அக்கரையில் ஒரு கிராமம்

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

பொ.கருணாகரமூர்த்தி


ஜீவிதத்தில் ஒரு தடவையேனும் நான் போயேயிருக்காத என் அப்பாவின் கிராமத்திற்குப் போவதில் முதன்முதல் சந்திரத்தரையில் கால் பதிக்கப்புறப்பட்ட நீல் ஆம்ஸ்றோங் குழுவினருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பரபரப்பு , ஆர்வம், சிலிர்ப்பு எல்லாமே எனக்கும் உண்டானது.

திருச்சி விமானநிலையத்திலிருந்து பஸ் ஸ்ராண்டிற்கு டாக்ஸி ஒன்றைப்பிடித்து வந்து இரண்டு மணிநேரம் காவல் இருந்து புதுக்கோட்டை போகும் பஸ்ஸைப் பிடித்தேன். பஸ் பயணமும் மேலும் ஒரு மணிநேரம் இருந்தது. பஸ் ஸ்ராண்ட்டில் மக்களுடன் மாடுகளும் கலந்து நின்றன . இனி வடகாட்டிற்குப் போகவேண்டும். கூட்டமாக நின்று டா குடித்துக்கொண்டு நின்ற நடத்துனர்கள், ஓட்டுனர்கள் குழாத்தை அணுகி மெல்ல விசாரித்தேன்.

“ ஏங்க…. வடகாட்டுக்கு போறதுக்கு எந்த பஸ்ஸைப்பிடிக்கணும்…. ? ”

“ அந்தா மூணாவதா நிக்குதில்ல ஒரு பஸ்…. அதுல போய் குந்து ” என்றபடி அந்த பஸ் நின்ற திசையில் டா கிளாஸை நீட்டினான் ஒருவன். ( பேச்சில்தான் எவ்வளவு மரியாதை!)

பஸ் தில்லைநாயகி என்று நெற்றியில் நாமம் சூடியிருந்தது. சீட்டுக்கள் எதுவும் காலியாய் இல்லை. எல்லாமே நிரம்பிவிட்டிருந்தன. பஸ்ஸின் முன் பக்கமாக ஏறி இஞ்ஜினுக்குப் பக்கமாக இருந்த இடை வெளியில் சூட்கேஸை வைத்துவிட்டு ஒரு பக்கமாக நின்றுகொண்டேன்.

டாயைக் குடித்து முடித்து சாவாகாசமாக வெற்றிலை போட்டு சிகரெட் எல்லாம் பிடித்த பின்னால் ஓட்டுனரும், நடத்துனரும் வந்து ஏறினார்கள். நம்மவூரில் பிக்குமார் செய்வதைப்போல வண்டியின் முன்வாசலால் ஏறிய ஆளுங்கட்சியின் ஏதோவொரு வட்டச்செயலர் ஒருவர் முன்சீட்டில் உட்கார்ந்திருந்தவரை சுட்டுவிரலை மடித்துக்காட்டி எழுப்பிவிட்டுத்தான் அமர்ந்து கொண்டார்.

ஒரு சிறு முணுமுணுப்போ எதிர்ப்போவின்றித் தனது உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு எழுந்து அப்பாவியாக தம்பத்தைப் பிடித்துக்கொண்டு நின்றான் மீசைவைத்திருந்த அவ்விளைஞன்.

“ வடகாட்டுக்கு ஒரு டிக்கட் ” என்றவுடன் நடத்துனர் என்னை ஏற இறங்கப்பார்த்தான்.

“ ஏன் திருவரங்குளத்துக்கில்லையா…. ? ”

“ வடகாடு என்கிறேனில்ல…. ”

“ ….இல்ல திருவரங்குளத்திலதான் சிலோங்காரங்க காம்ப்…. இருக்கு…. ”

பார்வையிலேயே சிலோன்காரன் என்கிறதைப் புரிந்துகொள்கிறார்கள்.

டிக்கெட்டை எழுதிமுடிக்கமுன்னே அவரிடமிருந்து இரண்டாவது கேள்வியும் ஜனித்தது.

“ வடகாட்டில யாரைப்பார்க்க…. ? ”

இனியும் விட்டா“ பொண்டாட்டி முழுகிட்டிருக்காங்களா….முழுகாமலிருக்காங்களா…. ? ” என்றுங்கேட்பான் போல இருந்தது. எனக்கு எரிச்சலாகவே இருந்தாலும் அவன் பதிலுக்காக

முகத்தையே பார்த்துக்கொண்டு நிற்கிறான். சொன்னேன்.

“ தாசில்தார் சுந்தரப்பெருமாள் என்று…. ”

“ அவரை எப்படி…. ? ”

“ அவரு நம்ம பெரியப்பா…. ” “

‘அப்படாங்களா…. அடடடா! ”

முன் சீட்டில் மாவட்டத்திற்குப் பக்கமாய் உட்கார்ந்திருந்த இளைஞனை

“…ட்டேய்… எழுந்திர்ர்றா…. சாரை யாரென்னு நெனெச்சே….நம்ம பஸ்ஸு மொதலாளியோட மருமவப்பிள்ளடா… அவரு நின்னுக்கிட்டு வாறாரு….நீ ஒக்காந்துக்கினு வர்றே….எந்திர்றா…. சார்….ஒங்க வண்டி சார் இது…. நீங்க ஒக்காந்துக்குங்க…. ”

‘ஹி….ஹி….ஹி…. ‘இளித்தான் .

இவனுடைய அதட்டலுக்குப் பயந்த இளைஞனோ ஏதோ தெய்வக்குற்றம் செய்தவனைப்போலப் பதறிப் பவ்யமாக எழுந்து ஒரு ஓரமாக நின்றான்.

‘ பரவாயில்லை…. தம்பி நீர் உட்காரும். ‘

அவனோ உட்காருவதாகவே இல்லை.

‘ உட்கார்ந்தவங்களை எழுப்பிறதெல்லாம் தப்பு…. நீர் உட்காரும் ‘

எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். பிடிவாதமாக அமரமறுத்தான்.

“ என்னாங்க தப்பு…. ஒங்க பஸ்ஸு…. நீங்க ஒக்காரம….நல்ல ஞாயந்தான் போங்க.” நடத்துனர்.

