“இலக்கிய விருதுகளும் இழுபறிப்பாடுகளும்”

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

மா.சித்திவினாயகம்புலம் பெயர்ந்த நாட்டினிலே, புலம் பெயர்ந்தோரால், புலம் பெயர்ந்த சூழலில் எடுக்கப்பட்டிருக்கிற இந்த “இயல்” விருது புலம்பெயர் எழுத்தாளர்களை மட்டுமே சந்தோசப்படுத்த எடுக்கப்பட்டதா? அல்லது

தமிழ்ப் படைப்பாளிகளை மேன்மைப்படுத்த எடுக்கப்பட்டதா? அல்லது விருது கொடுப்போரை மட்டுமே விளம்பரப்படுத்த எடுக்கப்பட்டதா?

பூட்டிய அறைகளுக்குள் முடுக்கிவிடப்பட்ட கணணி இயந்திரங்கள் மட்டுமே கண்டறிந்த அல்லது சிபார்சு செய்த பேர்வளிகளுக்கு மட்டுமே இந்த இயல் விருது பரிந்துரை செய்யப் படுகிறதா? மானிட சமூகத்தின் ஒப்பற்ற மேன்மைகளுக்கெல்லாம் உயிர் நாடியாக இருக்கக்கூடிய மொழியைச் செம்மைப்படுத்தத் தவறியவர்களுக்கெல்லாம் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறதா? என்பது போன்ற கேள்விகள் இன்று சரமாரியாக எழத் தொடங்கிவிட்டன.

பேச்சு வழக்கில் தொடங்கிய மொழியானது எழுத்து வடிவம் பெற பல காலமாய் அல்லற்பட வேண்டியிருந்திருக்கிறது. இவ்வாறான மொழி மற்றும் வாழ்வியல் போரட்டங்களுக்குள் தான் மனிதனுக்குச் சிந்தனைகளும் கருத்துகளும் வளரத்தொடங்கின.

மானிடத்துச் சிந்தனைகள் நோக்கம் இருப்பு வெளிப்படுத்தல் என்பவைகள் பொதுத்தன்மை கொண்டதாகவோ அல்லது ஒருமைப்பாடு கொண்டதாகவோ இல்லை. ஒடுக்கப்பட்டோருக்காக

குரல் கொடுப்போரும் நிறவெறிக்கெதிராய் ஆர்ப்பரிப்போரும் மொழியினைச் சீர்ப்படுத்த முனைந்து நிற்போரும் என திறந்துவிட்டிருக்கிற மிகப்பெரிய இலக்கிய வெளியைச் செப்பனிடுகிற

மேதமையாளர்களைக் கண்டறிந்து அவர்களது தனித்துவத்தை போற்றிக் கௌரவிக்கவேண்டியது கட்டாயமாகிறது.

அற்புதமான அரிய படைப்பாற்றல்களை தந்தவர்கள் பலர் விருதுகள் எதுவும் இல்லாமலேயே மண்மூடிப் போனார்கள்.மீந்திருப்பவர்களில் பலர் இனங்காணப்படாமல் இலைமறைகாய்களாக காலச்சுழியினில் அலைப்புண்டுபோனார்கள். ஆக அறியப்பட்டு எஞ்சியிருப்பவர்கள் சிலரை கணணிகள் அறிவதில்லை. அதிலும் அறியப்பட்டவர்களை இந்த விருது நாடகங்களின், பாராமுகமும் , மெத்தனப்போக்கும், இழுபறிப்பாடுகளும், ஈனத்தனங்களும் மிக மிகக் கீழ்மைப் படுத்தி விடுகின்றன.

தாய் மொழியில் எழுதுபவனின் வாசகப்பரப்பிற்கும் மாற்றுமொழிக்கு மொழியாக்கம் செய்கின்ற மொழிபெயர்ப்பாளனின் வாசகப்பரப்பிற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. எப்படி தமிழியற்

சாதனை விருதை ஒரு மொழிபெயர்ப்பாளருக்குக் கொடுக்க முடியும் என்கின்ற ஜெயமோகனின் கேள்வியில் உண்மையில்லாமல் இல்லை. ஆனாலும் தி.க.சி.என்று எழுத்துலகில் பிரபலமான எழுத்தாளர் த.க.சிவசங்கரன் அவர்களுக்கு ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன்னதாக சாகித்திய அகாதமியின் விருது அறிவிக்கப்பட்ட பொழுது ஜெயமோகன் அவர்கள் அதனை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அவருக்கு கிடைத்தது ஒரு விருதேயல்ல என்றும் அது அவருக்கு கிடைத்திருக்கும் முதியோர் நல உதவி அதாவது “பென்சன்” என்றும் கூடச் சொல்லியிருந்ததாக எனக்கு ஞாபகம். அப்படி விமர்சித்த ஜெயமோகன் அவர்களே இன்று சுந்தரராமசாமி அவர்களுக்கு முதுமையில் இயல் விருது கிடைத்ததினால் அது இயல் விருதுக்குப் பெருமை என்று வாதிடுவது எவ்வகையில் நியாயம்.ஒருவருக்கு ஒரு நீதி! மற்றொருவருக்கு வேறொன்றா?

