“மங்கலான கதைச் சொல்லல்கள்” (எம்.ஜி . சுரேஷின் “37”)

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

எச். முஜீப் ரஹ்மான்


மிகாயில் பக்தின் 1923-ம் ஆண்டு “தஸ்தவேவ்ஸ்கேயின் படைப்புப் பிரச்சினைகள்“ என்ற நூலில் நாவல் இலக்கியம் பற்றி விரிவாக விவாதித்துள்ளார். அதில் அவர் சொன்ன மிக முக்கிய விஷயமே பன்னொலிமப் பண்பு ஆகும். நாட்டார் உரையாடல் வகைமைகளே நாவல் என்ற ஒன்றின் தோற்றத்திற்கான அடித்தளமாக அமைகிறது என்று சொன்னதோடல்லாமல் ஒருரின் மொழியை இன்னொருவர் பிரதிநிதித்துவப் படுத்தல், ஒருரின் கருத்தை இன்னொருவர் விமர்சித்தல், ஒருரின் நடையுடை பாவனைகளை இன்னொருவர் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்குதல் என்கிறார் பக்தீன். ஒருவர் குறிப்பிட்ட ஒரு வாக்கியத்தை உச்சரித்தல் என்பது அவரது நேரடி மொழி, உடனடி மொழி ஆயின் இன்னொருவர் முந்தியவரின் வாக்கியத்தை எடுத்தாளும்போது அந்த வாக்கிய நிகழ்வு இருவரின் உரையாடல் என்ற புதிய குணாம்சத்தை பெற்று விடுகிறது. இந்த உரையாடல் என்ற பண்பு நாவலுக்கும், நாட்டார் வழக்காறுகளுக்கும், பேச்சு மொழிக்கும் பொதுவானது என்கிறார் பக்தீன். இந்த உரையாடல் பண்பே பன்னொலிமப் பண்பாகிறது என்றார். பண்டைய கிரேக்க இலக்கியத்தில் கேளிக்கை, கிண்டல், கேலி முதலியவை புனிதத்திற்குரிய விஷயங்களை, நபர்களை, நூலாசிரியர்களை அவர்களது வார்த்தைகளை நடையுடை பாவனைகளை கேலி செய்தது. ஒழுக்கத்தின் போலித் தனத்தை பரிகாசம் செய்யும் பகடி இலக்கிய வகைமையாக இருந்தது. ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட ஒரு இலக்கிய படைப்பின் கொள்கைகளையும் நடையும் எடுத்தாண்டு முந்தியதை கேலி செய்வது அதன் பொது பண்பாக இருந்தது. இன்று பின் நவீனத்துவம் சொல்லும் பகடி இலக்கியம் என்பதன் மூலப்படிவம் கிரேக்கத்திலிருந்து தான் தொட்குகிறது.

ஒன்றை கேலி செய்வது என்பது மட்டுமே இதன் பொருள் அல்ல. மாறாக, குறிப்பிட்ட ஒரு வட்டாரத்தில் ஒலிக்கும் ஒன்றைக் குரலை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அந்த குரலின் மாற்றுத் தொனிகளை சுட்டுக் காட்டுவது தான் பன்னொமிய பண்பு ஆகும். ஒரே வித சித்தரிப்புடன் நிறுத்தி விடாமல், குறிப்பிட்ட ஒரு படிமத்தை வேறு வேறு திசைகளிலிருந்து உருட்டியும் புரட்டியும் புதிய தொனிகளை எடுத்துக் காட்டுவதாகும் இது. குறிப்பிட்ட ஒரு சூழலில் ஒரு பாத்திரத்தின் செயல்பாட்டை சித்தரிப்பதோடு நிறுத்தி விடாமல் வேறு வேறு சூழல்களுடன் பொருதச் செய்து அப்பாத்திரத்தின் எதிர் வினைகளை புரிய வைப்பது இது. வெறுமனே இது இப்படித்தான் என்ற ஒரு நிரந்தர அர்த்தத்தை, மொழி அர்த்தத்தை ஏற்படுத்தாமல் சூழல்கள் மாறும் போது அர்த்தங்கள் மாறுவதை சுட்டுவது பன்னொலிம பண்பு ஆகும்.

