அகதி மண்

This entry is part [part not set] of 26 in the series 20020421_Issue

சுப்பையா


சுளீரென விழுந்து உடம்பில் வேதனை உண்டாக்கும் மாயச் சாட்டை வீச்சுக்கு வேகமெடுத்து ஓடுவது போலத்தான் வேலைநாட்களின் வழமைகள். அலாம் அடிக்க உறக்கம் கலைந்து, படுக்கையிலிருந்து உடம்பை உரித்ததும் மனசு நிமிடங்களை எண்ணத் தொடங்கிவிடும். பஸ் வரும் நேரம். வேலை துவங்கும் நேரம். சாப்பாட்டு நேரம். படுக்கும் நேரம். மறுநாள் அலாம் சத்தம். இப்படியே இதுவொரு நேரத்தைத் துரத்தி ஓடும் வாழ்க்கையாகிப் போய்விட்டது. ஆனால் இதற்கெல்லாம் இடைவேளைபோல வரும், வந்து சடுதியில் மறைந்து போகும். வார இறுதி நாட்கள்.

இன்று சனிக்கிழமை. லீவுநாள். இருந்தும் வழமையாக அலாம் தட்டி எழுப்பும் நேரத்திற்கு மூளை விழித்து உறக்கம் கலைந்து விட்டது. லீவுநாட்களில் செய்து முடிக்கவென ஒதுக்கியிருக்கும் அலுவல்களின் பட்டியலில் எதை முதலில் ஆரம்பிப்பது எவற்றையெல்லாம் அடுத்த சனிக்கிழமைக்கு தள்ளிப் போடுவது என படுக்கையிலிருந்தபடியே யோசித்தான் சேகர்.

சீட்டுக்காரனின் முகம்தான் எல்லாவற்றையும் தள்ளிக் கொண்டு முன்னுக்கு வந்தது. போன கிழமையே கொடுக்க வேண்டிய கட்டுக்காசு. கொடுக்க முடியவில்லை. மாதத் தொடக்கத்தின் சுமை பாறாங்கல்லாய் தலையை அழுத்தும்போது ரெலிபோன் அடிக்கும் சத்தத்தையே அலட்சியப் படுத்த வேண்டியதாகிவிடும். அப்படி தற்காலிக செவிடாயிருந்ததில் வீட்டு வாடகை கொடுக்க முடிந்தது. பிந்திப்போகும் ஒவ்வொரு கட்டுக்காசுக்கும் வட்டி கறக்கும் கில்லாடி அந்த சீட்டுக்காரர். ஏனோ இன்னும் இவனிடம் அந்த தந்திரத்தை பிரயோகிக்க முடியாத சிக்கலில் இருந்தார்.

சீட்டுக்காரரை எதிர்கொள்வதற்கு பொருத்தமான இரண்டொரு பொய்களை எடுத்து ஒத்திகை பார்த்தான். நாங்கள் என்ன அரிச்சந்திரன் காலத்திலா வாழ்கிறோம்.. ? இடம் பொருள், தெரிந்து பொய் சொல்லாமல் அந்த மன்னன் பட்டபாடு இருக்கிறதே. நாய்படாப்பாடு. இந்த பூமியில் தடுக்கி விழுந்த இடமெல்லாம் பொய்களும் உதிரிமுகங்களும் தானே விரவிக் கிடக்கிறது. அதில் நம்பக்கூடியதொன்றை எடுத்து அணிந்து கொண்டான்.

லீவுநாட்களில் அவன் கோப்பிக்கு மனைவியை எதிர்பார்க்கமுடியாது. வேலைநாட்களின் ஓட்டங்களில் அவளதுதான் நீளமும் வேகமும் கூடியது. சேகரைவிட இருபது நிமிடங்கள் முன்னர் எழும்பி சுடுதண்ணிக்கு கேட்டிலை ஃபிளக்கில் செருகிவிட்டு முகம் கழுவச் செல்வாள். முகம் துடைத்த துவாய் கழுத்தில் மாலைபோலக் கிடக்க கோப்பி தயாராகும். பாண்துண்டுகளை ரோஸ்ரரில் நுழைத்துவிட்டு உடுப்புப் போடவோ, தலையிழுக்கவோ அறைக்குத் திரும்புவாள். அங்கு ரோஸ்ரர் தயாரான சத்தம் கேட்டதும் சீப்பைப் போட்டுவிட்டு சமையலறைக்குள் ஓடுவாள்.

