“நெருப்பு” என்று சொன்னாலும் சுடும்”

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

வே பிச்சுமணி


சந்தியாவிற்கு அவளது மகன் ராமின் முகம் சோர்ந்து இருப்பதை கண்டு, அவனா சொல்லட்டுமா அல்லது நாமாக அவனிடம் கேட்கலாமா என யோசனையில் அவனுக்கும் அவனது தம்பி முருகனுக்கும் காப்பி போடுவதற்காக அடுப்பில் பாலை ஊற்றிய பாத்திரத்தை வைத்து பால் பொங்கி கொட்டி விடக்கூடாதென்பதற்கு அருகில் நின்று கொண்டிருந்தாள்.

ராம் தயங்கி தயங்கி அவள் அருகில் வந்தான். சந்தியா அவனிடம்

“ என்னடா ஏன் முகம் ஒரு மாதில இருக்கு, என்ன விஷயம் சொல்லு”

‘ஒன்றுமில்லையம்மா”

என்று சொல்லியபடி வரவேற்பரையில் போய் அமர்ந்தான்

.மூவருக்கும் காப்பி கலந்து தம்ளரில் ஊற்றி கொடுத்தாள். காப்பி குடித்தவுடன் சின்னவன் கிரிக்கெட் மட்டையை எடுத்து கொண்டு வெளியே ஓடினான். வழக்கமாக அவனுடன் கிரிக்கெட் மட்டைக்கு சண்டை போட்டு அடி வாங்கும் ராம் சண்டை போடாமல் வீட்டு பாடம் எழுத உட்கார்ந்ததது சந்தியாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் அருகில் அமர்ந்து

“என்ன விஷயம் அம்மாட்ட சொல்லு, ஏன், வாய் வரை வருகிற வார்த்தையை சொல்லம தயங்கற”

“சொன்ன…… திட்ட மாட்டேல , ……………….சத்தியமா……..”

“சரி திட்டமாட்டேன், சொல்லு”

“தம்பிக்கெல்லாம், எல்லாரையும் கூப்பிட்டு கிராண்டா பிறந்த நாள் கொண்டாடி போட்டோல்லாம் எடுத்து வைத்திருக்கிறோமே, எனக்கு மட்டும் 10 வயசு வரைக்கும் ஒரு பிறந்த நாள்கூட

அப்படி கொண்டாடவே இல்லையே . ஏன், அம்மா எனக்கு மட்டும ஆசையிருக்காதா. என்னை உங்களுக்கு பிடிக்கலையா. அவனுக்கு மட்டும் ………..” என வார்த்தைகளை முடிக்காமல் அழ ஆரம்பித்தான். அவனை இழுத்து மார்போடு அணைத்து, அவனது கண்ணீரை துடைத்து விட்டு அவனது தலையை கோதி கொண்டே, அப்பா வந்தவுடன் சொல்லி வருகிற உனது பிறந்த நாளை சிறப்பா கொண்டாடலாம், என்ன சரியா’

மடியிலிருந்து எழாமல் தலை நிமிர்ந்து “சரி “ என்று அப்பா சம்மதிப்பாரா என யோசித்தவாரே அவன் சொல்லுவது அவளுக்கு புரிந்தது.

அடுத்த நாள் காலையில் சந்தியா

”ராம் உன்னை அப்பா கூப்பிடுறாடா” என்று அவள் சொன்னவுடன் ராம் தயங்கி அவன் அப்பா சுந்தரிடம் சென்றான்.

ராமின் அப்பா “வாடா, அப்பாட்ட முதலிலே சொல்லியிருக்க கூடாது. இந்த ஆண்டு உன் பிறந்த நாள் பெரிசா கொண்டாடலாம் “ என்றார்.

