முனிஸ்வரன், மலேசியா
23 வயது முதல் 28 வயது வரை
அங்கயற்கன்னிதான் குடும்பத்தில் மூத்தப் பெண். வயது இருபத்து
மூன்றாகிவிட்டது. இருபத்தைந்து வயதில்தான் அவளுக்குத் திருமணம் செய்து
வைப்பதென பழனிவேலும் மண்டோதரியும் திட்டமிட்டிருந்தார்கள்.
அங்கயற்கன்னிக்கு அடுத்து வரிசையில் நிற்பவள் பூங்குழலி. ஆனால் அவளுக்கு
இப்போதுதான் பத்தொன்பது. அவசரமேதும் இல்லை என்ற சாவகாசத்தில்
காலாட்டிக்கொண்டு அங்கையற்கன்னிக்கு மாப்பிள்ளை தேடினார்கள் இருவரும்.
ஆனால், சில நிபந்தனைகள். எந்த மாப்பிளையாக இருந்தாலும் சரி.
நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளுக்கு உடையவனாயிருந்தாலொழிய அங்கையற்கன்னி
அவனுக்கு எட்டாக்கனி. பழனிவேலுக்கும் மண்டோதரிக்கும் அங்கையற்கன்னியின்
வாழ்க்கை ஒரு பொன் தேசமாகத் திகழவேண்டும் என்பதுதான் குறிக்கோள்.
அவளது அழகுக்கு எத்தனையோ ஆண்கள் சொக்கிப் போவார்கள். மாநிற மேனியில்
எள்ளளவுகூட கரும்புள்ளியோ வடுவோ கிடையாது. மொழமொழவென இருக்கும் அவளது
கன்னத்துக்கே ஆயிரம் புள்ளிகள் தேரும்! அங்கையற்கன்னியின் கண்கள்
இருக்கின்றனவே, அவை இரண்டும் அருவி நீர்போல பளபளவென இருக்கும்.
பார்ப்பவர் முகம் அதில் தெரியும்! பெண்ணுக்கேற்ற உயரம்; உயரத்துக்கேற்ற
எடை.
இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் இளங்கலைப் பட்டத்தை முடித்தாள். அவளது
படிப்பைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? சமையலும் அத்துப்படிதான். கோலம்
போடத்தெரியும்; துணி தைக்கத் தெரியும். பள்ளியில் படித்தும் தேராத
பிள்ளைகளுக்குக் கொஞ்ச நேரம் அங்கையற்கன்னி சொல்லித் தந்தால் போதும்;
தேரிவிடுவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பெற்றவர்கள் சொன்ன சொல்லைத்
தாண்டவே மாட்டாதவள் அவள். வரப்போகிற கணவனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?
ஒரு பெண்ணை எப்படி வளர்க்க வேண்டுமோ அப்படித்தான் வளர்த்திருக்கிறோம்
என்பதில் பழனிவேலுக்கும் மண்டோதரிக்கும் ஆத்ம திருப்தி. இப்பேற்பட்ட
பெண்ணைத் திருமணம் செய்ய ஒருத்தன் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்?
சும்மா போகிற வருகிறவனுக்குத் தள்ளிவிட முடியுமா?
