வைரமுத்துக்களின் வானம் -9

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

ருத்ரா


வாளால்

வெட்டிவீழ்த்தப்படுமுன்

விக்கிரமாதித்தனிடம்

வேதாளம்

கேட்கும் கேள்வியைப்போல்

ரத்தம் சொட்ட சொட்ட

கேட்டிருக்கிறாய்….

‘தொடரும் சிறுகதை ‘

என்ற தலைப்பில்.

தர்க்கம் எனும்

வீச்சரிவாளில்

மானிடத்தை

இரண்டு துண்டு

ஆக்கியிருக்கிறாய்.

காதல் ஒரு துண்டு.

காமம் ஒரு துண்டு.

சினிமாப்பாட்டுக்கு

நீ செய்த

மாமிச வியாபாரத்தை

சற்று எண்ணிப்பார்.

கண்களில்

காதல் மகரந்தங்களை

தூவிவிட்டு

கால் கொலுசு

சத்தங்களில்

முதல் இரவுகளை

அரங்கேற்றம் செய்யும்

எழுத்துகள்

எத்தனை தந்திருக்கிறாய்.

காதல் என்ற தலைக்கு

காமம் என்ற உடல்

எப்போதும் ஒட்டுவதே

இல்லை.

உளவியலுக்கும்

உடற்கூறுகளுக்கும்

இடையே ஓடும்

அந்த பூமத்திய ரேகை

உண்மையில்

கண்ணுக்கு தெரியாத

ரம்பம் தான்.

அந்த ரம்பத்தை வைத்து

இந்த இளசுகளை

அறுத்து அறுத்து

சுடச் சுட

அவர்களுக்கு

எத்தனை தடவை

இரத்த சூப் கொடுத்திருக்கிறாய். ?

உள்ளத்தின் காதல்

உடலின் காமத்துக்குள்

ஊடுருவும்

ரசாயனத்தை

ரசம் ஆக்கிய நீ

இப்போதும் கூட

ஒரு விரசத்தை

அதிரசம் ஆக்கும்

அதிசயத்தை

அற்புதமாய்த்தான் செய்திருக்கிறாய்.

நியூயார்க் காளியிடம்

நியாயம் கேட்பது இருக்கட்டும்.

உன்னிடம்

தடுமாறிக்கொண்டிருக்கும்

தராசு தட்டுகளை

கொஞ்சம் உற்றுப்பார்.

சந்தை வியாபாரியாவது

ஒரு தட்டில்

கிலோ படிக்கல்லையும்

இன்னொரு தட்டில்

பொருளையும் வைத்து

விலை கூவிக்கொண்டிருப்பான்.

சினிமாச்சந்தையிலோ

உன் காதல் பாட்டின்

அந்த தராசு தட்டுகள்

இரண்டிலுமே

காதலின்

மாமிசம் நாறும்

காமம்தானே

திரைகள் தோறும் வழிந்தது.

அது போதாது என்று இப்போது

மனிதனின் தலைக்கறிக்குள்

தறி போட வந்திருக்கிறாய்..

உனது உடல் எனும்

கல்லாப்பெட்டியின் மீது

கவிதைத்தலை எனும்

சுருதிப்பெட்டி

மாறிப்போய்

உட்கார்ந்ததைப் பற்றி

எப்போதேனும்

அந்த காளியிடம்

நியாயம் கேட்டிருக்கிறாயா ?

மனிதனின்

முண்டம் மட்டும் ஒன்று தான்

ஆனால்

தலைகளோ ஆயிரம்.

ஆயிரம் தலை வாங்க

ஆவேசமாக வந்திருக்கும்

அபூர்வசிந்தாமணியாய்

புதிதாக ஏதோ

தலைக்கும் உடலுக்கும்

இடையில் உள்ள

முரண்பாடுகளின்

முண்டகோபநிஷதம் பற்றி

எழுத்தியிருக்கிறாயே ?

உன் கையில்

எத்தனை தலைகளை

அப்போதைக்கு அப்போது

மாற்றுவதற்கு

நீ வைத்திருக்கிறாய் என்று

உனக்கு தெரியுமா ?

