அ.முத்துலிங்கம்
சூடானுக்கு நான் மாற்றலாகிப் போனபோது என் மனைவியும் கூடவே வந்தாள். வழக்கமாக நான் முதலில் போய் வீடு வசதிகள் எல்லாம் ஏற்பாடு செய்தபிறகே அவள் வருவாள். ஆனால் அந்த முறை பிடிவாதமாக அவளும் என்னுடனேயே வந்துவிட முடிவுசெய்தாள்.
நாங்கள் போய் இறங்கிய சில வாரங்களிலேயே எங்கள் சாமான்களும் வந்து சேர்ந்தன. பெரிய லொறியொன்றில் நடுச்சாமத்தில் பிரம்மாண்டமான பெட்டிகளில் இவை வந்து இறங்கின. லொறி வேலையாட்கள் நாங்கள் முன்கூட்டியே அடையாளமிட்ட இடங்களில் அந்தப் பாரமான பெட்டிகளை இறக்கிவைத்துவிட்டுப் போனார்கள்.
நாங்கள் வாடகைக்கு எடுத்த வீட்டில் பதினொரு கயிற்றுக் கட்டில்கள் இருந்தன. வீட்டின் சொந்தக்காரர் இன்னும் மூன்று கட்டில்கள் தருவதற்கு ஆர்வமாக இருந்தார். நான் கெஞ்சிக் கூத்தாடி அவற்றை திருப்பிவிட்டேன். அவர் கருணையுடன் தந்த நீண்ட புத்தக செல்ஃபை மாத்திரம் ஏற்றுக்கொண்டேன். என் புத்தகங்கள் மாத்திரம் இரண்டு பெரிய பெட்டிகளில் வந்து இறங்கியிருந்தன. என் மனைவி அவற்றை தான் அடுக்கிவிடுவதாக சொன்னாள். இப்படி எதிர்பாராத திசைகளில் இருந்து வரும் உதவிகளை யாராவது மறுப்பார்களா ? என்றாலும் உள்ளர்த்தம் வேறு ஒன்றும் இல்லை என்பதை நன்றாக உறுதி செய்துகொண்டு அதற்கு சம்மதித்தேன்.
உலகத்து நூலகங்களுக்கு எல்லாம் பிதாமகரான ஸெனோடோரஸ், 2300 வருடங்களுக்கு முன்பு அலெக்ஸாந்திரியாவில் 500,000 சுவடிகளை பரப்பி வைத்துக்கொண்டு ஆலோசித்ததுபோல என் மனைவியும் கடும் யோசனையில் ஆழ்ந்தாள். எனக்கு மனம் திக்கென்றது. கடைசியில் ஒரு பெளர்ணமி இரவில் ஒரு புதுமையான புத்தகம் அடுக்கும்முறையை கண்டுபிடித்தாள். உலகத்து திறம் நூலகங்களில் எல்லாம் இப்படியான வகைப் படுத்தலை காணமுடியாது. அமெரிக்க முறை, பிரிட்டிஷ் முறை என்று பல உண்டு. இலக்கியம், விஞ்ஞானம், தத்துவம், வரலாறு என்று பிரித்து அடுக்குவது ஒரு வகை. இன்னும் சில நூலகங்களில் எண் முறையையோ, அகரவரிசை எழுத்து முறையையோ பயன்படுத்தி அடுக்குவார்கள். இன்னும் சில நூலகங்களில் ஆசிரியரின் பெயரின் பிரகாரம் ஒழுங்கு பண்ணியிருப்பார்கள். ஒரு புத்தகம் தேவையென்றால் அதை எழுதிய ஆசிரியரின் பெயரின் கீழ் தேடினால் பட்டென்று கிடைத்துவிடும்.