இந்த பக்தினின் பன்னொலிமபண்பு குறித்த முன்னுரையுடன் எம்.ஜி.. சுரேஷின் ‘37’-ல் புகுவது எளிதாகி விடுகிறது. நவீனத்துவ கதையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள இந்த உத்தி தமிழில் அரிதாகவே காணப்படுகிறது. அந்த வகையில் அந்த குறையை ‘37’ நிவர்த்தி செய்துவிட்டது. காவும், நரேந்திரனும் தொடரும் உரையாடல்களினூடே கதைப்பாத்திரங்களும், பெளதீக வடிவங்களும் பல்குரல் நாவலாக மாற்றி இருக்கின்றன. பல்குரல் என்பதும் அறிவியல் புனைக்கதை என்பதும் நவீனத்துவம் வரையில் கையாளப்பட்ட விஷயங்கள் தான். அப்படியானால் ‘37’ ஒரு பின்நவினத்துவ நாவலாகுமா ? என்று கேள்வி குறியை போட்டால் ‘மெட்டாபிக்ஷனை’ பற்றி பேச வேண்டும். ஆனால் மெட்டாபிக்ஷனும் கூட நவீனத்துவ வகையை சார்ந்தது தான். இங்கே தான் ஸ்பை புனைக்கதை என்ற ஒன்றை பார்க்க வேண்டியிருக்கிறது. சூப்பர் மாடனிசத்தின் அதீத கூறுகளை எடுத்துக்கொண்டு தான் போஸ்ட் மாடன் பிக்ஷன் உருவாகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

தமிழில் மெட்டாபிக்ஷனை புனைக்கதை மறுக்கும் புனைக்கதை என்று சொல்லலாம். புனைக்கதை என்பது எதார்த்த கதையாகவோ, அறிவியல் கதையாகவோ, ஜாலக் கதையாகவோ தான் இருக்கும் என்ற ஒற்றை நிலைப்பாட்டை மறுத்து வெளிவரும் புனைக்கதையை மெட்டாபிக்ஷன் எனலாம், பூமணியின் கதையை போலவோ, சுஜாதாவின் கதையைப் போலவோ, சாண்டில்யனின் கதையைப் போலவோ, கெளதம நிலாம்பரனின் கதையைப் போலவோ இல்லாமல் அதாவது ஒற்றை நிலைப்பாட்டை எடுக்காமல் ரமேஷ் பிரேமின் கதையை போன்று, பா.வெங்கடேஷனின் கதையை போன்று அமைந்தால் அதுவே மெட்டாபிக்ஷன் ஆகும்.

இரண்டாவதாக மெட்டாபிக்ஷனின் குணம் என்பது கதைகளை தனித்தனியே பிரித்து பார்க்கும் பார்வையை கேலி செய்வதாகும். அதாவது இது சரித்திர நாவல் இது துப்பறியும் நாவல் என்பது போல.

அடுத்ததாக கதைகளை பிரிவினைகளாக மாத்திரம் பார்த்து இவற்றிற்கிடையில் எவ்வித சம்பந்தமோ, சார்போ இருப்பதில்லை என்றும் கதைகள் தன்னந்தனியானவை, சாஸ்வதமானவை, அவற்றை கடக்க முடியாது நிலையை மாற்றி எழுதுவது தான் மெட்டாபிக்ஷன் எனப்படும்.

நான்காவதாக புனைக் கதைகள் ஒன்றுக்கொன்று வேறுபாடானவை மாத்திரமல்ல ஒன்றுக்கொன்று எதிரானவை என்ற நிலைப்பாடு கடந்த கதைகளை மெட்டாபிக்ஷன் எனலாம்.

