அடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

பாவண்ணன்


(சிலுவைராஜ் சரித்திரம்- ராஜ் கெளதமன், தமிழினி வெியீடு. 242, டி.டி.கே.சாலை, சென்னை-14, விலை. ரூ260)

ஒரு மனிதனுடைய முதல் இருபத்தைந்து ஆண்டுக்கால வாழ்க்கை என்பது மிக முக்கியமான பகுதி. இந்த மண்மீது இருக்கிற எல்லாவற்றைப்பற்றியும் சொந்தமான ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்ளும் காலம் இது. எடுத்துக்காட்டாக உறவுகள், நட்பு, தெருமனிதர்கள், சாதிகள், தொழில், கல்வி, காமம் ஆகியவற்றைப்பற்றி இளமையில் உருவாகும் மனப்பதிவுகள் ஆழ்மனத்தில் அழுத்தமாகத் தங்கிவிடுகின்றன. எஞ்சிய காலத்தின் வாழ்க்கைப் படகைச் சீராகத் திசையறிந்து செலுத்த இந்த அனுபவ ஒளியே கலங்கரை விளக்கமாக நிற்கிறது.

எழுத்தில் விவரித்துவிட்டுச் செல்லும் அளவுக்கு இந்த அனுபவ ஒளியைக் கண்டடைதல் எளிதான விஷயமல்ல. ஒவ்வொரு மனிதனும் அதற்காகச் சிந்தும் உழைப்புக்கும் வியர்வைக்கும் ரத்தத்துக்கும் அளவில்லை. முரண்களைக் கடந்தும் கசப்புகளைக் கடந்தும் மிகுந்த வலியுடனேயே அந்த ஒளியை நெருங்கவேண்டியிருக்கிறது. நிகழும் தருணத்தில் ஒவ்வொன்றும் மாபெரும் இம்சை. சூட்டுக்கோலால் செருகப்பட்ட வேதனை. காலம் கழியக்கழிய வடுக்களை வருடியபடி அசைபோடும்போதுதான் அது அனுபவமாகத் திரள்கிறது. இருபதாண்டுக்கால இளம்பருவத்து வாழ்வை மேலும் முப்பதாண்டுகளைக் கடந்து நினைவிலிருந்து எடுத்துரைக்கும்போது அவ்வுரை ஒரு தனிப்பட்ட நபரின் சரித்திரமாக இல்லாமல் தன் அனுபவத்தை முன்னிலைப்படுத்தி வாழ்வையும் உலகையும் புரிந்துகொண்டதை முன்வைக்கும் சரித்திரமாகவே இருக்கும்.

ராஜ் கெளதமனுடைய சிலுவைராஜ் சரித்திரம் நாவல் பிரதானமாக சுயவரலாற்றுக் குறிப்புகளைச் சார்ந்திருந்தாலும் புறச்ச்முகக் குறிப்புகளையும் கொண்டிருக்கிறது. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் மக்களிடையே நிலவிய சாதிகளைப்பற்றிய பார்வையையும் திராவிட இயக்கத்தின்மீது பிரகாசமாக அரும்பிய நம்பிக்கையையும் அது மங்கி அழிந்த கோலத்தையும் தென்மாவட்டங்களில் பொதுவுடைமை இயக்கத்துக்குக் கிடைத்த ஆதரவையும் கிறித்துவத்தில் சாதி இல்லை என்பது எவ்வளவு மேலோட்டமான கருத்தாக அமைந்திருக்கிறது என்பதையும் இடையிடையே நாவல் முன்வைத்தபடியே நகர்கிறது. ரத்தப்புண்களாக மாறித் தவிக்கவைத்து இம்சைகளும் வேதனைகளும் வெறும் அடையாளத் தழும்புகளாக உருமாற கெளதமனுக்கு முப்பதாண்டு இடைவெளி தேவைப்பட்டிருக்கிறது. வதையுறச் செய்யும் ஓர் அனுபவத்தைப் பகடிசெய்து பேசும் பக்குவத்தைப் பெற இக்கால இடைவெளி தேவைப்பட்டிருக்கலாம்.

இந்த நாவலில் ஆர்.சி.தெரு, மதுரைக்கல்லுாரி விடுதி, பளையங்கோட்டைக் கல்லுாரி விடுதி ஆகிய மூன்று புள்ளிகள் வழியாக சிலுவையின் இளமை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. திரிங்கால் பேஸிக் ஸ்கூல், சாமியார் கிணறு, சாமியார் பங்களா, தேவாலயம், காம்பவுண்டுச் சுவர் என நீளும் அத்தெருவின் காட்சிகளின் சித்தரிப்புகள் மனத்தில் பதியும்வண்ணம் உள்ளன. ஒவ்வொரு கட்டத்திலும் சிலுவையின் குறும்புகளும் பகடியுடன் சித்தரிக்கப்படுகின்றன.

நாவலில் ஏராளமான பாத்திரங்கள் இடம்பெறுகிறார்கள். அவர்களுடன் உருவமில்லாத இன்னொரு பாத்திரமும் எல்லாத் தருணங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. அது சாதியென்னும் பாத்திரம். தொடக்கப்பள்ளி வாழ்விலிருந்து கல்லுாரிப் பட்டதாரியாக வெளியேறி வேலையற்ற இளைஞனாக வலம் வருவது வரை சிலுவை சந்திக்கும் கசப்புகள் இருவகைப்பட்டவை. வறுமை நிலையால் உருவாகும் கசப்பு ஒருவிதம். சாதிநிலையால் உருவாகும் கசப்பு மற்றொரு விதம். ஏதாவது நேர்காணல் அல்லது வெளியூர்ப்பயணம் என்றால் தேவைப்படுமே என்று கைவசம் இருக்கும் மேல்சட்டையை பெட்டியைவிட்டு எடுக்க மனமில்லாமல் வெறும் லுங்கியைக் கட்டிக்கொண்டு திரிய நேர்வதற்குக் காரணமாக வறுமைநிலை திகழ்கிறது. தாழ்ந்த சாதி என்கிற காரணத்தால் அனுமதி மறுக்கப்படுகிற ஊர்க்கிணறுகளையெல்லாம் தாண்டி அனுமதிக்கிற ஒரு கிணற்றுக்குப் போய்க் குளித்துவிட்டு வரும்படி நேர்வதற்குச் சாதிநிலை காரணமாகிறது. எல்லாக் கசப்புகளையும் நினைவுகளில் மூழ்கிப் பதிவு செய்திருக்கிறார் ராஜ் கெளதமன். அவற்றில் இருகுறிப்புகள் மிக முக்கியமானவை. பள்ளி வாழ் வில் பிலோமினா என்னும் பெண்ணின் மிட்டாய் டப்பாவைத் திறந்து மிட்டாய்களைத் திருடிவிட்டதாகச் சிலுவைமீது புகார் கூறப்படுகிறது. அதற்குக் காரணம் அவன் பிறந்த சாதி. செய்யாத குற்றத்துக்கு அன்று தண்டனை கிடைக்கிறது. பல ஆண்டுகள் கழித்து முதுகலைப் பட்டப்படிப்பில் முதல்வகுப்பில் அதிக மதிப்பெண்களை எடுத்துத் தேர்ச்சி பெறுகிறான் சிலுவை. அவன் படித்த கல்லுாரியிலேயே வேலைக்கான இடமிருந்தும் முதல்வர் அந்த வேலையை அவனுக்குக் கொடுப்பதில்லை. அதற்குக் காரணமும் அவன் பிறந்த சாதி. தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் என்பவன் திருடுபவன், உழைக்கத் தகுதியற்றவன் என்பதைப்போன்ற பல கருத்தாக்கங்களை உருவாக்கி வைத்திருக்கிறது இச்சமூகம். பாறைகளாக அழுத்திக்கொண்டிருக்கிற இந்த ஐதிகங்களை நொறுக்குவதற்கு முன்னால் இந்த ஐதிகங்கள் எவ்வளவு உள்ளீடற்றவை என்று அம்பலப்படுத்துவது முக்கியம். சிலுவையைப் போன்றவர்களின் சரித்திரங்கள் உடனடியாக நம் கண்முன் நிகழ்த்துவது இப்படிப்பட்ட அம்பலப்படுத்துதலையே.