என் மனைவிக்கு இப்படியான நுணுக்கங்களில் எள்ளளவும் நம்பிக்கை கிடையாது. அவளுக்கு புத்தகங்களின் மட்டையும், தடிப்பும், கனமும்தான் முக்கியம். தொக்கையான புத்தகங்களை எல்லாம் அடி செல்ஃபிலும், பாரம் குறைந்தவற்றை மேல் தட்டிலுமாக அடுக்கினாள். அதாவது எடையே முக்கியம். எடை குறையக் குறைய அவை மேல் நோக்கி நகரும். நான் எவ்வளவு மன்றாடியும் ஒரு தேர்ந்த நூலக அதிபரின் கடும் தோரணையோடு இந்தக் காரியத்தை சிரத்தையாக, ஒரு நாள் முழுவதும் முழங்காலில் நின்றபடி, செய்து முடித்தாள்.
புத்தகத்தை தட்டிலே அடுக்கும் வேலையை ஒரு மூன்று வயதுக் குழந்தைகூட செய்துமுடித்துவிடும். ஆனால் அந்தப் புத்தகத்தை திருப்பி எடுப்பது அல்லவா சிரமம்! உதாரணமாக தி. ஜானகிராமனின் ‘மோக முள் ‘ தேவை என்றால் முதலில் ஒரு தியான நிலைக்குப் போய் அந்தப் புத்தகத்தின் அட்டை, வடிவம், எடை முதலியவற்றை நினைவுக்கு கொண்டுவரவேண்டும். அதன் பிறகு எடை வாரியாக அதை தேடிக்கொண்டேபோய் பிடித்துவிடவேண்டும். இன்னும் சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம் ‘ எடைப் பிரகாரம் முதலாம் பாகம் கடைசி தட்டிலும், இரண்டாம் பாகம் நாலாம் தட்டிலும் மூன்றாம் பாகம் முதல் தட்டிலும் இருக்கும். இதை எல்லாம் தேடி எடுப்பதற்கிடையில் தண்ணீர் தாகம் எடுத்துவிடும். இது எவ்வளவு பிரயாசையான சங்கதி என்பதை நான் அவளுக்கு விளக்கிக்கொண்டு வந்தேன். பத்து நிமிட விளக்கத்துக்கு பிறகு மனைவி பதில் கூறினாள், சமையலறையில் இருந்து. ஒன்பது நிமிடங்கள் முன்பாகவே அவள் அங்கே போய்விட்டாள்.
இன்னும் ஒரு கஷ்டம் இருந்தது. என் மனைவி செங்கல்களை செங்குத்தாக அடுக்கி வைப்பதுபோல புத்தகங்களை நெருக்கமாக அடுக்கி வைத்திருந்தாள். ‘ஈக்கிடை புகா ‘ என்று சொல்வார்களே, அப்படி. ஒரு புத்தகத்தை கண்டுபிடித்து இழுத்து எடுப்பதற்கு திறமையான தியானமும், கொஞ்சம் புத்தியும், நிறைய தந்திரமும், விரல் நுனிகளில் போதிய பலமும் இருக்கவேண்டும். இப்படியெல்லாம் பெரும் ஆயத்தம்செய்து புத்தகத்தை இழுத்தெடுத்தால் அது போனவாரம் நீங்கள் தேடிய ஒரு புத்தகமாக அமைந்துவிடும்.
சூடானில் இருக்கும்போதுதான் நாங்கள் தொட்டிகளில் மீன் வளர்க்கத் தொடங்கினோம். இதற்கு பெரிய காரணம் ஒன்றுமில்லை. இங்கே எல்லோரும் மீன் வளர்த்தார்கள். இருபத்தி நாலு மணிநேரமும் காற்றுக் குமிழ்களை உற்பத்தியாக்கும் கருவிகளைப் பூட்டி, பெரிய பெரிய கண்ணாடித் தொட்டிகளை நிறுத்திவைத்து, அதற்குள் மீன்கள் சுற்றி சுற்றி வரும் அழகைப் பார்த்து ரசித்தார்கள். வீட்டிற்கு வருபவர்கள் முதலில் தொட்டியையே வந்து பார்ப்பார்கள். ஆனபடியால் நாங்களும் பெரிய மீன் வளர்ப்புக்காரர்களாக மாறியிருந்தோம்.
இதில் பல மீன்கள் நைல் நதியில் கிடைத்தவை. பார்வோன் மன்னன் காலத்தில் இருந்து வாழும் மீன்கள். அதிலே ‘சிக்லிட் ‘ என்றொரு மீன் தன் குஞ்சுகள் புடைசூழ நகர்ந்துகொண்டிருக்கும். ஏதாவது ஆபத்துபோல தோன்றினால் அது வாயை ஆவென்று திறக்கும். குஞ்சுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தாயின் வாய்க்குள் நுழைந்துவிடும். நாங்கள் நினைப்போம் சில நாய்கள் செய்வதுபோல தாய் குஞ்சுகளை விழுங்கிவிடும் என்று. ஆனால் சிறிது நேரத்தில் அது வாயை திறந்ததும், மீன் குஞ்சுகள் வெளியே வந்து நீந்தும்.
இது தவிர தங்க மீன், புலி வால் மீன், பெரிய செதிள்கள் வைத்த ராட்சத மீன், இப்படிப் பல. நண்பர் ஒருவர் சொன்னார் மீன் வளர்ப்பில் பல வசதிகள் என்று. நாயைப் போல உலாத்த அழைத்துப்போகத் தேவையில்லை. வீட்டிலும், மெத்தையிலும் மயிர் கொட்டி வைக்காது. அதன் அழுக்குகளை கூட்டி அள்ளத் தேவை இல்லை. மிருகவைத்தியரும் தேவைப்படாது. இப்படிச் சொல்லிக்கொண்டே போனார்.
இவருடைய பெயர் அலி. என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்தார். பங்களதேஷ்காரர். பம்பரமாக சுழன்று ஓயாமல் வேலைசெய்தபடியே இருப்பார். இவருக்கு ஒரு மனைவியும், ஐந்து வயது மகளும். மகள் துடிதுடியென்று இருப்பாள். பெயர் நுஸ்ரத்.
அலியின் மனைவி சிறு உடல் கொண்ட அழகி. எப்பொழுது பார்த்தாலும் புது மெழுகிலே செய்த பதுமைபோல அசையாமல் இருப்பார். இவரைப்போல ஒரு சோம்பல் பெண்ணை நான் பார்த்தது கிடையாது. அந்தக்காலத்து சரோஜாதேவிபோல தன் சொந்த மயிரையும், இன்னும் யார் தலையிலோ முளைத்த வேறு மயிரையும் பந்து பந்தாக சுருட்டி ஒரு கோபுரம்போல தலையை அலங்காரம் செய்திருப்பார். கால் மேல் கால் போட்டுக்கொண்டு தன் கை நகங்களைக் கூராக்குவார். அது முடிந்ததும் அந்த நகங்களுக்கு பூச்சு பூசுவார். பிறகு அந்தக் கலர் பிடிக்காமல் போகவே அதை அழித்துவிட்டு வேறு கலர் பூசுவார். இப்படி அவரும் நாள் முழுக்க உழைத்தபடியேதான் இருந்தார்.
அலிக்கு அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் உத்தியோகம். தான் போகும் நாடுகளில் இருந்து தினமும் ஏதாவது தகவல் அனுப்பாமல் இருக்கமாட்டார். அந்தக் காலத்தில் எல்லாம் ஈமெயில் கிடையாது. ஆகையால் சுருண்டு சுருண்டு வரும் டெலெக்ஸ் காகிதங்களில் பைபிள் வசனங்களுக்கு நம்பர் போட்டதுபோல 1,2,3 என்று ஒவ்வொரு வாக்கியத்துக்கும் நம்பர்போட்டு அனுப்புவார்.
சிலவேளைகளில் தொலைபேசியில் அழைப்பார். அது அநேகமாக ஒரு நடுச்சாமமாக இருக்கும். சுழட்டி டயல் பண்ணும் அந்த டெலிபோன் கைப்பிடியை தூக்கி காதில் வைத்ததும் முதல் கேள்வியாக அங்கே என்ன நேரம் என்று விசாரிப்பார். எங்கே இருந்து பேசுகிறீர்கள் என்று நான் கேட்பேன். அவர் நியூயோர்க் என்பார்; அல்லது டோக்கியோ என்பார். எவ்வளவுதான் விபரம் தெரிந்தவராக இருந்தாலும் அலிக்கு இந்த ‘நேர வித்தியாசம் ‘ என்பது பிடிபடாத பொருளாகவே இருந்தது. இரவு இரண்டு மணிக்கு அழைத்துவிட்டு மிகச் சாதாரணமாக ‘அப்படியா, மன்னித்துக்கொள்ளுங்கள் ‘ என்று கூறிவிட்டு சம்பாஷணையை தொடர்வார். அடுத்த முறையாவது அதை திருத்திக் கொள்வார் என்று எதிர்பார்ப்பேன். நடக்காது.