பஸ்ஸில் இருந்த ஜனங்கள் முழுவதும் இந்தக் காட்சியை வேடிக்கை பார்க்க…. என்னைத் தோளில் பிடித்து அமர்த்தி இருத்திவிடுவான் போல இருந்தது, வேறு வழியின்றி அமர்ந்தேன்.

திருவரங்குளம் அடைந்ததும் ஒரு இளைஞர் கும்பல் யாழ்ப்பாணத்தமிழ் கதைச்சுக்கொண்டு நின்றது. மார்க்கெட் பக்கமும் இன்னொரு கும்பல். தெரிந்தவர்கள் எவராவது தென்படுகிறார்களா என்று பார்க்கிறேன். ஊகூம், எவருமில்லை. பஸ் குலுக்கியடித்து வடகாட்டை அடையவும் மாலை மூன்று மணியாகிவிட்டிருந்தது. கண்டக்டர் சூட்கேஸை எடுத்துக்கையில் தந்து மிக்க மரியாதையாக இறக்கிவிட்டார். அதொரு சிறிய சந்தி. ஒரு சிறிய கூரை வேய்ந்த தேனீர்க்கடையும் , பலசரக்குக்கடையும் மாத்திரம் டல்லடித்துக்கொண்டு இருந்தன. விருட்ஷமாய் நின்ற புளியமர நிழலில் சிலர் உண்டகளைப்போ பசியோ படுத்திருந்தார்கள்.

எந்தப்பக்கம் போவதென்று தெரியவில்லை. தேனீர்க்கடையில் இருந்தவர்களிடம் விசாரித்தேன். அதிலொருவர் கேட்டார்.

“ தாசில்தாரு உறவா…. ” எல்லா விபரமும் அறிந்த பின்னால் வீட்டைக் காட்டுவதென்பதுதான் அவ்வூர்ப்பழக்கம் போல. சொன்னேன்.

“ ஆமா..”

“….யார் வேணும்…. ?”

“…. அவங்க என் பெரியப்பா…. ”

“….அடாடாடா…. யாருவூட்டை யாருவந்து கேட்கிறீக…. (பக்கத்தில் நின்றவனிடம் என் சூட்கேஸைக்காட்டி) வாங்கடா பொட்டியை ஐயாகிட்டை…. கல்வூட்டுக்கார ஐயா சீமையில இருந்து வாராக…. மசமசன்னு பார்த்துக்கிட்டு நிக்கிறியே எருமையாட்டம்….”

அவனோ பிடுங்காத குறையாக சூட்கேஸை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டான்.

“ ஐயா ஒரு கடதாசி போட்டிருந்தீங்கன்னா…. பெரிய ஐயா வண்டி அனுப்பியிருந்திருப்பாருல்ல…. ?”

யாரும் எதிர்பாராமல் போய் இறங்கும் என் திட்டத்தை அவர்கள் எப்படிப் புரிவார்கள் ?

ஒரு பெரஹரா கூட்டம் போல் என்னை ஒரு கும்பல் புடை சூழ நான் முன்னே சென்று கொண்டிருந்தேன். அவர்கள் பாரதி அவாவிய தூண்களும் , கூடமும் , மாடமும் தோப்புமாய் அமைந்திருந்த ஒரு பழைய பங்களாவுக்குள் அழைத்துச்சென்றார்கள். அந்தப்பழைய வீட்டில் முன் விறாந்தையில் ஒரு ஈஸிசேரில் இருந்தபடி பெரியப்பா யாரோ இருவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

நாங்கள் கூட்டமாக உள் நுழையவும் உரையாடலை நிறுத்திவிட்டு எழுந்து வந்தார்.

கூட்டத்தில் ஒருவன் முந்திக்கொண்டு சொன்னான்.

“ ஐயா… சீமையிலிருந்து வாறாக….! ”

பெரியப்பா மூக்குக்கண்ணாடியைப் போட்டுக் கொண்டு என்னைத் தீர்க்கமாகப் பார்க்கிறார்.

“…. சீமையிலிருந்தல்ல…. சிலோனிலிருந்து வர்றேன்…. வாகீசன்… ”

பெரியப்பா உடனே கண்டுபிடித்து விட்டார்.

“ …. நீ…. சிவனு பிள்ளையில்ல…. ”

“ …. ஆமா… ”

திடாரென்று இரண்டு தரம் விம்மினார் . பின் மேல் துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டு கேட்டார்

“ ஙொப்பன் போன தீபாவளிக்குக் கூட கடதாசி போட்டான் தான் வாரேன்னு…. கடைசியா

நீங்கல்லாம் இருங்கன்னுட்டு யாரு கண்ணிலும் படாம இப்படி கணக்கை முடிச்சுட்டுப் போயிட்டானா…. என்னா அவன் ஒடம்புக்கு…. என்னா சொன்னான்…. ? சாகறப்ப எங்களையெல்லாம் விசாரிச்சானா…. ? ”

“ ஒடம்புக்கு ஒண்ணு என்னு அவர் படுத்ததே கிடையாது பெரியப்பா…. ஒருநா மாலையிலை கொஞ்சம்போல நெஞ்சு வலிக்குதென்னார்;…. பிறைவேட் டாக்டர்கிட்ட கூட்டிப்போய் காமிச்சு மருந்து எடுத்தோம். டாக்டரும் பயப்பிடும்படியா ஒண்ணுமேயில்ல…. ரொம்பவும் ஸ்றெயின் எடுத்திட்டா இந்த வயதில வர்றதுதான்…. பெட் றெஸ்ட் எடுத்திட்டா எல்லாம் சரியாயிடும் என்றார். வீட்டுக்கு வந்து இரவு பிரெட் ரோஸ்டும், கோழி சூப்பும் சாப்பிட்டிட்டு நல்லா பேசிச்சிரிச்சிட்டு; படுத்தவர்தான்…. காலைல எந்திருக்கவேயில்ல….!. ”

பெரியம்மா வந்து என்னை கட்டிப் பிடிச்சுக்கொண்டு சின்னதாய் ஒரு ஒப்பாரி வைத்தார்.

“ நரசிம்மன் டாக்கடையிலயில்லா ஐயா வந்து வீட்டை விசாரிக்கிறாகளாம்….பெரியப்பாவூடு எங்கேயின்னு…. இது என்னா கதை…. யாரு வீட்டை யாரு விசாரிக்கிறது…. ? ” என்றபடி என்

கன்னத்தில் பெரியம்மா செல்லமாய் இடித்தார்.

‘கல்வீட்டுக்கு யாரோ சீமையிலிருந்து வந்திருக்காக…. ‘செய்தி ஊர் பூராகப் பரவவும் ‘திமு திமு ‘ வென்று வீடு பூராவும் ஜனம் முற்றுகையிட்டது. உரிமையுடன் கூடத்திற்கே வந்துவிட்டவர்கள் உறவினர்களென்றும், தூரத்தே நின்றுகொண்டும், தூணைப்பிடித்துக்கொண்டும் நின்றுபார்த்தவர்கள் பண்ணையில் வேலை செய்பவர்களென்றும் தெரிந்துகொண்டேன்.

பெரியம்மாவைத் தவிர்ந்த ஏனையபெண்கள் அனைவருமே வயது வித்தியாசமின்றி கூடத்தைச் சுற்றியிருந்த நாலைந்து அறைகளின் கதவுகளின் பின்னாலிருந்தும் பார்த்தனர்.

‘அவோகளை கூட்டி வரேல்லியா…. ? ” அசரீரி ஒரு அறையிலிருந்து வந்தது.

“ என்ன கேட்கிறாங்க…. ? ” பெரியம்மாவைக் கேட்டேன், அவர் மொழிபெயர்த்தார்.

“ ….உம்பொண்டாட்டியை கூட்டி வரல்லியான்னு கேட்கிறாள்…. ”

“ கேட்கிற நீங்க யாருன்னுதான்…. எனக்குத்தெரியலையே….இப்பிடி கொஞ்சம் முன்னாலதான் வாங்களேன் …. ”

ஆண்கள் சமூகத்துக்கு முன்னால் இலேசில் யாரும் வந்துவிட மாட்டார்கள். உள்ளே தொடர்ந்து மெளனம்.

“ உங்களை யாருன்னு பார்க்காம நான் பதில் சொல்லப்போறதில்ல….! ”

பெரியம்மா சொன்னா

“ அவ வசந்தி , பார்த்தா உனக்கொரு அத்தைமுறை ஆகணும்…. யேய் …. வசந்தி வாடி…. சித்த மின்னவாடி…. அவன் கேட்கிறானில்ல…. ? ”

ஏராளம் வெட்கம் சுமந்து கன்னங்கள் சிவக்கச்சிவக்க சின்னச்சின்ன அடிகள் வைத்து குளுகுளுவென்று என்னை விட இளமையாக ஒரு அத்தை வந்து பத்தடி தூரத்தில் அடுக்கியிருந்த நெல்லுச்சாக்குகளில் ஒன்றின் மூலையைப் பிய்த்துக்கொண்டும், முகத்தை நாற்பத்தைந்து பாகைகள் மேற்காகத் திருப்பி வேலியில் ஓணான் ஏதாவது ஓடுகிறதா என்று ஆய்வது போல் பார்த்துக்கொண்டும் நின்றாள். அவளை மேலும் சங்கடப் படுத்தாமல் சொன்னேன்:

‘அவங்க எஸ்டேட் கொம்பனி ஒண்ணில வேர்க் பண்ணுறாங்க…. லீவ் எடுப்பது கஸ்டம்…. ஆகட்டும் அடுத்தவாட்டி பார்க்கலாம்…. ” இதைக்கேட்டதும் உள்ே;ள ஓடி மறைந்தாள்.

பெரியப்பா சத்தமாகக் கேட்டார்:

“….ஏன்டா பொம்மனாட்டிங்களக்கூட உத்தியோகத்துக்கு அனுப்புவாங்களா அங்க…. ?”

நாங்கள் கூடத்தில் பேசிக்கொண்டிருக்க உள்ளே முப்பது நாற்பது பேருக்கான பெருஞ்சமையல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வெளியே அடுப்புமூட்டி இரண்டு பெரிய தாமிரக்கொப்பரைகளில் வெந்நீர் தயாரானது.

“ ஐயா அந்த மரக்குத்தியில குந்துங்க…. நான் மொண்டு ஊத்தறேன் ” என்றுகொண்டு கீரைக்கொட்டை நிறத்தில் வடிவேலு மாதிரி ஒருவன் வந்தான்.

‘அதெல்லாம் வேண்டாம் நானே ஊத்திக்கிறேன்….

“ …ஐயையோ…. பெரிய ஐயா வைவாரு….நீங்க ஒக்காந்துக்குங்க….”

பெரிய பாத்திரமொன்றால் மொண்டுமொண்டு ஊத்தினான். நாலுபேர் குளிக்கப்போதுமான அளவு வெந்நீர்

குளித்து முடியவும் நான் சாரத்தை உடுத்துக்கொண்டு வந்தேன். பெரியப்பா அலறினார்….

“ ஐயைய்யைய்ய…. இதென்ன லுங்கி கட்டிண்டு…. வேஷ்டி இல்லையா… ? அவனுக்கு ஒரு வேஷ்டி கொடுங்கடி…” உத்தரவிட்டார.; அவர்களுக்கு சாரம் கெளரவமான உடையல்ல போலும்!

நாங்கள் சாப்பிடத்தயாராகவும் வெளியே போயிருந்த பெரியப்பா மகன் ஒருத்தன் மோட்டார்ச்சைக்கிளில் வந்து இறங்கினான். அவன் பெயர்கூட ஞாபகத்திற்கு வரமறுக்கிறது. பெரியப்பா

“ ஒன்ட அண்ணாடா ” என்று அறிமுகப்படுத்தவும் மரியாதையாய் நமஸ்க்கரித்தான்.

சாப்பாட்டு மேசையில் பெரியப்பா முன்பாக அமர்ந்தபோதுதான் அவருக்காக நான் வாங்கிவந்த Johnny Walkerரின் ஞாபகம் வந்தது. சூட்கேஸில் இருந்ததை எடுத்து வந்து கொடுத்தேn, வாங்கிக்கொண்டவர்

“ இதை உள்ள வை ‘என்று பெரியம்மாவிடம்;

நீட்டினார்.

“ எதுக்குப் பெரியப்பா உள்ளாற வைக்கிறீங்க…. சாப்பிட முதல் ஒரு சிப் எடுக்கலாமே…. நல்லா பசியைக்கிளப்பும்…. வேணுன்னா உங்களுக்கு நான் கொம்பனி தர்றேன்…. ”

எல்லோரும் நான் ஏதோ தகாதவார்த்தை பேசிவிட்டமாதிரி மூச்சை நிறுத்திவிட்டு என்னை ஆச்சரியத்துடன் நோக்கினர், ஓஹோ…. என் வண்டவாளத்தை இங்கே இறக்கியிருக்கப்படாதோ ?

“ ….நீ…. சும்மா தமாஷ்தானே பண்ணிறாய்…. குடிக்கமாட்டாயில்ல….” பெரியப்பா நம்பிக்கையுடன் பார்த்தார். இதோ தப்பிக்க வழி! சாதுர்யமாய் பயன்படுத்தினேன்.

“ ….ஆமா பெரியப்பா தமாஷ்தான்பண்ணினேன்…. ”

அதைக்கேட்ட பின்னரே எல்லோருக்கும் திரும்ப மூச்சு வந்தது.

பதினைந்து இருபது கறிகள் சமைத்திருந்தார்கள், சாதத்தைப் போட்டுக்கொண்டு முதலில் பொரியல்….பின் கூட்டு…. அதற்குமேலே குழம்பு என்று தனித்தனியே பரிமாறினார்கள். சாப்பிட்டு முடியுந்தறுவாயில் எல்லாமே போதும்….

“ சொதியை விடுங்கள்…. ” என்றேன்.

“ …அதென்ன கொதி…. ? ”

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். சமையற்காரனை பெரியப்பா கேட்டார்

“ …ஒனக்குந்தெரியாதா…. கொதின்னா என்னன்னு…. ? ”

வெளிப்பிதுங்கிய அவன் பரிதாப முழிகளைப் பார்த்து நானே விளக்கினேன்.

“… ஆகட்டும்…. நாளைக்கு நிச்சயமா பண்ணித்தர்றேன்…. இன்னிக்கு ரசம் ஊத்திக்கடா ராஜா.. ” என்று எனக்கு பெரியம்மா ரசம் ஊத்தினார்.

இரவு பத்து மணியாகியும் வீட்டில் கூட்டம் ‘மசமச ‘ என்று ஓய்ந்த பாடாயில்லை. அது என் விஜயத்தினால் மாத்திரம் அல்ல தினமும் அப்படித்தான் என்பது பின்னாலேயே தெரிந்தது. என்னதான் குக்கிராமமாய் இருந்தாலும் மின்சாரவசதி இருந்தது பெரிய செளகரியமாயிருந்தது.

காலை விடிந்து பார்த்தபோதுதான் நேற்று தெரிந்ததை விடஅந்த வீடு பெரிய பெரிய அறைகளுடன் இரண்டு மடங்கு பிரமாண்டமானதாய் இருந்தது. தாத்தா காலத்தது. சட்டப்படி பார்த்தால் எனக்கும் அதில் ஒரு பங்குண்டு.

சத்யஜித் ரே யின் படமொன்றில் (Stranger ?) பல காலம் தேசாந்திரியாய் திரிந்து விட்டு ஊர் திரும்பும் ஒரு பெரியப்பா ‘எங்கே அவர்கள் தனியாகவே ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கும் சொத்துக்களில் பங்கு கேட்டு விடுவாரோ ‘ என்று எண்ணிஎண்ணி அக்குடும்பம் பூரா அவர் கிளம்பும் வரையில் அவரைக் கண்டு பயப்படும். அது நினைவுக்கு வரவும் எனக்கு சிரிப்பு வந்தது.

பெரியப்பா வீட்டில் எனக்கு எல்லா உறவுமுறைகளிலும் பெண்கள் இருந்தார்கள், மேலும் அயலில் இருந்தும் நிறைய உறவினர் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் வந்து என்னைப் பார்த்துவிட்டு “ கண்டிப்பா நீங்க ஊருக்குத்திரும்ப மொதல் எங்க வூட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டுதான் போகணும்…. ” என்று அழைப்பும் விடுத்தார்கள்.

எந்தப் பெண்ணாயினும் ஆண்கள் எதிரில் நின்று பேசவே பயப்பட்டார்கள். பெண்ணியம், பெண்விடுதலைக் கருத்துக்கள் அந்த ஊருக்கு வரவே பயப்படும். வீட்டுப்பெண்கள் கழுவுதல், துடைத்தல், பெருக்குதல், சமைத்துப்போடுதல், வெற்றிலை மடித்துக்கொடுத்தல் என்பவற்றுடன் நின்றுகொண்டார்கள்.

அக்கிராமத்தில் இன்னும் கொஞ்சம் வசதியாக நிலபுலன்கள் இருந்தவர்கள் வீடுகளிலும் பெண்கள் ஆண்களுக்குச் சமதையாக வயல்களிலும் தோட்டங்களிலும் உழைத்தார்கள். ஆடுமாடுகளைப் பராமரித்தார்கள்.

ஏழை வீட்டுப்பெண்கள் மற்றவர்கள் வீடுகளிலும் வயல்களிலும் தோப்புக்களிவும் பாடுபட்டார்கள்.

பெரியப்பா பையன் தன் மோட்டார்சைக்கிளில் என்னை ஆலங்குடி , பேராவூரணி, அறந்தாங்கி என்ற ஊர்களெல்லாம் சுற்றிக்காண்பித்தான்.

போகும் வழியெங்கிலும் வீதியின் இருமருங்குகளிருலும் தொடர்ச்சியாக இருபது முப்பது மைல் நீளத்திற்கு புளியமரங்கள் விருட்ஷங்கொண்டிருந்தன. தவிரவும் சில ஊர்களில் முன்னரே நன்கு திட்டமிட்டு நாட்டியிருந்த இயூகலிப்ரஸ் வகை மரங்களை வானுயர ஓங்கி வளர்ந்திருந்தன! பரவலாக எங்கும் குழாய்க்கிணறுகளும் , பம்புசெட்டுகளும் அமைக்கப்பட்டு நல்லமுறையில் விவசாயம் செய்துகொண்டிருந்தார்கள்.

கிராமங்களில் அதிகாலைப்பொழுதுகள் உண்மையில் அனுபவித்தற்குரியவைதான். இரவு பெய்த பனியில் நனைந்திருந்த புற்கள் நடக்கும்போது கால்களை நனைத்தன. மேகத்துள் இருந்து வெளிப்படுபவர்கள் போல எங்கோ மைல் தொலைவிலிருந்து பெண்கள் குடங்குடமாக தண்ணீர் மொண்டுகொண்டு பனிப்புகாரூடாக வந்துகொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் பெரியப்பாவின் வீட்டுக்கு முன்பாக அவருக்கே சொந்தமான தோட்டத்தில் குழாய்கிணறும் பம்புசெட்டும் இருந்தது.

இருந்தும் இவர்களை ஏன் இவ்வளவு தூரம் நடக்கவைக்க வேணும் ?

காலை நல்ல வீட்டுத்தயாரிப்பு நெய்யில் முறுகச்சுட்டுத்தந்த

தோசைகளை உள்வாங்கிவிட்டு ஒரு ஈஸிசேரிலிருந்து யோசித்துக்கொண்டு இருந்தேன். எதிலிருந்த வெற்றிலைத்தட்டத்தைப் பார்த்ததும் காதல் பிறந்தது. எழுந்து என் பக்கமாக இழுத்தேன்.

“…. இருங்க புது வெத்தலை கொண்டாரேன்….! ”

உள்ளிருந்து ஒரு அசரீரி வந்தது. பார்த்தால் என்னே ஆச்சர்யம்! வசந்தி ஐந்தாறு புதிய வெத்திலைகளைக் கழுவி எடுத்துக்கொண்டு வந்தாள்.

“ ….ஆங்…. வாங்க அத்தேய்…. ” என்றேன்.

அழகாக வெட்கப் பட்டாள். வெத்திலையைத் தட்டத்தில் வைத்துவிட்டுத் திரும்பியவள் ஏதோ நினைத்துக்கொண்டவள்போல் நின்று கேட்டாள்:

….ய்ய்யேன் அவாகளை…. கூட்டியாரலை…. ? ”

“ …அதுதான் நேத்தே சொன்னேனே…. அவங்களுக்கு அங்கே வேலை இருக்கென்னு…. ”

“….சிலோன்பாஷையில சொன்னா நமக்குப்புரியுமா…. ? அண்ணனுக்கென்னாப்புரியும்…. ” (பெரியப்பாவைத்தான் சொல்றாள்)

“…சிலோன்பாஷையில சொன்னேனா…. ? ”

“…அஃதான்….இங்கிலீஸு மாதிரி….நிறுத்தாம பேசிட்டு இருந்தீங்களே….”

“…. அப்ப இரண்டு நாளா நான் கதைச்சதெல்லாம்….ஸாரி பேசிட்டிருந்ததெல்லாம்…. புரியல்லயா… ? ”

“ ….சுத்தமா ஒண்ணும் புரியல…. பாப்பா மழலை மாதிரியிருந்திச்சா…. ஏதோ பேசிட்டிருக்கிறீங்களேயென்னு கேட்டிட்டிருந்தோம்…. ”

நானு ஒயாவில ரயில் பிடிச்சதிலிருந்து…. வடகாடு வந்து இறங்கிய காண்டம் வரை பகுதிபகுதியாய் பண்ணிய உபந்நியாசங்கள் எல்லாம் வீண்.

இப்போ எனக்கு வெட்கமாயிருந்தது! வார்த்தைகளை இனி தேர்ந்தே பேசுவது என்று தீர்மானித்துக்கொண்டேன்.

****

“….ஏன் பெரியப்பா…. வீட்டுக்கு முன்னால குழாய்க்கிணறு இருக்கு. சின்னதாய் ஒரு மோட்டரைப் பூட்டி , சின்னதா ஒரு ஓவர்கெட் டாங்கும் கட்டிட்டம்னா…. தண்ணிப்பிரச்ன தீர்ந்திடும்ல….பாவம் இந்தப்பெண்ணுங்க எம்மாந்தூரம் சுமந்திண்டு வருதுங்க…. ?”

அவருக்கு அது ஒரு பொருட்டாகவே படவில்லை.

“ …நீயொண்ணு….அவாளுக்கும்….தின்னது செரிக்கணும்ல…. ”

“ ….பெண்ணுங்க பாவம் பெரியப்பா….ஒரு கொத்தனாருக்கு சொல்லி அனுப்புங்க…. ”

ஒரு வாரத்திலே டாங் கட்டி முடிந்தது. திருச்சிக்கு ஆளனுப்பி மோட்டர்பம்ப் செற்,

PVC குழாய் என்பன எடுப்பித்து நானே அவற்றை பொருத்திக் கொடுத்தேன்.

வீட்டு முற்றத்திலே குழாயைத் திறக்கவும் சும்மா பழிங்கன்ன நீர் அருவியாய் கொட்டியது! பெண்களுக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. அவர்களுக்கெல்லாம் நான் ஒரு தேவகுமாரனைப்போல் தென்பட்டேன். பாயாசம், லட்டு, சீடை, முறுக்கு, கொழுக்கட்டை என்றெல்லாம் ஸ்பெசலா எனக்குப் பண்ணித்தந்து தங்கள் மகிழ்ச்சியைக் காட்டினார்கள்.

பஸ் கொம்பனி மாமாவும் குடும்பத்தோடு வந்து என்னைப் பார்த்தார்.

“ அடடடா…. இப்படி ஒரு பம்பு பூட்டிக்கலாமென்று இதுவரையில நம்ப மண்டையில தோணாமப்போச்சே….! ” அங்கலாய்த்தார். அவரோடு ஒட்டிக்கொண்டுவந்த கொத்தவரங்காய் ஒடிசலாய் இருந்த ஒருவர் சொன்னார்:

“….நமக்கு மின்னயே தெரியும் பம்பு பூட்டிக்கிட்டா தண்ணி வருமென்னு…. பெரியவாளுக்கு நாம புத்திஸொல்ற மாதிரி இருக்கப்படாதேயென்னு இருந்துப்புட்டேன்….ஹி…ஹி…ஹி…. தம்பிக்கு என்னையை நெனவிருக்கில்லா…. ? ”

“ இல்லையே…. நினைவில்லை…. ”

குற்றஞ்சுமத்தும் தொனியில் நிலத்தைப்பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டு கேட்டார்:

“ அதுக்குள்ளாற மறந்துபுட்டாக இல்லை…. ? ”

“ இல்லையே….இப்போதானே; மொதல் தடவையே இங்கேயே வந்திருக்கேன்…. உங்களைய பார்க்கிறேன்…. ”

“ ….நல்லாய்த்தான்…தமாஷ்பண்ணுறீங்க…. ஒங்கள எத்தனவாட்டி உப்புச் சுமந்திருப்பேன்… ? ”

பெங்களூரில் மருத்துவம் படித்துவிட்டு தனியார் ஆஸ்பத்தரியொன்றில் பிராக்டிஸ் பண்ணிக்கொண்டிருந்த என் இன்னொரு சித்தப்பா மகள் மலர்மகள் நான் வந்திருக்கிறேன் என்று அறிந்து ஒரு கிழமை விடுப்பு எடுத்துக்கொண்டு வந்திருந்தாள்.

தொழில் தவிர அவளுக்கு கதை, கவிதை, ஓவியம், ஜென்பெளத்தம், அத்வைதம், உபநிஷதம், ஸ்மிருதிகள், தத்துவம், இசை என்று உலகத்து விடயங்கள் எல்லாவற்றிலும் ஆர்வமிருந்தது.

மணிக்கணக்கில் உட்காரந்து பேசுவோம.; விவாதிப்போம். கொஞ்ச நாட்கள் கிராமத்தில் பொழுது போக்க நல்லதுணையாக இருந்தாள். பகல் வேளைகளில் இருவரும் சேர்ந்தே ஊர் முழுவதும் சுற்றினோம். ஓவியங்கள் – சிற்பங்களுக்குப் பெயர்பெற்ற சிற்றன்னவாசல், சமணர்குகை எல்லாம் போய்ப்பார்த்தோம் ஆண்கள் சமூகத்தில் பெண்களையே அழைத்து பேசாத, அவர்களைப் பொருட்டாக மதித்து

அவர்கள் அபிப்பிராயங்களையே காது கொடுத்துக் கேளாத அக்கிராமத்தின் பெண்களுக்கு நான் மலர்மகளுடன் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பது பேராச்சர்யமாயிருந்தந்தது!

சும்மா சும்மா கதவிடுக்குகளிலிருந்தும், நடைக்கு அப்பாலிருந்தும் என்னை வேடிக்கை பார்த்த பெண்களிடமும் அப்பப்போ வேண்டுமென்றே ஏதாவது பேச்சுக்கொடுப்பேன். நாட்கள் கழிய மெல்ல மெல்ல தம் படுதாகைகளை நீக்கிக்கொண்டு என்னை நோக்கி வந்தனர்.

அப்படி வந்தவர்களை இன்னும் நெருக்கிவைத்த நிகழ்ச்சி ஒரு காலை நடந்தது.

நானும் மலர்மகளும் அரட்டை அடித்தபடியே இட்லி சாப்பிட்டுவிட்டு நான் வெற்றிலைத்தட்டத்தை இழுக்கவும் அவள் வெற்றிலைபோடுவதால் உடல், பல் நலத்திற்கு விளையும் தீங்குகள் பற்றி அடித்த விரிவுரையைக்கேட்டுக்கொண்டே நான் நல்ல சீவல்ளைத் தேடிக்கொண்டிருக்க வெளிமுன்றலில் இரண்டு துணிவியாபாரிகள் தலையில் துணிப் பொட்டளிகளுடன் தோன்றினர்.

‘ஐயா…. நல்ல சின்னாளம் , காஞ்சீபுரப்பட்டு எல்லாமிருக்கு எடுக்கிறீகளா…. ?

“ ஐயா புடவையெல்லாம் உடுத்திறதில்லை…. அதெல்லாம் பொண்ணுங்க சமாச்சாரம்…. கூப்பிடு மலர் பெரியம்மாவை… ”

புடவையென்றதும்…. இராணித்தேனீயும் கூட்டின் மற்றக் கும்பலும் போல வீட்டிலிருந்த முழுப்பெண்களும் பெரியம்மாவைத் தொடர்ந்து வேடிக்கை பார்க்க வந்தனர்.

என்னதான் நினைத்துக்கொண்டாவோ சொன்னா: “ ஆம்புளைக அசலூரு போயிருக்காக…. போயிட்டு இன்னொருவாட்டி வாங்க பார்க்கலாம்….! ”

வியாபாரிகள் முகம் இருண்டு இறுகியதைக் கண்டுகொள்ளாமலே கேட்டா:

“ காப்பியோ மோரோ குடிக்கிறீயளா…. ? ”

“ ஏன் பெரியம்மா….என்னையைப்பார்த்தா ஆம்பிளை மாதிரித்தெரியல்லையா…. ?” என்றேன்.

“ அதுக்கில்ல…. புடவை துணியெல்லாம் பெரியப்பாவை கலந்துக்காம எடுத்தா கோச்சுக்குவார்…. ”

“ சரி…. இன்னிக்கு நானிருக்கேன்…. பெரியப்பா கோச்சுக்க மாட்டாராம்…. இறக்குங்கப்பா மூடைங்கள….” என்றேன்.

பெரியம்மா இடைமறித்தார்: “…. கொஞ்சம் பொறு ராஜா…. பணமெல்லாம் பெரியப்பா கைலதானிருக்கு….ஒண்ணும் அவசரப்படாதப்பா…. ”

“ அதுக்கெல்லாம் நானிருக்கேன்றனில்ல….நீங்க ஒண்ணும் பேசக்கூடாது….இப்போ செலக்ட் பண்றது மட்டுந்தான் ஒங்க வேலை…. ”

அவர் மறுக்கமறுக்க முன்கட்டுத் திண்ணையில் நொடியில் கடைவிரிக்கப்பட்டது.

“ ….நல்லதாய் பட்டு என்ன இருக்கு காட்டுங்க…. ” என்றாள் மலர்மகள்.

எல்லாச்சேலைகளுமே நல்ல இறுக்கமாய் இழைகள் ஓடப்பட்டிருக்க ஜரிகைகளிலும் ஒரு தரமிருக்கவே செய்தது. ஒரு பேட்டியில் பட்டு நெசவாளியொருவர் எப்படி உண்மையான காஞ்சீபுரம் சேலையை இனங்காணுவது என்று விளக்கியிருந்தது ஞாபகம் வந்தது.

“ ..காஞ்சீபுரம் பட்ல விஷேஷம் என்னன்னா…. சேலையோடு சேர்த்தே நாங்க முகதலையையும் நெசவு பண்றதில்ல…. முகதலையை தனியே நெசவு பண்ணிட்டு பினனாலதான் உடலோட சேர்த்து இழைப்போம்.. ”

வியாபாரிகள் எடுத்து அவள் பக்கமாய் காஞ்சீபுரம் என்று நீட்டியவைகளை ஆராய்ந்து பார்த்தேன். முகதலைப்பகுதி தனியாக இழைக்கப்பட்டே இருந்தது.

“ பெரியம்மா ஒங்களுக்கு பிடித்த பட்டுச்சேலை ஒண்ணு எடுத்துக்குங்க…. ”

ஏராளம் தயக்கத்தின் பின் ஒரு சேலை எடுத்தார்.

“ மலர்மகள் நீயுமொண்ணு எடுத்துக்கோ….No fussing please ”

அழகான காஞ்சீபுரமொன்றைத் தேர்ந்தெடுத்தாள்.

“ சரி இன்னொரு பட்டு இதேமாதிரி செலக்ட் பண்றியாடா…. ”

“ யாரு…. அண்ணிக்குத்தானே…. ? போட்டோவில பாத்தது…. என்னைவிட சிவப்பாயிருப்பாங்கல்ல ? ”

“ அண்ணிக்கில்ல… இவ சாந்திக்கு ”

எல்லாருமே “ …. ங்ங்ங்…. ” என்று ஏககாலத்தில் வாயைப்பிளந்தனர். நான் விளக்கினேன்.

“ மத்தப்பெண்டுகள் எல்லாமே சும்மா எட்டவெட்ட நின்று என்னை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்க அவதான் நேரடியாய் எங்கிட்ட “ வீட்டுக்காரியை ஏங்கூட்டி வரல்லேன்னு…. ? ” துணிச்சலாய் கேட்டவ. இந்த வடகாட்டில பெண்ணியம் நோக்கி முதல் அடியை எடுத்துவைத்த அந்த புரட்சிப்பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி…. என் எளிய பரிசு….! சரி அவவே தனக்குப்பிடிச்சத எடுத்துக்கட்டும்…. எங்க கூப்டு அவளை! ”

அதிர்ச்சியிலிருந்து விடுபடாதவள் “ வாடி மின்னே….! ” என்று பெரியம்மா அதட்டவும் புதுமணப்பெண் மாதிரி சின்னச் சின்ன அடிகளாக எடுத்து வைத்து வந்து பெரியம்மாவின் முகத்தையே பார்த்துத் தயங்கிக்கொண்டு நின்றாள்.

“ உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை எடுத்துக்க. ” என்றேன். சேலை அடுக்குக்குள் ஏதோ கொடுக்கன் இருப்பதைப்போல கையை வைக்கப் பயந்து கொண்டு நின்றாள். மலர்மகள் அவளுக்கு மாட்சான சில சேலைகளை எடுத்துக்காட்டவும் அதிலொன்றைச் சடுதியில் ஈஸிக்கொண்டு உள்ளே மறைந்தாள்.

“ இதுக்கு அடுத்த ரகத்தில வேற என்னப்பா இருக்கு… ? ”

“ ஏராளம்….இருக்குசார்….கோடம்பாக்கம்…. கண்டாங்கி…. கோயம்புத்தூர்…. ” என்று அடுக்கிக் கொண்டே எடுத்துப்போட்டான்.

“ சரி….இன்னும் எத்தனை பொண்ணுங்க பாக்கியிருக்கு ? ”

மலர்மகள் தலைகள எண்ணிவிட்டு சொன்னாள் “ ஒம்பது….! ”

“ சரி….நீங்க எல்லாரும் இதுல யாருக்கு எது பிடிச்சிருக்கோ …. ஆளுக்கொண்ணு எடுத்துக்கங்க…. ”

“ பாத்து எடுங்கடி…. ரொம்பவெல அதிகமெலாம் வாணாம்…. ‘என்ற எச்சரிப்போடு பெரியம்மா பச்சைக்கொடியைச் சாய்க்கவும்….

ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு சேலைகளை எடுத்தார்கள்.

“You are so generous….!” என்றாள் மலர்மகள்.

சேலைகள் அன்பளிப்பு செய்ததும் , மலர்மகள் கூட இருந்ததும் பெண்களுக்கும் எனக்குமான இடைவெளியை நீக்கி நெருக்கத்தை அதிகரித்துவிட்டிருந்தது!

விடுப்பு முடிவடையவும் மலர்மகள் பெங்களூர் திரும்பிவிட்டாள். இப்போ பெண்கள் எல்லாம் என்னோடு அரட்டைக்கச்சேரிகள் வைக்கவே ஆரம்பித்துவிட்டார்கள். தினமும் மாலைவேளைகளில் ஒரு மாதர்மன்றமே கூடிவிடும்.

மேற்கு நாடுகளில் பெண்கள் என்னவென்னவெல்லாம் சாதனைகள் பண்ணுகிறார்கள் என்றெல்லாம் எடுத்துக்கூறுவேன். பெண்களின் வேலைச்சுமைகளைக் குறைக்க என்னவென்ன நவீன கண்டுபிடிப்புகள் எல்லாம் வந்துள்ளன…. மைக்கிரோ வேவ் அடுப்புகள், வாஷிங் மெஷின்கள், வாக்கும் கிளீனர்கள் என்று விபரித்தேன்.

“ இதெல்லாம் இந்தப்பூமியில்தானா…. ? ” என்பது போன்ற அதிசயத்துடன் அங்கார்ந்து கேட்பார்கள். சொந்த மனைவி உடனிருக்க வீட்டிலேயே வேறுபெண்களைக்கூட்டிக் கொட்டமடித்துக் கொண்டிருந்தவனின் லிங்கத்தை வெட்டி எறிந்த பெண்ணின் துணிச்சல் கதையைச் சொல்லுவதா விடுவதா என்று என்னுள் போராட்டமாக இருந்தது.

நானும் ஊர் திரும்ப இன்னும் நாலைந்து நாட்களேயிருக்க…. ஒரு நாள் வீட்டில் எல்லாருமே இருக்கையில் பெரியப்பா என்னிடம் கேட்டார்:

“ …. ஆமா…. உனக்கு எத்தனை பசங்கள்…. ? ”

முதலில் என்னைக் கலாட்டாதான் பண்ணுகிறார் என்று நினைத்துச் சும்மா சிரித்துக்கொண்டிருந்தேன். பின்பு மீண்டுந்திருப்பிக்கேட்டார்.

“ இல்லை பெரியப்பா நமக்கின்னும் கிடைக்கல…. ”

“ உண்மையாவா… ? ”

“ நிஜமாத்தான் பெரியப்பா…. ”

“ அப்ப நீ பேசாம வசந்தியைக்கட்டு! ”

நான் சிரித்தேன்.

“ அங்க அவ இருக்கிறா இல்லை…. ? ”

“ அவ அங்க இருக்கட்டும்…. இவள இங்க கட்டு;…. இந்த வருஷமே பேரனைப்பார்த்திடறேன்…. ”

“ பாவம்….அவ ரொம்ப சின்னப்பொண்ணு…. பெரியப்பா…. ”

“ ….என்னாது …சின்னதும்…. பெரிசும்னு…பேசிக்கிட்டு….ஆணெண்டால் விருட்ஷம்பாங்க…. சும்மா உம்னு சொல்லு….ஜாம்னு முடிச்சுரலாம்….

– ஏதோ கல்யாணமே முடிந்துவிட்ட மாதிரி குதூகலித்தார்.

உள்ளே வசந்தியை யாரோ கிண்டல் பண்ணுவது ஸ்படிகமாக காதிலே விழுந்தது.

“ ….அப்போ ஒனக்கு வூட்டுவேலை மாத்ரந்தானிருக்கும்…. கொடுத்து வைச்சவடி நீ….”

எனக்குள் நான் நெளிந்துகொண்டிருப்பதைப் புரிவார் எவருமிலர்.

பிறகு தினமும் இதேபேச்சை எடுத்து என்னை வற்புறுத்தத்தொடங்கி விட்டார்.

ஏதோ நல்லகாலம்…. “ நம்ம கேஸ் கண்டியில் மஜிஸ்திரேட்கோர்ட்டில் இருக்கிறது, எப்பிடியும் இரண்டு மாதத்தில் டிவோர்ஸ் கிடைத்துவிடும் ” என்கிற விஷயத்தை முதலிலேயே உளறி இருந்திருப்பேனாயின் நான் அங்கிருந்து மீண்டு வந்திருக்கவேமுடியாது.

பெரியம்மா எங்கள் அரட்டை அரங்கப்பக்கமாய் வரும் போதெல்லாம் பொத்தாம் பொதுவில் கேட்பா: “….அடி யென்னாங்கடி சொல்லுறாக மவ…. ? என்னமும் யோசிக்கிறாகளாமா… ? ”

மறு நாள் காலை எழுந்து உட்கார்ந்திருக்கிறேன். நேரே என்னிடம் வசந்தி வாறாள்.

“ எதுக்கு மாமா அம்மாந்தூரத்ல போயி இருக்கீங்க…. ? ”

அவள் மந்திரக்குரலில் ‘மாமா ‘ என்றதும் என்னுள் பன்னீர்த்திவலைகள் தூவப்பட மனசு சற்றே ஆடித்தான் போகிறது.

“ ஏதோ அப்பா உத்தியோகம்னு போனாரா…. நாங்களும் அங்கேயே பொறந்திட்டோம்…. ”

“ சரி….சரி எந்திருங்க….எந்திருங்க….குளிக்க வெந்நீர் போட்டிட்டேன்…. ஆறிடப்போவுது…. நானே தண்ணியை மொண்டு ஊத்தவா.. ? ”

இது வெறும் வெகுளித்தனத்தாலா….இல்லை யாரும் சொல்லிக்கொடுத்தாங்களா….

புரியவில்லை.

“ ஐயையைய்ய…. வேண்டாந்தாயீ…. யாரும் என் பக்கத்திலே நின்னாலே என்னால குளிக்கமுடியாதும்மா…. வெந்நீர் போட்டதுக்கு ரொம்பவும் நன்றி …. நானே குளிச்சுக்கறேன்…. ”

குளித்து முடிந்ததும் அவள் என்னருகே இன்னொருமுறை வர நேர்ந்த போது கேட்டேன்:

“ வசந்தி ஒனக்கு இப்போ எத்தனை வயசு…. ? ”

“ இருவத்திமூணு….”

“ எனக்கு…. நாற்பத்துமூணு தெரியுமோ…. பழைய ஆளுங்கதான் விபரமில்லாம பேசறாங்கன்னா….பெண்ணியம் பெண்விடுதலை பத்திப்பேசற நானே இதுபோல முட்டாள்த்தனம் எல்லாம் பண்ணலாமா… ? ”

“ ஒங்களை ஆரம்பத்திலயும் புரியல மாமா…. இப்ப புறப்படறப்பவும் புரியலை….எப்படான்னாலும் நீங்க படிச்சவங்க…. சரியாய்த்தானே செய்வீங்க…”

பின்பெல்லாம் வசந்தியின் கண்களை நேர்கொண்டு பார்ப்பதைத் தவிர்த்தேன்.

ஊர் வந்ததும் முதற்காரியமாய் ஆங்காங்கே தலையில் வெள்ளியாய் நீட்டிக்கொண்டு நின்றவற்றை கறுப்பாக்குவதற்கு வாங்கிய முழுச் சாயசாதனங்களையும் குப்பையில் சேர்த்தேன்.

மனம் மெல்ல மெல்ல இலேசாகத் தொடங்கியது.

– இனியும் சூல் கொள் –

23 வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு மலர். செப்டம்பர்.1997.

30. 03. 1997 பெர்லின். ….

karunaharamoorthy@yahoo.ie

Series Navigation

பொ கருணாகர மூர்த்தி

பொ கருணாகர மூர்த்தி