ஸி. செளரிராஜன் கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

ஸி. செளரிராஜன்


1. சிறு மீன்

கடலில்
வால் துடிப்பின்
சக பயணத்தில்
புது உலகம்
தசைச் சுவரோ ?

இதுவரை கேட்காத
சப்தங்கள்
காதைக் குடைகின்றன

பிரளயம் வடியக்
கோட்டையாய்…
எனக்குக் கீழே
என் சகாக்களின்
தசைக் கூழ்!

இன்னும் சிறிது நேரத்தில்
நானும் ஜீரணம் ஆவேன்.

குகைவழி பார்த்ததில்
வானத்தில் என்ன
அத்தனை சதுரங்கள் ?


2. முகம் சொரிந்த கண்ணீர்

அந்த தார்ச்சாலையின் ஓரம்
புஜ பல பராக்கிரமத்துடன்
பல வர்ணங்களில்
மிகவும் கம்பீரமாய் நிற்கிறார் அனுமன்!

அவர் மீது ஆங்காங்கே
கடந்து செல்வோர் வீசிய
சில நாணயங்கள்

கலைத்திறன்
என்றும் ஆதரவை சம்பாதிக்கிறது
வெயிலுக்கு மரம் நிழலில்
ஒதுங்கி இருந்த ஓவியனுக்கு
உடல் நலமில்லாத குழந்தையின் நினைவு . . .

வழக்கமான நேரத்திற்கு முன்பே
பல மணி நேரம் செலவிட்ட
அந்த ஓவியத்தை
கால்கள் படலாகாது என
மனமில்லாமல் அழிக்கிறது அவன் கை
…. வரைந்த அதே கை!

அழித்து முடித்ததும்
வியர்வை என
அவன் முகம் கண்ணீர் சொரிந்தது.

srirangamsowrirajan@yahoo.co.in

Series Navigation

ஸி. செளரிராஜன்

ஸி. செளரிராஜன்