ஒரு முறை அலியிடம் சொன்னேன். ‘அலி, சூரியன் கிழக்கே உதிக்கிறது. ஆகவே நீங்கள் கிழக்கில் இருக்கும்போது உங்களுக்கு சூரியன் முதலில் உதயமாகிவிடும். அப்போது மேற்கில் இருக்கும் எனக்கு இன்னும் விடியாமல் நடுச்சாமமாக இருக்கும். ஆகையால் உங்கள் நேரத்தில் இருந்து சில மணித்தியாலங்களைக் கழித்தபிறகே என் நேரம் வரும். நீளக்கோடு 15 பாகை வித்தியாசத்துக்கு ஒரு மணித்தியாலம் என்ற கணக்கு. ‘
பிறகு சர்வதேச தேதிக்கோடு எப்போது பிறந்தது, அது எப்படி ஒரு தேசத்தையும் கிழிக்காமல் போகிறது என்று பாடம் எடுத்தேன். அவர் தலை ஆட்டும்போதே அவருக்கு ஒன்றும் புரியவில்லை என்று எனக்கு தெரிந்துவிட்டது. பல தேசத்து அதிகாரிகளை சந்தித்து, சிக்கலான விஷயங்களுக்கு தீர்வுகாணும் தகுதி படைத்த ஒருவருக்கு, இந்தச் சிறு விஷயம் கடைசிவரை எட்டாதது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
எங்கள் சம்பாஷணை நடந்த சில நாட்களிலேயே மீண்டும் எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. இரவு ஒரு மணி. மனைவி டெலிபோனுக்கு பக்கத்தில் இருந்தாலும் அதைத் தொடவில்லை. புன்னகையுடன் என்னைப் பார்த்தாள். அலி இல்லாமல் வேறு யார் இப்படிச் சரியாக ஒருமணிக்கு அழைப்பார்கள்.
ஆனால் இந்தமுறை அங்கே என்ன நேரம் என்று அலி ஆரம்பிக்கவில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை. ‘எனக்கு திடாரென்று யப்பானுக்கு மாற்றலாகி விட்டது. நான் வீட்டைக் காலிசெய்வதற்கு வீட்டுக்காரருக்கு ஒரு மாதம் நோட்டாஸ் கொடுக்கவேண்டும். என் காரியதரிசியிடம் விபரங்கள் இருக்கின்றன. நாளைதான் கடைசி நாள். கெடு முடிவதற்குள் தயவுசெய்து நோட்டாஸை கொடுத்துவிடுங்கள் ‘ என்றார். நானும் ‘சரி ‘ என்றேன்.
எங்கள் தொழிலில் இப்படி அடிக்கடி நாடுவிட்டு நாடு மாறுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அலியின் திடார் மாற்றல் என்னைக் கொஞ்சம் நிலைகுலைய வைத்தது. மாதக் கடைசியில் வீட்டைக் காலிசெய்துவிட்டு அலி முதலில் யப்பான் சென்றுவிட்டார். மனைவிக்கும், நுஸ்ரத்துக்கும் விமான டிக்கட் ஒரு வாரத்தில் வந்து அவர்களும் கிளம்பிவிடுவார்கள். இந்த ஒரு வாரமும் அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.
