுகம் பிறந்த பிறகு கடந்த 50 ஆண்டுகளில், கார் விபத்தில் மட்டும் (50×50,000 =2,500,000) 2.5 மில்லியன் மாந்தர் உயிரை இழந்துள்ளனர்! ஆயினும் கார் உற்பத்தியோ அல்லது கார் ஓட்டுதலோ அமெரிக்காவில் குறைந்துள்ளனவா ? நாள் தோறும் ஆயிரக் கணக்கான விமானங்கள் 300-400 நபர்களை ஏற்றிக் கொண்டு வானத்தில் 5 மைல் உயரத்தில் உலகெங்கும் பறக்கின்றன. அவற்றில் ஏதாவது ஒரு விமானம் விழுந்து அத்தனை பேரும் மாண்டு போகிறார்கள்! ஆயினும் விமானங்கள் பறக்காமல் இருக்கின்றனவா ? அல்லது மக்கள்தான் அச்சமடைத்து விமானத்தில் பறக்காமல் புறக்கணிக்கின்றாரா ? 2001 செப்டம்பர் 11 ஆம் தேதி பயங்கர வாதிகள் நான்கு விமானங்களைக் கடத்திக் கொண்டுபோய் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களையும், ஐம்புறக் கோட்டையையும் தகர்த்து இரண்டு மணி நேரத்தில் சுமார் 5000 பேரைக் கொன்றார்கள். அந்த கோரச் சம்பவத்துக்குப் பிறகு பாதுகாப்பு முறைகளுடன் விமானங்கள் பறக்காமல் உள்ளனவா ? அல்லது மக்கள் பயந்துபோய் விமானப் பயணத்தையே நிறுத்தி விட்டார்களா ? அசுரன் செர்நோபிள் கோர விபத்தை மட்டும் கூறி, அணுமின் உலைகள் அனைத்தையும் மூடச் சொல்வதும் இவற்றைப் போன்ற உதாரணம்தான்!
அணுசக்தி அம்மன் மீது ஏவிய அசுரபாணம்!
இரண்டாம் கட்டுரையில் அசுரன் தனது வலுவான, பயங்கரமான, இதுவரை எவரும் எறியாத, மீண்டும் அவர் மீதே தாக்கப் போகும் ஓர் அசுர பாணத்தை ஏவி விட்டு, அணுசக்தி அம்மனைத் தகர்த்து வீழ்த்தி விட்டதாய்ப் பூரித்துக் கொண்டிருக்கிறார்! 2002 ஜூலை 24 ஆம் தேதி மெட்ராஸ் அணுமின் நிலையத்தில் பணியாளர் ஒருவர் கதிரியக்கக் கனநீர்க் கசிவில் தளத்திலே மரணம் அடைந்தார் என்று கூறுகிறார்! இது அசுரப் புளுகு! இன்றைய நாள்வரை (டிசம்பர் 1, 2004) இந்திய அணு உலைகளில் கதிர்வீச்சுத் தீண்டி, ஒருநபர் கூட உயிரிழந்த தில்லை என்பது எனது அழுத்தமான திருவாசகம். பீட்டாக் கதிர்களை மட்டும் வீசும் டிரிடியம் ஏறிய கனநீர்க் கசிவில் [Beta Ray Emitting Tritiated Heavy Water] மனிதன் எவனும் அடுத்த கணமே மாண்டு போக முடியாது! விஞ்ஞான சூன்ய அறிவாளி ஒருவர்தான் இதை மெய்யென்று நம்பி எழுதி வருவார்! இந்த அசுரக் குற்றச்சாட்டை அவசியம் அசுரன் முதலில் திண்ணை வாசகருக்கு மெய்ப்பிக்க வேண்டும். நீதி நெறி தெரிந்த தமிழ் நாட்டு இதழாசிரியர் ஒருவர் இவ்விதம் நெஞ்சழுத்தமுடன் கூசாமல், இவ்விதம் அசல் புரளிகளை இணைய தளத்தில் எழுதுவது வியப்பாக இருக்கிறது!
கொல்லன் தெருவில் ஊசியை விற்றுக்கொண்டு, இந்தியாவில் விஞ்ஞான அறிவாளிகள் நிறைவாகவும், மெய்ஞ்ஞான அறிவாளிகள் குறைவாகவும் இருப்பதாய் முரணாக கூறிக்கொண்டு, செர்நோபிள் அணுமின் உலை விளைவுகளை விளக்கி, இறுதியில் புலிக்கொடியை ஏந்திக் கொண்டு சேரன் செங்குட்டுவன் போர் அனுபவசாலியாய்க் கூறித் தான் எத்தகைய ஓர் முற்போக்குப் பிற்போக்குவாதி என்று காட்டிக் கொள்கிறார், அசுரன். அடுத்த ஊர் வீரபாண்டிய கட்டப் பொம்மனை மறந்ததோடு, அணுத்துறை வலைத் தளத்தையும் (www.npcil.org) படிக்காமல், வெட்கக் கேடான இந்திய அணுமின் நிலையங்கள் என்ன லட்சணத்தில் இயங்கி யுள்ளன என்று திண்ணையில் கால் நீட்டிக் கொண்டு பாட்டியம்மா வக்கனை அடிப்பது போல் கேட்பது நல்ல நகைப்பை உண்டாக்குகிறது! இந்தியா உள்பட உலக நாடுகளில் நேர்ந்த அணுசக்தி உலைகளின் அபாய விபத்துகளையும், அவற்றின் பண்பாடு, பராமரிப்பு, பாதுகாப்பு, கதிர்வீச்சுக் கழிவுப் புதைப்பு ஆகியவற்றையும், அணு ஆயுத வெடிப்புகளையும், கதிரியக்கப் பொழிவுகளையும் பற்றி விளக்கமாய், கடந்த மூன்று ஆண்டுகளாக 50 கட்டுரைகளுக்கு மேற்பட்டு நான் திண்ணையில் எழுதியிருப்பதை, அசுரன் படித்தது போல் தெரியவில்லை. மேலும் அணுவியல் எருக்கோல் யுரேனியம்-235, -233, புளுட்டோனியம்-239 [Nuclear Fuel] ஆகியவற்றைப் பற்றிக் கூறியது போல, வேறு மீள்பிறப்பு எரிசக்திகளின் [Renewable Energy Sources: Wind, Solar, Geothermal, Bio-mass, Bio-gas Power] மூலம் மின்சக்தி உற்பத்தி செய்வது பற்றியும், அவற்றின் நிறைபாடுகள், குறைபாடுகள் ஆராயப் பட்டும் பத்துக்கு மேற்பட்ட எனது கட்டுரைகள் திண்ணையில் வந்துள்ளன.
