ஸ்டவ்

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

இரா.முருகன்


ஆறுமுகம் வாத்தியார் வீட்டில்தான் இது ஆரம்பித்தது.

அவங்க வீட்டம்மா மீன் கழுவிய தண்ணீரையும் செதிலையும் கொட்டக் கொல்லைக் கதவைத் திறந்தபோது கழுநீர் எடுக்கத் தகரக் குடத்தோடு பங்காரம்மா உள்ளே நுழைந்தாள்.

உங்க எருமைக் கன்னுக்குட்டி இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்திடும்.

வாத்தியார் வீட்டம்மா சொன்னாள்.

பங்காரம்மா மாடு வளர்க்கிறாள். நாலும் எருமை. ஒரு பசு கூட கிடையாது. எருமைப்பால் தான் வேண்டும் என்று டாக்கடைக்காரர்கள் கேட்கிறார்கள்.

டாக்கடைக்கு ஊற்றியதுபோக அவ்வப்போது ஆழாக்குப் பாலை தெருவில் முறை வைத்து வினியோகித்துப் பிரதி உபகாரமாக வீடுகளில் சேரும் கழுநீரை எருமைக்கு வைக்க எடுத்துப் போய் ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறாள் பங்காரம்மா.

எருமைகள், டாக்கடைக்காரர்கள், தெருவாசிகள், பங்காரம்மா எல்லோரும் சந்தோஷமாக இருந்ததில் யார் கண் போட்டார்களோ, முந்தாநாள் பங்காரம்மாவின் ஒரு எருமைக் கன்றுக்குட்டி மேய்ச்சலுக்குப் போனது திரும்ப வரவே இல்லை.

வடமேற்கு மூலையில் இருந்து முண்டாசு தரித்த நாலு பேர் வந்து அதைக் கொண்டு போயிருக்கிறார்கள். திரும்பக் கிடைப்பது துர்லபம்.

பஞ்சாங்கக்காரர் சோழி உருட்டிச் சொன்னபோது பங்காரம்மாவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. இதனால் கறவை குறைந்து டாக்கடைக் காசு வரவு கம்மியாகலாம் என்றாலும், பஞ்சாங்கக்காரருக்குக் கொடுக்க வேண்டிய தட்சிணையை நிறுத்தவில்லை. அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

எங்க வீட்டு ஸ்டவ் பஞ்சாங்கக் காரர் மாதிரித்தான். அசைவம் ஒத்துக்காது. மீன் வறுக்கணும்னா அணைஞ்சு போகும். நல்லாக் குறி சொல்லுது நாலு நாளா. அதுதான் சொன்னது உங்க எருமைக் கன்னுக்குட்டி .. அந்தோ பாருங்க தெருமுனையிலே .. வந்துட்டு இருக்கு

பங்காரம்மா புளித்த வாடையடிக்கும் கழுநீரோடு கொல்லைப்படி இறங்கியபோது எருமைக் கன்னுக்குட்டி முண்டியடித்து அம்மா மாட்டிடம் ஓடி மடுவில் முட்டிக் கொண்டிருந்தது.

ஆறுமுகம் வாத்தியார் வீட்டு ஸ்டவ் பஞ்சாங்கக்காரருக்குப் போட்டியாக முளைத்தது அப்போதுதான்.

வாத்தியார் வீட்டம்மா மதியம் சாப்பிட்டு முடித்து விஸ்தாரமாக ஒரு தூக்கம் போட்டு, துவைத்துக் காயப் போட்டிருந்த துணிமணிகளை எடுத்து மடித்து வைத்ததும் வீட்டில் ஸ்டவ் ஜோசியம் ஆரம்பிக்கும். வாத்தியார் பள்ளிக்கூடத்தில் பிராணவாயு தயாரிக்கும் முறை பற்றி ஏழாம் வகுப்புக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் நேரம் அது.

ஞாயிற்றுக்கிழமைகளிலும், தவிர மாதத்தில் மூன்று நாளும் ஜோசியம் கிடையாது. ஆறுமுகம் வாத்தியாரும் பிள்ளைகளும் வீட்டில் இருப்பது முதலாவதற்குக் காரணம். வயது ஏறிக் கொண்டிருப்பதால், வீட்டில் இருக்கும் போது வாத்தியார் சும்மா இருப்பது அடுத்ததற்குக் காரணம்.

தெருவில் எல்லாப் பெண்களும் வாத்தியார் வீட்டுக் கூடத்தில் வழிபாடு போல் வட்டமாக உட்கார, நடு நாயகமாக ஸ்டவ். அதன் இரும்புத் தட்டின் மேல் விரலை வைத்துக் கொண்டு வாத்தியார் வீட்டம்மா. அவளுக்கு எதிர்ப்புறம் அதே போல் ஸ்டவ் மேல் விரலை வைத்துக் கொண்டு யார் உட்கார்வது என்பது சீட்டுக் குலுக்கல் மூலம் தினசரி தேர்ந்தெடுக்கப்படும்.

யார் கேட்கலாம், எது பற்றிக் கேட்கலாம் என்று எல்லாம் கட்டுப்பாடு இல்லை. ஆனாலும் கோடி வீட்டுப் புஷ்பராணி எப்போது பூப்படைவாள், ரங்கநாயகியம்மாள் பெண் கல்யாணமாகி நாலு வருஷம் ஆகியும் வயிற்றில் புழு பூச்சி இல்லாமல் இருப்பதற்குக் குறைபாடு அவ்வளிடம் இருக்கிறதா, அவள் வீட்டுக்காரனிடம் இருக்கிறதா, சிரஸ்தாரின் பெண் மாட்டுக்காரப் பையனுடன் ஓடிப் போனாளா வக்கீல் குமஸ்தன் குப்புசாமியின் மருமகனோடு போனாளா போன்ற விஷயங்களைப் பற்றி ஜோசியம் கேட்கவேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள் வாத்தியார் வீட்டம்மா.

ஆறுமுக வாத்தியாருக்கு சிரஸ்தார் உறவு என்றாலும், மற்றவற்றை அவள் ஏன் வேண்டாம் என்று தீர்மானம் எடுத்தாள் என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் அவளிடம் எதிர்த்துக் கேட்க முடியாது. ஸ்டவ் அவளுடையது. அது எதைப் பற்றி ஜோசியம் சொல்லலாம் என்று தீர்மானிக்கும் முழு உரிமையும் அவளுக்கே உண்டு என்பதை தெருக்காரப் பெண்கள் எல்லோரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டார்கள்.

என் மகனுக்கு எப்போ வேலை கிடைக்கும் ?

அனுமதிக்கப்பட்ட கேள்வி. கேள்வி கேட்பவர் கோடியில் இருந்து குரல் எழுப்ப, வேறு யாராவது அதைச் சத்தமாகக் கூட்டத்துக்கு ஒலிபரப்புவார்கள்.

ஸ்டவ்வுக்கு அதைச் சொல்லும் உரிமை ஆறுமுகம் வாத்தியார் வீட்டுக்கார அம்மாவுக்குத்தான் உண்டு.

பிரியமாக ஸ்டவ்வைப் பார்த்தபடி அவள் கேள்வியைத் திரும்பச் சொல்வாள்.

நான்கு மூலைக் கால்களில் ஒன்றை மெல்ல உயர்த்தி ஸ்டவ் அதைக் கீழே கொண்டு வரும். அப்புறம் திரும்பவும் கால் உயரும். அப்படி உயரும்போது அது கீழே சரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இரண்டு பக்கத்திலும் விரலால் பிடித்தபடி உட்கார்ந்திருப்பது.

ஸ்டவ் காலை உயர்த்தி அடித்துக் கொண்ட எண்ணிக்கையை வைத்து இந்தக் கேள்விக்குப் பதில் கணித்துக் கொள்ளப்படும்.

இன்னும் ரெண்டு வருசத்துலே கிடைச்சுடுமாம்.

வருஷமா மாசமா ?

இது ஆமா அல்லது இல்லை என்று பதில் எதிர்பார்க்கும் கேள்வி.