இன்று அந்தப் பாய்ச்சல்கள் ஏதுமின்றி கை கால்களை மூலைக்கொன்றாய் கழற்றியெறிந்து விட்டு உறங்கிக் கொண்டிருந்தது ஐீவன். தட்டியெழுப்புவது மிருகத்தனம். வெளியில் எங்காவது கோப்பி குடித்தால் போயிற்று என எண்ணிக்கொண்டு எந்த அவசரமுமற்ற நடத்தலில் இளங்காலையை எதிர்கொள்ள தெருவிற்கு இறங்கினான்.

*********

ஓங்கி உயர்ந்து வரிசை கட்டியிருக்கும் கட்டிடங்களை நிமிர்ந்து பார்க்கும்போது சேகருக்கு கையில் பிரம்புடன் நிற்கும் வாத்தியாரைப் பார்த்தமாதிரி மனதில் இறுக்கம் வந்தது. எனினும் அமைதி கொண்ட வீதி பிடித்தது. இப்போதைய இவனைப் போலவே அது முதுகில் அதிக பாரமற்று நீளக்கிடந்தது. குளிர்நீரால் முகத்தில் தடவியது போல இளங்காற்று அவனைக் கடந்து செல்ல, சந்தோசம் நெஞ்சிலிருந்து முகிழ்ந்து கிளம்பி மூக்கு நுனியில் நின்றது. வீதியின் எதிரே ஒரு கிழவி தன் நாயுடன் கதைத்துக் கொண்டு வந்தாள். அவளது குரலில் கண்டிப்பு தொனித்தது. பெரும்பாலும் காலைக்கடன் கழிப்பது தொடர்பான பிரச்சனையாகத்தான் இருக்க வேண்டும். கிழவியின் சொல்லுக்கு ஆமோதிப்பது போல தலையைக் குனிந்து கொண்டு வந்தது நாய். வீதியில் திடாரென இவனைக்கண்டதும் அதற்குப் பிடிக்கவில்லை. தன் தவறுகளை மூன்றாம் நபரான இவன்…! அதுவும் அற்பப்பயல் கேட்பதாவது எரிச்சலுடன் உறுமியது.

சேகரைப்பார்த்து கிழவி “காலைவணக்கம்” என்றாள்.

இவனுக்கோ சங்கடமான நிலை. கிழவிக்கு பதில் சொல்வதா நாயின் விருப்பமின்மையால் வரும் விளைவைச் சமாளிப்பதா என்ற சிக்கல்.

“கவலைப்படாதே அவளால் பாதகமில்லை. நல்லவள்” என்றாள் கிழவி.

சந்தர்ப்பம் கிடைக்காதவரை இந்தப் பூமியில் யார்தான் நல்லவரில்லை.. ? என நினைத்துக் கொண்டு மேலே நடந்தான்.

*************

ஆறுமாதமாக சோம்பிக்கிடந்த சூரியக்குதிரை வானத்திடலுக்கு இன்னமும் மேய்ச்சலுக்கு வரவில்லை. அது கட்டிடங்களுக்கு பின்னே பதுங்கிக் கிடந்தது. வீதியின் தோள்களில் வயோதிகர்களே முளைத்திருந்தனர். ஆரோக்கியத்திற்காக அதிகாலை நடையும், தனிமையைப் போக்க ஆதரவாகிய நாய்களுமாக நடந்தனர். அவர்களுக்கான தரிப்பிடம் வந்து சேரும்வரை கடைசிச் சொட்டுக்காற்றையும் அநுபவித்து விடவேண்டுமென அலைந்தனரோ தெரியவில்லை. ஆனாலும் இவர்கள் வாழத்தெரிந்தவர்கள். வாழ்வையும் ஒரு கணக்குப் போல கூட்டிக் கழித்து சமன் செய்து விடுவார்கள்.