அசுரன் கூறிய செர்நோபிள் அணு உலை விபத்தின் கோர விளைவுகள் அனைத்தும் உண்மை. அதன் தீவிரக் கதிரியக்கப் பொழிவுகள் ஐரோப்பாவிலும், அமெரிக்கா, கனடா, ஆசியாவிலும் பரவிப் பாதித்ததும் உண்மை. அதேபோல் இப்போது 2003 ஆண்டில் ஐரோப்பாவில் 170 அணுமின் நிலையங்கள் சீராகக் கண்காணிக்கப்பட்டு இயங்கி வருவதும் உண்மை. அடுத்துப் புதிய அணுமின் நிலையங்கள் 30, மூடப்பட்ட பழைய அணுமின் நிலையங்கள் கனடா, அமெரிக்கா, இந்தியாவில் செம்மை யாக்கப்பட்டு மீண்டும் இயங்கி வருவதும் உண்மையே.
அடுத்த அண்டப் புளுகு மணவாளக்குறிச்சியில் அசுரன் நேரடியாகப் பார்த்து மானஸைட் மணல் வடிக்கட்டுச் சாலையின் கதிரியக்கத்தால் உண்டானதாகக் கருதி, ஆதாரத்துடன் நிரூபிக்காதப் புற்று நோய் நபர்கள். மானஸைட் மணல் தென்னிந்திய மேற்குத் திசையில் தமிழகத்தின் பெரும்பான்மைக் கடற்கரைப் பகுதியிலும் (மணவாளக்குறிச்சி, கன்னியாகுமரி), கேரளாவின் கடற்கரைப் பகுதியிலும் (சவரா, சத்திரபூர்), குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளிலும், கிழக்கே தமிழ்நாடு, பாண்டிச் சேரி, ஆந்திரா பிரதேசம், ஒரிஸா, மேற்கு வங்காளக் கடற்கரைப் பகுதிகளிலும் 3600 மைல் நெடுவே பல இடங்களில் கிடைக்கிறது. உலகத்திலே மிகப் பேரளவு தாதுக்கள் இல்மனைட், ரூடைல், லிகோஸீன், ஸிர்கான், மானஸைட், ஸில்லிமனைட், கார்னெட் [Ilmanite, Rutile, Leucoxene, Zircon, Monazite, Sillimanite, Garnet] அனைத்தும் தென்னகத் தீவகற்பக் கரை மணலில் கிடைக்கின்றன.
தென்னகக் கடற்கரையிலும், கடலிலும் எங்கெல்லாம் மானஸைட் மணல் படிந்துள்ளதோ, அங்கு வாழும் மனித இனங்கள், மீன்வளங்கள் அனைத்தும் தோரியக் கலவையில் எழும் பின்புலக் கதிரியக்கத்தால் தீண்டப் படுகின்றன. அச்சிறிய தாக்குதல் பல்லாண்டுகள் நீடித்தால் [Long Term Low Level Radiation due to Thorium Compounds], மனித இனத்துக்கும், மீன்வளங்களுக்கும் என்ன பாதிப்புகள் நேருகின்றன என்னும் விஞ்ஞான உயிரியல் விளைவுகளின் புள்ளி விவரங்களைச் சேமிக்காமல், உறுதியாக எதையும் கூற முடியாது. மணவாளக்குறிச்சி மணல் வடிகட்டுச் சாலை கல்பாக்கம் போன்று அணுவியல் ஆய்வுக் கூடமன்று. பல தாது உலோகக் கலவைகளை [Ilmanite, Rutile, Leucoxene, Zircon, Monazite, Sillimanite, Garnet] ஒப்புமை எடைமானம், மின்னியல் கடத்துவம், காந்தப் பற்றல், தளமுறைப் பண்பு [Specific Gravity, Electrical Conductivity, Magnetic Susceptibility, Surface Characteristics] வழிகளில் பிரித்தெடுப்பது. மற்றும் ஸிர்கான் [Zircon] தாதுவை ரசாயன முறையில் ஸிர்கலாய் அணு உலை அழுத்தக் குழல்கள் உருட்ட [Zircaloy Pressure Tubes] ஸிர்கான் பளிங்காக [Zircon Frit] மாற்றுவது. ஆதலால் மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் கடலின் மூலம் வரும் மானஸைட் தோரியக் கலவை இரசாயன முறையில் மாறுதல் அடைவதில்லை! ஆதலால் மணல் சாலையில் அதன் கதிர்வீச்சு அளவிலும் மாறுதல் எதுவும் அடைவதில்லை!
