“கட்சி கொடிகளும் மரங்களும்”

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

கே.பாலமுருகன்நகரத்தையொட்டிய அகலமான சாலை. வெறிச்சொடிக் கிடக்கிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு ஆட்களின் நடமாட்டம் பெரும் வெள்ளம் போல வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. எல்லோரும் கைகளில் ஏதோ அறிவிப்புக் கொண்ட துணிகளைப் பிடித்துக் கொண்டு நடந்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரின் முகத்திலும் அமைதி. வீரியமான அமைதி. கூட்டம் எறும்புகளைப் போல நகர்கிறது. இருள் மெல்ல நகர்ந்து மறையும் தருணத்தில் எல்லோரும் சிதறுண்டு ஓடுகிறார்கள். இப்பொழுது திடீர் கலவரம் அனைவரின் முகத்திலும். புகையைச் சுமந்து கொண்டு ஏதோ ஒன்று கெட்டியாக உயரத்திலிருந்து பறந்து வருகிறது. புகை மூட்டம். காண்டா மிருகம் போல ஒரு பெரிய சிவப்பு உருவம் வாயிலிருந்து எதையோ திரவம் போன்ற ஒன்றைக் கக்கிக் கொண்டே முன்னேறுகிறது. எல்லோரும் ஓடி தொலைகிறார்கள். அம்மா அப்பா அண்ணன் மாமா இப்படி எல்லோரின் முகத்தையும் பார்க்கிறேன். சாலை இருண்டு போகிறது. அந்த இருளிலிருந்து கவசத்தை அணிந்திருந்த சிலர் என் மீது ஏறி மிதிக்கிறார்கள்.
“அம்மா. . ! அம்மா. . ! ஐயோ!” திடீர் விழிப்பு.
கட்டிலின் அருகிலுள்ள ஜன்னல் திறந்து கிடந்தது. விடிந்து பல மணி நேரம் ஆகியிருக்கும் போல. அபாரமான வெளிச்சம் என் மீது கவிந்திருந்தது. மெதுவாக எழுந்து அமர்ந்து கொள்ள முயற்சி செய்தேன். கனவில் கண்ட காட்சிகள் பயத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தன. ஜன்னலைத் தாராளமாகத் திறந்து விட்டுக் கொண்டேன். தலையணை வானிர் ஒழுகி, நனைந்திருந்தது. அதை எடுத்து சரிப்படுத்தி வைத்துவிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். கட்சி அலுவலகம் திறந்திருந்தது. பொது தேர்தலையொட்டிய முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இளைஞர்கள் சிலர் அங்குமிங்குமாகக் கட்சி கொடிகளை ஒரு நீண்ட கயிற்றில் இணைத்து கட்சி அலுவலகத்தையொட்டி நிற்கும் மரங்களில் கட்டிக் கொண்டிருந்தனர்.
“தர்மா. . இதெ மேல தூக்கிக் கட்டு. . டெ இன்னும் கொஞ்சம் மேலெ தூக்குடா. . நேரா பிடிச்சிக்க கட்டறெ வரைக்கும்”
“சங்கரு, ஆச்சி கடைலெ போய் எல்லாருக்கும் தே தாரிக் வாங்கிட்டு வாடா. . சீக்கிரம் வா. . மச்சான் ஒனக்கு என்னா வேணும்? தே ஓகே வா?”
“டெ, விக்கி அண்ணெ எப்ப வருவாரு? அவரு வந்து தொறப்பு விழா செஞ்சி வச்சாதான் போ, களை கட்டும். இப்பயெ நம்பெ வேலயெ ஆரம்பிச்சிட்டோம், இன்னும் ஒரு வாரம் ஓடும் போ. அண்ணணெ போய் கண்டுக்கங்கடா”
“ நாளைக்கு அண்டாண்டெ லோரோங்லெ கொடிங்களெ கட்ட ஆரம்பிச்சம்னா கரெக்டா இருக்கும்டா வேலயெ முடிக்கெ”

கட்சி அலுவலகத்தின் முன் அந்த இளைஞர்களின் ஆரவாரமும் சம்பாஷனைகளும் தேர்தல் பிரச்சாரம் களைக் கட்ட தொடங்கிவிட்டதை ஞாபகப்படுத்தியது. இனி ஒரு வாரத்திற்கு பிரச்சாரக் கொடிகள் எறும்புகளைப் போல சாலைகளிலும் மரங்களிலும் ஊர்ந்து கொண்டிருக்கும். என் வீட்டையொட்டி கட்சி அலுவலகம்வரை ஒரு 8 மரங்கள் இருக்கும். எல்லாம் மரங்களிலும் கட்சிகளின் கொடிகள் நிறைந்து மரமே காணாமல் போயிருக்கும். மரத்தின் உடல் முழுக்க கட்சி கொடிகள்தான். மாலை நேரங்களில் அந்தப் பக்கமாக நடந்து போக நேர்ந்தால் எத்தனைவிதமான கட்சி கொடிகளின் அழகையும் வர்ணங்களையும் பார்த்து மகிழ வாய்ப்பு கிடைக்கும் என்பதை சிலாகிக்க முடியும்.
கட்சி அலுவலகத்தின் எதிரிலுள்ள பலகை இருக்கையில் யாரோ இரண்டு கிழவர்கள் உடற்பயிற்சி செய்துவிட்டு வியர்த்த உடலுடன் வந்து உட்காருவது தெரிகிறது. என் வீட்டு ஜன்னலிலிருந்து ஒரு 4 அடி நெருக்கத்தில்தான் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். கட்சி அலுவலகத்தையும் அந்த இளைஞர்களையும் பார்த்துதான் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
“இவனுங்களெ பாரு ராமசாமி! இப்பத்தான் இந்த ஆர்பாட்டம்லாம்”
“எங்கத்தான் போவானுங்கனெ தெரியாது, இந்த சின்ன பையனுங்களாம், மத்தெ விசயத்துலெ பாக்க முடியாது. வல வீசி தேடனும். ஆனா தேர்தல்னு வந்துட்டா பையனுங்களே மரத்துக்கு மரம் ரோட்லெ ஆபிஸ்லெ இப்படி எல்லா எடத்துலயும் பாக்கலாம் போ”
“எல்லாம் ஒரு ஆர்வம்தான். . எளம் வயசு பையனுங்கெ, துடிப்புடா ராமசாமி”
“எனக்கென்னமோ இந்த பையனுங்களே நல்லா பயன்படுத்திக்கரானுங்கனுதான் படுது. நல்லா வேலெ செய்யறானுங்களெ, அதான்”
“ நீ அப்படி பாக்கறெ. ஆனா வேல இல்லாதெ எத்தன பையனுங்கெ இந்த மாதிரி சமயத்துலெ. . . ஏதோ வேலெ ஓடுதெ. கைக்கு காசு வந்த மாதிரியும் இருக்கு”
“இது முடிஞ்சி அவுங்கெ கதிலாம் என்னா? எத்தன காலம் கோபால் இப்படியெ பேசிகிட்டு இருக்க போறம்? இளைஞர்களுக்கு அப்படி என்னாதான் நடக்கதுனு தெரிலெ. எல்லாம் வேலயும் இழுத்துப் போட்டுகிட்டு செய்யற பையனுங்கெ. பாக்கவெ பாவமா இருக்கு, நம்பெ காலத்துலெ நம்பெ செய்யாததா? நம்ப அப்படி இப்படினு படிச்சி ஒரு வழிக்கு வந்துட்டோம்”
“ தேர்தல் நம்பெ உரிமை. . ஜனநாயகம் ராமசாமி! பையனுங்கெ தேர்தல்லெ நாட்டோடெ முக்கியமான கட்டத்துலெ பொறுப்பா வேலெ செய்யாறனுங்கனு நெனைச்சிக்கிட்டுப் போவ வேண்டியதுதான். நாட்டுலெ என்னா நடக்குதுனு தெரிலெ ராமசாமி! ஆனா நம்பெ இளைஞர்கள் இப்ப ரொம்ப விழிப்பா இருக்காங்கப்பா. அவுங்களுக்கு அவுங்களோட பங்கு, உரிமை எல்லாம் வெளங்கிருச்சு. இப்பெலாம் எல்லாம் ஒன்னு சேந்து ஒழைக்கறானுங்கெ, பெறகு ஏதும் பெரச்சைனைனா ஒன்னு சேந்து கேள்வி கேப்பானுங்கெ, நீ யேன் கவலபடறெ? இது நம்ப காலம் இல்லப்பா”
கிழவர்கள் ஏதோ முனகிக் கொண்டே அங்கிருந்து எழுந்து நடக்க தொடங்கினார்கள்.
“டெ மச்சான், அங்க பாரு நம்பெ பெரியசாமியோடெ தாத்தாவும் அவரோடெ கூட்டாளியும், ஏதோ நம்பளெ பத்திதான் பேசிட்டுப் போற மாதிரி இருக்கு”

“இவுங்களுக்கு என்னாப்பா! ஒரு நாக்காலியும் காலைலெ கொஞ்ச நேரமும் கெடைச்சிட்டா எல்லாரையும் விமர்சனம் பண்ண ஆரம்பிச்சிருவாங்கெ, மனுசன் இங்க படறது நமக்குதானெ தெரியும்”
இளைஞர்கள் ஏணி படிகளை மரத்தின் மீது சாய்த்துக் கொண்டு கொடிகளை இறுக்கமாக மரத்தில் கட்டிக் கொண்டிருந்தனர். இன்னும் 5 மரங்கள் இருந்தன. இரண்டு பேர் ஏணியில் ஏற் நிற்க ஒருவர் இரண்டு மரத்திற்கும் நடுவில் நின்று கொண்டு கொடி கயிற்றின் இடையில் ஒரு நீண்ட கட்டையைச் சொருகி பிடித்துக் கொண்டிருந்தார். மற்ற சிலர் மரத்திற்குக் கீழேயும் அலுவலகத்தின் வாசலிலும் அமர்ந்து கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
இராமாயி அக்காள் அப்பொழுதுதான் செண்டோய் தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு அலுவலகத்தின் இடதுபுறமாக வந்து சேர்ந்தாள். அக்காவின் செண்டோய் இப்பொழுதுதான் அதிகமாக விலை போகும் என்ற முடிவில்தான் கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிட்டிருந்தாள். தள்ளு வண்டியை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு, பொருள்களையெல்லாம் தயார் செய்துக் கொண்டிருந்தாள். ஐஸ்கட்டி அரைக்கும் இயந்திரத்தைத் துடைத்துவிட்டு ஐஸ்கட்டியை அதன் மேல் வைத்து, அரைக்க தொடங்கினாள். அதற்குள் மூன்று பேர் அங்கே கூடிவிட்டனர். அலுவலகத்திலிருந்த இரண்டு இளைஞர்கள் செண்டோய் குடிப்பதற்காகப் போய்விட்டனர்.
“மச்சான், எனக்கு ஒரு கிளாஸ் செண்டோய் வாங்கிட்டு வந்துரு”
“வாங்கப்பா, ஆள பாத்தெ ரொம்ப நாளு ஆச்சி. எல்லாம் புதுசு புதுசா இருக்காங்கப்பா?”
“ஆமாம்கா, பையனுங்கெ எல்லாம் புதுசுதான். இப்பத்தான் களத்துலெ எறங்கிருக்கானுங்கெ, எளம் ரத்தம், செண்டோய் 8 புங்குஸ் பண்ணுங்கக்கா”
“போன தடவெ ஒரு கூட்டம் நடந்தப்பெ ஒன்னெ இங்க பாத்தென், எங்கப்பா வேல இப்பெ?”
“கேளாங்குலெ வேல செய்யறென்கா”
“என்னா கியூசி வேலயாப்பா? எந்த கேளாங்?”
“லைன்லெ தான், ஓப்பரேட்டர். கட்டெ கேளாங், அதான் பாக்கார் ஆராங்லெ இருக்கெ, அங்கதான்”
“இன்னிக்கு என்னா லீவா தம்பி? போன தடவெ வேற கேளாங்குலெ வேல செஞ்ச போலே?”
“அங்கெ வேலய விட்டு நிப்பாட்டிடானுங்கக்கா, அப்பறம் பல எடத்துலெ தேடி பாத்து இப்பத்தான் ஒரு 2வருசமா இந்தக் கேளாங்குலெ வேல செய்யுறென். இப்பெ ஒரு வாரம் லீவு போட்டுட்டுதான் இங்க வந்துருக்கென், தேர்தல் வருதுலெ”
இராமாயி அக்காள் ஏது பேசவில்லை. செண்டோயை மடித்து ஒரு பையில் போட்டு அவனிடம் நீட்டினாள். அவனும் அதை வாங்கிக் கொண்டு அலுவலகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான். வெயில் கொளுந்துவிட ஆரம்பிக்கும் நேரம். இராமாயி அக்கா கடை போட்டிருக்கும் இடம் மர நிழலுக்குக் கீழே என்பதால் அவள் மட்டும் குளிர்ந்த முகத்துடன் வேலை செய்து கொண்டிருந்தாள்.
இளைஞர்கள் கடைசி மரம்வரை கொடிகளைக் கட்டிவிட்டார்கள். எல்லோரின் முகத்திலும் தளர்வுக்குப் பதிலாக உற்சாகமே தெரிந்தது. முரடன் போல தெரிந்த இளைஞன் ஒருவன் ஏணி படியை முதுகில் சுமந்து கொண்டு நடந்தான். 4ஆவது மரத்துக்குக் கீழ் நீளமான தோம்பு ஒன்று மரத்தின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். அதன் மீது 4 சிறுவர்கள் ஏறி நின்று கொண்டு கட்சி கொடிகளையும் அந்த இளைஞர்களையும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் தோம்பின் மீது குதிகாலிட்டு அமர்ந்திருந்தார்கள்.
“டெ குமாரு! கொடிலாம் எவ்ள அழகா இருக்கு பாருடா”
“என்னா கொடிடா இதுலாம்?”
“இதுலாம் மலேசியா கொடிடா”
“மலேசியா கொடி ஒன்னுதானெ? இதுலாம் கலர் கலரா இருக்கு?”
“இதுலாம்கூட மலேசியா கொடிதாண்டா”
“டெ! அவன் புளுவறாண்டா. பொய் சொல்லாதெ.. . . இது ஆளுங்களோடெ கொடி! அங்க பாரு ஆளோட மூஞ்சிலாம் படமா போட்டு கீழே கொடி கட்டிருக்காங்கெ”
“டெ அந்தக் கொடிதான் நல்லாருக்குடா. . அங்க பாரு”
“டெ இதெலாம் ஒன்னா சேத்து கட்டி பட்டம் உட்டா நல்லா பறக்கும்டா, போய் புடுங்கியாந்துரு குமாரு”
சிறுவன் குமார் தோம்பின் மீது ஏறிக் கொண்டு, அலுவலகத்தை நோக்கிப் பார்த்தான். இளைஞர்களில் சிலர் அலுவலகத்தின் உள்ளே சென்றிருந்தார்கள். சிலர் மட்டும் வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
தோம்பிலிருந்து அந்தக் கொடிகள் கட்டப்பட்டிருக்கும் கயிறு கையெட்டும் தூரத்தில்தான் இருந்தது. வேகமாக பாய்ந்து வலது கையை எக்கி அந்தக் கயிற்றை பிடித்துக் கொண்டே கீழே சரிந்தான் குமார். அந்த இரண்டு மரத்துக்கு மத்தியில் கட்டப்பட்டிருந்த கயிறு மட்டும் அறுந்து அவனுடைய கையில் இருந்தது.
“டெ! அங்க பாரு, பையனுங்கெ கொடியெ அறுத்துட்டானுங்கெ! செத்தானுங்கடா என் கையுலெ, டே! நில்லுங்கடா டே!” அலுவலகத்திலிருந்து இரண்டு இளைஞர்கள் வெளியே ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.
அந்தச் சிறுவன் கயிற்றை இழுத்துக் கொண்டே வேகமாக ஓட தொடங்கினான். கொடிகள் பட்டம் போல பறந்து கொண்டிருந்தன. பிரமிக்கக்கூடிய ஒரு தேர்தல் பிரச்சாரம் போல அது சாலையில் நிகழ்ந்து கொண்டிருந்தது.
-முடிவு-
கே.பாலமுருகன்
மலேசியா


bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்