நுஸ்ரத்தின் கைகளும் கால்களும் சும்மா இரா. எப்பவும் சிவப்பு சொக்ஸ் அணிந்த கால்களில், சில்லுப் பூட்டி வைத்ததுபோல அவசரம் காட்டுவாள். எங்கள் வீட்டிலே ஏற்படும் அழிவுகளை வைத்து அவள் போன பாதையை கரெக்டாகச் சொல்லிவிடலாம். அவளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு துயரம் பொங்கும். நுஸ்ரத்தின் தாயார் அவளைக் கொஞ்சுவது கிடையாது. அவளுக்கு உடுப்பு அணிந்து சரி பார்த்ததையோ, தலை சீவி விட்டதையோ நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் நுஸ்ரத் ஏவிய வேலைகளை செய்வதற்கு நாங்கள் இருவரும் எப்பவும் தயார் நிலையில் இருந்தோம். எங்களுக்கு சலிப்பு ஏற்படாமல் அவளும் புதிய வேலைகளை உண்டாக்கினாள்.
நுஸ்ரத்துக்கு புத்தகங்கள் என்றால் பிரியம். புத்தக அடித்தட்டில் ஹாம்லின் பதிப்பில் நாற்பது வருடத்துக்குமுன் வெளியான உலக சரித்திர புத்தகம் ஒன்று உண்டு. தொக்கையான இந்தப் புத்தகம் நான் சிறுவனாக இருந்தபோது பரிசாகக் கிடைத்தது. அப்பொழுது பதிப்பில் இல்லாத பொக்கிஷம். இதில் இருக்கும் வர்ணப்படங்கள் புகழ்பெற்ற சைத்ரிகர் ஒருவரால் வரையப்பட்டவை. அந்தப் புத்தகத்தை இந்தக் குழந்தை எடுத்துவைத்து மணிக்கணக்காக பார்த்துக்கொண்டே இருக்கும். இன்னும் வாசிக்கப் பழகாத சொற்களுக்கு மேல் தலையை வைத்தபடி சில நேரங்களில் உறங்கிவிடும். என் மனைவி என்ன வேலையில் இருந்தாலும் அதை விட்டுவிட்டு ஓடி வந்து அந்தப் புத்தகத்தை எடுத்து சரியான ஓட்டையில் திரும்பவும் அடுக்கி வைத்துவிடுவாள்.
இவர்கள் இருந்த அந்த ஒரு வாரமும் எங்கள் வீட்டில் பலத்த சேதம். ஒரு புயல்காற்று அடித்து முடிந்ததுபோல என் மனைவி வீட்டை சுத்தம் செய்தபடியே இருக்கவேண்டும். அபூர்வமாக வளர்த்த பெரிய செதிள் மீன்கள் இறந்து, இறந்துபோய் தரையிலே கிடந்தன. பாத்ரூமில் தகுந்த பாதுகாப்போடு இருந்த வாசனைத் திரவிய போத்தல்கள் இரண்டு ஒரேநாளில் உடைந்து போயின. மணிக்கூடுகள் நேரத்தை மாற்றி மாற்றிக் காட்டின. அந்த முள்கள் டோக்கியோ நேரத்தையோ, நியூயோர்க் நேரத்தையோ இன்னும் உலகத்தின் நீளக்கோட்டில் உள்ள வேறு ஏதோ ஒரு தேசத்தின் நேரத்தையோ காட்டின.
அவர்கள் புறப்படும் இரவு எதிர்பாராத தடங்கல் ஒன்று ஏற்பட்டது. அன்று பின்மதியம் தொடங்கிய மணல்புயல் விடாமல் அடித்து நடுச்சாமம் வரைக்கும் இழுத்து, பிறகு மெள்ள மெள்ள ஓய்ந்தது. இந்த மணல், பவுடர்போல இருப்பதால் கதவு நீக்கல்கள், ஜன்னல் வெடிப்பு என்று எங்கே சிறு கீறல் இருந்தாலும் அதன் வழியாக உள்ளே புகுந்துவிடும். நாங்கள் வாசல் கதவுகளையும், ஜன்னல்களையும் ஈரத்துணி போட்டு அடைத்திருந்தோம். அப்படியும் மெல்லிய தூசிப்படலம் வீட்டின் பளிங்குத் தரை முழுக்க படர்ந்துவிட்டது.