“உண்மையில தாண்டா. அம்மா சொன்னா”

“தாங்கஸ் அப்பா” என்று சொல்லியவாறு சமையலலயறைக்கு சென்று அங்கிருந்த சந்தியாவின் இடுப்பை இருகையாலும் கட்டி கொண்டு

“தாங்கஸ் மம்மி., ரொம்ப தாங்கஸ் மம்மி” என சொல்லியவாறு அவளை குனிய சொல்லி கன்னத்தில முத்தம் மழை பொழிந்தான்.

“டேய், அம்மாவுக்கு மட்டும்தானா , அப்பாவுக்கு இல்லையா “ என்று சுந்தர் கேட்க , போகிற போக்கில் அவனுக்கும் ஒரு முத்தம் கொடுத்து கொண்டு பள்ளிக்கு அவனது தம்பி முருகனை அழைத்து கொண்டு ஓடினான்.

“ டேய் பார்த்து போங்கடா” என்றார்கள் சந்தியா சுந்தரும்.

சூலை 26 ராமின் பிறந்த நாள் அதற்கு இரண்டு முந்தியே பள்ளி நண்பாகள், கிரிகெட் நண்பர்கள மற்றும் குடியிருப்பில் உள்ள அவுனது தோழர்கள் அனைவரையும் அவனது பிறந்த நாளைக்கு கட்டாயம் வரவேண்டுமென சந்தோஷமாக அழைத்தான்.

சந்தியா “உங்க அம்மாவை உஙக சொந்தகாரர்களுக்கும் சொல்லி விடுங்க. நான் எங்க அப்பா அம்மாவை மட்டும் கூப்பிடுகிறேன்”

“எதற்கு எல்லாரும்” என முனகியபடியே “சரி நான் எங்க வீட்டுக்காரர்களுக்கு சொல்லி விடுகிறேன் .எதற்கும் நீயும் ஒரு வார்த்தை கூப்பிட்டு விடு” என்று சொல்லி கொண்டே அலுவலகம் கிளம்பி சென்றான்.

சந்தியா,சுந்தர் இருவரும் வீட்டை அலங்கார பேப்பா கொண்டு அலங்கரித்தர்கள். மாலை 4.30 லிருந்து கொஞ்சம கொஞ்சமாக விருந்தினாகள் வர ஆரம்பித்தார்கள். ராமின் பள்ளி தோழர்கள் அவர்கள் பெரும்பாலும் அம்மாவுடனும் சிலர் அப்பாவுடனும் வந்திருந்தார்கள். ராமின் முகத்தில் ராமநாதபுரத்தில் குளம்குட்டை நிரம்பினால் அந்த மக்கள் எவ்வளவு சந்தோஷம் அடைவார்களோ அதே அளவு சந்தோஷத்துடன் வளைய வளைய வந்தான். அவனது தம்பி முருகன் அவன் பின்னாலே தொடாவண்டி போல சென்று விளையாடி கொண்டிருந்தான. சந்தியாவின் அப்பா அம்மாவும், சுந்தரின் அம்மாவும் அவரது உறவினர்கள் 6.30 க்கு வந்தார்கள் வந்திருந்த பையன்களின் அம்மா ஒருவர் நேரத்துடன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என சொல்ல எல்லாரும் குழுமி நின்று பிறந்து நாள் பாட்டை பாட ராம் பூரிப்புடன் கேக்கை வெட்டி சந்தியாவின் வாயில் கொடுத்தான். அவனை தடுத்து அவனது தம்பிக்கு கொடுக்க பணித்தாள். நண்பாகள் கொடுத்த பரிசு பொருட்களை பெருமையுடன் வாங்கி அதை ராம் அவன் அப்பாவிடம் பெரிய மனிதன் போல் பத்திரமாக வைத்து கொள்ள கொடுத்தான்.