நாவலின் முக்கியப் பாத்திரங்கள் பலர். சிலுவையின் பாட்டி அவர்களில் ஒருத்தி. கல்லுாரியில் சேரப்போகும் பேரனுக்காக பழம்வாங்கிக்கொண்டு பேருந்தைநோக்கி ஓடோடி வருகிற அவள் தோற்றத்தை மறக்க இயலாதபடி தீட்டியிருக்கிறார் கெளதமன். நாவலின் போக்கில் அவள் ஒரு படிமமாகவே ஒரு சந்தர்ப்பத்தில் மாறுகிறாள். ‘கதைக்கு காலில்லை ‘ என்ற ஒரு வாக்கியத்தைக்கொண்டு இரவுநேரத்தில் சொல்லப்படும் கதைகளை அவள் லாவகமாக இழுப்பவள். குதிரை போட்ட குட்டியை செக்கு போட்டதாகத் தொடுக்கப்படும் ஒரு வழக்கின் கதையைத் தன் திறமையால் வெவ்வேறு கோணங்களுக்கு இழுத்துச் செல்கிறாள் பாட்டி. இதோ முடிந்துவிட்டது என்பதைப்போன்ற தோற்றத்தை அளித்துவிட்டு நம்ப முடியாத மற்றொரு திருப்பத்தை நோக்கிக் கதையைத் திருப்பிவிடுகிறாள். எதார்த்தத்தில் இந்தியத் தாயின் நிலையும் இத்தகையதே. ‘ஒரு சாதிக்கு இந்தக் குணம் ‘ என்ற வார்த்தையையும் வாதத்தையும் வைத்துக்கொண்டு ஒரு கூட்டத்தை வளர்ப்பதற்காக மற்றொரு பக்கத்தைச் சாமர்த்தியமாகத் தாழ்த்துகிறாள் அவள்.

நாவலில் இடம்பெறும் பலவிதமான மனிதர்களுக்கும் சிலுவைக்கும் இடையே நுட்பமான அளவில் உருவாகும் நட்புணர்வுகளையும் மோதல் உணர்வுகளையும் நம்மால் தொகுத்துக்கொள்ள முடியும். இந்த நட்பு / வெறுப்புகளின் உருவாக்கத்துக்கும் சாதிய உண்மைக்கும் இருக்கிற உறவையொட்டிக் கேள்வியை எழுப்பிக்கொள்ளும்போது நம்மால் விரிவான விடைகளை நோக்கி நகரமுடியும். ஆழ்மன இயல்புகளைப்பற்றிய புரிதலின் பின்னணியிலும் ச்முகவியலைப்பற்றிய புரிதலின் பின்னணியிலும் அவ்விடைகளை முன்வைத்துப் பரிசீலனை செய்யவும் முடியும். இத்தகு பரிசீலனைகள் வழியாகவே சாதி என்னும் புனைவை உடைத்துப் பார்க்கமுடியும்.

தந்தையின் மூர்க்கத்தையும் தாயின் பாராமுகத்தையும் பல இடங்களில் நாவல் பதிவுசெய்கிறது. இந்த மாறுபட்ட மனநிலைகள் இவர்களுக்கு எப்படி அமைந்தன என்கிற கேள்வியையொட்டி விடைதேடும்போது, அத்தகு முயற்சி மனத்தின் தீவிர இயக்கத்தை அறிந்துகொள்கிற ஒரு முயற்சியாக அமையலாம். ஒரு சாதாரண வாய்ச்சன்டையாகத் தொடங்கும் மோதலில் பெற்ற மகனுடைய விதைகளைப் பிடித்து அழுத்தி நசுக்கிவிட கைநீட்டுகிற ராணுவ வீரரான தந்தையின் தோற்றத்தை மறக்க முடியவில்லை. அவரே தன் மகன்மீதிருக்கிற ஆத்திரத்தை அவன் சேர்த்துவைத்திருக்கிற புத்தகங்களையெல்லாம் எடுத்துக் குவித்துக் கொளுத்திவிடுகிற சுபாவத்தைத் தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை. ஆனால் இதே தந்தைதான் விடுதியில் தங்கிப் படிக்கிற மகனைக் குதிரைவண்டியில் சென்று பார்த்து என்ன பேசுவது என்று தெரியாமல் தலையைத் தடவிக்கொடுத்துவிட்டு ஐந்து ரூபாய்த்தாளைச் சட்டைப்பைக்குள் அழுத்திவிட்டு வருகிறார். ஒரே மனம் கொள்ளும் வெவ்வேறு தருணங்களில் புலப்படுத்தும் கோணங்கள் இவை. மற்றொரு வகையில் பார்க்கப்போனால் சிலுவையின் மனமே இத்தகு மாறுபட்ட கோலங்களைக் கொண்டதுதான். ‘எங்க சாமி படத்தை ஏன் கிழிச்சீங்க, உங்க சாமி படத்தை நான் கிழிச்சா சும்மா உடுவிங்களா ? ‘ என்று கேட்கும் சிலுவையின் ஆவேசம் ஒரு கட்டத்தில் நிகழ்கிறது. கல்லுாரியில் தனக்கு விருப்பமான அறிவியல் பிரிவு மாற்றத்துக்காக மாதாவை வேண்டி உருக்கமாகப் பிரார்த்தனை செய்வது மற்றொரு கட்டத்தில் நிகழ்கிறது. உறவுக்காரர் என்றும் பாராமல் நாத்திகம் சார்ந்த தன் வாதங்களை தொடர்ந்து அடுக்கி அவரைப் பதில்சொல்லவிடாதபடி அடித்துத் தோல்வியுற வைப்பதும் வேறொரு கட்டத்தில் நடக்கிறது. கால ஓட்டத்தில் சிலுவையின் மனத்தில் உருவாகும் மாற்றங்களின் கோலங்கள் இவை. இறைச்சிக்காலம், மரக்கறிக்காலம், பட்டினிக்காலம் எனத் தமிழிலக்கியத்தைப் பிரித்துப் பார்க்கவியலும் என உடைத்துப் பார்த்துச் சொல்கிற சிலுவை இக்கோலங்கள் வழியே ஊடறுத்துச் செல்லவில்லை. வாசகர்களுக்காக இந்த இடைவெளி விடப்பட்டுவிடுகிறது.

