வேத வனம் விருட்சம் 97

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

எஸ்ஸார்சிநதிகள் நன்கு பாய்க
காற்று இனிதே வீசுக
வேள்வி இவண் நிகழட்டும்
பனிச்சிகரம் மலைஊற்று ஒடும்நீர் வான்மழை
மங்கலம் தருக
பிரகசுபதி எம் விருப்பம் அறியட்டும்
காமன் எங்களை அனுசரிக்கட்டும்
இந்திர அரசன் எமக்கு செல்வம் தருவோன்.
ஆயிரம் கைகள் ஆயிரம் கண்கள் ஆயிரம் கால்கள்
உடைய புருடன்
புவியில் பத்து அங்குலம் ஆக்கிரமித்தான்
மூன்று கால்களொடு விண்ணில் ஏறினான்
ஒருகால் புவியிலே இருந்தது
உண்ணுபொருள் உண்ணாப்பொருள்
அத்தனையிலும் வியாபித்தான்
அத்தனை உயிர்களும் அவனுக்கு ஒரு கால்
மூன்று கால்கள் விண்ணிலே அமுதாகி நின்றன
அப்புருடனே பகுக்கப்பட்டான் இப்படி
முகம் பிராமணன்
இரு கைகள் க்ஷத்திரியன்
நடுவே வைசியன்
பாதங்கள் சூத்திரன்
மனம் நிலா
கண் சூரியன்
அக்கினியும் இந்திரனும் வாய்
பிராணன் காற்று
நாபி வானம்
சிரம் வான்
இருபாதங்கள் புவி
செவி திசைகள்
இப்படியாய் உலகம் ஆதியில்.
விராடன் முன்னேயும்
புருடன் பின்னேயும் புவியை ஆக்கிரமித்தனர்
வசந்தம் நெய்யாகி
கோடை சமித்தாகி
காற்றடி காலம் வந்தது
முதல் மழையால் புருடன் தெளிக்கப்பட்டான்
குதிரை பசு ஆடுகள் அப்போது பிறந்தன
ருக்கு சாமங்கள் சனித்தன
சந்தம் தோன்றி யஜுர் வந்தது
தயிரும் நெய்யும் வந்து குவிந்தன
வாயு சேர் உயிர்களும் வன விலங்குகளும் தோன்றின
வேள்வியை விசாலமாக்கும் போது
சமித்துக்கள் ஏழும்
இருபத்தொன்றும் சேர்ந்தன
சோமன் அங்கே தோன்றிட அவனிடமிருந்து
எழுபத்தேழு கிரணங்கள் புறப்பட்டன.
எப்போதும் இயங்கும்
இருபத்தெட்டு விண்மீன்களை
நன்மதிக்கு நாடுகிறோம் அவைகளை
கார்த்திகை ரோகிணி வேள்விக்கு
மிருகசீரிடம் நன்மைக்கு
திரு ஆதிரை சுகத்திற்கு
புனர்பூசம் அன்புக்கு
பூ.சம் அழகுக்கு
ஆயிலியம் கதிரோனுக்கு
மகம் பாதைக்கு
பூ.ர்வபல்குனி அத்தமும் புண்ணியத்திற்கு
சித்திரம் சிவத்திற்கு
சுவாதி நலத்திற்கு
ராதை விசாகம் அனுராதா கேட்டை மூலம்
நலம் வழங்குதற்கு
பூ.ர்வாஷாடம் உணவுக்கு
உத்திர அஷாடம் உறுதிக்கு
அபிஜத்து மங்களத்திற்கு
சிராவணமும் அவிட்டமும் நல்வலிமைக்கு
சதயம் விரிவுக்கு