சந்தியா “ ராம் இங்க வா பாட்டி தாத்தா கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்” என்றாள்

“சரிம்மா” என்று அங்கு வந்த ராமை சுந்தரின் அம்மாவின் காலில் முதலில் விழுந்து வணங்க சொன்னாள். அவனும் விழுந்து வணங்கினான். சுந்தரின் அம்மா அவனுக்கு திருநீறு பூசி, ரூ100 கையில் கொடுத்தாள். ராம் மற்ற உறவினர் காலிலும் விழுந்து அவர்கள் கொடுத்து பணத்தை அம்மாவிடமும், பரிசு பொருளை அப்பாவிடமும் அளித்தான் எல்லாரையும் பந்தியில் உட்கார வைத்து அடையார் ஆனந்த பவனில் தருவிக்கப்பட்ட சிற்றுண்டி பரிமாறப்பட்டது. சாப்பிட்ட பின்னர் அனைவரும் ராம் கனனத்தை கிள்ளியவாறும் தலை தடவியவாறும் சந்தியாவிடமும் சுந்தரிடமும் சொல்லி கொண்டு விடை பெற்றார்கள்.

கூட்டம் எல்லாம சென்ற பின், எஞ்சியவர்கள் சந்தியாவின் அப்பாஅம்மாவும் , சுந்தரின் அம்மாவும் தான். அனைவரும் உட்கார்ந்து சாப்பிட சந்தியா அனைவருக்கும் பரிமாரினாள்.

சாப்பிட்டு முடித்த, சுந்தரின் அம்மா ஊருகதைகளை பேசிக்கொண்டிருந்தார். திடீரென

” இப்படிதான் . நானும் என் வீட்டுக்காரரும் எங்க பெரியவன் அழகுக்கு பிறந்தநாள் கொண்டாடினோம். அடுத்த நாள் பிள்ளைக்கு ஒரே காய்ச்சல் ஒரு வாரம் காய்ச்சல் இருந்தது அதற்கு அப்பறம் அவன் அறிவு வளராம, ஆளு மட்டும் வளர்நது. 45 வயசில் ரொம்ப முடியம இறந்து போயிட்டதுதான், உங்களுக்கு தெரியுமே.ஊரு கண்ணு படும் மாதிரி இப்படி நாம செய்யாம சிம்பிளா செஞ்சிருக்கலாம்…………..”

என்று எந்தநேரத்தில் என்ன பேச வேண்டு என தெரியாமல் பேசிகொண்டிருந்தாள். அதை கேட்டவாறு சாப்பிட்டு கொண்டிருந்த சந்தியாவிற்கு படபடப்பு வந்து வியர்த்து கொட்டியது தலை சுற்று வரவே யாருக்கும் தெரியாமல் சுவரில் சாய்ந்து கொண்டு கொஞ்ச நேரம் கண்ணை முடினாள். அதற்குள் அந்த பக்கம் வந்த சந்தியாவின் அம்மா

“ என்னடி என்ன செய்து”

“ஒன்னுமில்லம்மா கொஞ்சம் மயக்கமா இருந்தது அதான்”

என்று தண்ணீரை எடுத்து குடித்தாள்.

“என்டீ உன் மாமியாருக்கு அறிவு கிடையாதா, என்ன பேசுறோமுன்னு தெரியம என்னலாமோ உளறி கொட்டுதா”

சந்தியா சுதாரித்து கொண்டு “ விடும்மா என்னசெய்றது”

“இதற்குதான் இந்த சம்பந்தம் வேண்டாமுன்னு சொன்னேன் நீ தான் காதல் கத்திரிக்காய்னு சொல்லி இந்த ஆளை கட்டிகிட்ட உன் தலையெழுத்து போ” என இடித்து காட்டினாள்.

சந்தியா அவளது அம்மாவின் வார்த்தைகளை பெரிதாக எடுத்து கொள்ளாமல்,

“எங்க ஆட்டோ பிடித்திட்டு வாங்க நேரம் ஆயிட்டு இவங்கல்லாம் போக வேண்டாமா “

சுந்தர் அழைத்த வந்த ஆட்டோக்களில் இருவரின் பெற்றொர்களும் கடைசியாக கிளம்பி சென்றார்கள்.