அணு ஆயுதங்கள், அணு உலைகள் தோன்றுவதற்கு முன்பே, இயற்கையாகவே பூதளத்தில் பின்புலக் கதிர்வீச்சுகள் [Background Radiation] பல மில்லியன் ஆண்டுகளாக மனிதரையும், உயிரினத்தையும், பயிரினத்தையும் தாக்கி வந்திருக்கின்றன. அண்டவெளியிலிருந்து அகிலக் கதிர்வீச்சு [Cosmic Radiation] பூமியை நோக்கி அடிக்கிறது. தென்னக தீவகற்பத்தில் கடலருகே வாழ்பவர்கள் மானஸைட் மணல் கதிர்வீச்சு, நீலகிரி மலைமீது வாழ்பவர்கள் பாறைக் கதிர்வீச்சு, விமானத்தில் பறந்து செல்பவர் அகிலக் கதிர்வீச்சு ஆகியவற்றால் தீண்டப் படுகிறார்கள். பின்புலக் கதிர்வீச்சு அட்டவணையில் பார்த்தால், கேரளா (கன்னியா குமரி) கடற்கரையில் வாழ்வோர் (800-8000) மில்லிரெம் (0.8 Rem-8 Rem) கதிரடி பெறலாம் என்று காட்டுகிறது. இலங்கையில் கிரானைட் பாறைக் குன்றுகள் மீது வாழும் மக்கள் 3-7 ரெம் கதிரடி வாங்குவதாகத் தெரிகிறது. பிரேஸில் கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மாந்தர் 1.7 ரெம்-12 ரெம் கதிரடி பெறுகிறார். வர்த்தகத் துறை விமானங்களில் பறப்போர் அகிலக் கதிரடிப்பால் 3.5 ரெம் வாங்குகிறார். இவ்வித இயற்கைத் தணிவு நிலைக் கதிர்வீச்சால் [Low Level Radiation] மாந்தருக்கு நீண்ட காலப் பாதிப்பு என்ன என்று புள்ளி விவரங்கள் உலகில் இன்னும் சேமிப்பாக வில்லை! அவர் குறிப்பிட்ட மீன்கள் அமில மழை அல்லது மேறு இரசாயனக் கழிவுகளால் மடிந்து போயினவா என்பதை ஆராய வேண்டும். அதே போல் சென்னை கடற்கரை, கல்பாக்கம் கடற்கரை நீரில் தணிவு நிலைக் கதிர்வீச்சுத் துணுக்குகள் ஓரளவு கலந்துள்ளதால் மீன்கள் செத்தனவா இல்லையா என்பது ஆதாரமுடன் நிரூபிக்கப் படாமல் பசுமைவாதிகள் கூக்குரல் போடுவது சரியன்று.
இந்திய அணுமின் நிலையங்களின் அண்டையில் இருக்கும் குடியேற்றக் காலனியில் வாழ்வோர்களில் ஊழியர், ஏழைப் பாமரர் மட்டும் பலவித நோய்களில் தவிப்பதாக [கைகளில் ஆறு விரல்கள்! காலில் ஏழு விரல்கள் வயிறு வீக்கம், ஊதிய வயிறு! கழுத்து வீக்கம், காய்ச்சல், வழுக்கத் தலை, வயிற்றுப் போக்கு, ஊனிலிருந்து இரத்தம், குருதிச் சீர்கேடு! பெண்டிருக்கு மார்புப் புற்று நோய் வாய்ப்பட்டு, மதலைக்குப் பால் கொடுக்க முடியாமல் கண்ணீர் விடுவது! மதலைகளுக்கு வெட்டி வெட்டி இழுக்கும் இழுப்பு நோய்!] அசுரன் (எஸ்.பி. உதயகுமார்) எழுதிய கற்பனை நாடகத்தில் எழுதிய நிஜப் பொய்களை, மெய்யானவை என்று நிரூபிக்காமல் அப்படியே ஒதுக்கிவிட்டு, செர்நோபிள் அணுமின் உலையில் ஏற்பட்ட கதிரியக்கப் பொழிவின் விளைவுகளை நிரம்ப எழுதியிருக்கிறார். இந்திய அணுமின் உலைகள் செர்நோபிள் அணுமின் உலைகள் போன்று பிற்போக்கானவை அல்ல. செர்நோபிள் அணுமின் உலை வெடித்ததைப் போல், கூடங்குளம் அணுமின் உலைகளோ, மற்ற எந்த இந்திய அணுமின் உலையோ வெடிக்கப் போவதில்லை! அசுரன் போன்ற விஞ்ஞான எதிர்ப்பு அறிவாளிகள் இக்கருத்தைப் புரிந்து கொள்ள முடியாது! புரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டார்கள்!
இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் போபால் நகரில் 1984 ஆம் ஆண்டில் நேர்ந்த மாபெரும் கோர மரண விபத்துக்கு அடுத்தபடிதான், 1986 இல் வெடித்த செர்நோபிள் அணுமின் உலையின் கதிரியக்கத் தீங்குகள் இடம் பெறுகின்றன. இவற்றைப் பற்றி விளக்கமாகக் கூறும் எனது விஞ்ஞானக் கட்டுரைகள் திண்ணையில் வந்துள்ளன. உலக வரலாற்றில் யந்திர யுகத்தின் கோர விளைவுகளில் முதல் இடங்களைப் பெறும் இவ்விரு விபத்தும் தானாக எழுந்து மக்களுக்கு இன்னல் தரவில்லை! அவை இரண்டும் மாபெரும் மனிதத் தவறுகளால் உண்டானவை! பொதுடமை ரஷ்யா நிதிச் சிக்கனத்தில் IAEA நியதிக்கு முரணாய்க் கோட்டை அரணில்லாமல் டிசைன் செய்த பிற்போக்கான பாதுகாப்புப் பண்புகளை உடையது, செர்நோபிள் அணுமின் உலை. இந்திய அணுமின் நிலையங்கள் (தாராப்பூர், ராஜஸ்தான் முதலிரு இரண்டு யூனிட்டுகளைத் தவிர) அனைத்தும், அபாய விபத்து நிகழும் போது கதிரியக்கப் பொழிவுகளை உள்ளடக்கும் இரட்டைக் காங்கிரீட் கோட்டை அரண்களைக் கொண்டவை! அமெரிக்கா கட்டிய தாராப்பூர் முதல் இரண்டு யூனிட்டுகள், கனடா கட்டிய ராஜஸ்தான் முதல் இரண்டு யூனிட்டுகள் ஆகியவை ஒற்றைக் காங்கிரீட் கோட்டை அரண் பெற்றவை. செர்நோபிள் அணுமின் உலை ஒரு கோட்டை அரணுக்குள் கட்டப்பட்டு இருந்தால் அத்தனை மரணங்கள் ஏற்பட்டிருக்கா. மேலும் கதிரியக்கம் பரவி உலகெங்கும் எண்ணற்ற மாந்தர் தாக்கப்பட்டிருக்க மாட்டர்கள்!
1945 முதல் 1987 வரை 285 விபத்துக்கள் அணு உலைகளில் ஏற்பட்டுள்ளதாக அசுரன் கூறும் எண்ணிக்கையை எடுத்துக் கொள்வோம். 2004 ஆண்டு வரை எடுத்துக் கொண்டால் இதே வீதத்தில் 400 சராசரி விபத்துக்களாக நீட்டிக் [Average Extrapolation] கணக்கிடலாம். உலக அணு உலைகள் ஆண்டுதோறும் அனுப்பும் விபத்துக்கள் அனைத்தையும் அகில அணுசக்தித் துறைப் பேரவை [International Atomic Energy Agency (IAEA)] உலக அணுவியல் இயக்குநர் கூட்டவை [World Association of Nuclear Operators (WANO)] ஆகிய இரண்டு நிறுவகங்கள் ஒழுங்காக ஏழு தலைப்புகளில் பிரித்து அவற்றின் மூல காரணங்களை ஆய்வு [Root Cause Analysis] செய்து தவிர்ப்பு நெறிகள், முறைகளை குறிப்பிட்ட நாடுகளுக்குத் திருப்பி அறிவிக்கின்றன. பிறகு அவற்றை நாடுகள் ஏற்றுக் கொண்டு, தடுப்பு ஏற்பாடுகளை அமைத்து, மீண்டும் பழுதுகள் அல்லது தவறுகள் நேராமல், உலக நாடுகள் கண்காணித்து வருகின்றனவா என்று நிபுணர்களை அனுப்பிச் சோதிக்கின்றன. உலகத்தில் IAEA, WANO அணுசக்தி உலைகளைக் கவனித்து வருவது போல், மற்ற இரசாயனத் தொழிற்சாலைகள் மேற்பார்வை செய்யப்படுவதில்லை.
அணு உலை எரிக்கோல்கள் உருகிப் போய், தீப்பற்றிப் பலர் உயிரிழந்து, கதிரியக்கம் நிலையத்தை விட்டு வெளியேறி உலகெங்கும் பரவியதால், 1986 இல் நிகழ்ந்த செர்நோபிள் விபத்து (யுக்ரேன், பழைய ரஷ்யா) தகுதி: 7 [Category:7] பெற்றது. அமெரிக்காவில் 1979 இல் நேர்ந்த திரிமைல் தீவு [Three-Mile Island TMI-2 Unit] அணுமின் நிலைய விபத்து தகுதி: 6 [Category:6] பெற்றது. இவ்விபத்தில் எரிக்கோல்கள் உருகினாலும், அணு உலைப் பாதிப்புகள், பேரளவு கதிரியக்கம் கோட்டை அரணுக்குள் அடக்கப்பட்டன. கதிர்வீச்சுத் துணுக்கள் ஓரளவு கசிந்து தப்பிச் சென்றன ஆயினும், யாரும் மரணமடைய வில்லை. TMI-2 விபத்துக்குப் பிறகு அமெரிக்க அணுத்துறைக் கட்டுப்பாட்டுப் பேரவை [Nuclear Regulatory Commission (NRC) அணுமின் நிலையங்களைச் சுற்றி வாழும் மாநில மக்களுக்கு பொட்டாஸியம் அயொடைடு [Potassium Iodide Tablets] வில்லைகளைத் தைராய்டு புற்றுநோய் தடுப்புக்கு அளிக்கப்பட வேண்டும் என்று சட்டமிட்டது. காலரா, பெரியம்மை, மலேரியா, ஃபுளுக் காய்ச்சல் போன்ற நோய்களைத் தடுக்க ஊசி போடுவது போல், பொட்டாஸியம் அயொடைடு வில்லை தருவது, வருமுன் காக்கும் பாதுகாப்பே. அசுரன் இவற்றை ஏன் அமெரிக்கா அளித்துள்ளது என்று கேட்டிருந்தார்.
