வெளிச்சம் தேடும் இரவு

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

புதியமாதவி


பயணத்தில்
பக்கத்தில் இருப்பவனைப்
பார்த்ததில்லை.
மின் தூக்கியில்
எப்போதாவது சந்திக்கும்
அண்டை வீட்டுக்காரனுடன்
காகிதப்புன்னகைச் சிந்தும்
கைகுலுக்கல்கள்.

குளிர்ச்சாதன அடுக்ககங்களின்
கடைகளில்
அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்
ஆச்சி மசாலா சாம்பார்ப்பொடி
சக்தி ஊறுகாய்
தேடி எடுக்கும்
ருசியின் அடையாளங்கள்

விமானநிலைய சந்திப்புகளில்
அந்நிய மொழி உச்சரிப்பில்
தமிங்கலம் பேசும்
தமிழ்க்குடும்பங்கள்

எப்போதும்
எதையாவது தேடி
தேடும் வழியில்
எதையாவது தொலைத்து
தொலைத்ததைத் தேடி
மீண்டும் தொலைத்து
தேடி வந்ததை மறந்து
தேடலிலேயே
மீண்டும் மீண்டும்
தனக்கான இடம்தேடி
ஒற்றைப்புள்ளியில் சந்திக்கும்
ஒராயிரம் கோடுகளாய்
நீண்டு கிடக்கிறது
இரவுகள் அறியாத
மின்சார சாலைகள்.

கண்கூசும் வெளிச்சத்தில்
இருட்டைத் தேடி
அலைகிறது விழிகள்.
இருட்டுக்குள் எங்காவது
தூங்கிக்கொண்டிருக்கலாம்
வெளிச்சம் தேடும்
விடியலின் இரவு.

—————————

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை