அஞ்சலி: இயக்குனர் வான் கோ – நிறைவேற்றப்பட்ட ஃபட்வா

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

ஆசாரகீனன்


இஸ்லாத்தின் பெண்கள் விரோதப் போக்கையும், பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் போக்கையும், இவை எப்படி நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் கூட பழமைவாத முஸ்லீம்களால் கடைபிடிக்கப் படுகின்றன என்பதையும் சித்தரிக்கும் Submission என்ற குறும்படத்தைப் பற்றியும், அதன் காரணமாக எழுத்தாளர் ஹிர்ஸி அலிக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் விதித்த மரண தண்டனை பற்றியும் அக்டோபர் 1, 2004 திண்ணை இதழின் இலக்கியக் கட்டுரைகள் பகுதியில் எழுதியிருந்தேன்.

கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் நாங்கள் என்று வாய் கிழிய பொய் சொல்லி முற்போக்கு வேடம் போடும் ஐரோப்பிய மற்றும் இந்திய இடதுசாரிகள் இதைக் கண்டுகொள்ளாமல் அரேபிய, இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளது பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்தேன். இந்தியாவை எவ்வளவு சீக்கிரம் சீனாவின் காலனியாக ஆக்கலாம் என்பது போன்ற தீவிர கவலைகளைக் கொண்டிருக்கும் ‘மவுண்டு ரோடு மாஒ ‘ ஹிண்டு பத்திரிகை இத்தகைய செய்திகளை வெளியிடாமல் எப்படியெல்லாம் இருட்டடிப்பு செய்து இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கிறது என்பது பற்றியும் தெரிவித்திருந்தேன். இடதுசாரிகள் தங்கள் மீது வைக்கப்படும் இத்தகைய விமர்சனங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தங்கள் புனிதத்தைக் காத்துக் கொள்வதோடு, மனித குல வரலாற்றிலேயே மாபெரும் படுகொலைகளை நடத்திய ஸ்டாலின், மாஒ, பால்பாட் போன்ற இடதுசாரி தெய்வங்களின் கடைக்கண் பார்வைக்குத் தகுதி உள்ளவர்களாகவே இன்னமும் விளங்கி வருவதையும் அக் கட்டுரையின் முடிவில் வருத்தத்துடன் சொல்லியிருந்தேன்.

நெதர்லாந்தின் அரபு/இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முதலில் இக் குறும்படத்தின் கதையை எழுதிய ஹிர்ஸி அலிக்கு மரண தண்டனை விதித்தனர். ஹிர்ஸி அலி நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பவர். நெதர்லாந்து அரசாங்கம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைத் தாஜா செய்ய விரும்பியது என்று சொல்வதை விட, இப் பிரச்சினையில் தலையிட்டால் இதை சாக்காக வைத்துக் கொண்டு இடதுசாரிகள் அடிப்படைவாத ஆதரவு அரசியல் நடத்துவார்களோ என அஞ்சியது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அரசாங்கம், இந்த ஃபட்வாவைக் கண்டு கொள்ளாததோடு, ஹிர்ஸி அலிக்கு பாதுகாப்பு வழங்கவும் மறுத்து விட்டது. இதனால், இவர் சொந்த செலவிலேயே தனக்குப் பாதுகாவலர்களை ஏற்பாடு செய்து கொண்டார். இந்த ஏற்பாட்டின் காரணமாகவோ என்னவோ இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இவரை இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஹிர்ஸி அலிக்கு மரண தண்டனை விதிக்கும் ஃபட்வா விடப்பட்ட சில நாட்களிலேயே இக் குறும்படத்தின் இயக்குனர் தியோ வான் கோ (Theo van Gogh) வைக் கொல்லச் சொல்லும் ஃபட்வா விடப்பட்டது.

துரதிஷ்டவசமாக, ஏற்கனவே பல சர்ச்சைகளைச் சந்தித்திருக்கும் வான் கோ இந்த மிரட்டலின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியப் படுத்தி விட்டார். விளைவு, நவம்பர் 2-ஆம் தேதியன்று காலை 8.30 மணி அளவில் ஆம்ஸ்டர்டாம் நகரின் தெரு ஒன்றில் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த அவர் மொராக்கோவிலிருந்து வந்து நெதர்லாந்தில் குடியேறிய இஸ்லாமிய தீவிரவாதி ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார்.

முதலில், தெருவின் மறு பக்கத்திலிருந்து வான் கோவைப் பல முறை சுட்ட அந்த தீவிரவாதி, தெருவைக் கடந்து வந்து அவரைப் பல முறை கத்தியாலும் குத்திக் கொன்றுள்ளான். பின்னர் அவரது மார்பில் கத்தியைச் சொருகியதோடு ஒரு காகிதத்தையும் விட்டு விட்டு ஓடித் தப்பிக்க முயன்றுள்ளான். அக் காகிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதைக் காவல் துறையினர் சொல்ல மறுத்தாலும் அதில் குரானின் வரிகள் எழுதப்பட்டிருந்ததாக டச்சு செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

தப்பித்து ஓடி அருகிலுள்ள பூங்கா ஒன்றில் நுழைந்து கொண்ட அக் கொலைகாரனைப் பிடிக்க காவல் துறையினர் முயன்றனர். அப்போது அத் தீவிரவாதிக்கும் காவலர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவருக்கு குண்டடிபட்டது. காலில் காயமடைந்த கொலைகாரனும் ஒரு வழியாகப் பிடிபட்டான். அவன் வயது 26.