அணு உலை விபத்துக்கள் இவ்விதம் தகுதி: 1,2,3,4,5,6,7 எண்களின் இனவகுப்புகளில் பிரிக்கப்பட்டு, காரண மூலங்கள் ஆழமாய் ஆராயப்படுகின்றன. இந்தியா உள்பட உலக நாடுகள் போபால், செர்நோபிள் போன்ற விபத்துக்களைத் தடுப்பதற்கும், பாதுகாப்பு நெறிகளை மேம்படுத்தவும், பணியாளருக்கு மிகையான பயிற்சிகளை அளிப்பதற்கும், புதுப் பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கும் பயன்படுத்த வேண்டும். அவ்விதம் செய்யாமல் அசுரன் கூறுவதுபோல் அணுமின் நிலையங்கள் யாவற்றையும் அடுத்த கணமே மூடுவதற்கும், பயன்தரும் இரசாயனத் தொழிற்சாலை அனைத்தையும் உடனே நிறுத்துவதற்கும் உபதேசம் செய்வது அறிவுடைமை யாகாது. உண்மை என்ன வென்றால் போபால் விஷவாயு விபத்து 1984 ஆம் ஆண்டில் இந்தியாவில் நேர்ந்தாலும், செர்நோபிள் போன்ற ஒரு கோர விபத்து இந்திய அணுமின் உலைகளில் நிகழவே நிகழாது.
திரிமைல் தீவு விபத்து, செர்நோபிள் பெரு விபத்துக்குப் பிறகு உலக அணுவியல் நாடுகள் அனைத்தும் இரண்டு முறை அணுசக்தி உலைகளில் டிசைன் செம்மைப்பாடுகள், பாதுகாப்புச் சாதனங்கள், இயக்கப் பயிற்சி நெறிகள் அனைத்தும் மேம்படுத்தப் பட்டன. இப்போது (2003) ரஷ்யாவில் 30, செர்நோபிள் விபத்து நாடான யுக்ரேனில் 13, பின்லாந்தில் 4, சுவீடனில் 11, ரூமேனியா 2, சுவிட்ஸர்லாந்தி 5, ஹங்கேரியில் 4, பெல்ஜியத்தில் 7, செக்கோஸ்லேவியாவில் 6, லிதுவேனியாவில் 2, ஸ்பெயினில் 9, பிரான்சில் 59, ஜெர்மனியில் 18 ஆக மொத்தம்: 170 அணுமின் நிலயங்கள் ஐரோப்பவில் இயங்கி வருகின்றன. 30 உலக நாடுகள் 437 அணுமின் நிலையங்களை இயக்கி வருவதோடு, இன்னும் 30 புதிய அணுமின் நிலையங்கள் கட்டப் பட்டு வருகின்றன. அடுத்து கனடா, அமெரிக்கா, இந்தியாவில் மூடப்பட்ட பழைய அணுமின் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளன.
அசுரன் அணுசக்தி துறையின் [www.npcil.org] தளத்தைப் படிக்காது, இந்தியாவின் 14 அணுமின் நிலையங்கள் எந்த லட்சணத்தில் இயங்கி வருகின்றன என்று அறியாமல் கேட்பது நல்ல சாமர்த்தியம்! அனைத்து நிலையங்களின் தனித்தனிச் சாதனைகளை [www.npcil.org] (2001-2004) அட்டவணையில் காணலாம். நிதிச்செலவு, இயக்க விபரங்களுக்கு அந்த இணைய தளத்தை முதலில் நோக்கச் சொல்லி யிருந்தேன். சுருக்கமாகச் சொன்னால் அவற்றின் சராசரி உற்பத்தித் திறம் [Capacity Factor]: கைகா: 84%, கக்கரபார்: 88%, நரோரா: 89%, ராஜஸ்தான் புதியவை: 72%, 84%, பழையது: 85%, தாராப்பூர்: 88%. 2002-2003 ஆண்டில் மட்டும் மொத்தம் 19200 மில்லியன் யூனிட் ஆற்றல் உற்பத்தி செய்து, 1438 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. ஏழாண்டுகளில் (1995-2002) ஆண்டுக்குச் சராசரி 13590 மில்லியன் யூனிட் ஆற்றல் பரிமாறிச் சராசரி திறம்: 74% இல் அனைத்து நிலையங்களும் இயங்கி யுள்ளன. 2002 இல் கல்பாக்கத்தின் ஒரு நிலையம் 92% தகுதியில் இயங்கியுள்ளது.
கல்பாக்கம் FBTR (Fast Breeder Test Reactor) வேகப் பெருக்கி வணிகத்துறை நிலையம் [Commercial Unit] அன்று. அது முன்னோடி ஆய்வு உலை [Prototype Research Reactor]. புதிதான காட்டு யானையைப் பயிற்சிக்கு மெல்ல மெல்ல உட்படுத்துவது போல, பாதுகாப்பாக 12.5 மெகாவாட் ஆற்றலில் [30% திறமையில்] குறைவாக இயங்கி வருகிறது. 2000 ஆம் ஆண்டில் 52 நாட்கள் தொடர்ந்து ஓடியதை எள்ளி நகையாடுகிறார், அசுரன். அபாயகரமான வேக நியூட்ரான் அணு உலையைப் பற்றி விஞ்ஞான அறிவில்லாமல், மீன்வள அனுபவம் மட்டும் பெற்ற அசுரன் வக்கனைப் பாட்டி போல் பேசி, இது வெட்கக் கேடு, இது என்ன லட்சணம் என்று தனது உச்ச அறியாமையைக் காட்டுகிறார். பிரான்சின் ராப்ஸோடி மாடலாக இருப்பினும், அந்நிய உதவி எதுவும் இல்லாமல், கல்பாக்கம் FBTR வேகப் பெருக்கி நிபுணர்கள், இப்போது இயக்கத்திலும், பராமரிப்பிலும், பயிற்சி முறைகளிலும் மெதுவாகக் கற்றுக் கொண்டு வருகிறார்கள். அமெரிக்கா செறிவு யுரேனியம் மிகையாய் இருப்பதால், வேகப் பெருக்கியில் நிதி செலவழிக்க விருப்பமின்றிக் கைவிட்டது. இந்தியாவின் வேகப் பெருக்கி அணுவியல் ஆராய்ச்சிகளை ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகள் பாராட்டி வரும்போது, அணுவியல் விஞ்ஞான சூன்யமான அசுரன் FBTR வேகப் பெருக்கி அணுமின் உலையைப் பற்றி வாதாட எந்தத் தகுதியும் அற்றவர்.
வாழிய பாரத மணித்திரு நாடு! என்று பாரதியார் சைபீரியாவையோ, பி.ஜே.பி. கட்சியின் இராம பூமியையோ பற்றிப் பாடவில்லை! மூன்றாய் வெட்டுப்படாத முழு இந்தியா ஒன்றைத்தான் பாரத நாடு என்று பாரதியார் விளித்திருக்கிறார். நான் குறிப்பிடும் பாரதம் கூட்டரசான குடியரசு இந்தியா ஒன்றையே. பாரதத்தின் முழுப் பலன்களில் கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக்கூடம் ஒன்று! மெட்ராஸ் அணுமின்சக்தி நிலையம் ஒன்று! கூடங்குளம் அழுத்தநீர் அணுமின் நிலையம் ஒன்று! தூத்துக்குடியில் இயங்கிப் பொன்னீர் [Liquid Gold or Golden Water] எனப்படும் ஹெவி வாட்டரை ஆக்கிக் கொண்டிருக்கும் கனநீர் உற்பத்தி ஆலை ஒன்று! உன்னத தொழில்நுணுக்கக் கல்விக் கூடமான சென்னை இந்தியப் பொறிநுணுக்கக் கூடம் [Indian Institute of Technology] ஒன்று. மத்திய அரசில் நிதிப்பங்கீட்டில் நிலவப்பட்ட இவை போன்று இன்னும் எத்தனையோ கூறலாம். இவை அனைத்தும் ஏராளமான தமிழருக்கும், இந்தியருக்கும் பிழைப்பு ஊதியம் அளிப்பதோடு, பல வழிகளில் பயன் கொடுத்தும் வருகின்றன. பசுமை மயவாதிகளுக்கு விஞ்ஞான வளர்ச்சியில் நம்பிக்கை யில்லாததால், இவையெல்லாம் எதற்கு என்று வாதடலாம். இவற்றை மூடிவிடுவதற்கு முன்பு, அங்கு பணிபுரியும் ஆயிரக் கணக்கான படிப்பாளிகளுக்கும், பணியாளிகளுக்கும் முதலில், பசுமை மயவாதிகள் வேறு வேலைகளைக் கைவசம் வைத்துக் கொள்வது அவசியம்!
இரண்டாம் உலகப்போர், கொரியா, வியட்நாம், இரு ஈராக் போர்கள் (1991, 2003), சைனா, பாகிஸ்தான் பாரதக் காஷ்மீர் போர்களைப் போன்ற தற்கால யுத்தங்களுக்கு, அசுரன் போன்ற பசுமை மயவாதிகள் என்ன விதமான ஆயுதங்களை இந்தியா தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகள் கூறலாம். சேரன் செங்குட்டுவன் வில்லும், வாளும், குதிரை யானைப் படைகளும் போதுமா ? அல்லது வீரபாண்டிய கட்டப் பொம்மனின் கத்திகள் மட்டும் போதுமா ? ஆயுதங்கள் மூலம் எந்தப் பிரச்சனையும் தீராது, என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறும் போது அவரது கைவசம் எத்தனைக் கட்டளை ஏவு கணைகளும், அணு ஆயுதங்களும் பயமுறுத்துவதற்காக உள்ளன என்பதை அசுரன் மறந்து விட்டார். உன் குரல் ஓங்கிப் பிறர் காதில் பட வேண்டுமானல், நிச்சயம் கையில் நீளமான ஒரு பிரம்பு தயாராக இருக்க வேண்டும்!
ஒட்டு மரங்களில் கூட்டுப் பந்தலாய் நின்று கொண்டிருக்கும் பாரத நாட்டின் குடியரசு, ஒற்றைக் காலைப் பிடிங்கி விட்டால் சரிந்து போகிறது. கூட்டாட்சிக் குடியரசில் மத்திய அரசு கர்நாடகா மாநிலத்தின் கையை முறித்து, தமிழ் நாட்டுக் காவிரி நதிக்கு நீரைத் திறந்துவிடக் கட்டளையிட முடியாது! அல்லது இந்திய இராணுவத்தைக் கர்நாடகா மீது ஏவிட முடியாது! வேற்றுமொழி பேசும் மாநிலங்களுக்குள் ஒருமைப்பாடு இல்லாமையால், மத்திய அரசு சில சமயங்களில் மெளனமாய் இருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ? இப்போது (2004) காங்கிரஸ் கட்சி ஆட்சியில் சென்னை பூண்டி நீர்த்தேக்கத்திற்கு கிருஷ்ணா நதியிலிருந்து ஆந்திரா நல்ல மனதுடன் ஓரளவு நீரைத் தெலுங்கு-கங்கா கால்வாய் மூலம் அனுப்பி வருகிறது. வேறு கட்சி டெல்லிப் பீடத்தில் இருந்தால் சென்னையின் நீரோட்டம் நிறுத்த மாகலாம்! ஊருக்கு நூறு கட்சிகளும், வீதிக்கு ஆறு தலைவரும் தில்லு முள்ளுகள் செய்து கொண்டு கட்டுப்பாடுகளும், முட்டுக்கட்டையும் இட்டு ஒருமைப்பாடு இல்லாத இந்தியாவில் இவ்வளவாவது கிடைத்ததே என்று சகித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ? சென்னை அணுமின்சக்தி நிலையங்கள் மீது கற்களை விட்டெறியும் பசுமை மயவாதிகள், கன்னியா குமரி நகரில் ஆயிரக் கணக்கான சுற்றுலா நபர்களுக்குப் போதியச் சுகாதாரக் கழிப்பறைகள், கழிவு நீக்க வசதிகளை ஏற்படுத்த வழி வகுக்காமல் நாற்றம் பிடித்துக் பலவித நோய்களுக்குக் காரணமாய் இருப்பதைத் தவிர்க்க அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங்கே இணைத்து, இராவண பலத்துடன் நிரந்தரமாய்த் தீர்க்கலாம்.