அதனால்தான் மாப்பிள்ளையாக வரக்கூடிய ஆண்மகனுக்குச் சில தகுதிகளை
நிர்ணயித்து வைத்திருந்தனர் இருவரும். மாப்பிள்ளை ஆகக் குறைந்தது இளங்கலை
பட்டதாரியாக இருக்கவேண்டும். முதுகலையாக இருந்தால் அவர்களுக்கு
முன்னுரிமை வழங்க நினைத்திருந்தார்கள். தமிழ் எழுதப் படிக்கத்
தெரிந்திருக்க வேண்டும். அம்மா அப்பா இரண்டு பேருமே உடனிருப்போராக இருக்க
வேண்டும். அப்போதுதான் பெற்றவர் அருமை தெரிந்தவர்களாக இருப்பார்கள்
என்கிற அனுமானம். நல்ல கடவுள் பத்தியாக இருக்கவேண்டும். ஏனென்றால்
அப்போதுதான் கடவுளுக்குப் பயந்து தப்புத்தண்டா செய்யாதவனாக இருப்பான்
மாப்பிள்ளை. குடும்பம் நல்ல வசதியான குடும்பமாக இருக்கவேண்டும். சொந்த
வீடு இருக்கவேண்டும். நாளை அங்கையற்கன்னி வாழ்ந்தால் மகாராணிபோல்
வாழவேண்டும் என்ற நோக்கம்தான். பங்குச் சந்தையில் பங்குகள்
வைத்திருப்போருக்கு முன்னிரிமை. காப்புறுதியும் இருக்கவேண்டும். உடல்
அளவிலும் மன அளவிலும் எந்த கோளாறும் இல்லாத ஆரோக்கியம் மிகுந்த ஆளாக
இருப்பது அவசியம். எங்கும் கடன் வாங்கியிருக்கக்கூடாது;
கொடுத்திருக்கக்கூடாது. கூட்டாளிகள் சகவாசம் கூடாது. மது மாது சூது
முப்பழக்கங்களும் இருக்கக்கூடாது. புகைபிடிப்பவனாக இருந்தால் முதல்
சுற்றிலேயே அவுட்! காதல் செய்த அனுபவம் இருக்கக்கூடாது;
அங்கையற்கன்னிக்கும் அந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது இங்கே
குறிப்பிடத்தக்கது! முக்கியமான இன்னொன்று மாப்பிள்ளை கட்டாயமாக
ஜாதிக்காரனாக இருக்கவேண்டும். அவர்களது குடும்ப அந்தஸ்துக்கு அது மிகப்
பொருந்தும்!
என்ன? மூச்சு வாங்குகிறதா?
இந்த கட்டுப்பாடுகள் 23 வயதுமுதல் இருபத்தெட்டு வயதுவரை நடைமுறையில்
அமல்படுத்தப்பட்டுவந்தவை. அதில் தேரிய ஒருத்தரைக்கூட
கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்த ஆண்டோடு இருபத்து ஒன்பது வயதாகிவிட்டது
அங்கையற்கன்னிக்கு. அதனால், விதிமுறைகளைக் கொஞ்சம் தளர்த்த முடிவு
செய்திருந்தார்கள் பழனிவேலும் மண்டோதரியும். அங்கையற்கன்னி தற்சமயம்
வங்கி ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருக்கிறாள். வேலையே அவளுடைய பாதி பிராணனை
வாங்கிக்கொண்டிருந்த சமயம்.
29 வயது முதல் 33 வயது வரை
வேலை வேலை என்று போனதில் ஐந்தண்டுகளுக்கு முன்பிருந்த பருவக்கலை கொஞ்சம்
தேய்பிறை கண்டிருந்தது அங்கையற்கன்னிக்கு. வேலைக்குப் போவதும்
சம்பாரித்ததைப் பழனியப்பனிடம் ஒப்படைப்பதுமாக வாழ்க்கை
உருண்டுகொண்டிருந்தது.
தூரத்துச் சொந்தம் ஒன்றில் பையன் இருப்பதாக பழனியப்பனின் தமக்கை வந்து
சேதி சொன்னாள். ஆனால், பையன் பல்கலைக்கழகம் எட்டிப்பார்த்தது கிடையாது
என்ற கறுப்புப் புள்ளியையும் போட்டுவைக்க மண்டோதரிக்கு ஏதோ உதைப்பது
போன்று இருந்தது. படித்தப் பெண்ணுக்கு படிக்காத துணை எத்தனை நாட்கள்
தாக்குப்பிடிக்கும்? வேண்டாம் என்றாள். அவன் நிராகரிக்கப்பட்டோர்
பட்டியலில் பதினேழாவது மாப்பிள்ளை.
பழனியப்பனுக்கு, மாப்பிள்ளை பல்கலைக்கழகம் எல்லாம் போகவில்லை என்றாலும்
பரவாயில்லை. சிகரெட், மது இதெல்லாம் இல்லாமல் இருந்தால் போதும்.
