அஞ்சலி: கி. கஸ்தூரி ரங்கன் 1933-2011)

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

ஸிந்துஜா


கஸ்தூரிரங்கனை நான் 1974ம் வருஷம் ஒரு மார்ச் மாத மத்தியான நேரத்தில் சந்தித்தேன். என்னை அவரிடம் இந்திரா பார்த்தசாரதி அழைத்துச்
சென்றிருந்தார். மதுரையிலிருந்து, வேலை கிடைத்ததால் புது தில்லிக்குச்
சென்று சில நாட்களே ஆகியிருந்தன. எனக்கு அப்போது பழக்கமாகியிருந்த
இரண்டே நபர்கள் இ.பா.வும், வெங்கட் சாமினாதனும்தான். ஜன்பத்தில் இருந்த நியு யார்க் டைம்ஸ் அலுவலகத்தில், அரைக் கைச் சட்டையும், கண்களில்
கண்ணாடியும், முகத்தில் புன்னகையும் அணிந்திருந்த நாற்பது வயது
மனிதர்தான், உலகப் புகழ் பெற்ற ஆங்கில தினசரியில், இந்தியாவின் முகத்தைப் பிரதிபலிக்கிறார் என்று நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகவே
இருந்தது. அவ்வளவு எளிமை,

அன்றைய சந்திப்பு சரித்திர முக்கியத்துவம் பெற்றதாக ஆகவில்லை. ஆனால் தில்லியில் நான் வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே அலுவலகத்துக்கு உள்ளும், அதற்கு வெளியேயும் பெற்ற நிராசையை ஏற்படுத்தும்
அனுபவங்களை அளித்த மகான்களுக்கு முன்பாக கஸ்தூரி ரங்கனின் மலர்ந்த முகமும், இனிய பேச்சும் என் மனதில் நிரந்தரமாக இடம் பெற்றன.

கணையாழி என்று பின் நாட்களிலும் , இன்றும் பேசப் படும்போது சில பெரும் பெயர்கள் உச்சரிக்கப் படுகின்றன., கணையாழியில் எழுதியவர்கள் என்று.
இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் கணையாழியின் பெரும்
பலமென்றும், சாதனை என்றும் நான் கருதுவது அதில் இடம் பெற்ற அதற்கு முன் தெரிய வராத பெயர்களும் ,அவர்களின் எழுத்துக்களும்தான்.
சிவசங்கரா, ஆர்.வைத்யநாதன், தேவகோட்டை வா.மூர்த்தி, திலீப் குமார்,
சம்பத், வேலுமித்திரன்,ந.ஜயபாஸ்கரன்,இந்துமதி பத்மநாபன்,பாரவி,
நா.விச்வநாதன்,என்று சென்ற நூற்றாண்டின் எழுபதுகளிலும். எண்பதுகளிலும்
அவர்களது இளமையின் வீர்யம் தொனிக்கும் உரத்த குரல்களை
வெளிப்படுத்திய போது கணையாழி மேடை அமைத்துக் கொடுத்தது
என்றால் அது தவறில்லை. வெகு சமீபத்தில் ஒரு தமிழ் மாத இலக்கிய இதழில் பார்த்தேன். பத்திரிகையின் ஆசிரியர், ஆசிரியர் குழுவில்
உள்ளவர்கள் என்று இவர்கள்தான் பத்திரிகை முழுக்க. நல்லவேளையாக லே-அவுட் ஆர்டிஸ்ட் ,பிரிண்டர் ஆகியோர் இன்னும் அதில்
எழுத ஆரம்பிக்கவில்லை. பல வருஷங்களுக்கு முன்பு ஆறு லட்சத்துக்கும்
மேல் வியாபாரமான பத்திரிகையில் அதன் மூன்று உதவி ஆசிரியர்கள் மட்டுமே வேறு வேறு பெயர்களில் எழுதி வந்தது ஞாபகத்துக்கு வந்தது.

கணையாழி தில்லியிலிருந்து வெளி வந்த தமிழ்ப் பத்திரிகை என்பதால்தான் அது குழுமனப்பான்மை என்ற வியாதியின் கோரப் பிடியிலிருந்து
தப்பி வெகு காலம் நிலைத்து நிற்க முடிந்திருக்கிறது என்பது என்
கருத்து.’ இலக்கியம் என் உயிர் மூச்சு. ஆனால் அதை உன் மேல் விடுவது எனதுரிமை’ (புரட்டிப் போட்ட வார்த்தைகளுக்கு ஞானக் கூத்தன் மன்னிப்பாராக!) என்று வலம் வந்தவர்களுக்கு மத்தியில் மாற்றுக்
குரல்களுக்கு மரியாதை கொடுப்பது பத்திரிகை தர்மம் என்று
கஸ்தூரி ரங்கன் நினைத்ததற்கு அவர் வாழ்நாள் முழுதும்
பத்திரிகையாளராய் இருந்ததுதான் காரணமாயிருக்க வேண்டும்
கணையாழியுடன் நீண்ட நாள் தொடர்பு கொண்டு அக் குடும்பத்தில்
ஒருவராய் கருதப் பட்டபோதிலும், ஆழ்ந்த குழு மனப் பான்மை கொண்டிருந்தவரை தன் பத்திரிகையில் எழுத அதிக இடமும்
உரிமையும் கொடுத்ததில் கஸ்தூரி ரங்கனின் பரந்த
மனப்பான்மையையும், சுதந்திரத்தை மதிக்கும் சுபாவத்தையும் காணலாம்.

ஆரம்பித்த தினத்திலிருந்து கணையாழிக்கு தன் கையிலிருந்துதான் செலவழிக்க வேண்டும் என்பதில் தனக்கு இரண்டாவது அபிப்பிராயம் இருந்ததில்லை என்று ஒரு முறை வினை மார்கில் இருந்த அவரது வீட்டிற்கு நான் சென்றிருந்த போது சொன்னார். என் படிப்பின் , வேலை அனுபவத்தின் காரணமாக கணையாழியின் கணக்குப் புத்தகங்களை சில மாதங்களுக்குப்
பார்த்துக் கொண்டிருந்தேன் . கணையாழிக்கு வரும் சந்தாவில்
ஆடிட் பீஸ் கூட கட்ட முடியாது என்று அன்று பேசும்போது சிரித்தார். அந்தப் புன்னகையில் வேதனையைப் பார்க்கவில்லை. என்னால் முடிகிறது, செய்கிறேன் என்கிற பொறுப்பு உணர்ச்சியைத்தான் பார்த்ததாக
ஞாபகம்.அதனால்தான் விடாது ஒவ்வோரு இதழிலும் சந்தா, சந்தா என்கிற அழுகுரலை அவ்வளவாகக் கேட்க முடிந்திருக்கவில்லை.

ஒரு முறை பெரிய தலைவர் ஒருவர் (பெயர் ஞாபகமில்லை) இறந்த போது கஸ்தூரி ரங்கன் இரங்கல்கட்டுரையில் எழுதினார். அதில் குறும்பாக
இம்மாதிரி கட்டுரைகளுக்கான ஒரு பெரிய லிஸ்டே தன்னிடம் இருப்பதாகக் குறிப்பிட்டார். அந்த லிஸ்டில் இன்னும் சில பெயர்கள் கட்டுரைகளாக மாற்றம் பெறாமல் இன்று நிற்கக் கூடும். அதற்குள் அவரே மறைந்து விட்டார்.

Series Navigation

ஸிந்துஜா

ஸிந்துஜா