தமிழிற்காய் வாழுகின்ற பத்மநாப ஜயருக்கு இவ்விருது வழங்கப்பட்டதறிந்து இவ்விருது பற்றிய உயரிய எண்ணம் என்னுள் இருந்தது.அதுமட்டுமன்றி

சுந்தரராமசுவாமி, வெங்கட்சாமிநாதன், கே.கணேஸ், தாஸிசியஸ் என அந்தப்பட்டியல் நம்பிக்கையோடு நீண்டது.

நம்பிக்கை இன்னமும் பொய்த்துப்போய்விடவில்லை.வருங்காலத்தில் தங்களைப் பரிசீலிப்பார்கள்

என எண்ணுகின்றேன். விருதுகளை அளிக்க முற்படுவோர் படைப்பாளிகளையும் படைப்புகளையும் ஆள அறிந்து தேடுதல் வேண்டும்.அவற்றையும் அவர்களையும் தேடிவாசித்தல் உங்கள் தலையாய கடமை. அவைகள் உங்களைத்தேடி வராமாட்டாது. அப்படி நீங்கள்தேடாதவரையில் இவ்வாறான நச்சரிப்புகள் உங்களைத் தொடர்ந்த வண்ணமேயிருக்கும் என்று யாழ்மண்ணில் இருந்து 1980 களில் வெளியாகிய “புதுசு”வின் சாரத்தை இங்கு நினவுகூர்தல் சாலப்பொருந்தும்.

விருதுவழங்கல் என்பது உலகமுற்றிலும் இன்று இலக்கில்லாத வெறும் பண்டமாற்றுப் பயணிப்பாகவேயுள்ளது. இலக்கியத்தில் அல்லது மொழியில் உள்ள படைப்பை, அழகியல் பண்பை, மதிப்பை, கருவை, தகுதியானது அல்லது தகுதியற்றது எனத் தீர்மானிப்பது எது? பல்கலைகழகங்களின் அங்கீகரிப்பாளர்களா? அரசாங்க சார்பு எடுபிடிகளா? மிகுந்த வாசகர்களா?அல்லது அவரவர் எழுதிதள்ளியிருக்கிற புத்தகங்களின் தொகையா? அழகான தடித்த அட்டைகளா? உப்பிப் பெருத்த பக்கங்களா? நிறைய எழுதியுள்ளவர்களுக்குத்தான் விருதுகள் என்றால் வெறும் 1330 இரட்டை வரிகளை எழுதிய திருவள்ளுவரைக்கூட இந்த விருதுகள் காலால் உதைத்து எறிந்துவிடுமே?

எது எப்படியோ படைப்பு சார்ந்த அளவுகோலகள் புறக்கணிக்கப்பட்டு அமைப்பு சார்ந்த “பெரிய மனிதர்களை” மட்டுமே பரிசீலிக்கிற அமைப்பாக இயல் விருது அமைப்பு மாறிவிட்டதோ? என்கிற நியாயமான ஜயப்பாட்டினையும், “விருதுகளினால் இலக்கியவாதி உருவாவதில்லை. வாழ்வதுமில்லை. ஆனால் இலக்கிய முன்னோடிகளை மதிப்பதும், கௌரவிப்பதும் ஒரு சூழலின் இலக்கிய அடிப்படைகளை வலுப்படுத்தும். சில ஆதார மதிப்பிடுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும்.. தன் சாதனைகள் புறக்கணிக்கப்படுகையில் தன் தியாகம் அவமதிக்கப்படுகையில் படைப்பாளியின் அகம் கண்ணீர்வடிக்கத்தான் செய்யும். அவர்களின் கண்ணீர் ஒருபோதும் ஒருபண்பாட்டுக்கு நல்லதல்ல” என்கிற அக்கறையுள்ள வாசகங்களையும் இயல் விருது அமைப்பாளர்கள் கவனத்தில் கொள்வார்களென்று எண்ணுகின்றேன்.


elamraji@yahoo.ca

Series Navigation

author

மா.சித்திவினாயகம்

மா.சித்திவினாயகம்

Similar Posts