சொந்தத்திலேயே மாப்பிள்ளை கிடைக்குதா என்று கேட்டிருந்ததில் இன்னொருவனின்
பெயர் பட்டியலுக்கு இழுத்துவரப்பட்டது. ஆனால், பையனுக்கு ஏற்கனவே காதல்
தோல்வி கண்ட அனுபவம் இருப்பதாகக் கேள்விப்பட்டதும் அவன் பதினெட்டாவது
எண்ணைத் தழுவினான். இன்னும் சிலருக்கு சிகரெட் பழக்கம் இருந்தது; சிலர்
வருமைக் கோட்டைத் தாண்டி சில ஆண்டுகள் கழிந்த குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள்…
ஆறேழு ஆண்டுகளாக மாப்பிள்ளைகளைத் தேடிக் கொடுத்து அலுத்துப்போன
அத்தைகளும் பெரியம்மாக்களும் சில உறவினர்களும் பின்னங்கால்
பிடரியடித்துப் பின்வாங்கிகொண்டனர். மாப்பிள்ளை தேடும் பளுவை
தன்னந்தனியாக ஏற்றுக்கொண்டு தேடுதல் வேட்டையில் தீவிரம் செலுத்தினர்
பழனியப்பனும் மண்டோதரியும்.
எதையும் கேட்க மனமும் இல்லாமல் ஆசையும் இல்லாமல் சிவனே என்று வேலையைப்
பார்த்துக்கொண்டிருந்தாள் அங்கையற்கன்னி. ஆனால், பூங்குழலிக்கு
மட்டும்தான் கொஞ்சம் அவசரம். அவள் வாய்திறந்து கேட்கக் கூடியவள்.
அங்கையற்கன்னியைப் போல அல்ல. இன்றைய தேதியில் அக்காளுக்கு வயது
முப்பத்திரண்டு என்றாள் தங்கைக்கு இருபத்தெட்டு.
34 வயது முதல் 38 வயது வரை
பூங்குழலி வீட்டை விட்டு ஓடிப்போய் சில ஆண்டுகள் கழிந்துவிட்டன.
அக்காவுக்குத் திருமணம் ஆன பின்பு உனக்கு என்று சொல்லிவைத்தது வைத்தபடியே
கிடக்க, சொல்லிச் சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை யாரும். தனது
முப்பதாவது வயதில் ஓடிப்போனாள் ஒருத்தனுடன். இதில் பழனியப்பனுக்கும்
மண்டோதரிக்கும் மிகுந்த வருத்தம். ஏனென்றால் பூங்குழலியைத் திருமணம்
செய்தவன் ஏற்கனவே திருமணமாகி மனைவியைச் சாலை விபத்தில் பலிகொடுத்த ஆசாமி.
அங்கையற்கன்னிக்குப் பார்க்கும் மாப்பிள்ளை போல் பூங்குழலிக்கும்
பார்த்துத் தரவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார்கள். அவசரக்கார இளைய மகள்!
ஓடிப்போனது போனதாக இருக்கட்டும் என்று விட்டாகிவிட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்னரே மாப்பிள்ளைக்கான விதிமுறைகளைக் கொஞ்சம்
தளர்த்தியிருந்தார்கள் இருவரும். பழனியப்பன் மிக தாராளமாகத்
தளர்த்தியிருந்தாலும் மண்டோதரி சில தகுதிகளைக் கராராக
எதிர்பார்த்திருந்தாள்.
ஜொகூரின் ஒரு மாப்பிள்ளையின் பெயரைக் கேள்விப்பட்டு பழனியப்பன் நைசாக
விசாரித்துவந்து விவரத்தைச் சொன்னார். பையனுடைய அப்பா இரண்டு
ஆண்டுகளுக்கு முன்னர்தான் தவறியிருக்கிறார். அம்மா அவன் பிறந்தவுடனேயே
இறந்துபோய்விட்டாள். கௌவுண்டரில் வன்னியர் அல்லன். கொஞ்சம் பணவசதி
குறைவு. மற்றபடி அவன் ஒரு உத்தமன். தமிழ் படிக்கத் தெரியாவிட்டால்
பரவாயில்லை; பணவசதி, படிப்பு இதெல்லாம் தளர்த்தப்பட்டவை பட்டியலில்
இடம்பெற்றாலும் அனாதைப் பையனுக்குப் பெண்ணைக் கட்டிக்கொடுப்பது எப்படி
எனும் சிக்கல் எழுந்தது. யாராவது ஒருத்தர் இருந்திருந்தாலும் பரவாயில்லை.
