அக், யாத்ரா

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்



தீராநதியில் அக் பரந்தாமன் எழுதியிருக்கும் கட்டுரை வெளியாகியிருக்கிறது. அக் தொகுப்பு நூல்வெளியாவது மகிழ்சசி தருகிறது. எனக்கு சிறு பத்திரிகைகள் அறிமுகமான போது அக் இதழ்களைபார்க்க, படிக்க விரும்பினேன். நண்பர் ஒருவர் வசம் சில இதழ்கள் இருந்தன. வேறொரு நண்பரிடம்வேறு சில இதழ்களை கண்டேன். தருமு சிவராமுவின் கவிதைகளைத் தொகுத்து ஒரு சிறு வெளியீடாக அக் பரந்தாமன் கொண்டு வந்தார். அதையும் பார்த்திருக்கிறேன். சிவராமு கொடுத்தபிரதி யாருக்கோ படிக்க கொடுத்தது திரும்பி வரவேயில்லை. கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற வண்ணதாசன் சிறுகதைத் தொகுப்பினை அக் வெளியீடாக பரந்தாமன் கொண்டுவந்தார். அதுவும் எனக்கு கைக்கு கிடைக்கவில்லை.மிக அற்புதமான வடிவமைப்பு, செய்நேர்த்தி கொண்ட நூல் எனபலரும் சொல்லிக் கேட்டிருந்தேன்.ஆனால் அதைப் பார்த்தவர்களை விட அதைப் பற்றிப் பேசியவர்களே அதிகம் போலும் :). தற்செயலாக ஒரு நாள் ஒரு நடைபாதைக் கடையில் அதைப் பார்த்தேன், உடனே வாங்கிவிட்டேன். நான் கேள்விப்பட்டது உண்மைதான்.கெட்டி அட்டை,அற்புதமான வடிவமைப்பு, எழுத்துருக்கள், தமிழ் நூல்களில் காணக்கிடைக்காத தரமான காகிதம். இப்போது அந்தப் பிரதி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அந்த நூலின் இறுதியில் அந்த நூல் வெளியீடு குறித்து வண்ணதாசனுக்கும், பரந்தமானுக்கும் நடந்த கடிதப்போக்குவரத்து பதிவாயிருந்தது என் மனதில் இப்போது நிழலாடுகிறது. ஈரம் கசியும் வார்த்தைகளுடன் ஒரு நூலினை சிறப்பாக கொண்டுவர அவர் பட்ட சிரமங்களை பரந்தாமன்எழுதியிருப்பார். தன் அச்சகத்தினை விற்றே அவர் அதைக் கொண்டு வந்தார் என்று நினைக்கிறேன்.லினோகட் போன்றவற்றை சிறு பத்திரிகைகளில் முதன் முதலில் பயன்படுத்தியவர்அவர்தான் என்று நினைக்கிறேன், தேசிய அளவில் அச்சுத் தொழிலுக்கான பரிசினை அவர் பெற்றிருக்கிறார்.அக் நின்ற பின் அவர் என்ன செய்தார், அச்சகத்துறையில் முழு வீச்சில் இறங்கிவிட்டாரா அல்லது வேறு தொழிலை மேற்கொண்டாரா? .

பல சிறுபத்திரிகைகள் போல் அக் தொடர்ந்து வெளிவரவில்லை.இப்போது அக்கை அடிப்படையாக ஒரு தொகுப்பு நூல் வருவது காலத்தின் தேவையும் கூட.அப்படி அற்புதமாக வடிவமைக்கப்பட்ட நூலை யார் நடைபாதைக் கடையில் கிடைக்கும் வண்ணம் விற்றிருப்பார்கள். எனக்கு கிடைத்த பிரதி அந் நூல் ஒரு பரிசிற்கு தேர்வுக் குழுவிற்கு அனுப்பட்ட பிரதி.

வெ.சாவின் கட்டுரை தொகுப்புகளை படிக்கும் போதுதான் யாத்ரா என்று ஒரு சிற்றிதழ் வந்ததையும் அறிந்தேன். அதன் சில இதழ்களைப் பார்த்திருக்கிறேன். யாத்ராவும் ஒரு முக்கியமான சிறு பத்திரிகைதான்.அது பெரும்பாலும் கலை, இலக்கியம் சார்ந்தவற்றையே வெளியிட்டது. அதில் சுஜாதாவின் பல படைப்புகளின் மூலம் எவையெவை என்று சுட்டிக்காட்டும் ஒரு கட்டுரையைப் படித்ததாக நினைவு. இத்தொகுப்பில் அதுவும் இடம் பெற்றிருக்கிறதா.(சுஜாதா எங்கிருந்தெல்லாம், எவற்றையெல்லாம் தழுவி எழுதினார் என்பதை ஆய்வது சுவாரசியமாக இருக்கும், தேவையும் கூட.அண்மையில் ஸ்ரீகாந்த மீனாட்சி சுஜாதாவின் அறிவியல்
சிறுகதை ஒன்றின் மூலம் எதுவென்பதைக் தன் வலைப்பதிவில் எழுதியிருந்தார்).

இப்படி பழைய சிறு பத்திரிகைகளிலிருந்து தொகுப்பு நூல்கள் வெளிவருவது இன்றைக்குத்தேவை.70 களிலும் 80 களிலும் பல சிரமங்களுக்கிடையே வெளியான சிறுபத்திரிகைகளில்அன்று இலக்கியம் பிரதான கவனம் பெற்றாலும் இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட துறைகளைப்பற்றியும் கட்டுரைகள், விவாதங்கள் இடம் பெற்றுள்ளன. இவை மீண்டும் பார்வைக்கு வரும்போது சிறு பத்திரிகை என்றால் அதில் இல்க்கியம், கலை சார்ந்தவையே இடம் பெற்றன என்றஎண்ணம் வலுவற்றுப் போகும். மேலும் இன்றைக்கு எழுதுபவை எத்தகைய குப்பைகள் என்பதை அன்று வெளியான, சான்றுகளுடன் எழுதப்பட்ட காத்திரமான கட்டுரைகளைப் படிக்கும் போது அறிந்து கொள்ள முடியும்.

சிறு பத்திரிகைகளுக்கான digital archive தேவை. குறைந்த பட்சம் என்னென்ன கட்டுரைகள், கதைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன என்பதையறிய ஒரு அட்டவணையாவது தேவை. இதுவரை எவற்றிலிருந்து தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன, எவற்றிலிருந்து வரவில்லை என்பதை பட்டியலிட்டால் பயனுள்ளதாக இருக்கும். நான் அறிந்த வரை பிரக்ஞை தொகுப்பு நூல் வெளியாகவில்லை.இன்று பலருக்கு அப்படி ஒரு சிறு பத்திரிகை வந்ததே தெரியாது.
—————————————————–
ravisrinivas@rediffmail.com

Series Navigation