வெங்காயம்! வெடிகடுகு! வெட்கம், சீச்சீ!

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

கரு.திருவரசு


வெங்காயம் நீர்வற்றிச் சுண்டி னாலும்
வெடிகடுகு தான்சிறுத்துக் குன்றி னாலும்
செங்காரம் மங்காத தன்மை போலச்
செந்தமிழர் தம்தரத்தில் குன்றா ரென்பார்!

வெங்காயத் தோலடுக்கை உரித்து வந்தால்
வெடிகடுகும் ஒருவெடிப்பை முடித்து விட்டால்
வெங்காரக் கதையங்கே விடிந்தாற் போலச்
சிங்காரத் தமிழர்தரம் சிரிக்கு தய்யா!

வெங்காயம் நீர்வற்றிச் சுண்டி னாலும்
வெடிகடுகு தான்சிறுத்துக் குன்றி னாலும்
தம்காரம் மாறியவை இனிப்ப தில்லை!
தரம்விட்டு மறுகோலம் தரிப்ப தில்லை!

இங்காரும் நிகரில்லை, எல்லாம் வல்ல
இனம்யாமே என்றதமிழ்ச் சிங்கக் கூட்டம்
தம்கோல மாற்றங்கள், தரத்தின் வீழ்ச்சிச்
சழக்கெல்லாம் கணக்கிட்டால் வெட்கம், சீச்சீ!

thiruv@pc.jaring.my

Series Navigation