கிணற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பும் வேளையில் திடாரென எழுந்த புயல்மழையில் அகப்பட்டு ஒதுங்கும் சிலுவைக்கு உருவாகும் மரணம் தொடர்பான எண்ணங்கள் கவித்துவத்துடன் எழுதப்பட்டுள்ள பகுதியாகும்.

நாவலில் இடம்பெறும் முக்கியமான ஒரு வரலாற்றுக் குறிப்பு ஜீவாவைப்பற்றியது. ஜீவா அக்காலப் பொதுவுடைமைத் தலைவர்களில் முக்கியமானவர். கொடியேற்றி வைத்துப் பேசுவதற்காக ஒரு கூட்டத்துக்கு அவர் அழைக்கப்படுகிறார். அவருக்கும் அதில் சம்மதமே. ஆனால் குறித்த நேரத்தில் அவரால் வந்துசேர இயலவில்லை. மேலும் இரண்டுமணிநேரங்கள் காத்திருக்கிறார்கள் மக்கள். அப்போதும் ஜீவா வரவில்லை. உடனே உள்ளூரில் பொதுவுடைமைக் கட்சியில் பதவி வகிக்கும் ஒருவர் தாமே முன்வந்து கொடியேற்றிப் பேசிவிட்டுக் கூட்டத்தைக் கலைந்துபோகுமாறு சொல்கிறார். அதற்குப்பின் ஒருமணிநேரம் கழித்து ஜீவா வருகிறார். தாமதத்துக்கு மன்னிப்பு கேட்கிறார். அழைப்பு விடுத்த தொண்டரின் செய்கை சரியானதென்று தட்டிக்கொடுக்கிறார். அன்று இரவு அவர் வீட்டில் தங்கிப் பேசிவிட்டுச் செல்கிறார். இதே நுாற்றாண்டில் ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் எவ்வளவு நல்ல தலைவர்களையெல்லாம் நாம் பெற்றிருந்திருக்கிறோம் என்று எண்ணும்போது பெருமையாக இருக்கிறது. மிகச்சாதாரணமான வட்டத்தலைவர்களெல்லாரும் அதிகாரத்தில் திளைத்தபடி உலகில் பிறந்திருக்கும் அனைவரும் தனக்குச் சேவை செய்வதற்காகவே பிறந்திருப்பதைப்போன்ற மமதையுடன் நடமாடுகிற இந்தக் காலத்தையும் மக்களோடு மக்களாகப் பேருந்தில் பயணம் செய்து தன்னால் நேர்ந்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிற பெருந்தன்மை மிகுந்த தலைவர்கள் வாழ்ந்த அந்தக் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நிகழ்கால இருளைக் காணும்போதெல்லாம் பழங்கால ஒளி அபூர்வமானதாக இருக்கிறது.

விலங்கியல் கல்வி வழியாக சிலுவையை வந்தடைந்த தொழில்நுட்பப் பார்வை பகுத்தல், தொகுத்தல், விடையறிதல் என்னும் முறை. அறிவியலின் அடிப்படையில் மெய்காண்முறைக்காகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் இது. பிற்கலத்தில் இலக்கியமாணவனாக மாறும் சிலுவை மிகச்சிறந்த மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றிபெறவும் நன்னுால், தொல்காப்பியம் போன்ற இலக்கண நுால்களையும் சங்க இலக்கியங்களையும் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் இந்தத் தொழில்நுட்பம் உதவி செய்கிறது. ஆனால் தன் சுயசரிதை நாவலை ஒரு தொகுப்பு முயற்சியாக மட்டுமே கட்டமைக்கும் கெளதமன் மற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுகிறார். இதுவே நாவலின் அடிப்படைப் பலவீனம்.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்