யந்திர யுகத்தில் வேரூன்றி விழுதுகள் விட்டு ஆலமரமாய் முன்னேறும் விடுதலை இந்தியாவில் மிகுந்த விஞ்ஞான அறிவு வேண்டாம் என்று கூறும் முதலான பசுமைவாதியும், வெற்று அறிவாளியும் அசுரன் ஒருவராகத்தான் இருக்க முடியும்! பசுமைவாதிகள் எதிர்த்தாலும், யந்திர யுகத்தின் சக்கரங்களை நிறுத்திப் பழைய பதினைந்தாம் நூற்றாண்டுக்கு இந்தியப் பாட்டாளி மக்கள் கூட மீண்டும் செல்ல விரும்ப மாட்டார்கள். மின்சாரத்துக்கு மாற்று வழிகள் உள்ளன என்று கூறினாலும், அசுரன் கலிகால யந்திரங்கள் தேவை என்றோ, அவற்றை உருவாக்க கன யந்திரத் தொழிற் துறைகள் முதலில் அமைக்க வேண்டும் என்றோ, அவற்றை டிசைன் செய்ய ஆழ்ந்த விஞ்ஞானப் பொறியியல் அறிவு அவசியம் என்றோ அசுரன் எப்போது அறிந்துக் கொள்ளப் போகிறார் ?
திரும்பவும் நான் அசுரனுக்குக் கூறுகிறேன்: செர்நோபிள் அணுமின் உலைபோன்று, இந்திய அணுமின் நிலையங்களில் ஒன்றேனும், மனிதத் தவறாலோ அன்றி யந்திரப் பழுதாலோ வெடித்துக் கதிரியக்கத்தை தாரணி எங்கும் பரப்பாது. அதைப் புரிந்து கொள்பவர் வெறும் அறிவாளியாக மட்டும் இருந்தால் போதாது. ஓரளவு விஞ்ஞான அறிவும், திறந்த மனதும் ஆப்பிள் எது, ஆரஞ்சு எது என்று வேறுபாடு காணும் கூரிய
மதியும் வேண்டும். தமிழகத்தின் கிணற்றுக்குள் இருந்து கொண்டு, இந்திய அணுமின் நிலையங்களை நேரடியாகப் பார்க்கத் தேவையில்லை என்று ஆதாரமின்றிப் பிறர் ஊதிய சங்கையே மீண்டும் ஊதிக்கொண்டு அணுத்துறை நிபுணராகக் காட்டிக் கொள்வது, ஆக்க எழுத்தாளிக்கு நெறியாகாது.
அசுரனுக்கு மீண்டும் ஒருமுறை நான் கூறும் ஓர் ஆலோசனை. அடுத்து அவர் எழுதப் போகும் இந்திய அணுத்துறை வண்டவாளங்களை ஆவேசத்தில் குவிப்பதற்கு முன்பு, முதலில் நண்பர் எஸ்.பி. உதயகுமாருடன் ஒழுங்காக வீட்டுப் பாடங்களை இந்திய வலைத் தளங்களில் [www.npcil.org, www.dae.gov.in, www.barc.ernet.in, www.igcar.ernet.in] ஊன்றிப் படித்து, அவை அனைத்தையும் புளுகு என்று புறக்கணிக்காது எடுத்துக் கொண்டு, பிறகு வெளித் தளங்களில் மேய்ந்து அறிவித்தால், திண்ணை வாசகருக்குப் புதிய விருந்தாக இருக்கும். மேலும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் யாரோ ஒருவர் கதிர்வீச்சுக் கனநீர்க் கசியில் தளத்திலே மாண்டதாகக் கூறியது பொய்த்தகவல் என்று அவர் அறிந்தால், அந்த அபாண்டப் பழியைச் சுமத்தியதற்கு அணுசக்தி அம்மனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!