பாதபூஜை யாரை வைத்துச் செய்வதாம்?
ஜொகூரில் பார்த்த அந்தப் பையனுடைய உறவுகளின் வழியே இன்னொரு பையன். சரியான
கறுப்பு. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். அங்கையற்கன்னியைவிட இரண்டு
ஆண்டுகள் மூத்தவன். அப்படியானால் இன்றைய தேதியில் அவனுக்கு
முப்பத்தெட்டு. சிகரெட் பழக்கமுண்டு. மற்றவை பரவாயில்லை. ஆனால், அவனது
கரிய நிறம் மண்டோதரிக்குப் பிடிக்கவில்லை.
39 வயது முதல் 43 வயது வரை
வயது அங்கையற்கன்னிக்கு நாற்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அவளுக்காகப்
பார்க்கப்பட்ட மாப்பிள்ளைகளின் எண்ணிக்கையும் நாற்பதை நெருங்கிகொண்டுதான்
இருக்கிறது. தனது தலையிலிருந்து முதல் வெள்ளை முடியை யதார்த்தமாகப்
பிடுங்கி போட்டபோதுதான் தனக்கு வயதாகிறதோ என்ற சிந்தனை வந்தது.
அங்கையற்கன்னிக்கு ஓர் ஆசை. பூங்குழலியின் இரண்டு மகன்களையும்
விமானத்தில் பறக்கவைக்க வேண்டுமென்று சில நாட்களாக நினைத்திருந்தாள்.
இருவரில் யாரோ ஒருவன்தான் கேட்டிருக்கவேண்டும். அதற்காக சம்பளத்தில்
கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்தம் செய்துகொண்டிருந்தாள். பூங்குழலி எப்படியோ
மறுபடியும் குடும்பத்தோடு ராசியாகியிருந்தாள்.
பூங்குழலி வேலை செய்யும் இடத்தில் பழக்கமான பெண்மணி மூலமாக ஒரு ஆளைத்
தெரிந்து வந்து மண்டோதரியிடம் விபரத்தைச் சொன்னாள். “பேரு இரும்பொறை.
அவருக்கு வயசு நாப்பத்தி அஞ்சி. பொண்டாட்டி செத்துப்போயிட்டாங்க. மொத
பையன் கல்யாணம் பண்ணி வெளிநாட்டுல இருக்கான். ரெண்டாவது பொண்ணு. இன்னும்
படிக்கிது. பையனுக்கும் பொண்ணுக்கும் வயசுல பெரிய இடைவெளி. பையன்
இருவத்தி மூனு வயசு. பொண்ணுக்கு பன்னண்டு வயசு. அவளத் தாய்மாதிரி
பாத்துக்குற ஒருத்தியத்தான் ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்கிறதா
இருக்குறாராம்,” என்றாள் பூங்குழலி. ரெண்டாந்தாரமாவது மூன்றாந்தாரமாவது
எவனாவது வந்து கல்யாணத்தைப் பண்ணி அங்கையற்கன்னியைக் கூட்டிக்கொண்டு
போனால் சரி என்ற மனோநிலைக்கு வந்தாயிற்று. யோசனைக்கு ஒத்தாசை செய்ய
பழனியப்பன் இல்லை. கடந்த ஆண்டு அவர் இறைவனடியைச் சேர்ந்துவிட்டார்.
“சிகரெட் தண்ணியெல்லாம் உண்டு. ஆனா அளவோடதானாம். படிப்பு கிடையாது.