காரின் உடல் முழுவதும் கூடைபோல மூடி மணல் மேடாகிவிட்டது. ஒரு துடைப்பத்தால் மணலை அகற்றி, துணியால் துடைத்து காரை மீட்பதற்கு சரியாக அரைமணி நேரம் பிடித்தது. நானும் மனைவியுமாக அவர்களை விமானத்தில் ஏற்றிவிடப் புறப்பட்டோம். பச்சை நிறத்து சந்திரனின் சிறிய ஒளியில் ஊர்ந்து போனபோது ஒரு புது தேசத்துக்கு வந்துவிட்டது போன்ற உணர்வுதான் எஞ்சியது.
பிளேன் அறிவிப்பு வந்தபோது அந்தக் குழந்தை செய்த காரியம் திடுக்கிட வைத்தது. என் கழுத்தைக் கட்டிப்பிடித்து அழுதது. பிறகு என் மனைவியை இறுக்கிப்பிடித்து விட மறுத்தது. தன்னிலும் உயரமான ஒரு கண்ணாடியைத் துடைப்பதுபோல கையைக் காட்டியபடி போனது. இந்தக் குழந்தைக்கு நாங்கள் என்ன செய்தோம். திறமான இரண்டு வேலைக்காரர்போல செயல்பட்டது தவிர வேறு ஒன்றுமே செய்யவில்லை. அது எப்படியோ தன் நுண்ணுணர்வினால் அன்பின் ஊற்றுக்காலை கண்டுபிடித்துவிட்டது.
திரும்பும்போது ரோட்டு எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறது என்று ஒன்றுமே தெரியவில்லை. எல்லாமே மணல் பரப்பு. லைட் கம்பங்கள் மட்டுமே எல்லைகளை நினைவூட்டின. பாதை நெடுக வேறு உயிரினமே இல்லை. வீட்டிற்கு கிட்ட வந்தபோது அந்த அதிகாலையிலே, தலையிலே உறுமால் கட்டிய ஒரு பால்காரன் 20 லிட்டர் அலுமினிய பால் பாத்திரங்களை கழுதையின் இரண்டு பக்கமும் தொங்கவிட்டபடி அதன்மேல் வந்துகொண்டிருந்தான். அவனுடைய தலை தூக்கத்தில் கவிழ்ந்திருந்தது. அந்தக் காட்சி அந்த நேரத்துக்கு என் மனதில் எதையோ அசைத்துவிட்டது.
காலை நாலு மணி. நித்திரைக் கலக்கத்தில் நாங்கள் அப்படியே விழுந்து படுத்துவிட்டதால் ஒன்றைக் கவனிக்கத் தவறிவிட்டோம். புத்தகத் தட்டில் உலக சரித்திர புத்தகத்தை காணவில்லை. அது உண்டாக்கிய நீள்சதுர ஓட்டை மாத்திரம் அப்படியே இருந்தது. வீட்டில் ஒரு மூலை தவறாமல் எவ்வளவு தேடியும் புத்தகம் அகப்படவில்லை. அப்பொழுது ஒன்றைக் கவனித்தேன். மணல்புயலால் வீடு முழுக்க மெல்லிய வெண்புழுதிப் படலம் மூடியிருந்தது. அந்த மெல்லிய தூசியில் புத்தக தட்டுக்கு முன் சிறு பாதச் சுவடுகள் வந்து, திரும்பிப் போன தடங்கள். நான் பிரமித்துப்போய் நின்றேன். மனைவி வாயை திறந்து அதே வேகத்தில் கைகளால் பொத்திக்கொண்டாள். எனக்கு பொக்கிஷமான புத்தகம். மனம் பதறியது. அந்தச் சிறுமி அதைத் திருடியிருப்பாள் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
இரண்டாம் நாள் இரவு நடுநிசியில் தொலைபேசி வந்தது. அலிதான் பேசினார். அங்கே என்ன நேரம் என்று கேட்டார். பிறகு பேசிக்கொண்டே போனார். அந்தப் புத்தகத்தை தவறுதலாக எடுத்துக் கொண்டு போய்விட்டதைப் பற்றி சொல்லுவார், சொல்லுவார் என்று காத்திருந்தேன். கடைசிவரை அவர் ஒன்றுமே சொல்லவில்லை. அந்தக் குழந்தை திருடியது இப்போது நிச்சயமாகிவிட்டது.
இந்த விஷயத்தை இப்படியே விட்டுவிடவேண்டும் என்றுதான் என் மனம் விரும்பியது. புத்தகம் போனதில் நிரம்பிய துக்கம்தான். ஆனால் அந்தக் குழந்தையை குற்றம் சொல்ல யாருக்கு மனது வரும்.
என் மனைவி வேறுமாதிரி நினைத்தாள். ஓர் ஐந்து வயதுக் குழந்தை நடுநிசியில் யாருக்கும் தெரியாமல் புத்தகத்தை களவெடுக்கிறது. பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இன்னொரு நாட்டுக்கு கடத்துகிறது. குழந்தையின் பெற்றோருக்கு இதுபற்றி ஒன்றுமே தெரியாது. அந்தக் குழந்தை மிகப் பெரிய திருடியாக மாறிவிடும் வாய்ப்பிருக்கிறது. அதனுடைய எதிர்காலத்தை உத்தேசித்தாவது பெற்றோருக்கு இதை தெரியப்படுத்தவேண்டும். இது மனைவியின் பிடிவாதம்.
இப்படியே ஆறுமாதங்கள் கழிந்தன. ஒரு நாள் விடிந்த பிறகு அலியிடமிருந்து தொலைபேசி வந்தது. நான் துளியும் நினைத்துப்பார்த்திராத ஒரு செய்தியை தாங்கிக் கொண்டு. நான் அங்கே என்ன நேரம் என்று ஆரம்பித்தேன். ஆனால் மறுபக்கத்தில் இருந்து பேச்சு வரவில்லை. என் மனைவியோ சைகை செய்யத் தொடங்கிவிட்டாள். புத்தகம் களவு போனதைச் சொல்லவேண்டும் என்பதை பல சங்கேதக் குறிப்புகளால் உணர்த்தினாள். இதில் அவள் பிடிவாதமாக இருந்தாள். ஆனால் எனக்கு ஏதோ விபரீதம் என்று பட்டது. அலியின் குரல் அடைத்துப்போய் கரகரத்தது.
‘அலி, அலி என்ன நடந்தது ? ‘ என்று கத்தினேன். ஏதோ பிழை.
‘எல்லாம் முடிஞ்சுபோட்டுது ‘ என்றார்
‘என்ன ? என்ன ? ‘
‘நுஸ்ரத்தை இப்போதுதான் அடக்கம் செய்துவிட்டு வருகிறோம். ‘
பிறகு ஒரு விக்கல். மீண்டும் நீண்ட மெளனம். மெள்ள மெள்ள அவர் முழுவதையும் சொன்னார். அன்று காலை நுஸ்ரத் பள்ளிக்கூடம் போனபோது சாதாரணமாகத்தான் இருந்தாளாம். மயக்கம்போட்டு விழுந்த உடனே மருத்துவமனை அவசரப்பிரிவுக்கு கொண்டு போயிருக்கிறார்கள். மருத்துவர் aneurysm என்றாராம். மூளையிலேயே ரத்தநாளம் வெடித்துவிட்டது.
டெலிபோனை வைத்த பிறகும் அதை அமத்திப் பிடித்தபடியே இருந்தேன்.
ஒன்றுமே நடக்காததுபோல அன்றும் வழக்கம்போல வெளிக்கிட்டு அலுவலகம் போனேன். வழிநெடுக அந்தச் சிறுமியின் நினைவே. நான் எடுத்த படம் ஒன்று இருக்கிறது. நுஸ்ரத் சூரியனைப் பார்த்தபடி கண்களைச் சரித்துக்கொண்டு நிற்கிறாள். பள்ளிக்கூட பழுப்பு மஞ்சள் ஆடையில், முதுகுப் பையுடன் நிற்பது. என்னுடைய நிழல் அவள்மேல் விழுந்து அந்தப் படத்தில் அவளுடன் இருக்கிறது. நான் இரவு உணவு சாப்பிட்டபோது அவள் அங்கே பாத்ரூமில் நுனிக்காலில் நின்று பிரஷ் பண்ணி, கோணல்மாணலாக தலை சீவி, ஒரு புதிய நாளை தொடங்கியிருக்கிறாள். பின்னிரவில் ஒவ்வொரு இலையாக நிலா பட்டு என்னிடம் வந்து சேர்ந்தபோது, அவள் சீருடை போட்டு, சிவப்பு சொக்ஸ் அணிந்து, பள்ளிக்கூடம் போயிருக்கிறாள். நான் நிம்மதியான நித்திரைக் கனவுகளில் திளைத்தபோது அவள் இறந்துவிட்டிருக்கிறாள்.
அதன் பிறகு, ஒரு தேசத்தையும் தீண்டாத சர்வதேச தேதிக்கோடு இடையிலே விழுந்ததுபோல எங்களுக்குள் பெரும் மெளனம் இறங்கிவிட்டது. அலியின் நடுநிசித் தொலைபேசிகள் நின்றன. திருட்டுப்போன அதே சைஸ் மொத்தமான வேறு ஒரு புத்தகத்தை என் மனைவியால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனபடியால், என்னுடைய புத்தக செல்ஃபில் செவ்வக வடிவமான ஓட்டையொன்று, நாங்கள் சூடானை விடும்வரைக்கும், அப்படியே நிரப்பப்படாமல் இருந்தது. உதிர்ந்துபோன கிழவரின் முன் பல்லைப்போல, எப்பவும் ஞாபகப்படுத்தியபடி.
amuttu@rogers.com
- ரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- வசந்தம் காணா வாலிபங்கள்
- வாழ முற்ப்படுதல்….
- ரம்…ரம்மி…ரம்யா
- வெள்ளைக் குதிரை
- கதை 05-எஜமானும் அடிமையும்
- பெண்கள் சொத்துரிமை
- வாரபலன்- ஏப்ரல் 22,2004 – மூட்டை மூட்டையாய் பூச்சி, பத்திரிகை மோதல், பிரகாச விபத்து, மருந்து மகிமை , ‘அடியடி ‘க்கலாம் வாங்க
- துக்ளக் ‘சோ ‘வின் தொலை நோக்கு!
- யாருக்காவது ஓட்டு போட்டுதான் ஆக வேண்டுமா ?
- “கொட்டகைகளை மூடுவோம் !: மூடி விட்டுப் போங்களேன் !
- வெள்ளையடித்த கல்லறைகள்….
- நம் தடுமாறும் ஜனநாயகம்
- துக்ளக் ‘சோ ‘வின் கனவு!
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 2
- அணிந்துரைகள்
- அங்கே இப்ப என்ன நேரம் ?
- புத்தகங்கள் – என் எஸ் நடேசன், பா அ ஜெயகரன் , செழியன்
- ஒரு நாவல் -இரண்டு வாசிப்பனுபவங்கள்
- கவிதை உருவான கதை-3
- கடல் புறாக்களும், பொன்னியின் செல்வனும்
- ஹலீம்
- கடிதங்கள் – ஏப்ரல் 22,2004
- கடிதம் ஏப்ரல் 22,2004
- தாயே
- நீயும்…
- இரு கவிதைகள்
- சத்தியின் கவிக்கட்டு 4
- எல்லை!
- பழுதாகிச் சுழலும் கடிகாரங்கள்
- இறுதி சில நொடிகளில்
- உன் நினைவுகள்
- அறைகூவல்!
- ….<> உள்ளத்திற்கோர் தாலாட்டு <>….
- காடுகளால் ஆன இனம்
- விட்டில் என்றொரு பொய்
- தமிழுக்கு அவனென்றும் பேர்…
- பிசாசின் தன் வரலாறு-2
- தமிழவன் கவிதைகள்-இரண்டு
- அன்று புர்ியாதது இன்று பு ாிந்தது.
- எழில் எது ?
- அவரே சொல்லி விட்டார்
- அப்பா இல்லாமல் பிறந்த எலிகள்
- தொழில்நுட்பச் செய்திகள்
- ஐரோப்பிய ஆசியக் கடல் மார்க்கத்தைச் சுருக்கும் சூயஸ் கால்வாய் [The Suez Canal (1854-1869)]
- மைக்ரோசாஃப்ட் செய்திகள்
- ரேடியோ இயற்பியல் முன்னோடி போஸ்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்- 16
- இழப்பு