(அசுரன் அடுத்த பாணத்தைத் தயாராக வைத்திருக்கிறார்! திண்ணை வாசகர்களே! இக்கட்டுரைப் போர் தொடரும்)
இவைசார்ந்த தலைப்புகளில் திண்ணையில் மேலும் வெளியானவை:
I. (Power from Various Sources)
a) http://www.thinnai.com/science/sc0311041.html [Power Blackout in North America 2003]
b) http://www.thinnai.com/sc0603041.html [Hydro Electric Power(Niagara Falls)]
c) http://www.thinnai.com/sc0610041.html [Wind Power Electricity]
d) http://www.thinnai.com/sc0617043.html [Energy from Ocean Waves, Tides & Thermal-1]
e) http://www.thinnai.com/sc0624044.html [Energy from Ocean Waves, Tides & Thermal-2]
f) http://www.thinnai.com/sc0701042.html [Power from Geothermal Energy]
g) http://www.thinnai.com/sc0715042.html [Power from Solar Energy]
h) http://www.thinnai.com/sc0722044.html [Energy from Renewable Bio-mass]
i) http://www.thinnai.com/sc0729041.html [Renewable Hydrogen Power Vehicles]
j) http://www.thinnai.com/sc0819041.html [Toxic Emissions from Fossil Fuels]
k) http://www.thinnai.com/sc0827044.html [Water Pollutants from Industrial Discharges]
l) http://www.thinnai.com/science/sc0518031.html [Bhopal Chemical Disaster]
II. (Nuclear Assessment Topics)
1. http://www.thinnai.com/science/sc0504032.html [Cancer Kalpakkam]
2. http://www.thinnai.com/sc0909044.html [21 Century Nuclear Power]
3. http://www.thinnai.com/pl0925032.html [Again Kalpakkam]
4. http://www.thinnai.com/science/sc0525034.html [Nuclear Power Risks]
5. http://www.thinnai.com/science/sc0323033.html [Kudaunkulam Risk Assessments]
6. http://www.thinnai.com/pl04190312.html [Kalpakkam By: Gnani (II)]
7. http://www.thinnai.com/pl0918034.html [Kalpakkam By: Gnani (I)]
8. http://www.thinnai.com/ar1111047.html [Article By: N.R. Kulzalini]
****
[jayabarat@tnt21.com (S. Jayabarathan)] [December 1, 2004]
- மாச்சு பிச்சுவின் சிகரங்கள் – ஒரு முன் குறிப்பு
- வாரபலன் – டிசம்பர் 9,2004 – ராகோல்ஸவம் , குஞ்ஞாலிக்குட்டி சோதனை ,இராதா இசைவிழா
- கெளரி ராம்நாராயணின் ‘கருப்புக் குதிரை ‘
- நீங்க வெட்கப் படுவீங்களா ?
- புத்தர்களும் சித்தர்களும்
- சரணமென்றேன் (காதல் கவிதைத் தொகுப்பு) : முன்னுரை
- ஆதலினால் கவிதை செய்வீர். . .
- பேட்டி
- மக்கள் தெய்வங்களின் கதை 13 – வன்னியடி மறவன் கதை
- பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( ‘மகாகவி பாரதி வரலாறு ‘ நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்
- ஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…
- மெய்மையின் மயக்கம்-29
- மரபுகளை மதிக்கும் விருது
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 12 : முத்துப்பட்டன் கதை
- புத்தர்களும் சித்தர்களும்
- இஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் – II
- பாரதி இலக்கிய சங்கம் சிவகாசி – சி. கனகசபாபதி நினைவரங்கம் – 28.11.04
- சிறு வயது சிந்தனைகள் – பகுதி 1
- பாரதியும் கடலும்
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேச குமாரின் கூற்று!
- ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – சோதிப்பிரகாசமும் பாவாணரும்
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேருவின் வரலாற்றறிவு ஒரு விளக்கம்
- சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் – டிசம்பர் 9,2004 – ஜெயமோகனின் ஐந்தாவது மருந்து– ஒரு குறிப்பு
- சான் ஃப்ரான்சிஸ்கோ தமிழ் மன்றம் நாடகவிழா – டிசம்பர் 11 , 2004
- அடியும் அணைப்பும்
- மோகனம் 1 மோகனம் 2
- நீலக்கடல் – தொடர்- அத்தியாயம் – 49
- பகையே ஆயினும்….
- பாப்லோ நெரூதாவின் ‘உ ன து பா த ங் க ள் ‘
- இப்படித்தான்….
- காதல் கடிதம்
- பாப்லோ நெரூதாவின் ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘
- ஆணி அடிக்கப்பட்ட ஆத்மாக்கள் ( ‘clenched soul ‘ ) பேப்லோ நெருதாவின் கவிதைகள்-(4)
- புனிதமானது
- பெரிய புராணம் – 21 ( இயற்பகை நாயனார் புராணம் தொடர்ச்சி )
- கீதாஞ்சலி (7) – என் வாழ்வில் கட்டுப்பாடு (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- கவிக்கட்டு 39-கனவுதானடி
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 6.வீதியோரச்சித்திரங்கள்
- அறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்
- அம்மா
- பெயரில் என்ன இருக்கிறது ?
- படைக்கப்படாத உயிரின் உதயத்தின் அழகியல்
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன் (2)
- காஞ்சி மடத்தின் ‘கும்பகோண ‘ மகிமைகள்
- சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15 , 2005
- சில சென்றவார செய்திகள் (யுக்ரேன், டார்பார், ஏர் இந்தியா, JNUSU, ஊடகவியலாளர்கள், ஐராக்)
- உயிர்களை அலட்சியப்படுத்தும் நச்சு தொழிற்சாலைகள்
- சட்டத்தை ஏய்க்க சங்கர புராணம்!
- நீங்களுமா கலைஞரே ?
- ‘புலன் அடக்கத்தின் பொன் விழா’க் கொண்டாட்டம் – அன்று!,‘புலன் விசாரணை’ யில் சிக்கிய திண்டாட்டம் – இன்று !!
- மனநிம்மதிக்கான மாற்றுத்தளம்
- கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ ?