வேத வனம் விருட்சம்-21

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

எஸ்ஸார்சிகவிதை

யான் பிரம்மன்
யானே சுத்தன்
யானே சித்தன்
யானே புத்தன்
சத் சித் ஆனந்தம் யான்

பேரின்பன்
ஒளிவடிவோன்
பேரமைதிக்காரன் யான்
ஆசைகள் தாண்டிய
அறிவுக்காரன்
விடுதலை வசமான
நிறைவுடையோன்
தனி அறிவுடைமையனால்
தன்னையும் நின்னையும் உணர்ந்தோன்.

எல்லாம் யானாக
ஆத்மாக்கள் எனது
யான் துனை
யான் முதல்
யான் வழி
யானே மூலம்
நிற இன சாதிச்சரக்கு
என்னில் ஏது
என்று முளன்
பிரிவினை தவழா
பிரம்மம் யான்.

மாற்றங்கள் இல்லை
விசேஷங்கள் இல்லை
தனிப்பொருள் யான்
உடல் உயிர் மனம்
புலனொடு காரண உடல்
கடந்தோன் யான்

அறிவு மலையேறி
ஞானக்கடல் கண்டு
மன வெளி உலாவும்
பேரின்பன் யான்

நிறையின்பன்
நிறைஞன்
ஒளிக்கு ஒளி தரும்
கதிரவன் பூரணன் யான்.

அவினாசி அமிருதன்
அடி முடி பிடி படா
அனந்தம் யான்
மாயைத்தொடா
எதிர்நிலை அணுகா
சத்துவ ராஜச தாமசம் தாண்டியோன் யான்
ஒலியின் மூலம்
விதையின் விதை
பரிபூரணன் யான்.


Series Navigation