எதார்த்தம் எதார்த்தம் தான், விஞ்ஞான கதை விஞ்ஞான கதை தான் என்று வகைப்படுத்துவதுடன் நில்லாது அவை ஒன்றுக்கொன்று மாறுபாடாகிறது. முரண்பாடானவை என்று சொல்லும் ஒற்றை நிலையை மறுக்கும் புனைகதையே மெட்டாபிக்ஷன் ஆகும். அப்படி பார்க்கும் போது எதார்த்தமான கதையில் விஞ்ஞான கதையும், மந்திர கதையும், வரலாற்றுக் கதையும், திகில் கதையும், துப்பறியும் கதையும், மர்ம கதையும் ஒன்றுடன் ஒன்று கலந்து இருக்கும் கதைவகையே மெட்டாபிக்ஷன் எனலாம். அதுபோல ஒரு நிகழ்ச்சி அல்லது சம்பவம் கதையாக பன்முக நிலையில் பலவிவரங்களை சொல்லுவதாக நிகழ்வு வேறு, விஷயம் வேறு, உண்மை வேறு, புனைவு வேறு என்ற வேறுபாடுகளை கடந்து சொல்லுவதை மெட்டா பிக்ஷன் எனலாம்.

அந்த வகையில் ‘அறிவியல் புனைகதை’ என்று ஒற்றை நிலைபாடை அடையாளப்படுத்தும் ‘37’ எப்படி பின் நவீனத்துக்குரியது ஆகிறது ? என்று பார்த்தால் மெட்டாபிக்ஷன் கூறுகளையும் பான் பிக்சன்,இன்னவேற்றிவ் பிக்சன் போன்றவற்றின் கூறுகளையும் கொண்ட ‘போஸ்ட் மாடர்ன் பிக்சன் தான் ‘37’ ஆகும்.

ஜான் பார்த் சொல்லுவது போல முன்னுதாரணமான பின் நவீனத்துவ நாவல் எதார்த்தம், அதீத கற்பனை, உருவம், உள்ளடக்கம், தூயது, அரசியல் சார்பானது,உயர் இலக்கியம், வெகுஜன இலக்கியம், கழிசடை இலக்கியம் என்ற சச்சரவுகளை ஏதோ ஒரு வழியில் மீறி செல்வதாக இருக்கும். அந்த வகையில் டி.டி.சேட்என்பவர் ‘இன்னவேற்றிவ் பிக்சன்’ என்ற ஒன்றைப்பற்றி கூறுவதை பார்ப்போம். ?ார்ல் எலிசன் என்பவர் பின்நவீன புனைகதைகளை வகைப்படுத்தும் பட்டியலை அலசுவோம்.

1. Alternative History – மாற்று வரலாறு.

2. Apocalypse or Holocaust – வெளிப்பாடு , பேரழிவு.

3. Coming of Age – காலத்தின் வருகை.

4. Contemporary Fantasy – தற்கால கனவுனிலை மயக்கம்.

5. Cyber punk – கம்பியூட்டர் விளையாட்டு.

6. Dark Fantasy or Horror – திகில்.

7. First Content – முதல் தொடர்பு.

8. Traditional Fantasy – மரபுவழி கனவுநிலை மயக்கம்.

9. Space obera – வெளி உலா.

10. Military Science – இராணுவ விஞ்ஞானம்.

எனவே பின்நவீன புனைக்கதைகள் எனும் போது வகை, உப வகை, மாற்று வகை என்னும் வகைப்பாடுகளுடன் வடிவம், சமகால வடிவம், மாற்று வடிவம் என்னும் உத்திகள் வரலாறு பேரழிவு, இயந்திர மனிதன் என்று மாறிக் கொண்டிருக்கிறது. நடை என்பது புராதன, மரபுசார்ந்த, விஞ்ஞான புனைவு சார்ந்த கற்பித நடைகளையும் லீனியர், நான்லீனியர், மல்டிலீனியர் என்னும் பரிணாமம் கொண்டிருக்கும். இக்கதைகளின் சாராம்சங்களை கூறும்போது,

1. எல்லா கதைகளும் எதிர்காலத்தை கட்டமைக்கிறது. ஏனெனில் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கிறது. அல்லது காலத்தை குலைத்து போடும் அம்சமும், மறுதலிக்கும் அம்சமும் இருக்கிறது.