தேனி சந்தையில்

துணிக்கூடாரம் போட்டு

‘மலைப்பாம்பு உடலில்

பெண்ணின் தலை ‘என்று

பெரிய எழுத்து

விக்கிரமாதித்தன் கதையை

தடவி தடவி படிக்கும்

அந்த மக்களுக்கு

வித்தை காட்டுபவன் போல வந்து

எப்படி இந்த

செப்படிவித்தை காட்டினாய். ?

அந்த பத்தாம்பசலி

வேதாளத்துக் கேள்வியை

கம்பியூட்டர் யுகத்து

இந்தியப்பெண்ணிடம்

கேட்டிருக்கிறாயே

உன் பாமரத்தனத்தை

என்னென்று சொல்வது ?

கணவனின் தலைமயிர்

ஒன்றிலிருந்து

‘க்ளோனிங்க் ‘ செய்து

அவனை

அப்படியே அச்சடித்து

உயிர்ப்பித்து

உலகத்தையே

அதிசயிக்க வைக்கும்

விஞ்ஞானப்பெண்ணல்லவா

அந்த ‘புதுமைப்பெண் ‘.

உடம்புக்கு ஒட்டாத

உள்ளம்

உள்ளத்துக்கு ஒட்டாத

அறிவு

அந்த அறிவுக்கு ஒட்டாத

சிந்தனை

அந்த சிந்தனைக்கு ஒட்டாத

கற்பனை

என்று

துண்டு துண்டாய் வாழும்

நம் பாரத தேசத்து

துண்டுகளில்

நீயும் ஒரு துண்டு தானே!

குப்பைத்தொட்டியில்

போட வேண்டிய

குதர்க்கங்களுக்கெல்லாம்

எதற்கு இப்படி

மாவிலை தோ ‘ரணங்கள் ‘ கட்டி

மனம் மயங்கிக்கொள்கிறாய் ?

இதே

நியுயார்க் தேவியை

வட்டமடிக்க

ஒரு சமாதான

வெள்ளைப்புறாவை

அற்புத கவிதையாக்கி

பறக்க விட்டிருந்தாய்.

ஐ.நா.க்காரர்களின்

விருந்துக்குள்

அது

காணாமல் போய்விடுமோ

என்று மிகவும்

கலவரம் அடைந்தாய்.

ஆனால்

உன் அம்மாவின்

பாசத்தில்

உன் வீட்டுச்சட்டியில்

குருமா வாசனையுடன்

ஒரு பறவை

பலியாகிக்கொண்டிருந்ததை

கவிதை கொப்பளிக்க

வடித்துவைத்தாய்.

கோழிக்கும்

புறாவுக்கும்

என்ன வித்தியாசம்.

உயிர்க்கொலை வேண்டாம்

என்று

உன் வீட்டிலிருந்து அல்லவா

தொடங்கவேண்டும் ?

‘சின்ன சின்ன ஆசை ‘ என்று

விருது வாங்கிய

உன் பாட்டில் கூட

அந்த இருட்டு மூலை

ஒளிந்து கிடக்கிறது.

சின்னதாய் ஒரு ‘ஸேடிசத்தையும் ‘

வெளியிட்டிருந்தாய்.

‘மீன் பிடித்து மீனை

விட்டு விட ஆசை ‘…

அந்த அழகிய கவிதைக்குள்

அப்படி ஒரு தூண்டில்முள்ளா ?

சுதந்திரமாய் இருக்கும்

மீனிடம்

துள்ள துடிக்க வைக்கும்

ஹிட்லர் விளையாட்டு

எப்படி கவிதைவேடம் பூண்டது ?

அதனால் தான்

உன் தாய் தந்த

கருவாட்டுக் குழம்பு

உனக்கு ருசி தந்தது.

போர் வேண்டாம் என்று

அந்த வெண்புறாவுக்கு

உன் கசாப்புக் கத்தி

விடுமுறை கொடுத்தது

நிச்சயமாய்

‘மானுட நேயம் ‘ தான்

என்று எப்படி நம்புவது ?

உன் நாக்கு

உன்னிடம் ரகசியமாய்

பிறாண்டினால்

‘ஆத்தா இந்தா புறா.

இதிலும்

உன் மசாலா

கைவண்ணம் காட்டி

உன் புள்ளைக்கு

குழம்புவை ‘

என்று கூடச் சொல்லுவாய்.

அப்புறம்

ஐ.நா வாவது

ஆட்டுக்குட்டியாவது.

சுதந்திரச் சிலைகூட

சுக்கா வறுவலாகிவிடும்.

ஆனால்

‘கொல்லானாக

புலான் மறுத்தானாக

எல்லா உயிரும்

கைகூப்பித்தொழுபவனாக ‘

விளங்கும் ‘மா மனித நேயம் ‘

எப்போது

உன் கவிதைக்குள்

கருவுயிர்க்கப் போகிறது ?

‘மெல்லிய பாசம்

எனும் என் கவிதையின்

மயிலிறகை பிய்த்துப்பார்க்கும்

மந்திகளைப்பற்றி

எனக்கு கவலையில்லை ‘

என்று

நீ ‘நற நறக்கலாம் ‘.

அதுவும்

அந்த ஆயிரம் முகங்களுள்

ஒன்று தான்.

எனக்கும் அது பற்றிக்

கவலையில்லை.

ஏனென்றால்

ரகசியமாய் வந்து

உன்னைத்தழுவிய

அந்த ‘மா முருகனுக்கே ‘

ஆறு தலைகள்

வேண்டியிருக்கும்போது

மனிதப்பூச்சிகளான

நமக்கு ஆயிரம் தலை

போதாது தான்.

‘சஹஸ்ர சீர்ஷம் சஹஸ்ராக்ஷம் ‘

என்று

புருஷ சூக்தம் புகல்கின்றது.

ஆயிரம் தலையும் ஆயிரம் கண்ணும்

உடைய

உயிர்த்தொகுதியிடம்

நாம் காட்டும் ‘மா மனித நேயமே ‘

எல்லா இறைவன்களையும் விட

மிகப்பெரியது.

இந்த ‘இயற்கைநேயம் ‘ நோக்கி

உன் முகம்

எப்போது பார்க்கப்போகிறது ?

ஆடு கோழி பலி எதிர்ப்பு

என்னும் கீழ்த்தரமான

அரசியல் அல்ல இது.

வள்ளலார் அன்று விரித்த கடை.

உள்ளங்கள்

வசூல் ஆகவில்லை என்று

கடை மூடப்பட்டு விட்டது.

உன் சினிமாவின்

கோயம்பேட்டுக்கடையை

மூடி விட்டு

இந்த சின்ன

பெட்டிக்கடையை

திறந்து பாரேன்.

பிரபஞ்சங்கள் புரியும்.

சேவலை மட்டும்

‘அலாரமாக ‘ வைத்துக்கொண்ட

அந்த ‘முருக ‘ தாத்தாக்களின்

பேராண்டியே!

கோழி மட்டும்

என்ன பாவம் செய்தது ?

நூற்றாண்டுகளை

நொறுக்கித்

தள்ளிவிட்டுவந்து

அவன் சொன்ன சேதியில்

அந்த ‘உயிர் நேயமும் ‘

உதயமாக வேண்டும்

என்று தானே

இந்த சூரசம்ஹாரம் எல்லாம்.

அப்புறமும்

என் உடல் வளர்க்க

மற்ற உடல்கள் வேண்டும்

என்ற வெறிபிடித்த

ருசியின்

அந்த ‘அசுர ‘த்தலைகள்

என்னத்துக்கு ?

‘யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘

என்றவன் ரத்தத்தில்

வந்த கவிஞ்னே!

நீ எப்படி இந்த

உழக்கினில்

கிழக்கு மேற்கு பார்த்தாய். ?

அமெரிக்கா-வாழ்

இந்தியரை நோக்கி

எதற்கு இப்படி ஒரு

ரத்தம் தோய்ந்த கணை ?

நீ விட்ட கணை

அங்கே பாய்வது இருக்கட்டும்.

உன் மார்பை உற்றுப்பார்.

அதில் இரத்தம் வடிகிறது அல்லவா

நீ எய்த

உனது அம்புக் காயத்துக்கு

சிகிச்சை செய்ய

முதலில்

ஆம்புலன்சுக்கு

ஃபோன் போடு.

***
( குமுதம் 17.11.03)
epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா