வெற்றிட பயணம்

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

மு.புகழேந்தி


கூத்தன் வெற்றிடம் பார்க்க
பயணம் கொண்டான்
பனிமலை குகையில்
பஞ்சு குவியலில்
பலநாள் கழித்து
காற்றும் கருமையுமான
இவ்விடம் வெற்றிடமோ
என்று ஐயம் கொண்டான்

அடர் காட்டில்
கல்லும் மலையும்
காட்டாறும் சுடுமணலும்
கடந்து – பலநாள் தேடி
புல்லும் புதரும் சூழ
புற்றுக் குவியலில் அமர்ந்து
காலம் கடத்தி
ரீங்கரிக்கும் வண்டோசையும்
சலனம் கிழிக்கும் சீறலும்
குலை நடு ஊளையும் கேட்டு
வெற்றிடம் வேறெங்கோ
உள்ளது என்றான்

நதிக்கரையில்
நாணலுக்கு மத்தியில்
நீர் சலனம் கேட்டு
சலனமில்லா
வெற்றிடம் எங்கோ
என்று ஓங்கரித்தான்

குருகுலத்தில்
கோபுர வாசலில்
புனித தீர்தத்தில்
புண்ணிய தளத்தில்
ஆசானை அலைந்து தேடி
தாகம் கொண்டு
தர்க்கம் செய்து
வழி சொல்லியும்
விடை கிடைக்காமல்
பொருளே இல்லா
ஓரிடம் உண்டோ ?
வினாயெழுப்பி
வெற்றிடம் மாயை
வெறித்து சென்னான்

தொடங்கிய பயணம்
சோர்ந்து போக
தளரிய மனம் தடம்மாறி
எண்ணிய எண்ணம்
ஈடேறாமல்
கூத்தன் பித்தனாகி
பித்தன் பிறகு
குடும்பியானன்

கனவுப் பாதையில்
வெற்றிட பயணம்
தோன்றி தோன்றி
மறைந்தது

குடும்பி குடும்பம்
கும்மாளமிட்டு குதுகலிக்க
கூட்டு வாழக்கை
கூட்ட தொடங்கி
நிலையற்ற மனது
திக்கில்லா வழி
தேடலற்ற வாழ்வு
பிணி, பிணக்கு
பிக்கல், பிடுங்கல்
வேகம், வெற்றி
பாசம், பணிவு
பந்தம், பகிர்வு
அன்பு, அயர்வு
செம்மை, செறுக்கு
சாந்தம், சகிப்பு
தொல்லை, தோல்வி
தோளில் சுமந்து
தோடங்கினான்
மற்றுமொரு பயணம்

பள்ளம் மேடு
பயணப் பாதையில்
பலபல வெற்றிடம் கண்டான்
உணரத்தான் முடிந்தது
இடம், பொருள் சுட்டி
விளக்க முடியவில்லை!
***
pugazhendi@hotmail.com

Series Navigation

மு.புகழேந்தி

மு.புகழேந்தி