தொடர் இரு பிரோட்டபதங்கள் காப்புக்கு
ரேவதி செல்வத்திற்கு
பரணி பொருள் வகிப்புக்கு
இவண் எமக்கிசையட்டும் இவ்வகை
விண்ணில் வானத்தில் நீரில் புவியில் மலையில் திசையில்
உள விண்மீன்களில்
நிலா பக்குவம் செய்திட்ட விண்மீன்கள்
மங்களம் தருக
பழி பாழுரை இழிசொல் துர்நிமித்தங்கள் தூரம் போகட்டும்
பிரமன் பிரஜாபதி உலகம் வேதம் ஏழுமுனிகள் அக்கினி
நல்வழி காட்டுக
புவியில் அமைதி வானத்தில் அமைதி
நீரில் அமைதி தாவரங்களில் அமைதி
வனசுபதியொடு விசுவதேவர் தரு அமைதி
அமைதியும் மங்களமும் எமக்குண்டாகட்டுமிங்கே
சோமன் நன்று பிரமன் நன்று
வேள்விப்பொருட்களொடு வேள்வியும் நன்று
வேள்விக்கம்பம் நன்று
செடிகொடிகள் நன்று
திசைகள் இனியன நதி நீர் இனிது
விஷ்ணு இனியன் வாயு இனியன் வசிப்பிடம் இனிது
குதிரைகள் இனியன பசு நன்று
இனியதும் இலாபமும் எமக்காகட்டும்
இந்திரன் கிராமமும் பசுவும் செயிப்பவன்
வச்சிரக்கரமுடையோன்
பகைவெல்வோன்
எமக்குத்துணைபுரிக அவன்
அச்சம் தொலையட்டும் எங்கும்
அச்சம் தொலையட்டும் எமக்கு
எம் எதிரிகள் எத்திசையிருந்து வரினும் வீழட்டும்
அக்கினியில் தோன்றிய அமுதமெனும் தங்கம்
மானிடன் தரித்திட
ஆயுள் முற்றுமாய் வாழ்ந்து முடிப்பான்
வருணன் அறியும் தனம்
பிரகசுபதி அறியும் நிதி
இந்திரன் அறியும் பொருள்
ஆயுளொடு வலிமையும் சேர்க
தருப்பையே எதிரிகளைப்பிள
போருக்கு வருவோர் துகளாகட்டும்
பகைவர் அறுபடுக
பகைவர் பகுபடுக
பகைவர் அடி உதை படுக
பகைவர் தேய்ந்தொழிக.
பர்ஜன்யன் கர்ஜித்து மின்னலொடு
பொன் வண்ண விந்துவர
அதுவே தருப்பையாயிற்று
அவுதம்பர மணி அணிய
வலிமை பசு பொருள் குவிகிறது
பசி இன்மை துன்பம் புத்தியின்மை தூரம் போகட்டும்
வீரம் செழிக்கட்டும்
தருப்பை பிராமணனுக்கும் க்ஷத்திரியனுக்கும்
சூத்திரனுக்கும் ஆரியனுக்கும்
யாம் விரும்பும் யார் யாருக்கும்
எம்மைப்பிரியமுள்ளவனாக்கட்டும்
ஜங்கிடச்செடியே
பூரண அவுடதம் நீ
காக்கும் வீரன் நீ
நன்மங்கலம் நீ
வலி இம்சை இருமல் க்ஷயம் வாதம்
காற்றடிக்கால சுரமத்தனையும் சூனியம்
செய்வோன் நீ
சதவார மணி என்னும் மூலிகை
கேடு தொலைப்பது
அரக்கர் அழிப்பது
நூறு வீரர்களை சனனஞ்செய்வது.
அக்கினியே நின்னை
வீரம் திறமை ஆயுள் வாய்மை மேன்மை நூறாண்டு வாழ்க்கை
அளிக்க அழைக்கிறேன் எமக்கு
குல்குலு ச்செடி வருக
எலும்புருக்கி நோய்த்தொலைக
குஷ்ட மூலிகையே
செடிகளில் உத்தமன் நீ
தலைவலி சுரம் தொலைப்போன் நீ
பிரமம் தெரிவோர் எங்கு செல்வரோ
அங்கே எம்மை அக்கினி அழைத்துச்செல்க
வாயு கதிரோன் நிலா சோமன் இந்திரன்
நீர் பிரம்மன் எம்மை அங்கு அழைத்துச்செல்க
அஞ்சனமே நீ நதியின் மூலம்
மின்னலின் மலர்
காற்றின் சீவன்
கதிரோனின் கண்
நீ வடித்த பாலே வானம்
ஆயிரம் நோய் தொலைப்போன் நீ
ஆணுக்கு உயிர் அளிப்போன்
நீ£ பெரியவள் இரவே
புவியின் பூரணி நீ
விரிவோள் நீ
பசு குதிரை புருடர்க்குச்சுகமளி
,இரவு தாயாவாள்
விடியல் தருபவள்
திருடனின் சிரம் கொய்வாய் நீ
பசு திருடுவோனொடு குதிரையின் சிரம் மூடி
இட்டுச்செல்வோனையும்
தூரத்தில் தடு
ஆதியிலே காமனே இவண் இருந்தான்
மனத்தின் வித்து அவன்
ஏக மூலமுடையோன்
காமத்தால் காமம் வருகிறது
காமானே எனக்கு நிறைவு தா.
ஏழு குதிரைகள் உடையோன் காலன்
புவனங்கள் காலனுக்குச் சக்கரங்கள்
அமிருதம் அச்சு
நிறை கும்பம் அவனிடத்திலுள்ளது
தந்தையும் மகனும் அவனே
புவியும் வானும் அவனே
கதிரோன் அவன்
மனம் உயிர் பெயர் காலத்தில் கூடுவன
பிரமன் அவன்
காசியபன் தவம் இவை காலனிலிருந்தே தோன்றின
நீர் திசை கதிரோன் காற்று என வரிசையாய் வந்தன.
கந்தர்வ அப்சரசுகள் வந்தனர்
அங்கிரசரொடு புண்ணிய உலகங்கள் வந்தன
அக்கினியே எம் இல்லமதில்
மாலையில் வாழ்வோன்
காலையில் நன் மனம் தருவோன்
செல்வம் வழங்கி நீ
நீ எழ யாம் எழுவோம்.
தூக்கமே எமனுலக வரவு நீ
எம்மை வெறுப்பொனுக்கு தீக்கனவு தருக
கனவு கரும்பறவையின் வாய்
குதிரையின் கச்சைபோலே
எம்மைச்சேராதோன் சிதறட்டும்
எம்மிலிருந்து ஒன்பது முழம் தள்ளி
தீக்கனவு எம்மை வெறுப்போனைச்சேர்க.
கோசாலையை க்கட்டுவோம்
மனிதக்காப்பு அதுவே
செவி சொல் மனத்தால்
தேவர்கட்கு ஆகுதி செய்வோம்
தேவர் மனைவிமாரொடு இவண் வருக
வாயிலே வாக்கு
மூக்கிலே மூச்சு
கண்களில் காட்சி
செவியிலே கேட்பு
முடியிலே கருப்பு
முழுமையாய்ப்பற்கள்
வலிமையுடைய கைகள்
தொடயிலே திடம்
கால்கலில் விரைவு
பாதங்களில் நிலைப்பு
யான் என் ஆன்மா இன்னல் நீங்குதல்
பிரமன் அருள்க
அரசனுக்கும் சூத்திரனுக்கும்
ஆரியனுக்கும் பார்க்கும் எல்லாருக்கும்
யான் பிரியமுடையோன் ஆகுக
நூறு காற்றடி காலம் யாம்
பார்க்க விழிக்க சீவிக்க ஒங்க வாழ அழகுற வேண்டும்
பிரமனே உயிரோன் நீ
யானும் சீவிக்கலாமோ அங்ஙனம்
நிறை ஆயுள் தருவாயோ நீ
இந்திரன் வாழ்க கதிரோன் வாழ்க தேவர் வாழ்க
யாம் நிறை ஆயுள் பெறலாமோ
காயத்திரி தேவ அன்னை இவண் வணங்கப்பட்டுள்ளாள்
.இரு பிறப்பாளர்க்கு நன்மை வழங்கியவள்
ஆயுள் மூச்சு மக்கள் பசு புகழ் பொருள் அறிவுத்தேட்ட அழகு
எமக்களித்து பிரம உலகு செல்க. ( அதர்வ வேத காண்டம் 19 )
———————————————–

.

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி