ஹும்

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

தமிழ்மகன்உயிரைக் கீறும் ஓசையாக இருந்தது அது. சொல்லப் போனால் மற்றவர் யாருக்கும் அப்படி ஓசை ஏற்பட்டதாகக் கேட்டிருக்கக் கூட வாய்ப்பில்லை. சுற்றியிருந்த இருபது முப்பது பேரில் ஒருவருக்குமா கேட்டிருக்காது என்று சந்தேகமாக எல்லோரையும் மிரள மிரள பார்த்தேன். இறந்துபோன அப்பாவின் உணர்ச்சியற்ற முகம் என்னை கேலியாகப் பார்ப்பது போல இருந்தது. ஆனால் அவர்தான் ஹீனசுரத்தில் முனகியது போல இருந்தது எனக்கு.

அப்பா இறந்துவிட்டார் என்று எனக்கு உறுதியாகத் தெரிந்தது. இல்லையென்றால் அவரை இப்படி எல்லா சடங்கும் முடிந்து சுடுகாடு வரை தூக்கி வந்து விறகுக் கட்டை மேல் கிடத்தியிருக்க மாட்டோம் என்பது புரியாமல் இல்லை. ஆனால் நான் கேட்டது அப்பாவின் குரல்தான்… அதில் சந்தேகமே இல்லை.

அப்பா இறந்துவிட்டார் என்று உறுதி செய்தது யார்… சொல்லப்போனால் யாரும் இல்லை. உடம்பு சில்லிட்டு இருந்தது. நாடித் துடிப்பே இல்லை என்பது பக்கத்துவீட்டு செட்டியார்தான் அம்மாவின் அழுகையைப் பார்த்துவிட்டு அவசரத்துக்குச் சொன்னது. சொல்லக்கூட இல்லை. உதட்டைப் பிதுக்கி பெருமூச்சு விட்டார். எல்லோரும் அதையே உறுதியான முடிவாக ஏற்றுக் கொண்டோம். 77 வயதில் அப்பாவின் உடம்பு வாகுக்கு நாடித் துடிப்பு என்பதே எளிதில் தெரிந்து கொள்ள முடியாததாகத்தான் இருந்தது. கையால் பார்த்தெல்லாம் அந்தத் துடிப்பை தேர்ந்த டாக்டரால்தான் இனம் காண முடியும். கையால் தொட்டுப் பார்த்து இப்படி முடிவுக்கு வந்தது சரிதானா?
“முன்னையிட்ட தீ …. தம்பி இப்படி வந்து நில்லு… முகத்தை பாத்துக்கோ… முன்னையிட்ட தீ முப்புறத்திலே… அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே…” பண்டாரம் தோளுக்கு மேல் தண்ணீர் பானையைத் தூக்கி வைத்துச் சுற்றி வரச் சொன்னார்.

அப்பா என்னை எங்கே அழைத்துச் சென்றாலும் டாக்ஸியிலோ ரிக்ஷாவிலோதான் அழைத்துச் செல்வார். தியேட்டர் என்றால் பால்கனி. சர்க்கஸ் என்றால் முன் வரிசை சோபாவில். முதன் முதலில் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றதும், லைப்ரரிக்கு அழைத்துச் சென்றதும் அப்பாதான். குழந்தைகளுக்குச் செல்லம் கொடுப்பது எப்படி என்று போட்டி வைத்தால் அப்பாவை அடித்துக் கொள்ள ஆள் இருக்க மாட்டார்கள். முதுமைக்கே உரிய இயலாமையும் எரிச்சலும் அவரை கடைசி காலங்களில் மாற்றிவிட்டது. இருந்தாலும் அப்பாவை அந்த முதுமைக்கான இலக்கணத்தில் அடக்க முடியாது. அப்பா குழந்தைத் தனமாகத்தான் இருந்தார். மைதானத்தில் கிரிக்கெட் ஆடும் பசங்களோடுதான் சகவாசம். தேர்ட் அம்பயர் வேலையெல்லாம் பார்ப்பார். கடைசிவரை நடமாட்டம் இருந்தது. அடிக்கடி லோ பிரஷர் என்று கண்ணை மூடிக் கொண்டு மயக்கத்தில் படுத்திருப்பார். மீண்டும் உற்சாகமாகிவிடுவார். நாடி ஒடுங்கிப் படுத்துக் கிடப்பார். அல்லது கம்பளி போர்த்திக் கொண்டுதான் உலாவல். “டாக்டராவது கீட்ராவது… வயித்த வெட்டிப் பார்க்கணும். கிட்னிய மாத்திப் பார்க்கணும்னு ஏதாவது சொல்லுவானுங்க… லூஸýப்பசங்க’ என ஒரே போடாகப் போட்டதில் நாங்களும் வசதியாக விட்டுவிட்டோம். இப்போது இறந்துவிட்டாரா… அல்லது அப்படியான மயக்கமான உறக்கமா என்று தெரியவில்லை.

இப்போது பாடையில் இருந்து இறக்கி வைத்தபோது வலியோடு முனகிய சப்தம் கேட்டதே… யாருக்குமே கேட்கவில்லையா?
அதிகாலையில் அம்மாவின் அலறல் சத்தம்… ‘அப்பா மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறார்டா’… நான் ஓடிவருகிறேன். அப்பாவின் தலை ஈஸி சேரில் சாய்வுப் பட்டையில் இருந்து சரிந்து ஒருபக்கமாய் கீழே தொங்கிக் கொண்டிருக்கிறது. பதட்டமாக இருக்கிறது…. அப்பாவுடன் புரூஸ் லீ படம் பார்த்தது ஞாபகம் வருகிறது. கட்லெட் வாங்கித் தந்தது ஞாபகம் வந்தது.

பண்டாரம் நிறுத்தி பானையில் இரண்டாவது ஓட்டை போடுகிறார். முதுகில் சில்லென்று வழியும் நீர். முன்னூறு நாள் சுமந்து… டிங் டிங்.. டிங் டிங்.. டிங் டிங்..

பதட்டத்தோடு தலையை நிமிர்த்தி வைத்துவிட்டு “”அப்பா அப்பா” என்கிறேன் அவர் முகத்தருகே சென்று. அது அப்பாவை எழுப்புவதற்கா, கதறலா என்று எனக்கே புரியவில்லை. அப்பாவின் மரணத்துக்காக அழுவது இதுதான் முதல் முறை… இந்த மாதிரி அழுவதை அப்பா விரும்புவாரா என்ற திடீர் சந்தேகம். ஐயோ கடைசியில் இறந்தே போய்விட்டாரா? பயம் தொற்றுகிறது… இரவு “ஃபேனை போடுடான்னா லைட்டை போட்டுட்டுப் போறியே’ என்று கடைசியாகச் சொன்னது நினைவு வருகிறது. எரிச்சலோடு லைட்டை நிறுத்தி விட்டு ஃபேனை போட்டது ஞாபகம் வருகிறது. கடைசி கட்டளை… கொஞ்சம் மகிழ்ச்சியாக அவருடைய ஆசையை நிறைவேற்றியிருக்கலாமோ என்று காலம் கடந்து தோன்றுகிறது. பையன் பின்னாலேயே தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்து “அப்பா பிஸ்கட் வேணும்’ என்கிறான். “பெசாம இருடா” என்று அதட்டுகிறாள் மனைவி. என்னையும் அறியாமல் கண் கலங்கி “”தாத்தா நம்மைவிட்டுப் போய்ட்டாருடா” என்கிறேன் மகனை அணைத்துக் கொண்டு. மகன் ‘எங்கே போய்விட்டார்?’ போல தாத்தாவைப் பார்க்கிறான்.
மூன்றாவது சுற்று… பானையில் பெரிய ஓட்டையாக விழுந்திருக்க வேண்டும். தண்ணீர் குபுக்கென்று வழிந்துவிட்டு நின்றுவிட்டது. புண்ணியாதானம் பண்றவங்களாம் பண்ணலாம்… புண்ணியாதானம் பண்றவங்களாம் பண்ணலாம்… அவசரமாக ஒரு தோராய வரிசை… எல்லோரும் ஆளுக்கு நாலனாவோ, எட்டணாவோ சொம்புத் தண்ணீரில் போட்டு நமஸ்கரித்து புண்ணியம் தேடினர்.

அப்பா முகம் தூங்கும் போது இப்படித்தான் இருக்கும்… வாயில் வெற்றிலையை நுணுக்கி சொருகி வைத்திருந்ததுதான் வித்தியாசம்… அவர் வெற்றிலை போடுகிறவர் அல்ல. எப்போதாவது மீன் குழம்பு சாப்பிட்டால் சாஸ்தரத்துக்கு ரெண்டு வெற்றிலை போட்டுக் கொள்வார். அப்பாவுக்கு இன்னும் உயிர் இருக்கிறதா? காலையில் இருந்து இத்தனை களேபரத்தில் எழுந்திருக்க மாட்டாரா? பையன் பென்சிலை கீழே போட்டாலே “”என்னடா சத்தம்… கொஞ்ச நேரம் தூங்க விட்றியா?” என்பாரே… இவ்வளவு புகை… இத்தனை அழுகை… என்னதான் லோ பல்ஸôக இருந்தாலும் இப்படி மயங்கிக் கிடக்க முடியுமா? குளிப்பாட்டும் போது எழுந்திருந்திருக்க மாட்டாரா?

“புண்ணியாதானம் பண்றவங்களாம் பண்ணலாம்… முகத்த பாக்கறவங்க பார்க்கலாம். முக்ததை பார்க்கறவங்கலாம் பார்க்கலாம்” கையில் வராட்டியுடன் பண்டாராத்தின் அவசரம். வெளியே இன்னொருவரின் பிணம் வந்துவிட்டதாம். பக்கத்திலேயே இன்னொரு விறகு அடுக்கு தயாராக இருந்தது. வந்திருக்கும் உடலை அதில் ஏற்றி வைத்து “முன்னை இட்ட தீ… முன்னூறு நாள் சுமந்து’ பாட வேறோரு பண்டாரம் தயாராக இருந்தார். அந்தப் பிணத்துக்குப் புண்ணியாதானம் செய்யவும் முகத்தைப் பார்க்கவும் இன்னொரு பானையில் தண்ணீரும் எல்லாம் சேர்ந்து குழப்பமாகத் தெரிந்தது.
கடைசியாக நாம் ஒருமுறை சோதித்துப் பார்க்காமல் விட்டுவிட்டுவிட்டோமே… நெஞ்சோடு காதை வைத்துக் கேட்டால் மூச்சுவிடுவது தெரியாதா?… பக்கத்தில் நின்றிருந்த செல்வத்திடம் நமக்கு வந்த சந்தேகத்தைச் சொல்லலாமா?

“முடிங்க சீக்கிரம்… இருட்டுதில்ல… வெளிய வெய்ட் பண்றாங்களே… உங்களை மாதிரிதானே இருக்கும் அவங்களுக்கும்?” இடுகாட்டு பணியாள் குழுமியிருந்தவர்களைப் பார்த்து மொத்தமாகக் குரல் கொடுத்தான்.
அதுதான் சாக்கென்று வராட்டியை அப்பாவின் முகத்தில் மூடுவதற்குத் தயாரானான். என் கை அனிச்சையாக அவனைத் தடுத்தது. என்னை ஆறுதலாகத் தாங்கிக் கொள்வது போல செல்வம் தோளோடு இழுத்து அணைத்துக் கொண்டான். எரிப்பதைத் தடுப்பதா? எழுவதா? என்ற குழப்பத்தில் இறைவன் விட்ட வழி என்று துணைக்குக் கடவுளைச் சேர்த்துக் கொண்டேன்.
ஏதாவது ஒரு அதிசயம் நடந்து அப்பா எழுந்து உட்கார்ந்து கொள்ளமாட்டாரா?
கடந்த ஆண்டில் ஒருமுறை அப்பாவுக்கு லோ பல்ஸ் ஆகி மூர்ச்சை ஆனபோது ஹாஸ்பிடல் கூட்டிப்போய் கரண்ட் ஷாக் வைத்து எழுப்பினோம். “இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்திருந்தா அவ்ளவுதான்” என்றான் அந்தப் பயிற்சி டாக்டர் உயிரைக் காப்பாற்றிய பெருமிதத்துடன். ஆனால் அப்போது மூச்சு ஏறி இறங்குவது நன்றாகத் தெரிந்ததே…

அப்பாவின் கால் மாட்டில் கற்பூரம் வைத்து தீப்பெட்டியை நீட்டிக் கொளுத்தச் சொன்னார். கொளுத்தினேன். திரும்பிப் பார்க்காமல் போயிடுங்க…
பாடையை இறக்கி வைக்கும்போது வலியோடு மெலிதாக முணகியது அப்பாதான். ஏற்கெனவே அவர் உடம்பு முடியாமல் இருந்தபோது, காரில் ஏற்றும்போது இப்படி முணகியிருக்கிறார். அப்பாவின் குரல் மகனுக்குத் தெரியாதா?

ஐயோ… உயிரோடுதான் அவரை எரித்துவிடுகிறோமா? அவசரமாக அப்பாவை நோக்கித் திரும்பினேன். “டேய்… டேய் வாடா” செல்வம் வெளியே இழுக்க… “”சார் திரும்பிப் பார்க்காமக் கூட்டிட்டுப் போங்க” பண்டாரமும் வெட்டியானும் அதட்டலுடன் வலியுறுத்த செல்வம் இன்னும் வேகமாக வெளியே இழுத்தான்.
“”பாடைக்கும் பூவுக்கும் ரெண்டாயிரம்தான் சார் குட்த்தாரு… இன்னும் ஐநூர் ரூபா தரணும்..” என்று குறுக்கிட்டவனை “தருவாங்க இருப்பா” என்றபடி செல்வம் என்னைப் பார்க்க நான் சுந்தரத்தின் பக்கம் திரும்பி ஜாடை காட்டினேன். ஐநூரு ரூபாயை வாங்கிக் கொண்டு, “டெத் சர்டிகேட் நானே வாங்கித் தந்துட்டமா… அதுக்குத் தனியா ஐநூர் ரூபா ஆவும்” என்றான் மறித்தவன்.

