அக்கறையும் ஆதங்கமும் இணைந்த குரல்

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

பாவண்ணன்



சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர்களைப்பற்றி சில மாதங்களுக்கு முன்பாக ‘உயிர்மை’ மாத இதழில் தியடோர் பாஸ்கரன் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து சில கட்டுரைகளை எழுதினார். இக்கட்டுரைகளும் இத்துறைகள் சார்ந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு இதழ்களில் அவரே எழுதி பிரசுரமான கட்டுரைகளும் இணைக்கப்பட்டு ஒரே தொகுப்பாக இப்போது வெளிவந்துள்ளது. ஆங்கில நூல்களுக்காக எழுதப்பட்ட சில கட்டுரைகள்கூட ஆசிரியராலேயே தமிழாக்கம் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. உயிரினங்கள், உறைவிடங்கள், கருத்தாக்கங்கள், பங்களிப்பாளர்கள் என நான்கு பிரிவுகளில் மொத்தம் முப்பத்திரண்டு கட்டுரைகள் அடங்கியுள்ளன.

சுற்றுச்சூழல் என்னும் கருத்தாக்கம் ஒவ்வொருவரும் அறிந்திருக்கவேண்டிய ஒன்றாகும். இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை அப்போதுதான் நாம் உணரமுடியும். இந்த மண்ணில் தோன்றியிருக்கும் மலைகளும் காடுகளும் ஆறுகளும் விலங்குகளும் பறவையினங்களும் நுட்பமான வகையில் மானுட வாழ்வின் வளர்ச்சியோடு பிணைக்கப்பட்டிருக்கும் தன்மை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளவேண்டிய உண்மையாகும். ஆனால் பேராசைவசப்பட்ட மானுடன் புறஉலகத்தை மெல்லமெல்ல அழித்து தன்னை வளர்த்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கி இருப்பதுதான் துரதிருஷ்டம். இதனால் உடனடியாக கொஞ்சம் பணவசதியை அவன் அடையக்கூடும். ஆனால் அது வளர்ச்சியின் அடையாளமல்ல. அழிவின் தொடக்கமாகும். இந்த முயற்சிகள் காலம்காலமாக இந்த உலகத்தில் நிலவிவந்த ஓர் அரிய சமநிலையைக் குலைத்துவிட்டன என்னும் உண்மையை காலம் தாழ்ந்தாவது நாம் உணர்ந்துகொள்வது நல்லது. முழுச்சமநிலையும் குலைந்து பேரழிவைச் சந்திக்கும் முன்னால் சற்றேனும் தடுத்து நிறுத்த இந்தப் புரிதல் உதவக்கூடும்.

ஒரு புலி ஒரு காட்டில் நலமாக இருந்தால்தான் மண்ணுலகில் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்று பாஸ்கரன் நூலில் ஒரு பகுதியில் எழுதிச் செல்கிறார். காட்டில் வசிக்கும் புலிக்கும் நாட்டில் வசிக்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கக்கூடிய ஏராளமான இணைப்புகளையும் இரண்டு உலகங்களும் ஒன்றைச் சார்ந்து ஒன்றாக இயங்கக்கூடிய அம்சங்களையும் மனம் ஏற்றுக்கொள்ளும்வகையில் எடுத்துரைக்கிறார். பறவைகள், காடுகள், விலங்குகள், மரங்கள் என எதைப்பற்றி எழுதினாலும் கண்ணுக்குப் புலப்படாத இந்த மாய இணைப்பைப்பற்றி கண்டறிந்து சொல்லத் தவறவில்லை பாஸ்கரன். நு¡ல்முழுதும் அக்கறையுடன் வாதாடும் ஒரு குரல் ஒலித்தபடி உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் உயிரினங்களின் பாதுகாப்புக்காகவும் மன்றாடும் அந்தக் குரல் நம் நெஞ்சைத் தொடுகிறது. பணத்துக்காக கடற்கரைப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களில் இறால் பண்ணைகளை அமைத்து அவற்றை சில ஆண்டுகளிலேயே எதற்கும் உதவாத மலட்டுநிலங்களாக மாற்றியதற்கு எது காரணம்? வனவாசிகளுக்கு வசதி என்கிற பெயரில் சாலைபோட்டு வனச்செல்வங்களை கொள்ளையடித்து தரைக்கு எடுத்துவர அவற்றைத் தந்திரமாகப் பயன்படுத்தி குறுக்குவழியில் செல்வத்தைத் தேட நம்மைத் து¡ண்டியது எது? தந்தங்களுக்காகவும் உடல் தோலுக்காகவும் இரக்கமின்றி விலங்குகளைக் கொன்று குவித்த நம் நடவடிக்கைகளுக்கு என்ன காரணம்? செல்வம் சேர்க்கும் பேராசை அல்லவா? இன்று இயற்கை வளத்தை அழித்து நாசமாக்கிவிட்டு நிற்கிறது நம் பேராசை. எதிர்காலத் தலைமுறையினருக்காக விட்டுச் செல்லவேண்டிய இயற்கை வளத்தை நாம் அடியோடு சுரண்டியெடுத்துவிடடோம். அந்தக் குற்றஉணர்வுகூட நம்மிடம் இல்லாதபடி போய்விட்டது. மறையத் தொடங்கியிருக்கும் அக்குற்ற உணர்வைத் தட்டியெழுப்புகிறது இந்தப் புத்தக வாசிப்பு.