வழக்கம் போல, நெதர்லாந்து அரசு ஆரம்பத்தில் உண்மைகளை வெளியிடாமல் மறைக்க முயன்றது. பின்னர், வேறு வழியில்லாமல் விவரங்களை வெளியிட்டது.

செவ்வாய் இரவு டாம் சதுக்கத்தில் வான் கோவுக்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் சுமார் 20,000 பேர் கலந்து கொண்டனர். ஆம்ஸ்டர்டாம் நகர மேயரும் இதில் கலந்து கொண்டார். கொல்லப்பட்ட இயக்குனர் வான் கோவின் வயது 47. இவர் பிரபல ஓவியர் வின்சென்ட் வான் கோவின் உறவினரும் ஆவார்.

இப் படுகொலை தொடர்பாக இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் என்பதோடு 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திட்டமிடப்பட்ட ஒரு தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக காவல் துறையினரால் விசாரிக்கவும் பட்டவர்கள். மேலும், வான் கோ படுகொலையை நியாயப்படுத்தி சிலர் இணைய தளங்களில் எழுதினர். இதைப் பற்றி கடுமையான கண்டனம் கிளம்ப பின்னர், இந்த இணைய தளங்கள் மூடப்பட்டன.

தங்கள் வழக்கப்படி இப் படுகொலையைப் பற்றி வாயே திறக்காவிட்டாலும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக இதுவரை எந்த ஐரோப்பிய இடதுசாரி மனித உரிமைகள் அமைப்பும் கூச்சல் போடாததும், நெதர்லாந்து நாட்டின் மிதவாத முஸ்லீம்கள் சிலர் இப் படுகொலையைக் கண்டித்துள்ளனர் என்பதும் சற்று ஆறுதல் தரும் செய்திகள்.

இருந்தாலும், இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர்களைக் கண்டித்தும், வான் கோ பற்றி பல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியும் அறிக்கை வெளியிட்டுள்ள அரபு ஐரோப்பிய லீக் (AEL), இடதுசாரிகளின் அபிமானத்தையும் ஆதரவையும் பெற்ற அமைப்பு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. ஐரோப்பாவின் பல இடங்களில் யுத்த எதிர்ப்பு என்ற பெயரில் அமெரிக்க/யூத வெறுப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திய இடதுசாரி அமைப்புகளின் பின்னணியில் இருந்து பண உதவி செய்ததும் இந்த அரபு லீக்தான்.

வெட்கம் கெட்ட ஹிண்டு பத்திரிகை இச் சம்பவம் பற்றி ஒரு சிறு செய்தியை தன் இணையப் பதிப்பில் வெளியிட்டது. எந்தப் பகுதியில் தெரியுமா ? சினிமா செய்திகளை வெளியிடும் கேளிக்கை (Entertainment) பகுதியில் (பார்க்க: http://www.hinduonnet.com/thehindu/holnus/009200411021759.htm). தன் கருத்துகளை வெளிப்படையாகச் சொன்ன காரணத்தால் ஒரு இயக்குனர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லப்படுவது இப் பத்திரிகைக்கு ஒரு வேடிக்கையான செய்தி போலும்.

இந்தப் படுகொலை பற்றிய விவரங்களை கீழ்க்கண்ட வலை மையங்களில் காணலாம். இவற்றுள் கார்டியன் பத்திரிகை இடதுசாரி பிரிட்டிஷ் பத்திரிகை. இதுவும் அவ்வப்போது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குப் போர்வை போர்த்தி, குளிரடிக்காமல் காக்கும் வேலை செய்யும் பத்திரிகைதான் என்பதைக் கவனிக்க வேண்டும்.

http://www.nytimes.com/2004/11/03/international/europe/03dutch.html

http://www.nytimes.com/aponline/arts/AP-Netherlands-Filmmaker-Slain.html

http://www.nytimes.com/reuters/arts/entertainment-dutch-killing.html

http://www.guardian.co.uk/international/story/0,,1341750,00.html

http://www.guardian.co.uk/international/story/0,,1342062,00.html

http://news.bbc.co.uk/1/hi/world/europe/3974179.stm

http://news.bbc.co.uk/1/hi/entertainment/film/3975211.stm

http://news.bbc.co.uk/1/hi/world/europe/3976567.stm

http://news.bbc.co.uk/1/hi/world/europe/3980371.stm

http://www.expatica.com/source/site_article.asp ?subchannel_id=1&story_id=13500&name=Dutch+mourn+free%2Dspeech+martyr

http://www.expatica.com/source/site_article.asp ?subchannel_id=1&story_id=13565&name=News+in+brief%3A+Theo+van+Gogh+

http://www.expatica.com/source/site_article.asp ?subchannel_id=1&story_id=13525&name=Thousands+make+racket+at+Van+Gogh+rally

http://www.expatica.com/source/site_article.asp ?subchannel_id=1&story_id=13534&name=Government+response+to+killing+panned

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்