இவர்கள் எல்லாம் யார்? அப்பா இறந்த அரை மணி நேரத்தில் எப்படி தகவல் தெரிந்து வந்தார்கள். இவர்களிடம் கொடுக்கிற காசு நியாயமான தொகைதானா…?

என் பதிலை எதிர் பார்க்காமல் “காலைல வாங்க அஸ்தி எடுத்து வெக்கிறேன்” என்றான்.

பண்டாரம் ஓடிவந்து “பதினாராம் நாள் காரியத்துக்கு முன்னாளே ராத்திரி வந்துடுவேன். பசு மாட்டுக்குச் சொல்லிடுங்க… இந்தாங்க லிஸ்ட்டு… நானே வாங்கியாந்துடட்டுமா, நீங்க வாங்கி வெக்றீங்களா?”

“எவ்வளவு தரணும்?”

“நானே வாங்கியார்றதுக்கா? மூவாயிர்ரூபா குடுங்க”
கொடுக்கச் சொல்லி மறுபடி சைகை. “எரியுதா?”

“ஆமா சார்.. நாங்க பாத்துக்றோம் கிளம்புங்க. காலைல அவங்களை கொண்டாந்து கொடுக்கச் சொல்றேன் அஸ்திய… நீங்க போங்க”

“நீ செல்வம் பைக்ல வந்துடுப்பா”யாரோ சொன்னார்கள்.
உயிரோடுதான் கொளுத்திவிட்டோமா? சுடுகாட்டுக்கு வந்து எரித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது இது என்ன கொடுமையான சிந்தனை? இருக்காது. தலையில் எண்ணெயும் சீக்காயும் தேய்க்கும்போதே உறைந்து போய் கிடந்ததே உடம்பு.. “ஹும்’ என்ற அப்பாவின் முணகல் பிரமையா?

“போலாமா?” என்றான் செல்வம்.
தயாரான போது அவனுடைய பைக் கீழே சரிந்து கிடந்ததைப் பார்த்து அலுத்துக் கொண்டான். “ஜனங்களுக்கு என்ன அவசரமோ… சுடுகாட்டுக்கு வந்துகூட”

“ஹும்” பைக்கை ஒரே மூச்சில் தூக்கி நிமிர்த்தினான். அப்பாவின் அதே ஹும்.
பாடையில் இருந்து அப்பாவை இறக்கும்போது எனக்குப் பக்கத்தில் இருந்தவன் செல்வம்தான். இவன்தான் இப்படி முணகினானோ?
“”போகலாம். வேஷ்டி மாட்டிக்கப் போகுது. ஒரு பக்கமா உக்காந்துக்க. காலை வெச்சுக்கிட்டியா?”

“ம்”

எல்லோரும் தலா பைக்கிலோ, நடந்தோ அவரவர் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர். செல்வம் பைக்கைக் கிளப்பினான்.
மனம் விட்டு அழுவதற்கு மனமும் நேரமும் இப்போதுதான் அமைந்தது எனக்கு. பைக்கின் பின்னால் அமர்ந்து முழுசாக அழுதேன். அப்பா முதன் முதலில் என்னை இப்படி ஸ்கூட்டரில் ஸ்கூல் அழைத்துப் போனதில் இருந்து ஞாபக வெள்ளம் கரை புரண்டது. காலில் சுளுக்கு பிடித்த போது அப்பா அவர் மடியில் என் காலை எடுத்து வைத்துக் கொண்டு இரவெல்லாம் அழுத்திக் கொண்டிருந்த அடுத்த சம்பவம். அவருடைய கைச் சூடு நேற்றுவரை என் உடம்பில் பதிந்த ஞாபகம்… அவர் கடைசியாக என்னைத் தொட்ட இடம் என்னிடம் இருந்தது. அப்பா எங்கே?…

உயிர் இருந்ததா என்று கடைசியாக ஒருமுறை பார்த்திருந்திருக்கலாமோ?


tamilmagan2000@gmail.com

Series Navigation

தமிழ்மகன்

தமிழ்மகன்