புனல் விளையாட்டு பற்றிய ஒரு குறிப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. சங்க இலக்கிய காலத்திலிருந்து தொடர்ந்து நிகழும் விளையாட்டு இது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு காலமாக பற்பல தலைமுறைகளாக தொடர்ந்துவந்த ஒரு விளையாட்டு நம்முடைய அடுத்த தலைமுறை ஆட இயலாதபடி நம் பேராசைக்கு இரையாகி பாலைவனமாக நிற்கிறது புனல். ஆற்றுத் திருவிழா, ஏரிக்குளியல், அனுபவங்கள் எனப் பல்வேறு அம்சங்கள் எதிர்காலத் தலைமுறையினருக்கு இல்லையென்றாகிவிட்டன. தெரிந்தும் தெரியாமலும் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட இழப்புகள் ஏராளமானவை. ஆதங்கத்துடன் அவற்றைச் சுட்டிக் காட்டுகிறது பாஸ்கரனின் குரல். தஞ்சை பெரியகோயிலையும் கர்நாடக இசையையும் நம் பரம்பரைச் செல்வங்களாக மதிக்கத் தெரிந்த நம் மனத்துக்கு காலத்தால் அவற்றைவிட மிகப்பழைய காடுகளையும் விலங்குகளையும் பம்பரைச் செல்வமாக ஏன் மதிக்கத் தெரியாமல் போனது என முக்கியமானதொரு கேள்வியை முன்வைக்கிறது அக்குரல்.

‘உயிரினங்கள்’ பகுதியில் காட்டுயிர்களைப்பற்றி மட்டுமின்றி நாய், பல்லி போன்ற நம்மிடையே வாழக்கூடிய எளிய உயிரினங் களைப்பற்றியும் ஏராளமான தகவல்களைத் தொகுத்துக் கூறுகிறார் பாஸ்கரன். புலி, யானை, நாய்கள், பறவைகள்பற்றி நாம் அறியாத பல விஷயங்கள் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. சிங்கத்தைப்பற்றிய ஒரு குறிப்பு மிகவும் முக்கியமானது. கிர் வனப்பகுதியில் வாழ்ந்த சிங்கங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஐம்பதுகளிலேயே ஆபத்து உருவாகிவிட்டது. மனிதர்களின் வேட்டையாடும் பொழுதுபோக்குக்கு அவை இரையாகத் தொடங்கின. நேருவின் ஆட்சிக்காலத்தில் வனப்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனாலும் தொடரும் விலங்குகளின் அழிவைத் தடுத்து நிறுத்த இயலவில்லை. தொண்ணு¡றுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்த ஆய்வொன்றில் கால்நடைகள்மூலம் பரவக்கூடிய தொற்றுநோயால் கிர் வனத்தில் வசிக்கக்கூடிய சிங்கங்கள் அழியும் ஆபத்து அதிக அளவில் இருக்கும் உண்மை சுட்டிக்காட்டப்பட்டது. ஆசிய சிங்கம் என்னும் இனமே அற்றுப்போய்விடும் ஆபத்தும் உள்ளது. இவற்றைப் பாதுகாக்கும் எண்ணத்தில் இந்தியக் காட்டுயிர் நிறுவனம் கிர் வனச் சிங்கங்களை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ சரணாலயத்துக்கு இடம்பெயர வைத்து பாதுகாப்பது நல்லது எனத் திட்டமிடப்பட்டது. ஆனால் குஜராத்தின் பெருமை என்று சொல்லப்படும் சிங்கம் இன்னொரு மாநிலத்தில் உள்ள காட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்ட முதலமைச்சர் நரேந்திர மோடியின் முரட்டுப் பிடிவாதத்தால் அந்த முயற்சியை முளையிலேயே கைவிடவேண்டியதாயிற்று. மாற்று வாழிடமற்ற நெருக்கடியில் சிக்கி சிங்கத்தின் இனம் அழிந்துபோவதைப்பற்றி கிஞ்சித்தும் அக்கறையில்லாத அரசியல்வாதியின் அறிவிப்பு தரும் அதிர்ச்சி அளவற்றது. புலியைப் பார்க்க பெரியாறு சரணாலயத்தில் அலைந்துவிட்டு ‘ப்ளெய்ன் டைகர்’ என்ற பெயர்கொண்ட மஞ்சள்நிற பாட்டாம்பூச்சியைப் பார்த்துவிட்டு திரும்பிய அனுபவக் குறிப்பு இலக்கியநயத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

‘உறைவிடங்கள்’ பகுதியில் மிகமுக்கியமான கட்டுரை நதி எங்கே போகிறது? இளம்பருவத்தில் நீராடிக்களித்து மகிழ்ந்த அமராவதி நதி கால்நு¡ற்றாண்டுக் காலத்துக்குள் தன் பொலிவை இழந்து, வேகத்தை இழந்து, சாரத்தை இழந்து மணற்பரப்பாக வெட்டவெளியாகப் போய்விட்ட அவலக்கதையை குமுறலோடு முன்வைத்திருக்கிறார் பாஸ்கரன். கட்டுரையின் ஒரு பகுதியில் காந்தியடிகள் கொலையுண்ட செய்தியைக் கேட்டு அதிர்ச்சி தாளாத மக்கள் அந்த ஆற்றங்கரையில்தான் கூட்டம்கூட்டமாகக் கூடி நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் என்று தன் பழைய நினைவுகளை அசைபோட்டபடி சொல்கிறார். காந்தியின் கொலைக்கும் அமராவதியின் அழிவுக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டு சம்பவங்களின் பின்னணியிலும் இயங்கியிருப்பது மானுடனின் தன்னலம். ஒன்று மதத்தன்னலம். மற்றொன்று செல்வத்தன்னலம். முகத்துவாரத்தின் மகத்துவம் என்னும் மற்றொரு கட்டுரை அடையாறு கழிமுகத்தைப்பற்றிய செறிவான சித்தரிப்புகளையும் அக்கால வரலாற்றையும் ஒருங்கே கொண்டுள்ளது.

‘சோலைபாடியும் கானமயிலும்’ என்னும் கட்டுரையில் நிக்லாஸ் சேகரித்த பறவைகளின் பெயர்ப்பட்டியலிலிருந்து சில தமிழ்ப்பெயர்களை நம் பார்வைக்குத் தருகிறார் பாஸ்கரன். அந்தப் பெயர்களைப் படிக்கும்போது பறவைகளுக்கு அப்பெயர்களைச் சூட்டிய அந்தக் கால மனிதர்களின் கூர்மையான கவனிப்புத்திறத்தைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. ஒரு பெயர்மட்டுமே அந்தப் பறவையின் இயல்புகளை மிக எளிதாக முன்வைத்துவிடுகிறது. கழுத்தறுப்பான் குருவியின் ஓசையும் நையாண்டிக்குருவியின் ஓசையும் கேட்பதற்கு எப்படி இருக்கும் என்று எழும் கற்பனையை அடக்கமுடியவில்லை. சோலைபாடி எவ்வளவு அழகான பெயர். உலகிலேயே மிகச்சிறந்த பாடும் பறவை என்ற புகழ் இதற்குண்டு. இதே கட்டுரையில் இதுவரை தமிழ் வாசகர்கள் நம்பி வந்த ஓர் எண்ணத்தை மறுபரிசீலனைக்குத் தூண்டும்வண்ணம் ஒரு குறிப்பைத் தருகிறார் பாஸ்கரன். கானமயில் என்பது நாம் வழக்கமாக நம்பும் மயிலல்ல. வாலை விசிறிபோல விரித்து இறக்¡ககளைப் பரப்பி அழகாக ஆடக்கூடிய பறவை. அது ஏறத்தாழ வான்கோழியைப்போலவே தோற்றம் கொண்ட இன்னொரு பறவை என்று உறுதியாகச் சொல்கிறார். மேலும் ஒளவையார் வாழ்ந்த காலத்தில் வான்கோழி என்னும் பறவையினம் இந்தியாவிலேயே இல்லை என்றும் ஆதாரத்தோடு நிறுவுகிறார்.

‘கருத்தாக்கங்கள்’ பகுதியில் சில முக்கியமான விஷயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பெரிய அணைகளால் உருவாகும் ஆபத்துகள், நீர்ப்பூங்காக்களால் வறண்டுபோன கிணறுகள், காட்டின் வழியே போடப்படும் சாலைகளால் மெல்லமெல்ல மறைந்துபோகும் வனச்செல்வங்கள், நதிகள் இணைப்பு, ஆழிப் பேரலை தரும் சூழியற்பாடங்கள் ஆகியவற்றைப்பற்றி நம்பகமான தகவல்களையும் ஆழ்ந்த அனுபவங்களையும் துணையாகக் கொண்டு பல கருத்தாக்கங்களை முன்வைத்திருக்கிறார் பாஸ்கரன். இக்கருத்துகளை மேலும் செழுமைப்படுத்திக்கொள்ள இவற்றைப்பற்றி நன்கறிந்த துறைசார் வல்லுநர்களோடு மேலும்மேலும் விவாதித்தல் பயனளிக்கும்.

நூலின் இறுதிப்பகுதியில் சுற்றுச்சூழல் துறைசார்ந்து குறிப்பிடத்தக்க அளவில் தொண்டாற்றிய குமரப்பா, ஹ்யூம், ஜிம் கார்பெட், மேத்யு, மா.கிருஷ்ணன் ஆகிய ஆளுமைகளைப்பற்றிய சித்திரங்களை வழங்குகிறார் பாஸ்கரன். ஹ்யுகோ வுட் அவர்களின் கல்லறையை டாப்ஸ்லிப்பில் தேடிக் கண்டுபிடித்த அனுபவத்தை பாஸ்கரன் விவரிக்கும் விதம் கிட்டத்தட்ட ஒரு புனைகதைக்கு இணையான அனுபவத்தைக் கொடுக்கிறது. ஆழ்ந்த அர்ப்பணிப்புணர்வோடு செயலாற்றும் மனிதர்களுக்கு இன்னும் இந்த உலகில் பஞ்சமேற்படவில்லை என்று சொல்ல இந்த முன்னோடிகளின் வாழ்க்கை மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன. இவற்றைத் தொகுத்தளித்த பாஸ்கரன் தமிழ் வாசகர்களின் நன்றிக்குரியவர். நூல்முழுதும் மிக அழகான பல தமிழ்ச்சொற்களை இயல்பான முறையில் பயன்படுத்தியிருக்கிறார் பாஸ்கரன். படிப்பதற்கு அச்சொற்கள் மிகவும் இனிமையாக உள்ளன. ஒரு சிலஇடங்களில் அவரே சில சொற்களை அழகாக உருவாக்குகிறார். ‘ட்ரெக்கிங்’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக வனவலம் எனப் பயன்படுத்தப்படும் சொல் வெகுவிரைவில் மனத்தில் இடம்பிடித்துக்கொள்கிறது.

(இன்னும் பிறக்காத தலைமுறைக்காக- சு.தியடோர் பாஸ்கரன். உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18. விலை ரூ.120)

.
paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்