2. மாற்று உலக கதைகளை கூட்டமைக்கும் இக்கதைகள் வரலாறையும், தொல்பொருள் உண்மைகளையும் முரண்படுத்துகிறது.

3. எல்லா கதைகளும் மற்ற உலகங்களை, மற்றவைகளைப் பற்றி அதிகம் அக்கரைப்படுகிறது. எதிர்கால மனிதன் , இயந்திரன் , அயல்கிரவாசி, தொல்பழங் மனிதன் ஆகியவற்றை முன்னிறுத்துகிறது.

4. பூமியை சார்ந்த கதைகள் மனித அறிவுகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்களுடன் தொடர்பு கொண்டதாக சார்பியல், கட்டமைப்பு உண்மைகளுக்கு மாறாக புராதன மனிதன் சஞ்சாரம் செய்வதையும் அயல்கிரகவாசி புராதன மனிதனை எதிர்கொள்வதுமான தளங்கள் சித்தரிக்கப்படுகிறது.

5. விஞ்ஞானம் புராதன காலத்திலும், புராதன மனிதன் வின்வெளியிலும், இன்றைய மனிதன் காலங்களை கடப்பதுமான விஷயங்கள் அதிகம் சொல்கிறது.

மேற்சொன்ன சாராம்சங்களை ஓரளவேனும் தகவமைத்துக் கொண்ட தன்மை ‘37’-ல் இருப்பது ஆச்சாpயமூட்டுகிறது. ஆனிமேக் காபிரி- யின் The Dragan Riders of Pern என்ற நாவலில் வரும் ‘பேர்ண்’ என்ற கற்பனை கிரகத்துக்கும் 37-ல் வரும் ஆண்ட்ரமைடா காலக்ஸியின் மா என்னும் பூமி கிரகமும் ரா என்னும் சூரியனும் போன்ற விஷயங்களுக்கும் வேறுபாடுகள் இல்லை. புகழ் பெற்ற பின்நவீன புனைக்கதை நாவல்களான Z for Zechariah by Rabert C.O’Brien, Swang Song ,; Margaret Atwood’s The Handmaid’s Tale, J.R.R. Tolkein’s The Hobbit, Stephen R. Donalson’s Thomas Covenant the Unbeliever போன்றவை திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கிறது.பின்நவீன புனைக்கதைகளில் வரும் விஞ்ஞானம் பிரக்ஞாபூர்வமான புனைவை கொண்டது. நவீன விஞ்ஞான கோட்பாடுகள் புனைவுகளாக மாற்றுப்பட்டு ‘புனைவு விஞ்ஞானம்’ வழி விஞ்ஞான புனைக்கதை உருக்கொள்ளுகின்றன. எனவே தான் இவ்வகை புனைக்கதைகளை Literary laboratory works என்கிறார்கள்.

