வெகுண்டு

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

பாலா


நான் படித்ததெல்லாம் சென்னையின் ஒரு பகுதியான திருவல்லிக்கேணியின் இந்து உயர்நிலைப் பள்ளியில் தான். கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையான அப்பள்ளி அமைந்த பெரிய தெரு, பெயரளவில் தான் பெரிசு. அவ்வளவாக அகலம் இல்லாத அத்தெருவில், பல வகைக் கடைகளும், வங்கிகளும், தங்கும் விடுதிகளும் ‘Big street பிள்ளையார் ‘ கோயிலும் இருந்தன. இதனால், பெரிய தெரு எந்நேரமும் பரபரப்பாகக் காணப்படும். தெருவின் இருமருங்கிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, மீதமிருந்த தெருவின் மத்தியப் பகுதியில், மனிதர்களும், வாகனங்களும், அல்லிக்கேணி மாடுகளும் இடத்துக்காக சண்டை போட்ட வண்ணம் இருக்கும் காட்சியை, தினமும் காணலாம்.

சரி சரி, விஷயத்துக்கு வருகிறேன்! நான் அப்போது 7-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். உடன் படித்த மாணவனான …. பெயர் ஞாபகத்திற்கு வர மறுக்கிறது … என் நல்ல நண்பன். ஆஜானுபாகு ஆக, நல்ல பால் வண்ணத்தில் இருந்த அவனுக்கு ‘வெள்ளை குண்டன் ‘ என்ற காரணப்பெயர் சூட்டப்பட்டு, நாட்போக்கில் அது மருவி, ‘வெகுண்டு ‘ என்பது நிலைத்து விட்டது. எனக்கும் பள்ளியில் புனைப்பெயர் உண்டு. அதற்கும் நான் கூற வந்த விஷயங்களுக்கும் சம்பந்தம் இல்லாததால், அதைப்பற்றிய ப்ரஸ்தாபம் இங்கு தேவையற்றது.

வெகுண்டுவின் தந்தையார், உடுப்பியிலிருந்து சென்னை வந்த கன்னடக்காரர். அவர் தொழில் என்ன என்று இந்நேரம் நீங்களே யூகித்திருப்பீர்களே! கரெக்ட்! அவர் மேற்கூறிய பெரிய தெருவில் ‘உடுப்பி ‘ வகை உணவகம் நடத்தி வந்தார். மனிதர், பக்திமான், நேர்மையானவர், மிக நல்லவரும் கூட. இந்த அளவுக்குக் கூட அவரை நான் உயர்த்திப் பேசவில்லை என்றால், நன்றி கெட்டவனாகி விடுவேன். அவ்வுணவகத்தில், வெகுண்டுவுடன் அமர்ந்து எவ்வளவு தடவை ஓசியில் சாப்பிட்டிருக்கிறேன் தெரியுமா ?!

வெகுண்டுவை படிப்பில் மக்கு என்று கூற இயலாது. ‘மஹாமக்கு ‘ என்று தான் சொல்ல வேண்டும். ஏனோ தெரியவில்லை. சரஸ்வதி தேவி தன் கடாட்சத்தை அவன் பக்கம் திருப்ப மறந்தே போனாள். அவனை ‘வெகுண்டு ‘ என்று கூப்பிடுவோமே தவிர, அவன் ஒருபோதும் வெகுண்டெழுந்தது கிடையாது! சாதுவானவன். சுருள் சுருளாக முடியும், அமைதியான முகமும், அசப்பில் பார்ப்பதற்கு ‘பாச மலர் ‘ படத்தில் வரும் சிவாஜி கணேசன் போலவே இருப்பான். அதி தீவிர சிவாஜி ரசிகனும் கூட. அந்த ‘படிக்காத மேதை ‘யால் தான் நானும் ஒரு சிவாஜி ரசிகன் ஆனேன். வெகுண்டுவின் நடை உடை பாவனைகளில் ‘சிவாஜித்தனம் ‘ மிகுந்திருக்கும். அவனுக்கு பல சிவாஜிப் படப்பாடல்களும் வசனங்களும் அத்துப்படி!! பல சமயங்களில் சிவாஜியின் திரைப்பட வசனங்களை எனக்கு அழகாகவே பேசிக்காட்டுவான். கேட்டே ஆக வேண்டும்! இல்லையென்றால், ஓசி சாப்பாடு கிடைக்காதே!

வெகுண்டு ஒவ்வொரு சிச்சுவேஷனுக்கும் ஒரு சிவாஜி பட வசனம் அல்லது பாட்டு தயாராக வைத்திருப்பான்! மளிகைக் கடைக்காரர் அவன் அம்மாவிடம் பணம் கேட்கும்போது ‘வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் தருவது பாக்கி! ‘ என்பான். அவன் அண்ணன் தந்தையாரிடம் அவனைப் போட்டுக் கொடுத்தால் ‘அண்ணன் காட்டிய வழியம்மா ‘ என்று பாடுவான். என் அக்கா சற்று வேகமாக நடந்து சென்றால் ‘ஆஹா, மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் ‘ என்று கிண்டலடிப்பான். பக்கத்து வீட்டு அறுவைக் கிழவர் பரமபதம் பெற்றபோது ‘போனால் போகட்டும் போடா ‘ என்று விரக்தியில்லாமல் பாடினான்!!! மொத்தத்தில், வெகுண்டுி இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. வெகுண்டு ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு, திருவிளையாடலில் சிவாஜி ஸ்டைலாக நடப்பது போல், குளியலறை நோக்கி நடந்து செல்லும் காட்சி இன்னும் என் கண்ணிலேயே நிற்கிறது.

வெகுண்டு அரையிறுதி தேர்வில் ஆங்கிலத்தில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், அவன் தந்தையார் வெகுண்டார். அவனை என் தாத்தாவிடம் ஆங்கில இலக்கணம் கற்க அனுப்பி வைத்தார். புதுக்கோட்டை உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்ற என் தாத்தாவிடம் பல வருடங்களுக்குப் பின் அகப்பட்ட ஒரே மாணவன் வெகுண்டு! அதனால், அவன் பாடு படுதிண்டாட்டம் ஆயிற்று! என் தாத்தா சாதாரணமாகவே ஒரு விஷயத்தை 2 தடவை கூறுவார். படிப்பு சம்பந்தப்பட்டதை, 4 முறை அழுத்தமாகக் கூறுவார்! வெகுண்டுி சமாசாரத்தில், கற்றுக் கொடுக்க வேண்டிய ஒவ்வொன்றையும் 8 முறை சொல்லி, அதோடு நில்லாமல், அவனை 2 முறை திரும்ப கூறச்சொல்லி வாட்டி வறுத்தெடுத்து விட்டார்! ‘உன் தாத்தா கிட்ட டியூஷன் போணுன்றதை நினைச்சாலே வயத்தை கலக்கறதுரா ‘ என்று அவன் புலம்பும்போது அவனைப் பார்க்க எனக்குப் பாவமாய் இருக்கும்! ‘நம்ம வாத்தியாரை விட என் தாத்தா எவ்வளவோ மேல் இல்லையா ? ‘ என்று நான் ஆறுதல் கூறுவேன்.

எங்களது வகுப்பு ஆசிரியரான திரு.ராமசாமி அய்யங்கார் கண்டிப்புக்கு பேர் போனவர். சிறுதவறு செய்தாலும் பிரம்பால் விளாசி விடுவார். நான் படிப்பில் கெட்டி, அதனால் அடி வாங்கும் பிரச்சினை இருந்ததில்லை. ஆனால், விதி ஒரு முறை வேறு ரூபத்தில் விளையாடி, அவரிடம் பிரம்படி பட வைத்ததை

என்னவென்று சொல்ல ?! காரணம் ?வேறு யார் ? வெகுண்டு தான்! சுட்டுப் போட்டாலும் படிப்பேறாத அவனை ஓடவிட்டு நிதானமாகத் துரத்தி ‘அந்தணன் இரக்கமில்லான் ‘ என உரக்கச் சொல்லியபடி, ராமசாமி வாத்தியார் பிரம்படி வழங்குவது, வகுப்பறையில் வாடிக்கையாக நிகழும் ஒரு விஷயம் தான்! வெகுண்டுவும் லேசுப்பட்டவன் அல்லன். வாத்தியார் அடிப்பதற்கு முன்னமே, அவரை வெறுப்பேற்றும் வண்ணம், ‘ஐயோ, இப்படி அடிக்கிறீங்களே, உயிர் போறதே, ஐயோ, கொல்றாறே! ‘ என்று கூக்குரலிடத் தொடங்கி விடுவான். அச்சமயங்களில் வகுப்பிலுள்ள நானும் மற்ற மாணவர்களும் பீதி, பச்சாதாபம், சிரிப்பு போன்ற பல்வகை உணர்வுகளுக்கு ஆளாகி இஞ்சி தின்ற மந்திகள் போல் காட்சியளிப்போம்! ?

வாத்தியார் ஒரு முறை வெகுண்டுவை ஏதோ ஒரு பாடத்தை மனப்பாடம் செய்து என்னிடம் ஒப்பிக்குமாறு கூறிச் சென்று விட்டார். அவனும் முயன்றான். ஆனால், அவனாவது ஒப்பிப்பதாவது! ? என் கன்னத்தைத் தடவி கெஞ்ச ஆரம்பித்து விட்டான். நானும் கவசகுண்டலம் இல்லாத கர்ணனாக என்னை பாவித்துக் கொண்டு, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க முற்பட்டேன்!! வகுப்புக்குத் திரும்பி வந்த ஆசிரியரிடம் வெகுண்டு பாடத்தைப் படித்து அருமையாக ஒப்பித்து விட்டதாக பொய் உரைத்தேன். இதில் ஒரு தமாஷ் பாருங்கள்! ‘பொய் உரைத்த வாய்க்கு போஜனம் கிடைக்காது ‘ என்பார்கள். நானோ வெகுண்டுவிடம் போஜனம் வாங்கி உண்டதால், பொய் சொல்லும் நிலைக்கு ஆளானேன்!

விதி தன் விளையாட்டை ஆரம்பித்தது! சதா சர்வ காலமும் என் கூற்றை நம்பும் ராமசாமி வாத்தியார், என்றும் இல்லாத் திருநாளாக அன்று, ‘சரி, நீ படித்ததை மறுபடி என்னிடம் ஒரு தடவை கூறு, பார்க்கலாம்! ‘ என்று அந்த திருவாழத்தானிடம் கேட்டார். எனக்கோ அஸ்தியில் ஜுரம் கண்டது. வெகுண்டு அபரிமிதமாக விழிக்கவே, வாத்தியார் என் பக்கம் திரும்பி, ‘படிப்போடு பொய் உரைப்பதும் உனக்கு நன்று வருமோ ? ? ‘ என்ற விபரீத வினாவெழுப்பி சில பிரம்படிகளை எனக்குப் பரிசாக வழங்கினார்.

அதுவரை பிரம்படியே கண்டிராத எனக்கு, அந்த அடிகள் தந்த வலியில் சப்தநாடியும் ஒடுங்கிப் போயிற்று! இரண்டு நாள் காய்ச்சல் வேறு! காய்ச்சலின் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது ‘இனி வெகுண்டுவிடம் ஓசியில் வாங்கி உண்பதில்லை ‘ என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்! என்ன செய்வது ? கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்! என் பள்ளி வாழ்க்கையில், நான் பட்ட முதலும் கடைசியுமான பிரம்படிகளைப் வாங்கித் தந்த பெருமை என்னருமை வெகுண்டுவுக்குத் தான்!