எல்லாம் சொந்தமா ஒழைச்சது,” என்று பெண்பார்க்க வந்த இரும்பொறையைப் பற்றி
மேல் விவரங்களைத் தெளித்தாள் பூங்குழலி. அங்கையற்கன்னி தேநீரைக்
கொண்டுவந்து இரும்பொறை உட்பட குழுமியிருந்தவர்களுக்கு நீட்டிவிட்டு தட்டை
மேசையில் வைத்தாள். பெண்பார்க்க வரும் சடங்கு அவளுக்கு சலிப்புத்தட்டும்
அளவுக்கு இன்னும் போகவில்லை. பெண்பார்க்கும் சடங்கு வரை தாக்குப் பிடித்த
மாப்பிள்ளைகளில் இரும்பொறை மூன்றாவது ஆள்தான்.
ஆளைப் பார்க்க தடியாக இருந்தார் இரும்பொறை. முகத்தில் அம்மை வடுக்கள்
தெளிவாகவே தெரிந்தன. வயசுக்கேற்ற வெள்ளை முடி. அதில் சமயத்துக்கேற்ற
கருஞ்சாயம். வரதட்சினை எதுவும் வேண்டாம் என்று அவர் சொன்னது கொஞ்சம்
சிறப்பாம்சம் கொண்ட செய்தி.
அவருக்கு வயது நாற்பத்து ஐந்து. அங்கையற்கன்னியின் வயது நாற்பத்து
மூன்று. ஆக, வயதில் பெரிய வித்தியாசம் கிடையாது. எல்லாம்
ஒத்துப்போய்விடும் போலத்தான் இருந்தது.
மண்டோதரி “மாப்பிள்ளை ‘நம்ம’ ஆளா?” என்று இரும்பொறையின் கூட வந்த பெண்மணி
ஒருத்தியிடம் கேட்டாள். அப்பெண் “இல்லை,” என்று சொன்னது மண்டோதரியின்
முகம் கறுத்துவிட்டது. “ஏண்டி, ’நம்மாளா’ இல்லையான்னு ஏன் விசாரிக்கலே?
நீ விசாரிச்சுத்தான் சொன்னேன்னு இல்ல நான் நெனைச்சிக்கிடு இருந்தேன்?”
என்று பூங்குழலியைக் கேட்டாள் மண்டோதரி. குரலில் இருந்த கடுகடுப்பு சிலர்
காதுகள் வரை போய் பாய்ந்தது. “இன்னும் நீங்க திருந்தலையா?,” என்று
பூங்குழலி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அங்கையற்கன்னி அடுத்த ஐந்தாண்டு திட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
நன்றி: மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள் 23ஆம் தொகுப்பு
ஆக்கம்;
முனிஸ்வரன், மலேசியா
- மொழிவது சுகம் 11-: நமக்குள் உள்ள இன்னொருவன்
- ஓட்டை பலூன்
- பாவனைப்பெண்
- வேத வனம் விருட்சம் 76
- நித்யானந்தாவும் நேசக்குமாரும்
- மகளிர் தினம்
- எஸ்ஸார்ஸி – அக்கிரஹாரத்தில் இன்னொரு அதிசயப் பிறவி
- இந்திய மொழிச் சிறுகதைகளில் பெண்கள் படைப்பில் பெண்கள்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -5
- செல்வராஜ் ஜெகதீசன் – மனக் குறிப்புகளின் புத்தகம்
- தொடரும் பயணம், இரண்டு புத்தகங்களும் அவற்றின் இரண்டு முன்னுரைகளும்
- ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -3
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -1
- முக்காட்டு தேவதைகள்
- எனது மண்ணும் எனது வீடும்
- எப்போதும் முந்துவது…
- கனவு தேசம்
- எச்சரிக்கை……!
- அவர்கள் காதலிக்கட்டும்..!
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- முப்பத்து மூன்று!
- மொழிக் குறிப்புகள்
- அர்சால்
- முள்பாதை 20
- துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை
- ஒரு மகள்.
- எங்கோ பார்த்த முகம்
- அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -8
- உதிர்ந்த இலைகள்