எம்.ஜp. சுரேஷின் ‘37’ நாவல் நிச்சயமாக Thought experiment என்றே வர்ணிக்கலாம். இந்த நாவலின் தன்மை Curriee –யின் வார்த்தைகளில் சொல்வதானால் Self-conscious, introspective, introverted, narcissistic or auto representational தன்மை கொண்டது. John Barth ஒரு முறை இவ்வகை நாவல்களை பற்றி சொல்லும் போது “novel that imitates a novel rather than the real world” என்றhர். மேலும் எம்.ஜி. சுரேஷ் 37 – நாவலின் கதையையும் கதையை புரிகிற விஷயங்களையும் என்ற கதைக்கேற்ற விஷயங்களை விளக்கி தெளிவுபடுத்தும் விதம் பலவீனமானதாக தொன்றினாலும் ‘புரியாமை’ பிரச்சனையாகிவிடுமோ என்ற பிரக்ஞாபூர்வமான உணர்வை பாராட்டியே ஆக வேண்டும். உதாரணமாக நாவலின் தலைப்பை சொல்லும் போது “98.6 பாரன் ?ீட் என்றால் மனிதனின் சராசரி உடல் உஷ்ண அளவு 37 செல்சியஸ் ஆக இருக்கிறது. 37 காலிபர் என்றும் படிக்கலாம். காலிபர் என்பது துப்பாகியின் குழல் அளவை குறிக்கும் பெயர். துப்பாக்கி என்பது வன்முறையின் குறியீடு. மனிதன்-வன்முறை இரண்டையும் ஏக காலத்தில் உருவகமாக்க 37 என்று குறிப்பிடலாம்” போன்ற விஷயங்கள் நிறைய இருக்கிறது. நாவலில் வரும் கனவுகள் சம்பந்தமான விஷயங்கள் Self reflesive Techniques களை சொல்லுவதாக இருக்கிறது. Patricia wuagh சொல்லும் போது “a self reflexivity prompted by the author’s awareness of the theory underlying the construction of fictional works என்பார். ஆனால் எம்.ஜி. சுரேஷ் வேற்று கிரகவாசிகளை கூறும் போது ‘மனிதர்கள் போன்றவர்களே’ என்ற இடம் சம்பவங்கள், கதைச் சொல்லல்கள் யாவும் குழந்தைகளுக்கான கதைச்சொல்லலை’ ஞாபகப்படுத்துகின்றன. மேலும் சுஜாதாவின் கதையையும் நிறைய 37 ஞாபகப்படுத்துகிறது.

இந்த கதையின் சுருக்கத்தை எம்.ஜி.சுரேஷ் 37-ல் கூறும் போது “எந்த யுகமாக இருந்தாலும் சரி.. எந்த பிரபஞ்சமாக இருந்தாலும் சரி மனிதன் எப்போதும் வன்முறையோடு சம்மந்தப்பட்டவனாகவே இருக்கிறான். என்று அவன் வன்முறையை அடுத்தவன் மேல் பிரயோகிக்கிறான். அல்லது அடுத்தவன் இவன் மேல் வன்முறையைப் பிரவேசிக்கிறான். இப்படித்தான் எப்போதும் நடந்து வந்திருக்கிறது. என் (நரேந்திரன்) கதையும் காவின் கதையும் இதைத்தானே உணர்த்துகிறது”.

பிரடரிக் ஜேம்சன் Post Modern Literature பற்றி பேசும்போது ‘காலங்களின் பொருள்’ என்ற நாவலை முன்னிறுத்துகிறார். ஒருபுறத்தில் சிம்பன்சி பற்றியும் மறுபுறத்தில் பி.என்.எ. மூலக்கூறுகள் பற்றியும் இந்த கதை பேசுகிறது. மையப் பொருள் இல்லை. மானிடர் பற்றி மையப்படுத்தவில்லை. ஒரே சமயத்தில் பல்வேறு பொருள்கள் பேசுகின்ற பல்வேறு இடங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள், அனுபவங்கள் சொல்லப்படுகின்றன. ஒரு மனிதன், ஒரு நகரம், ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில் அவன் அனுபவங்கள் என நாவல் செல்கிறது. மையப்பொருள், அனுபவம், கருத்து என்பது எதுவும் இல்லை. இவ்வாறு தான் பின்நவீன இலக்கியம் இருக்கும் என்கிறார். பிரடரிக் ஜேம்சனை அடியொற்றி 37-ஐ அணுகும்போது ஒரு புறத்தில் நரேந்திரன் ஒரு புறத்தில் அயல்கிரகவாசி கா. கதை சொல்கின்றன. ஒரே சமயத்தில் வாசல், படுக்கையறை, சமையலறை, பால்கனி போன்ற பல்வேறு பொருட்கள் பேசுகின்றன. புகைப்படம், மாஜிமாமா, பேனா, கணினி என்பவை கதைகள் பல சொல்லுகின்றன. புகைப்படம் ஒன்றுக்கு மேற்பட்ட பல்வேறு அனுபவங்களை சொல்கிறது. இங்கே Polyphony சரியாக செயல்பட்டிருக்கிறது.