சேகர் இந்த மண்ணில் காலுான்றி எட்டு வருஷங்கள் வெப்பத்தில் வைத்த ஜஸ்கட்டி போல கரைந்து போயிற்று. வரவேற்பறையில் வளர்க்கும் தொட்டிப்பூங்கன்று மாதிரி ஸ்திரமற்ற வாழ்வு. இருப்பும் இல்லாமையும் மாறி மாறி முந்திக்கொண்டு ஓடும் அஞ்சல் ஓட்டம். ஏனோ இன்னும் இவனால் இதில் ஒட்டிக் கொள்ளமுடியவில்லை. வெளிக்காற்று நுழையாத வீட்டுச் சதுரத்துள் வேலைக் களைப்புடன் வந்தடையும் ஒவ்வொரு இரவும் மனது கிளம்பி சொந்த மண்ணுக்கு பறந்து விடுகிறது. வெண்மணல் உடுத்த கற்கோவளக்கடலுக்கும் அதன் முன்னே விரிந்த சவுக்கம்தோப்பில் புதைத்துவிட்டு வந்த இளமைக்காலத்திற்கும் நெஞ்சு ஏங்கித்தவிக்கும்.

**************

சோளகக்காற்று அடிக்கத் துவங்க கோடைகாலப் பள்ளி விடுமுறையும் வரும் சேகரும் தகப்பனுடன் கடலுக்குப் போவான். தோளில் வீச்சுவலை காவிக் கொண்டு தகப்பன் முன்னே நடக்க, கையில் பறியுடன் இவன் பின்னே செல்வான். ஊர்மனையிலிருந்து அரைமைல் துாரம் தென்னந்தோப்பையும் சவுக்கம்தோப்பையும் கடந்து நடக்க கடல் தெரியும். கடலுக்கும் தோப்புக்கும் இடையே பச்சைச்சேலை காயப்போட்டது போல புல்வெளி பிரிக்கும்..

சவுக்கந்தோப்பின் வடக்கு மூலையில் தன்னந்தனியே ஒரு ஜயனார் கோயிலும் அதற்கு நிழல் தரும் பெரிய அரசமரமும். அந்த மரத்து நிழலில் எப்போதுமே ஜயனார்சாமிக்கு காவலாக இரண்டொரு நாய்கள் படுத்திருக்கும்.

கோயில் அண்மித்து அதைக்கடந்து போகும்வரை காலை எட்டப்போட்டு தகப்பனுடன் சேர்ந்து நடந்து பயத்தைப்போக்க கதைத்துக் கொண்டே போவான்.

“ஜயா… ஏன் இந்த நாயள் எப்ப பாத்தாலும் கோயில்லையே கிடக்குதுகள்.. ?”

“அது.. நடூ மத்தியானம் ஜயனார்சாமி வேட்டைக்குப் போகும். அவரோடை போய் நாயளும் வேட்டை பிடிக்கும். ‘

கடற்கரைக்கு போய்ச் சேரும்வரை அந்தக்காவல் தெய்வத்தின் மகிமையைப் பற்றியும் அதன் கோபத்தைப் பற்றியும் சொல்லிக்கொண்டு வருவார். சாமப் பொழுதில் காடேரி பிடித்து காட்டுக்குள் வழிதவறி அலைந்து திரிந்த கிட்ணரை ஜயனார்சாமி காப்பாற்றி வீடு சேர்த்ததும். அதே ஜயனார் பூசை வைக்காமல் ஏமாற்றிய கணேசய்யரை சூலத்தால் குத்தி காவு கொண்டதும் இப்படி உண்மையும் கற்பனையும் கலந்த எத்தனை கதைகள்.

கொக்கின் பொறுமையுடன் அலைக்கரையில் கடலைப் பார்த்தபடி நிற்பதும் புட்களும் காவாய்களும் நீரில் சரிந்து விழுந்து மீன் கவ்விப்பறக்க திடாரென அந்த இடத்தை நோக்கி வலையை வீசுவதுமாக தகப்பன் மீன் பிடிக்கத் தொடங்க, சேகர் அடம்பன் கொடிச்சிறையிலிருந்து தப்பி கடலுக்கு தற்கொலை செய்ய ஓடும் இராவணன்மீசையை கலைத்துக் கொண்டு திரிவான்.

வீச்சுவலையில் பெரும்பாலும் மணலை சூடை போன்ற மீன்கள்தான் பிடிபடும். சிலநேரம் அதிர்ஸ்டவசமாக வாலான்மீன் சிக்கும். அப்படி வாலான்மீன் அகப்பட்டால் நீருக்குள் நின்றபடியே “தம்பீ” என்று தகப்பன் குரல் கொடுப்பார். ஏறுவெயிலின் ஒளி கருமையான தாடியில் விழுந்து பிரகாசிக்கும் அவரது குதுாகலங்கொண்ட முகத்தைப் பார்த்ததும் சேகருக்குப் புரிந்துவிடும் இன்று ஒரு கலாதியான இரவு என்று.