வெகுண்டுவை ராமசாமி வாத்தியார் அடுத்த வருடமும் 7-ஆம் வகுப்பில் உட்கார வைத்து விடுவார் என்று தான் நான் நினைத்தேன். ஆனால், அவன் தேர்ச்சி பெற்று என்னை அதிசயத்தில் ஆழ்த்தி விட்டான்! அடுத்த ஓரிரு வருடங்களில் அவன் தந்தையார் ஹோட்டலை மூடி விட்டார். அதன் தொடர்ச்சியாக வெகுண்டுவும் பள்ளியிலிருந்து விலகி அவன் குடும்பத்தார் வேறேதோ ஊருக்கு குடி பெயர்ந்து விட்டனர். ஹோட்டல் இருந்த இடத்தில் ‘திருநெல்வேலி அல்வா ஹவுஸ் ‘ என்ற போர்டு மாட்டிய இனிப்புக் கடை தோன்றியது. காலப்போக்கில் வெகுண்டுவைப் பற்றிய ஞாபகங்கள் என்னை விட்டு மெல்ல மெல்ல விலகி விட்டன. சிவாஜி பட வசனங்களும் பாடல்களும் கூடத் தான்!

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

நாலைந்து வருடங்களுக்கு முன், ஒரு நவராத்திரி விடுமுறையில் என் மனைவி மகளுடன் மைசூரை சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தேன். மைசூரின் உலகப் பிரசத்தி பெற்ற தசரா ஊர்வலத்தை கண்டு ரசிக்க ஒரு ஜன சமுத்திரமே திரண்டிருந்தது. ஜம்பூ சவாரி என்றழைக்கப்படும் அவ்வூர்வலத்தில் பிரதான தளபதி முன்னே வர, தேவி சாமுண்டேஸ்வரியின் விக்ரகம் வைக்கப்பட்ட தங்க ஹெளடாவை முதுகில் சுமந்தபடி அழகாக அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட யானை ஒன்று பின்னே நடந்து வந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மற்ற பட்டாடை உடுத்திய கம்பீர யானைகளும், குதிரை வீரர்களும், பாண்டு மற்றும் நாகஸ்வர வாத்தியக்காரர்களும், கலைக்குழுக்களும் வரிசையாக வந்த காட்சி பார்க்க மிக அற்புதமாக இருந்தது.

ஜம்பூ சவாரி முடிந்ததும், என் மனைவி ‘அம்மு மத்யானம் ஒண்ணுமே சாப்பிடலை. வழியிலேயே எங்கேயாவது சாப்டுட்டு அப்றமா நம்ம ரூமுக்கு போயிடலாம் ‘ என்றாள். ஏதோ ஒரு ஹோட்டலில் எதையோ சாப்பிட்டு விட்டு பில்லுக்கு பணம் தரும்போது, கல்லாவில் அமர்ந்திருந்தவர் என்னை ஒரு மாதிரி சந்தேகப் பார்வை பார்ப்பதை கவனித்து ‘சார், நல்ல நோட்டு தான், கவலையே படாதீங்க! ‘ என்றேன். அவர் இன்னும் சந்தேகம் விலகாமல், ஒருவித பிரமிப்புடன் ‘சார், நீ … நீங்கள் ஹிண்டு ஹைஸ்கூல் பாலாஜி தானே ?! என்னைத் தெரியலையா ? நான் தான் வெகுண்டு! ‘ என்றார்(ன்)! ?

என்னுடன் பள்ளியில் படித்த வெள்ளைக் குண்டன், அச்சமயம் சற்றே மெலிந்து கறுத்து முன்மண்டையில் பெருமளவு முடியும் இழந்திருந்ததால், என்னால் அவனை யாரென்று அறிய முடியாமல் போனது! வெகுண்டு கேட்ட அடுத்த கேள்வி, ‘ராமசாமி வாத்தியார் எப்படி இருக்கிறார் ? ‘. வாத்தியார் பல ஆண்டுகளுக்கு முன்னரே வகுப்பில் பாடம் எடுக்கும்போதே மாரடைப்பால் இறந்து விட்டதை அவனிடம் சொல்ல எனக்கு மனம் வரவில்லை! அவனுக்காக ஒரு முறை வாத்தியாரிடம் பொய் சொல்லி பிரம்படி பட்டது என் நினைவில் நிழலாடியது! சிறுவயதில் இருந்தது போலவே, அச்சமயமும் சாப்பிட்டதற்கு பணம் வாங்க மறுத்து வெகுண்டு என்னை மேலும் கடன் பட்டவனாக ஆக்கி விட்டான்!

என்றென்றும் அன்புடன்

பாலா

—-

balaji_ammu@yahoo.com

Series Navigation