Linda Hutceon சொல்லும் போது “a questioning stance through their common use of conventions of narrative, of reference, of the inscribing of subjectivity, of their identity as texuality and even of their implication in ideology” என்பது 37-ல் பாருங்கள்.

“அன்றிரவு தூக்கத்தில் நான் (ஜோ) காண வேண்டிய கனவின் உள் நுழைவதற்குக் கீழ்கண்ட சாத்தியங்கள் எனக்கு இருந்தன.

(அ) நேற்றைய கனவின் தொடர்ச்சியை காண்பது.

(ஆ) நேற்றைய கனவின் ஏதாவது ஒரு பகுதியை மீள்பார்வை பார்ப்பது.

(இ) நேற்றைய கனவின் ஒழுங்கு வரிசையை கலைத்துப் போட்டு பார்ப்பது.

இந்த சாத்தியங்கள் எல்லாவற்றிற்கும் உரிய பொத்தான்கள் இருந்தன”. John Barth, Richard Brautigan, A.S. Byatt, Peter Carey, Vmberto Eco, Raymond Feder man John Fovles, William Gas, B.S Johnson, Salman Rush die, Yesutada Tsutsi போன்ற பின் நவீனத்துவ நாவலாசிரியர்களின் படைப்புகைள நோக்கும் போது ‘37’ ஏதுவகையிலும் குறைபட்டதாக கருத வாய்ப்பிருப்பதாக தொpயவில்லை. குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஐந்தாறு குறைகளை தவிர்த்து ‘37’ well made novel வகையில் சேர்ந்து விடுகிறது. பின்நவீன இலக்கிய தன்மைகளை பூரித்தும், அலசியும், விமர்சித்தும் வரும் நம் தமிழ் சூழலில் ஆரோக்கியமான முயற்சியாகவே ‘37’ தெரிகிறது. முன்னைய வகைமைகளைத் தகர்த்து ஒருவித புதிய கதை சொல்லல் உருவாவதும் வகைமைகளுக்கு இடையிலான இடைவெளி மறைந்து ஒன்றுக்குள் உன்று மங்கலாக ஆவதையும் ‘37’ நிரூபித்திருக்கிறது. இந்த நாவலுக்குள் ஊடிழை பிரதிகள் அதிகம் தகவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்தொரு அரபிய இரவுகள், போர்ே ?யின் லோன் உக்பார்தர்துய்ஸ், ஷெர்பிய எழுத்தாளர் மிலோராட் பவிக்கின் கசார்களின் அகராதி, நார்வே எழுத்தாளர் ஜோஸ்டின் கார்டரின் ஸோபியின் உலகம் என்றும் தகவலுக்காக பல பிரதிகளின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது. விஞ்ஞான சம்மந்தமான விஷயங்கள், சார்பியல் தியரி, க்வாண்டம் தியரி, குளோனிங் உட்பட Cyborg, Artificial Intelligence, Roberts என்று பல விஷயங்கள் ஊடாட்டம் செய்கிறது. எனினும் விமர்சன நோக்கில் ‘37’ ஐ அணுக வேண்டியதும் முக்கிய மானதாகும். ஞாபகங்களின் அரசியல் (Polities of memories) மற்றும் மொழியியல் நிர்ணயவாதம் (linguistic determinism) சுய நோக்கு (self-reflexive) தளமாற்றம் (Transformation) பொருள் சுட்டர் போலி வாதம் (representational Fallacy) தொன்மை அனுபவ காட்சி (Primordial vision) பங்கேற்பு பயச்சூழல் (Participation Mystige) போன்ற விஷயங்கள் முக்கியமானதாகும். நமது தமிழ் சூழலை மையமாக கொண்ட நரேந்திரன் கதை பின்னல், மொழியியல் நிர்ணவாதத்தின்படி பண்பாட்டு சூழல்களை கொண்டிருக்கின்றன. இவை சொல்லும் விஷயங்கள் எதார்த்த வாழ்வின், சமூக நடப்பின் அடிச்சுவடுகளை கனகச்சிதமாக உள்இயங்குதளமாக முரண் அனுபவமாக கொண்டிருக்கிறது.