சூரியன் சாய்ந்ததும் குளிக்கப் போவதற்கு முன்னர் அம்மாவிடம் சொல்லுவார். “பாக்கியம்… கிழங்கு அவிச்சு சம்பலும் போட்டு வையணை..!” குளிப்பு முடிந்து திரும்பும்போது கையுடன் கள்ளுப்போத்தலும் வரும். மாமரத்தின் கீழே வீச்சுவலையின் பொத்தல் விழுந்த பகுதிகளை தைத்துக் கொண்டே கள்ளையும் மரவள்ளிக்கிழங்கையும் ருசி பார்ப்பார். சற்றைக்கெல்லாம் கள்ளு தன் வேலையைத் தொடங்க கரகரத்த குரலில்பாட்டுப் பிறக்கும். அரிச்சந்திர மகாராஐன் கடமை தவறாது மயானம் காப்பான். திடாரென அதையெல்லாம் மறந்து வயல்வெளிகளுக்குள் வள்ளியைத்தேடி முருகன் காதலிசைப்பான். இடையில் உச்சஸ்தாயியில் சில அம்பாப் பாடல்கள் வரும். பொறுக்க முடியாமல் அம்மா வந்து “சரி.. சரி காணும் எழும்பிச் சாப்பிடுங்கோ..!” என்று சொல்லும் வரைக்கும் கச்சேரி நீளும்.

அன்று சேகரும் தகப்பனும் இன்னும் பல தகப்பன்மாரும் பிள்ளைகளும் பதித்துச் சென்ற பாதச்சுவடுகளை காற்றும் அலையும் அழித்துச் சென்றது. பின்னர் ஒரு பிஞ்சுக் காலடியும் படாத வெண்மணல் விரிந்து கிடக்க இன்றும் கடலன்னை தன் நேசம் மிக்கோருக்காக ஏங்கி அலைக்கிறாள். நினைவுகள் இனிமையும் துயரமும் சேர்ந்தவைதான். ஆனால் சேகரால் நினைவுகளை மேலும் தொடரமுடியாதபடி சீட்டுக்காரரின் வீடு வந்து விட்டது.

அப்பாற்மெண்டின் வெளிக்கதவு திறப்பதற்காக அழைப்புமணியை அமுக்கினான். சில நிமிடங்களின் பின்னர் கதவு திந்தது. சீட்டுக்காரர் வசிப்பது மூன்றாவது தளத்தில். லிப்ட் இல்லை. படிகளில் ஏறினான். நித்திரை கொள்ளாது முரண்டு பிடிக்கும் குறும்புச் சிறுவனை அழுத்திப் படுக்க வைக்கும் தாயைப்போல கறி, பொரியல், தாழிப்பு போன்ற இத்தியாதி மணங்களையெல்லாம் புதைத்துக் கொண்டு மேலிலிருந்து சாம்பிராணி வாசம் வீசியது. அத்துடன் ஒரு தளர்ந்த குரலில் தேவார ஒலியும் இறங்கி வந்தது.

“மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிணல் வேனிலும் . ‘

இச்சையின்றிய செயலாக சேகரின் சப்பாத்துச் சத்தம் மெல்லக் குறைந்து போய், நெஞ்சம் தேவாரத்தில் இணைந்து கொண்டது. சீட்டுக்காரரின் பக்கத்து வீட்டில்தான் யாரோ தேவாரம் பாடினார்கள். அந்த வீட்டை மெல்லக் கடந்து போய், சீட்டுக்காரரின் வீட்டுக் கதவைத் தட்டினான். நித்திரைக் குழப்பமும், எரிச்சலும் மண்டிய முகத்துடன் கதவு திறந்த மனிதர் வாசலில் சேகரைக் கண்டதும் உடனே முகத்தில் சிரிப்பைச் செருகினார். காலங்காத்தால வந்திருப்பது லட்சுமியல்லவா..! “வாங்கோ… வாங்கோ, என்றார்.

சப்பாத்து லேசைக் கழட்டுவதற்கு சேகர் குனிந்த போது இதுவரை பக்கத்து வீட்டிலிருந்து கேட்ட தேவாரம் நின்று

“எந்தக் கழிசடை படலையைத் திறந்து விட்டது ஆற்றையோ ஆடு வந்து என்ர தென்னம்பிள்ளையைக் கடிச்சுப் போட்டுது.” என்ற சத்தம் வந்தது.

மூன்றாவது தளத்தில் இருக்கும் அப்பார்ட்மெண்டில் ஆடும் தென்னம்பிள்ளையுமா.. ? மனத்தில் தடுமாறிய சேகரின் முகத்தைக் கவனித்த சீட்டுக்காரர் அட்காசமான சிரிப்புடன் சொன்னார்.

“கிழவனுக்கு தட்டிப் போட்டுது. நானெண்டபடியால விட்டிட்டு இருக்கிறன். அந்தாளின்ர மகனும் என்னோட சீட்டுப்பிடிக்கிறவர். இல்லாட்டி பொலிசுக்கு அடிச்சு கிழவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருப்பன். ‘

“சேகர் மாமா” என்று கத்தியபடி ஓடிவந்து காலைக் கட்டிப்பிடித்தது சீட்டுக்காரரின் குழந்தை. அதை அள்ளி அணைத்து துாக்கினான். குழந்தைகளுக்கேயுரிய வியப்பும் ஆவலும் சேர்த்து அது கேள்விகளைப் போடத் துவங்கியது. ஏனோ சேகரின் மனசு குழந்தையிடம் சேரவில்லை. பக்கத்து வீட்டுக் கிழவரையும் அவரது தென்னம் பிள்ளையையுமே சுற்றிச்சுற்றி வந்தது.

“ஏன் என்ன நடந்தது கிழவனுக்கு.. ?”

“கிழவியும் கிழவனும் இரண்டு மாசம் முன்ன ஸ்பொன்சரிலை வந்தவை. வெல்ஃபெயர்(Welfare) எடுக்கிறதுக்காக மகன் தனிய வீடெடுத்துக் குடுத்தவர். இடையிலை மகளின்ரை பிள்ளைப்பேறு பாக்க கிழவி வன்கூவருக்கு போட்டுது. தனிய ரண்டு நாள் இருந்த கிழவன் ஏதோ குணம் மாறி ஊருக்குப் போறெனெண்டு உந்த ஐீன்தலோன் பஸ்சிலை ஏறியிருக்கு. பஸ்காரன் அம்புலன்சிலை ஏத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிப் போட்டான்.

பிறகு மகன் போய்க் கூட்டி வந்து விட்டுட்டுப் போனவர். அது ஒரே கூத்து.”

நகைச்சுவையான விஷயம் மாதிரி இதைச்சொன்ன சீட்டுக்காரரின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் போல சேகருக்கு ஆத்திரம் வந்தது. நின்ற நிலையிலேயே கட்டுக்காசைக் கொடுத்தான். “கோப்பி குடித்து விட்டுப் போங்கோ” என்ற அவரது உபசரிப்பையும் நிராகரித்து விட்டு வெளியே வந்தான்.

கிழவரின் வீடு திறந்துதான் கிடந்தது. அதைக் கடக்கும் போது திரும்பிப் பார்த்தான். முழங்காலளவுக்கு நாலுமுழம் கட்டிய கறுத்து மெலிந்த ஒரு உருவம் தன் கையிலிருந்த கேட்டில் தண்ணியை வரவேற்பறையில் போட்டிருந்த செற்றியின் மீது மிகப் பதனமாக ஊற்றிக் கொண்டிருந்தது. என்றுமே வற்றாத நிலாவரைக் கிணற்றில் தண்ணீர் இறைத்து கிழவர் தன் பிரியமான கத்தரிச்செடிகளுக்கு நீர் வார்த்துக் கொண்டிருக்கிறார்.

“மூசு வண்டறை பொய்கையும் போன்றதே” இனிமேல் எந்தச் சுண்ணாம்புக் காழவாயும் கிழவரைக் காயப்படுத்த முடியாத நிலைக்கு அவர் உறைந்து போய் விட்டார் என எண்ணிக் கொண்டு வீதிக்கு வந்த சேகருக்கு சூரிய ஒளிபட்டு கண்கள் கூசியது.

Series Navigation

சுப்பையா

சுப்பையா