படுக்கையில் படுத்த, சந்தியாவிற்கு தூக்கமே வரவில்லை.அவளது மாமியார் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டது. அவளது கணவனின் மனம்பேதலித்த அண்ணனின் நினைவு வந்ததது. நல்ல சாப்பிடும் அவர் ஊரை சுற்றி வருவார். யாராவது வேலை சொன்ன மாடு மாதிரி வேலை பார்த்து அங்கு சாப்பிட்டு விட்டு என்னநேரமானலும் வீடு வந்து சேர்ந்து விடுவார். கோபம் வந்தால், சாப்பாடு போட நேரமானால் ஆட்களை கடித்துவிடுவார். பேச்சு சில சமயங்களில் குளறும் ஆனாலும் பிள்ளைகளிடம் பாசமாக இருப்பார். என்பது சந்தியாவிற்கு நினைவில் வந்தது. மாமியார் சொன்ன மாதிரி தனது பிள்ளைக்கு காய்ச்சல் வந்து பித்து பிடித்து விடுமோ எனும் பயம் அவளுக்குள் அவள் மாமியார் அந்த விஷயத்தை சொன்னதிலிருந்து வித்திட்டு ஆலமரமாய் வளாந்து பேயாட்டம் போட்டது. பக்கத்திலிருந்து கணவனை எழுப்பினாள். அவளது பயத்தை சொன்னாள். அவன்,

”என்ன லூசு மாதிரி யோசிக்கிற அதெல்லாம் ஒன்னும் வராது” எனக்கூறிவிட்டு தூங்கத்தை தொடர்ந்தான். சந்தியாவிற்கு தூக்கம் வர வில்லை. மீண்டும் கணவனை எழுப்பினாள். அவன்,

” என்னடி” என்று எழுந்து ,”

இன்னுமா தூங்காம இருக்க உடம்புக்கு ஒன்னுமிலலையெ” என்று நெற்றியை தொட்டு பார்த்து லேசா சூடுவதாக உணர்ந்து கோரோசின் எடுத்து கொடுத்து

“சாப்பிடு” என்றான் சந்தியா

“ ஒன்னுமில்லையங்க” என்றவாறு மாத்திரையை விழுங்கினாள்.

”நீங்க படுத்துகொங்க”என்று கூறிவிட்டு மறுபக்கம் ஒரு சாய்த்து படுத்து, தூங்கி கொண்டிருக்கும் ராமை பார்த்தாள். அவனை இழுத்து, தன்னுடன் அணைத்து கொண்டு, தூங்க முயன்றாள். தூக்கம் வரவில்லை. மாமியார் சொன்ன வார்ததைகள்படி நடந்துவிடுமோ என பயம் ஆட்டு வித்ததது.ராமின் முகத்தை பார்த்து கொண்டிருந்தாள். தூக்கத்தில் ராம் “ரொம்ப தாங்கஸம்மா” என உளறினான். வழக்கமான உளறல் கூட அவளது பயத்தை அதிகரித்தது. யாரிடமாவது இதைபற்றி கேட்டு ஆறுதல் பெற்றால்தான் நல்லா இருக்கும் என நினைத்தாள் . மணியை பார்த்தாள் மணி 2.30 காட்டியது. இப்ப யாரையும் தொந்தரவு செய்யகூடாது என நினைத்து ராமை கட்டி அனைத்து படுத்தாள். மீண்டும் பயம் வந்ததது. அவளை அறியாமல் அழுது அழுது அவள் கண்களில் இருந்து கண்ணீர் சூடாக தூங்கி கொண்டிருந்த ராமின் கன்னத்தில் விழுந்து அவனை சுட்டது. அவன் தூக்கத்தில் அனிச்சையாக துடைத்து விட்டு தூங்கிவிட்டான் .


Series Navigation