மாற்று கிரகவாசியான கா, ஜோ, யா, லோ என்ற மனிதர்களின் ஞாபகங்களும், நரேந்திரன், சென்குப்தா, நரேன் போன்ற மனிதர்களின் ஞாபகங்களும் அடிப்படையில் வன்முறைக்கு எதிரான விஷயங்களை, முரண்பாடுகளை முன்வைத்த போதும். ஆசிரியரின் மாயை மையசரடான ஞாபகங்களில் ஒளிந்திருக்கிறது. நிலத்தோற்றங்களை நிஜ உலகங்களாக மாற்றிக் காட்டுவதால் சுவடை அழிக்க முடியாது. அதை மொழியியல் நிர்ணயவாதம் காணாமல் இருந்திருக்குமோ ? களமாற்றத்தை பொறுத்தவரை மாற்றியல்புகளின் வழி அடையாளாம் காண முடியும். இக்பார் , உக்பார் தேசம் செயற்கை அறிவுஜீவிகளின் அதிகாரம் போன்ற விஷயங்கள் தள மாற்றத்தை சொன்னபோதிலும் மாற்றியல்புகள் சாதாரண இந்திய சூழலையே மையம் கொண்டிருக்கிறது. மேலும் தற்சுட்டு விஷயங்களை பொறுத்தவரை அதிகாரம், வன்முறை என்று படித்தான நிலையை சொன்னாலும் “ஒருமை” பற்றிய நிலைபாடு முக்கியமானதாக இருக்கிறது. பன்மையை நிராகரிக்கின்ற போக்கு தற்சுட்டு நிலையாக காண முடிகிறது. பொருள்சுட்டற் போலி வாதம் நிலத்துக்கும் மொழிக்குமான உறவை மறைப்பது போன்றிருந்தாலும் இடத்தின் தோற்றம் மறையாமலே இருக்கிறது. தொன்மை அனுபவம் சாட்சி வழி கதைகள் சொல்லப்படுவதினால் மனித சாராம்சம் குறித்த நிலை இழையோடுகிறது. பிரபஞ்சம் முழுமைக்காகவும் சொல்லப்பட்டாலும் தொன்மை அனுபவ சாட்சி மனிதனை முன்வினைப்படுத்துகிறது. அதுபோல பங்கேற்பு பய சூழல் என்பது வன்முறை, அதிகாரம், மேலாண்மை, அடக்குமுறை குறித்த அச்ச நிலையில் தண்டனையின் பயத்தை சுற்றி கதை பின்னியிருக்கிறது.

மேற்சொன்ன விமர்சன கருதுகோள்கள் – வாசகர் பங்கேற்பு விஷயங்களுக்கு பாதகமாக அமையாமல் கதை சொல்லப்பட்டிருந்த போதும் பிரதியியல் இடைவெளிகள் நிச்சயமாக பிரதியிருந்து வெளிக்கொணர சாதகமாகவே இருக்கின்றன. பல்குரல் அறிவியல் புனைக்கதை என்று கதைச்சொல்லும் போக்கும் நிலையும் தொழிற்பட்டதில் வெற்றியை அடைந்தாலும் விமர்சன ரீதியாக குறைபாடுகள் உடையதாகவே இருக்கின்றன. எனவே ‘37’ என்ற நாவலின் குரல்கள் வித்யாசமாக இருந்த போதும் ‘தொனிகள்’ பற்றிய விழிப்புணர்வு பிரக்ஞாரீதியிலான வாசிப்பில் நிச்சயம் காணமுடியும் என்பதும் கவனத்துக்குரிய விஷயங்களே.

-எச். முஜீப் ர ?மான்

—-

mujeebu2000@yahoo.co.in

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்