ஒற்றைப்படையாக அடித்தால் ஆம். இரட்டைப்படை என்றால் இல்லை.

ஸ்டவ் ஒரே ஒருதடவை திரும்ப அடிக்க, நாவல்மர வீட்டம்மா மகனுக்கு ரெண்டு மாசத்தில் வேலை கிடைக்கும் என்று உத்திரவாதம் தரப்படும்.

இன்னும் திசை சம்பந்தமான கேள்வி என்றால் எந்தக் காலை உயர்த்தி அடிக்கிறதோ அதைப் பொறுத்துக் கிழக்கு, மேற்கு என்று தெரியும். பங்காரம்மா வீட்டு எருமைக் கன்றுக்குட்டி விஷயத்தில் தீர்மானமானது அப்படித்தான்.

ஐந்து மணிக்கு வாத்தியார் சைக்கிளில் வந்து இறங்கும்போது கூடம் காலியாகிக் கொண்டிருக்கும். அவர் ஒரு நாளாவது முன்னால் வந்து, கூடத்தில் கூட்டம் நிறைந்திருக்கும் போது எல்லோர் முன்னாலும் நின்று அறிவியல் நோக்கு ஏன் இருக்க வேண்டும் என்று சிறு சொற்பொழிவு செய்யத் தீர்மானித்திருந்தார். ஒரு ஞாயிற்றுக்கிழமை அதைப் பற்றி நிறைய யோசித்து என்ன பேசுவது என்று தயார் செய்து அவ்வப்போது தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டும் இருந்தார். ஆனாலும் கடைசி வகுப்பு தினமும் எடுக்க வேண்டிய கட்டாயம் என்பதால், வீட்டுக்குத் திரும்ப நேரமாகி விடுகிறது.

பள்ளிக்கூடத்தில் முழுப் பரீட்சை விடுமுறை வரும் நாளை அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, வாத்தியார் வீட்டம்மா ஸ்டவ்வோடு சமையல் அறைக்குள் நுழைந்து அதைப் பற்ற வைப்பாள். வாத்தியார் வீட்டுக்குள் வந்ததும் அவருக்குக் கட்டாயம் காப்பி கொண்டு வந்து வைக்க வேண்டும்.

ஆண்களே பங்குபெறாமல் நடக்கும் ஸ்டவ் ஜோசியத்துக்கு ஒரு உச்சிப் பொழுதில் பஞ்சாங்கக்காரரும் வந்தபோது அவரைத் திரும்பப் போகச் சொல்ல வாத்தியார் வீட்டம்மாவுக்கு மனம் வரவில்லை.

அவர் கொஞ்சம் சீக்கிரமே வந்துவிட்டிருந்த காரணத்தால், துடைத்து எடுத்து வந்து கூடத்தில் வைத்த ஸ்டவ்வைத் திரும்பச் சமையலறைக்கு எடுத்துப் போய் அவருக்காகக் காப்பி தயாரிக்கப் பாலைச் சூடாக்க ஆரம்பித்தாள் அவள். ஸ்டவ் பொறுமை இல்லாமல் காலைத் தூக்கியதில் பால் பாத்திரம் சரிய அதைக் கோபித்துக் கொண்டது அப்போதுதான்.

அப்புறம் ஸ்டவ் கூடத்தில் மட்டும், அதுவும் கேட்கும்போது மட்டும் ஜோசியம் சொன்னது.

ஸ்டவ் ஜோசியம் சொல்லும்போது வாத்தியார் வீட்டம்மா கிழக்குப் பார்த்து உட்கார்ந்திருப்பது அவசியம் என்றும் அதை இருத்திய இடத்தில் சின்னதாக ஒரு கோலம் போடலாம் என்றும் பஞ்சாங்கக்காரர் சொன்னது உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

ஸ்டவ் ஜோசியம் சொல்லும்போது அவர் கையில் சோழிகளை உருட்டிப் போட்டு தன் ஆருடம் மூலம் அதை எல்லாம் சரி பார்த்துக் கொண்டிருந்தார். அவர் திரும்பப் போகும் போது எந்தக் கடையில் வாத்தியார் வீட்டம்மா மண்ணெண்ணெய் வாங்குகிறாள் என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டு போனார்.

தன் வருமானம் குறைந்தாலும், தொழில் முறைப் போட்டி இல்லாமல், ஸ்டவ் ஜோசியத்தை இன்னும் சிறந்ததாகச் செய்ய அவர் யோசனைகள் சொன்னதைத் தெருவில் எல்லோரும் மனம் திறந்து பாராட்டினார்கள். பஞ்சாங்கக்காரர் ஒரு மகான் என்று பொதுவாகக் கருத்துச் சொல்லப்பட்டது. அவர் தீர்க்காயுசாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்கள். ஆனாலும் அவர் இன்னும் எத்தனை வருடம் ஆயிசோடு இருப்பார் என்ற கேள்வியை வாத்தியார் வீட்டம்மா ஸ்டவ்விடம் கேட்க அனுமதிக்கவில்லை.

பஞ்சாங்கக்காரரைத் தொடர்ந்து, அண்டை அயலில் இருக்கும் ரிட்டையர் ஆன ஆண்கள் வர ஆரம்பித்தார்கள். ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர், ரிடையர்ட் ஸ்டேஷன் மாஸ்டர், ரிடையர்ட் கான்ஸ்டபிள் என்று பகலில் பெண்களோடு வாத்தியார் வீட்டுக் கூடத்திற்கு வந்தபோது வாத்தியார் வீட்டம்மா அவர்களை வா என்றும் சொல்லவில்லை. திரும்பப் போகவும் சொல்லவில்லை. ஆனாலும் அவர்கள் நாட்டு அரசியல், சர்வதேசப் போர், அமைதி விவகாரங்கள் பற்றியெல்லாம் ஜோசியம் கேட்டது ஸ்டவ்வுக்குப் பிடித்தாலும் வாத்தியார் வீட்டம்மாவுக்கும் மற்றவர்களுக்கும் பிடிக்கவில்லை.

இதுக்கெல்லாம் தான் தினசரிப் பேப்பர் இருக்கே. நாள் முழுக்க அதை வாசிச்சுத் திருப்திப்படாம சாயந்திரம் லைப்ரரிக்கும் போய் இன்னும் கொஞ்சம் படிச்சு, பார்க் பெஞ்சுலே உட்கார்ந்து கதைக்கிறது போதாதாமா ? ஸ்டவ் ஜோசியத்தை முக்கியமான விஷயத்துக்கு மட்டும் தான் உபயோகப்படுத்தணும்னு இவங்க கிட்டே எப்படிச் சொல்றது என்று அவர்கள் முணுமுணுத்தார்கள்.

இந்தத் தெருவுக்கு மட்டுமாக இருந்த ஸ்டவ் ஜோசியம் பற்றிக் கேட்டு அடுத்த தெரு, அதற்கும் அடுத்த தெரு, ஊர்க்கோடியில் இருந்து எல்லாம் கூட்டம் வர, இதேதடா பெரிய சங்கடமாப் போச்சே என்று வாத்தியார் வீட்டம்மா கவலைப்பட்டாள்.

ஜோசியத்துக்குக் காசு வாங்கலாமா என்று வாத்தியாருக்குக் காப்பி போடப் போனபோது அந்தரங்கமாக ஸ்டவ்வைக் கேட்டபோது அது எதுவும் சொல்லவில்லை. சமையலறையில் ஜோசியம் சொல்ல வேண்டாம் என்று பஞ்சாங்கக்காரர் வந்தபோது அவள் கண்டித்ததை அது நினைவு வைத்திருக்கிறது என்று அவளுக்குப் புரிந்தது.

தினசரி வாசலை அடைத்துக் கொண்டு நிற்கும் கூட்டம் வாத்தியார் வீட்டமாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தோட்டத்தில் பீர்க்கங்காய் ஒருநாள் களவு போனது. இன்னொரு நாள் வாசல் திண்ணைக் கொடியில் போட்டிருந்த அவளுடைய பழம்புடவையைக் காணோம். கூடத்தில் பாக்குவெட்டி கூடக் காணாமல் போய்விட்டது.

இதையெல்லாம் ஸ்டவ்விடம் கேட்கலாம் என்றால், அத்தனை பெரிய கூட்டத்தில் பீர்க்கங்காயையும், பழம்புடவையையும், பாக்குவெட்டியையும் பற்றிக் கேட்பதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. சர்வதேச அரசியல் போல் இதுவும் முக்கியமில்லாத விஷயம் என்று யாரேனும் நினைக்க இடம் உண்டு.

மேட்னி சினிமா விட்டதற்கு ஈடான கூட்டம் வாத்தியார் வீட்டிலிருந்து ஒவ்வொரு சாயந்திரமும் கலைந்து போவதைத் தினமும் சைக்கிளில் வந்து இறங்கும் வாத்தியார் திருப்தியோடு பார்த்துக் கொண்டிருந்தார். இன்னும் ஆறே நாளில் முழுப்பரீட்சை விடுமுறை வந்துவிடும். அவர் வீட்டில் இருப்பார். இத்தனை பெரிய கூட்டத்துக்கு முன்னால் வீட்டுத் திண்ணையில் நின்றபடி அறிவியல் நோக்குப் பற்றி, குடுவையில் பிராணவாயு தயாரிப்பது, சுற்றுச் சூழல் சுகாதாரம் பற்றி எல்லாம் விவரமாக எடுத்துச் சொல்வார்.

அவர் இரவு வெகுநேரம் கண்விழித்துத் தன் பிரசங்கத்தைத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கும்போது அவர் வீட்டுக்காரம்மா ஸ்டவ் ஜோசியத்தை நிறுத்திவிட என்ன செய்யலாம் என்று யோசித்தபடி தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள்.

முழுப்பரீட்சை விடுமுறை ஆரம்பிப்பதற்கு முந்திய நாள் வாத்தியார் வீட்டு ஸ்டவ் திடாரென்று மெளனமானது. யார் என்ன கேள்வி கேட்டாலும் காலைத் தூக்கவே இல்லை அது.

வாத்தியார் அடுத்தநாள் தான் நடத்தப்போகும் பிரசங்கத்தை மனதில் அசைபோட்டபடி சைக்கிளில் வந்து இறங்கும்போது கூடம் ஈகாக்கை இல்லாமல் காலியாகி இருந்தது.

விஷயத்தைக் கேள்விப்பட்ட அவருக்கு ஏகப்பட்ட வருத்தம் என்றாலும் காப்பி போட ஸ்டவ்வை உபயோகித்தபோது அவர் வீட்டம்மா முகத்தில் சந்தோஷம் தெரிந்தது.

வாத்தியார் வீட்டம்மா .. விஷயம் தெரியுமா ? பஞ்சாங்கக்காரர் வீட்டு ஸ்டவ் ஜோசியம் சொல்ல ஆரம்பிச்சுடுச்சாம் .. அவரும் அவங்க வீட்டம்மாவும் கூடத்துலே ஸ்டவ்வோட உட்கார்ந்திருக்காங்க .. ஒரு கேள்விக்கு நாலணா தட்சணை .. மூணாக் கேட்டா எட்டணா தானாம் ..

பங்காரம்மா அடுத்த நாள் காலையில் கழுநீருக்கு வந்தபோது ஆழாக்குப் பாலோடு தகவலையும் கொடுத்துப் போனாள்.

எட்டணா ரொம்ப ஜாஸ்தி என்றாள் வாத்தியார் வீட்டம்மா தன் ஸ்டவ்வைப் பார்த்தபடி. மீன் வறுக்கத் தோதாக எரிந்து கொடுத்தபடி அது சும்மா இருந்தது.

ஆறுமுகம் வாத்தியார் திண்ணையில் ஏறி நின்று பஞ்சாங்கக்காரர் வீட்டில் கூடிய கூட்டத்தைப் பார்த்தார். தன் சொற்பொழிவை மனதுக்குள் சொல்ல ஆரம்பித்தார்.

***

eramurug@yahoo.com

Series Navigation