விஸ்வரூபம் – அத்தியாயம் 13

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

இரா.முருகன்


நாங்கள் கழுக்குன்ற மலைக்கு மேலே போய்ச் சேர்ந்தபொழுது முதலில் கண்ணில் பட்டது துரைத்தனத்து கோர்ட்டு கச்சேரி உத்யோகஸ்தர்கள் ரெண்டு பேர். கூடவே சில போலீசு சிப்பாய்களும் அங்கே இருந்தார்கள். ஏதோ வம்பு வழக்கு இந்தப் பிரதேசத்தில் உண்டாகி அது ராஜாங்கத்தில் சந்துஷ்டி நிலவ ஒட்டாமல் அடிக்கிறதைத் விசாரித்துத் தீர்த்து வைக்க பட்டணத்திலிருந்து கிளம்பி வந்தவர்களாக இருக்கக் கூடும். வியாஜ்யம் தொடங்கும் முன்னரோ மங்களகரமாக முடித்துத் தீர்த்து வைத்த அப்புறமோ சுவாமி தரிசனமும் பட்சி தரிசனமும் கிடைத்து ஊர் திரும்ப உத்தேசித்திருப்பார்கள்.

இப்படி ஒரு அந்நிய ஸ்திரியோடு நான் ஈஷிக் கொண்டு நிற்கிற துராத்காரமான காரியத்தை இவர்கள் ஒரு கணமும் பொறுக்க மாட்டார்கள். கல்யாணியின் கையை நான் பற்றியபடிக்கு மேலே ஏறி வந்ததை வேறே அந்த வண்டிக்காரச் சண்டாளன் பார்த்துத் தொலைத்திருக்கிறான். அவன் இதுக்குக் காது மூக்கு எல்லாம் வைத்து உத்தியோகஸ்தர் காதில் போட்டால் நான் வம்பு வழக்கை சந்திக்க இயலாமல் நிர்க்கதியாகி நிற்க வேண்டி வரும் என்று அஞ்சினேன். இந்த சிந்தனைகளோடு ஒரு ஓரமாகப் போய் நிற்க, கல்யாணி என் அருகில் வந்து, திரும்ப என் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

இது என்னத்துக்கு உபத்திரவம் கொடுக்கிறாயடி பெண்ணே என்று அவளைப் பார்வையால் விசாரித்தபடி அவள் கையை விலக்க முயன்றேன். அவளோ விடமாட்டேன் என்று உதட்டைக் கடித்தபடி கால்பெருவிரலால் தரையில் கோடு கிழித்தபடி நின்றாள்.

என் மேல் மையலுற்ற ஒரு பெண்பிள்ளையை ஆயுசில் முதல் தடவையாக பார்க்கிறேன். இதைவிட எனக்கு வேறென்ன அதிர்ஷ்டம் கிட்டும்? போலீஸ் உத்தியோகஸ்தனும் கச்சேரி சிரஸ்தார், நாசர் வகையறாக்களும் பெண்வாசனை இல்லாத நரகத்துக்குப் போய் குறி நசித்து அழியட்டும். இந்த தினத்தை எனக்காகவே படைத்து உண்டாக்கி விட்டிருக்கிறது பிரக்ருதி. அப்பு. வாயு. ஜலம் எல்லாம் சேர்ந்து. அனுபவிக்கப் பிறந்தவன் நான். இதை, இவளை எல்லாந்தான்.

இந்த யோசனை வந்ததும் பார்வையில் மிடுக்கும் வார்த்தையில் தெம்பும் தன்னாலேயே வந்து சேர்ந்தது.

பட்சி வருகிற நேரம் ஆச்சுதா?

நான் பக்கத்தில் நின்ற பருமனான மனிதனிடம் கணீரென்ற குரலில் விசாரித்தேன். அவன் வெய்யில் பொறுக்க ஒண்ணாமல் தலையில் மேல்வஸ்திரத்தை கைம்பெண் முக்காடு போட்ட ரீதியில் சுற்றி இருந்தான்.

என் குரலில் அதிகாரத்தைக் கண்டோ என்னமோ வெலவெலத்துப் போய் அவன் மேல்துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு என்னை நமஸ்கரித்தான். அப்போது கல்யாணியின் கை என் முதுகில் ரகசியமாக ஊர்ந்து பூணூலை நூல் பிரித்து விரலை நுழைத்து குறுகுறுப்பாக வருடிக் கொண்டிருந்தது.

பட்சி இன்னும் வரலை என்றுதான் பார்த்துக் கொண்டு நிற்கிறோம் எல்லோரும் ஸ்வாமி.

சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் என்று நான் முன்னரே அனுமானித்தவர்களில் ஒருத்தர் என்னை மரியாதையோடு பார்த்து கை குவித்து நமஸ்காரம் சொன்னார்.

நான் இந்த ஸ்தலத்தில் பரம்பரை தர்மகர்த்தா. என் நாமம் பக்தவத்சல முதலி என்பதாகும். இது என் தமையனார். இவரும் இதே கைங்கர்யம் தான் செய்கிறார். குடும்ப தாவா ஒன்றை சுவாமி சந்நிதியில் பூக்கட்டிப் பார்த்துத் தீர்த்துக் கொண்டு பட்சி தரிசனத்துக்காக காத்திருக்கிறோம்.

அவர் சொல்ல நான் சும்மா தலையை ஆட்டியபடி கேட்டுக்கொண்டேன்.

பிரபு பட்டணத்தில் சர்க்கார் சப்கலெக்டர் அல்லவா? போன மாசம் ஜமாபந்திக்கு வந்த இடத்தில் தரிசனம் செய்கிற பாக்கியம் எமக்குக் கிட்டியது.

அவர் நைச்சியமாகவும் நயந்தும் வாயைக் கையால் பொத்தியபடி என்னிடம் வெகு மரியாதையாகப் பேசினார். கல்யாணி என் பக்கத்தில் ஒரு அட்சரமும் புரியாவிட்டாலும் அவர் காட்டிய மரியாதையைப் பார்த்து வெகுவாக பிரமித்துப்போய் நின்றாள்.

நான் தர்மகர்த்தாவுக்கு ஆமாம் என்றும் இல்லாமல் அவர் சொல்லியதை எதையும் மறுக்கவும் செய்யாமல் புன்சிரிப்போடு தலையைக் குலுக்கி ஏதோ ஜவாப் சொன்னேன். திடகாத்திரமான உடம்பும், மேலே பூணூலும் காதில் கடுக்கனும் ஜரிகை சோமனும் பக்கத்தில் லட்சணமான ஸ்திரியும் உத்யோக லட்சணத்தை அள்ளிக் கொடுத்தால் வேணாம் என்று சொல்வானேன்.

தர்மகர்த்தா முதலியார்களுக்குப் பக்கத்தில் நின்றவர்களைக் கவனித்துப் பார்த்தேன். அவர்கள் இந்த முதலிகளின் மெய்க்காப்பாளர்கள். நாசமாகப் போன நபும்சக போலீசும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை. போலீசுக்காரனுக்காவது துரைகளின் பிருஷ்டத்தைத் தாங்கினால் நாலு காசு பக்ஷீஷ் கிட்டும். முன்னாலும் பின்னாலும் சேர்த்துத் தாங்கினாலும். இந்த மனுஷ்யர்களுக்கு விளக்கெண்ணெய் ஜம்ப ஆசாமிகள் வகையில் ஒரு பைசாவும் பெயராது,

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல அனுமதிக்க வேண்டுகிறேன். இதை இதுவரைக்கும் எழுதிக் கொண்டு வந்தது காராக்ருஹ போலீஸ் சிப்பாய் சேவகர் ஒருத்தர். இப்போது காகிதத்தையும் மசிக்கூட்டையும் கட்டைப் பேனாவையும் என் இருப்பிடத்துக்குள் வீசியெறிந்தார் அந்த சர்க்கார் உத்தியோகஸ்தர்.

ஓய் பிராமணரே, உம்மை லண்டன் பட்டணத்தில் மகாபிரபு சக்ரவர்த்திகள் நினைத்தாலும் இனி ரட்சிக்க முடியாது. போலீஸ் உத்தியோகஸ்தன் என்றால் உமக்குக் கிள்ளுக்கீரை ஆச்சுதோ? மனசு போனபடி ஏதேதோ பிதற்றி அதை என்னைக்கொண்டு எழுதச் சொல்கிறீரே? உள்ளதை உள்ளபடி எழுதிக் கொடுத்து சகாயம் செய்து நீர் உயிர் பிழைக்க ஒத்தாசை செய்யலாம் என்று கருதியிருந்தேன். உம்முடைய காமாந்தகாரமான வார்த்தைப் பிரயோகங்களை நான் சஷ்டி விரதமும் சோமவாரம் ஒரு பொழுதும் இருப்பதையும் பொருட்படுத்தாது நீர் சொன்னபடிக்கு இதுவரை எழுதிப் போனேன். வீடு திரும்பி காதை மடடும் துளசி தீர்த்தத்தில் நனைத்துக் குளிக்கிற கிரமம் மூலம் ஒவ்வொரு நாளும் நான் பரிசுத்தம் செய்து கொள்ள வேண்டிப் படும் கஷ்டம் உமக்குப் புரியாது. காதில் சுபாவமாகவே சீழ் கிளம்பி வருகிற காரணத்தால் தலை குளிக்க முடியாமல் இப்படி காதுக் குளியலோடு நான் கஷ்டப்பட்டபோது கர்ண நாதம் என்ற நோயும் வந்து சேர்ந்தது. சதா காதுக்குள் ஏதோ மாட்டு வண்டி கடகடவென்று போகிற சத்தமும், யாரோ மலையாள பாஷையில் ரட்சிக்கணும் ரட்சிக்கணும் என்று கூப்பாடு போடுகிறதும் ஒரு மாசமாக என்னைத் தூங்க விடுவதில்லை..

உமக்கு லிகிதம் எழுதிக் கொடுத்ததை வீட்டுப் பெண்பிள்ளையிடம் ஆதியோடந்தமாக நேற்றைக்கு சொல்லி வைக்க அவள் சிருங்கார வயப்பட்டு என்னை அவளோடு லயிக்கச் சொன்னாள். நாற்பது கடந்தவளிடம் ஐம்பது முடிந்த நான் லயித்துச் சுகித்து இசகு பிசகாக ஏதாவது ஆகி, சாகப்போகிற நேரத்தில் அஞ்சாறு வயசே திகையும் ஒன்பதாவது பிள்ளையைப் பெற்றுக்கொள்ள முடியுமா சொல்லும். சிவசிவ என்று நல்ல சிந்தையில் மனதைச் செலுத்தச் சொல்லி அவளுக்கு அறிவுறுத்தி உம்மையும் அப்படியே நல்வழிப்படுத்த நினைத்து உடுப்பை தரித்துக்கொண்டு இங்கே காலையில் உத்தியோகத்துக்கு வந்தேன்.

இப்படி எல்லாவற்றையும் உமக்காகப் பொறுத்தால் நீர் செய்கிற கைம்மாறு இதுதானா? எனக்கு சோறு போட்டு தாகம் தீர்க்க தண்ணீரும் மோரும் தரும் இந்த உத்தியோகத்தை எப்போது பழித்தீரோ அப்போதே நான் இந்த குமஸ்தன் கைங்கரியத்தைத் தொடரப் போவதில்லை என்று முடிவு செய்து கொண்டாயிற்று. நீரே இந்தக் கர்ம காண்டத்தை எழுதிப் பூர்த்தி செய்து கொள்ளும். என்னால் இந்த ஆபாஸ வியாசத்தினை இதுக்கு மேலுஞ் சகிக்க முடியாது.

நல்ல வேளையாக அந்த சிப்பாய் வீரர் இப்படிச் சொல்லியபடி வீசிவிட்டுப் போன மசிப்புட்டி உடையாமல் உருண்டு என்னிடம் வந்து சேர்ந்ததாலும், நாலு எழுத்து எனக்கே படிக்கத் தெரிந்திருந்த காரணத்தாலும் இந்தக் கடிதத்தை நானே எழுதி முடிக்க சித்தம் செய்து அதுபடிக்கு தற்போது தொடர்கிறேன்.

கழுக்குன்றம் பட்சி தரிசனத்துக்காகக் காத்துக் கிடக்கிற விஷயம் இந்தப்படிக்கு மேலே போகிறது.

உருட்டி வைத்த சாத உருண்டைகளோடும் பித்தளை கிண்டியில் நீரோடும் கழுகுகளை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்த பூசாரிகள் பொறுமை இழந்து போயிருப்பது அவர்கள் முகத்தில் ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. அடிக்கடி கிழக்கே பார்த்து அவர்களுக்குள் ஏதோ தழைந்த குரலில் சம்பாஷணை செய்து மேல் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறார்கள். பட்சிகள் நேரத்துக்கு வந்து இரை எடுத்துப் போகாவிட்டால் இவர்கள் கோர்ட்டுக் கச்சேரி ஏறி பதில் சொல்ல வேண்டியிருக்குமோ என்னமோ என்று நான் நினைக்கலானேன்.

கூட்டத்தின் பொறுமையும் எல்லை கடந்து போய்க் கொண்டிருந்தது. அவரவரும் பகல் சாப்பாட்டு ஞாபகத்தில் பசி பொறுக்க முடியாமல் அங்கேயும் இங்கேயும் பிராக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பட்சிகள் வந்தால் அரக்கப் பரக்க தரிசித்து முடித்து கீழே இறங்கி நாலு கவளம் சாதத்தை உருட்டிப் போட்டு ஆசுவாசமாகக் கிடந்து உறங்க எல்லோருக்கும் ஆசையும் அசதியும் பசியும் கூடவே தாகமும் திடமாகத் தெரிந்தது. சூரிய வெப்பம் வேறே பொறுக்கமுடியாத தோதில் உடம்பு முழுக்க அந்தரங்க பாகம் வரைக்கும் சுட்டுப் போட்டது. பாறைச் சூட்டில் வெய்யில் பொறுக்காமல் கால் மாற்றி மாற்றி அங்கங்கே நின்று கொண்டிருந்தவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

நான் பின்னால் திரும்பி கல்யாணியைப் பார்த்தேன். அவள் பாறை நிழலில் வளைந்து படுத்து நித்திரை போயிருந்தாள். பூச்சி பொட்டு கடித்தால் உடம்பெல்லாம் ரணமாகி விடுமே என்று உண்மையாகவே அவளுக்காக அனுதாபப்பட்டேன். விலகியிருந்த அவள் மார்ச் சேலையை சரியாக்கினேன்.

சிறிது நாழிகை இப்படி நிச்சயமின்றிக் கழிந்தபின் தர்மகர்த்தாக்கள் என்னை நோக்கி நடந்து வந்தார்கள்.

நான் மேல் வஸ்திரத்தால் விசிறியபடி சாய்ந்து நின்று என்ன விஷயம் என்று விசாரிக்கிற தோரணையில் அவர்களைப் பார்த்தேன்.

இன்றைக்கு என்ன ஆச்சுதோ தெரியலை. பட்சிகள் வரக் காணோம். அப்போதைக்கப்போது அதுகள் இடக்குப் பண்ணுவது வாடிக்கைதான். என்ன தான் ரிஷியாக இருந்தால் என்ன, ஜன்மனாவாசனையில் பறவை ஜந்துவாச்சே. இனியும் இங்கே கலெக்டர் ஐயர்வாள் காத்திருந்து களைத்துப் போக நாங்கள் கிஞ்சித்தும் சம்மதியோம். இன்றைக்கு பட்சி தரிசனம் கூடிவரலை. இன்னொரு நாள் சாவகாசமாக எல்லோரும் வரலாம் என்று சகலருக்கும் தெரிவிக்கச் சொல்கிறோம். சுவாமிகள் தம்பதி சமேதராக எங்களோடு செங்கல்பட்டு வந்து எங்கள் கிரஹத்தில் சிரமபரிகாரம் செய்து கொண்டு பட்டணம் திரும்ப மனசு வைக்கணும்.

அவர்கள் வேண்டிக் கொண்டார்கள். எனக்கு அவர்களோடு போக அரை மனசுதான். ஆனாலும் கல்யாணி வரமாட்டாள். அவள் எனக்கு சொந்தமான ஸ்திரி இல்லை என்று தெரிய வந்தால் என் பூர்வீகமும் அடையாளமும் கிளறப்பட சந்தர்ப்பம் ஏற்படலாம். எல்லாம் முடிவது நான் கருப்புப் பட்டணப் பொடிக்கடையில் மூக்குத்தூள் மடித்துத் தருகிற தரித்திரன் என்பதிலாக இருக்கும். இது சர்வ நிச்சயமாகப் புரிய அவர்களின் அழைப்பை நிராகரித்தேன்.

முதலியாரே, நீர் உசிதம் போல் இந்தக் கூட்டத்துக்கு பட்சி தரிசனம் கூடி வராதது பற்றி அறிவித்துப் போடும். அதையும் நீர் செய்வதை விட பூசாரிகளை விட்டு சொல்ல வைக்கலாம். அவர்கள் ரெண்டு தமிழ்ப் பாட்டு, புராணம் எல்லாம் சேர்த்து விளம்பி இதை சிறிய தோதில் பிரசங்கிக்கட்டும். கூட்டமும் வந்த நோக்கம் ஏதோ விதத்தில் நிறைவேறின திருப்தியோடு கலைந்து போகும். அது அந்த மட்டில் போகட்டும். அடுத்த பிரஸ்தாபம் நீர் எம்மை செங்கல்பட்டுக்கு அழைக்கிறது. உம்முடைய பிரியத்தை மெச்சுகிறோம். ஆனால் தற்போது வர சௌகரியமான ஸ்திதி இல்லாமல், உடனே பட்டணம் திரும்பி ராஜதானி காரியங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. இன்னொரு சந்தர்பத்தில் நானே முன்கூட்டி லிகிதம் எழுதி உமக்கு அறிவித்துவிட்டு பட்சி தரிசனத்துக்குக் கிளம்பி வருகிறேன்.

நான் நீளமாகப் பேசி முடித்து நாக்கு வரண்டு சுற்றும் முற்றும் பார்க்க, முதலியாரின் மெய்க்காப்பாளன் குறிப்பறிந்தவனாக மண் கூஜா நிறைய குளிர்ந்த நீரோடு வந்து என்னிடம் அதை நீட்டினான்.

நான் வாங்கிக் கொண்டு பாறைக்குப் பின்னால் நடந்தேன்.

பூசாரி பேச்சும் தேவாரமோ திருவாசகமோ ராகத்தோடு சொல்கிறதும் கூட்டம் கலைந்து குன்றம் இறங்கிப் போகிறதும் வேறுவேறு சப்தங்களின் கலவையாகக் காதில் விழுந்து கொண்டிருந்தது.

அந்த மலைப் பிரதேசத்தில் இப்போது பாறைகளையும், மேலே தகிக்கும் சூரியனையும், பக்கத்தில் உஷ்ணத்தைப் பொருட்படுத்தாமல் நித்திரை போய்க் கொண்டிருந்த கல்யாணியையும், மகாலிங்கய்யனாகிய என்னையும் தவிர வேறே யாரும் இல்லை.

நான் கொண்டு வந்திருந்த சஞ்சியில் இருந்து சத்துமாவையும் வாழை இலையில் மடக்கிக் கட்டிக் கொண்டு வந்திருந்த லட்டு உருண்டைகளையும் எடுத்து எனக்கு முன்னால் வைத்தேன். சஞ்சியில் இருந்து கலையத்தை எடுத்து சத்துமாவில் ஜலம் சேர்த்து கெட்டியாகப் பிசைந்தேன். சஞ்சியில் மிச்சம் இருந்த வாழைப்பழங்கள் கனிந்து இருந்ததால் அவற்றை அப்படியே புசிக்க முடியாது என்று பட, அவற்றையும் கூழாக்கி சத்துமாவோடு கலந்தேன். ரெண்டுபேர் சாப்பிட தாராளமாக ஆகாரம் இருக்கிறது.

கல்யாணியை தலையில் ஆதாரவாகக் கைவைத்து எழுப்பினேன்.

மனதுக்குள் காமமாகிய பிசாசு திரும்ப விழித்துக்கொண்டது.

பசியும் தாகமும் எங்கோ ஓடி மறைய காமம் மட்டும் உடம்பாகவும் மனசாகவும் என்னைச் சூழ்ந்த சகலமாகவும் பிரவகித்து என்னைச் செலுத்த ஆரம்பித்தது.

கல்யாணி, கொஞ்சம் எழுந்திருடி பெண்ணே.

நான் இப்போது அவள் புஜத்தைப் பற்றியபடி உலுக்கினேன். கைகள் தன்னிச்சையாக அவளை என் மடியில் சரித்தன. முந்தானை ஊடாக அந்த விசாலமான ஸ்தனபாரத்தில் அவை எந்த பயமும் இன்றி சஞ்சாரம் செய்யத் தொடங்கி இருந்தன.

தாகமா இருக்கு.

கல்யாணி அரைக்கண் திறந்தபடிக்கு சொன்னாள். அவள் மூக்குக்குக் கீழே உதட்டுக்கு மேலாக அரும்பியிருந்த வியர்வையை நான் விரலால் ஒத்தியெடுத்தேன். அந்த விரலை அப்படியே வாயில் இட்டுச் சுவைத்தேன்.

நாளைக்கு நமக்குக் கல்யாணம். இன்னிக்கு பசியோடு இப்படி தனிச்சு உட்கார்ந்திருக்கோமே. வேடிக்கையா இல்லை?

கல்யாணி என் இடுப்பைக் கட்டிக்கொண்டு சிரித்தாள். கிறங்கி இருந்த கண்கள் மூடித் திறந்தன. சித்தப் பிரமை கொண்டவளாக அவள் பேச்சு இருந்தது.

காமம் எனக்குள் அடக்காமல் பிரவகித்து அது போதாமல் அவள் உடம்பிலும் ஊர்ந்து ஏறி நிரம்பி வழிந்து செய்கிற மாயமோ என்னமோ அது.

கல்யாணம் முடிஞ்சு சென்னப்பட்டணம் போவோம். அங்கே குடித்தனம் நடத்த உங்க பொடிக்கடைக்கு அண்டையிலே தானே வீடு?

ஆமா, ஆமா.

நான் ஆமோதித்தபடி அவள் காது மடலை ருசித்தேன்.

பகல் நேரத்தில் தூங்கறவ இல்லே நான். நாலு எழுத்தும் கணக்கும் படித்திருக்கிறபடியால் கூடமாட ஒத்தாசையாக கடைக்கு வரட்டுமா?

என் கைகள் அவள் ரவிக்கை முடிச்சைத் தேடிக் கொண்டிருக்க அவள் என்னை விலக்கினாள்.

நாளைக்கு ராத்திரியும் அப்புறம் ஜீவிதம் முழுக்கவும் இது ரெண்டும் இன்னும் ஏதெல்லாமுமோ உமக்குத்தானே. எதுக்காக அவசரப்படணும் இப்போ?

கண்ணை இறுக்க மூடியபடி இன்னும் தூக்கம் விடாததுபோல் முனகினாள்.

நாளைக் கதை நாளைக்கு பெண்ணே.

நான் ஒரு கையால் கலயத்தில் இருந்து சத்துமாவையும் உதிர்த்த லட்டு உருண்டையையும் எடுத்து அவளுக்கு ஊட்டியபடி அவள் உடம்பு முழுக்க ஸ்பர்சித்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அவள் பாதி சுவைத்த ஆகாரத்தை வாயை நெம்பித் திறந்து வழித்து என் வாய்க்குள் போட்டுக் கொண்டேன். உள்ளிப் பூண்டு வாடையோடு திவ்யமான தித்திப்பாக இருந்தது அந்த எச்சில் கூழான லட்டுருண்டையும் சத்துமாவும்.

மண் கூஜாவில் இருந்து மெல்ல நீரை அவள் இதழ்களைப் பூசித் திறந்து சரித்தபோது லகரியின் உச்சிக்கே போயிருந்தேன்.

கூஜா தரையில் உருள நான் அவள் மேல் சரிந்தேன். அவளுடைய பட்டு ரவிக்கையின் முடிச்சு என் கையில் பட்டுக் கிழிந்து அந்த மார்பகங்கள் பீறிட்டு வெளிக்கிளம்பின. அவற்றைச் சேர்ந்து சுகிக்க முகம் புதைக்க வாகாக அவள் மேல் குனிய கல்யாணி எழுந்து உட்கார்ந்தபடி அலறினாள்.

பிராமணரே, என்ன காரியம் செய்கிறீர். என்னை எதற்கு மானபங்கப் படுத்துகிறீர்?

நான் எட்டி அவள் கூந்தலைக் கொத்தாகப் பிடித்து முகத்தை நிமிர்த்தினேன்.

நீ தானேடி சொன்னாய் நாளைக்கு நமக்கு கல்யாணம் என்று. நான் விட்டாலும் நீ விடாமல் என் கையை வேறே பிடித்துக் கொண்டு வந்து உசுப்பேற்றி விட்டாய். இத்தனைக்கு சம்மதித்து மடியில் கிடந்து கொஞ்சிவிட்டு, இப்போ மாட்டேன் என்கிறது சரியாடீ? நீயே சொல்லு.

நான் அவளைத் திரும்பக் கீழே கிடத்தி உதட்டில் வலுக்கட்டாயமாக முத்தினேன். அந்த ஸ்தனங்களையும் ஒருசேர அணைத்து அழுந்த முத்தமிட்டேன்.

பாவி, நீ நாசமாப் போயிடுவே. ஏதோ மந்திரம் போட்டு என்னை இத்தனை நேரம் வசியப்படுத்திக் கட்டிப்போட்டு வச்சுட்டே. உடனே என்னை போகவிடு. விடு என்னன.

அவள் திமிறத் திமிற, நான் அவள் காலுக்கு வெகுமேலே சேலையை வழித்து உயர்த்தினேன். என் வஸ்திரத்தையும் களையத் தொடங்கினேன். அதற்குள் அந்த ஸ்தனங்களை இன்னொரு முறை சேர்த்து அணைத்துக் கொள்ள வெறி கட்டுக்கடங்காமல் போனது.

நான் கைகளை விரித்தபடி குனிந்து அவற்றை நெருங்கும்போது வானத்தில் மேகமூட்டமும் தாழப் பறக்கும் றெக்கைகளின் சத்தமும் மயில் றெக்கை எண்ணெய் வாடையுமாக அந்த இடமே மாறிப் போனது. அழுக்கான கறுத்த சிறகுகளோடு ரெண்டு கழுகுகள் அங்கே இங்கே என்று சுற்றும் பறந்து அவள் தோளில் வந்து அமர்ந்தன. என் கண்ணை அவை குறி வைக்க, நான் அலறி எழுந்து அந்தாண்டை ஓடினேன்.

திரும்பிப் பார்த்தேன். அந்த ஸ்திரியின் மார்பில் ஸ்தனங்களுக்கு பதிலாக இரண்டு கறுத்த கழுகுகள் முளைத்திருந்தன. அவை அங்கே புடைத்துக் கொழுத்து அமர்ந்து என்னையே நோக்கின. சுட்டெரித்துக் கொல்கிற பார்வையை அந்த விழிகளில் கண்டேன்.

ஓடிக் குன்று இறங்கி மூச்சு முட்ட நடையும் ஓட்டமுமாகத் தொடர்ந்தேன். இடுப்பில் வஸ்திரம் நழுவிய இடம் தெரியவில்லை. மனதை ஆக்கிரமித்த காமமும் மோகமும் போன இடம் புரியவில்லை. உயிர் தப்பும் ஆசை மட்டும் பலமாக மிச்சம் இருந்தது.

வண்டிகள் கட்டிவைத்திருந்த இடத்தில் நான் ஏறிவந்த வண்டியைத் தேடினேன். அந்த இடத்தில் ஒரே ஒரு மாட்டு வண்டி தவிர வேறே எதையும் காணோம்.

எம்மை ரட்சியும். உமக்குப் புண்ணியமாப் போகும்.

இப்படிச் சொல்லியபடி ஒரு பிராமணன் வண்டிக்குள் இருந்து எதிர்ப்பட்டான். அவன் கையில் ஒரு ஸ்தாலிச் செம்பு இருந்தது.

நான் அம்பலப்புழை மகாதேவய்யன். குப்புசாமி அய்யன் குமாரன். கொல்லூருக்கு என் ஒண்ணுவிட்ட சகோதரன் வேதையன் என்ற பெயருடைய வேதத்தில் ஏறிய பிராமணப் பிள்ளையை சந்திக்க வந்து எப்படியோ காலதேச வர்த்தமானம் தப்பி குடும்பத்தோடு அலைய சபிக்கப்பட்டவன். எத்தனை வருஷம் ஆச்சுதோ ஓர்மையில் இல்லை. வீட்டு ஸ்திரியும் பெண் குழந்தையும் கூட நஷ்டப்பட்டுப் போனேன் தற்போது. இந்த ஸ்தாலிச் செம்பில் என் அம்மா இருக்கா. பத்திரமாக அவளை வைக்க இடம் கிடைக்கலை. நீர் இதை தயை செய்து வாங்கி கோட்டயத்தில் வேதையன் வசம் சேர்க்க வேணும், விலாசம் தருகிறேன். நான் உமக்கு தூரத்து பந்து. அம்பலப்புழைக்கு நீர் சின்ன வயசில் வந்திருக்கறதாக அம்மா சொன்னாள். பகவதி சித்தி கல்யாணத்துக்கு சின்னப் பிள்ளையாக அரைஞாண் கொடியோடு வந்தீராமே. இதே போல் கௌபீனதாரியாக இருந்திருப்பீர். சரிதானே?

அந்த பிராமணனின் தமிழும் புரியவில்லை. வர்த்தமானமும் புரியவில்லை. எனக்குக் கண் இருண்டு வந்தது. அவன் பாட்டுக்கு என் கையில் ஸ்தாலிச் செம்பை ஒப்படைத்து விட்டு வண்டியேறிப் போயே போய் விட்டான்.

செம்பும் கையுமாக நான் நிற்கிறபோதுதான் தர்மகர்த்தாக்களும் மெய்க்காப்பாளர்களும், என் வண்டிக்காரனும் தெலுங்கு தேச மனுஷர்களும் வந்து சேர்ந்தார்கள். இவன் தான் இவன் தான் என்று எல்லோரும் ஏக காலத்தில் சொன்னதும், வயதான ஸ்திரி பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்ததும் ஒரே நேரத்தில் நடந்தது.

தர்மகர்த்தாக்கள் தூசு நெடியடிக்கிற ஒரு அழுக்கு சிவப்பு வஸ்திரத்தை என்மேல் வீசி உடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். அவர்கள் வண்டியில் காலடி வைக்கிற இடத்தில் விரித்திருந்த துணி அது.

கல்யாணி என்ற ரெட்டிய ஜாதிக் கன்யகையை திருக்கழுக்குன்றம் மலையில் வலுக்கட்டாயமாகத் தூக்கிப்போய் பலதடவை அவள் உடம்பைச் சுகித்து அப்புறம் அவளை குன்றின் மேலே இருந்து உருட்டி விட்டுத் தலை சிதறி விழவைத்துக் கொன்றதாக என்மீது குற்றச்சாட்டை அவர்கள் வைத்தார்கள்.

கல்யாணி எங்கே?

நான் தர்மகர்த்தாக்களும் மற்றவர்களும் கைகாட்டிய திசையில் பார்த்தேன். மட்டக் குதிரை வண்டியில் முழுக்க சிவப்பு சேலை போர்த்து மூடி ரத்தக் கசிவோடு சடலம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. காற்றில் முகத் துணி விலக கல்யாணி சிரித்தாள்.

ஓய் பிராமணரே, நாளைக்கு கல்யாணம். நமக்கு.

அவள் சொல்கிற மாதிரி காதில் ஒலித்தது.

ஐயன்மீர், எழுத வேறு காகிதம் இல்லாததாலும் இனியும் சிப்பாய் வீரரின் சகாயம் கிடைக்காது என்பதாலும் இத்தோடு நான் இந்த கருணையை யாசிக்கும் லிகிதத்தை முடித்துக்கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.

கல்யாணி என்ற ரெட்டியக் கன்யகையின் ரூப சௌந்தர்யத்தில் மயங்கி அவளை என் வசப்படுத்த நான் முயன்றது என்னமோ உண்மைதான். அதற்கான அதிகபட்ச தண்டனைக்கு நான் தகுதியுடைவன் ஆவேன்.

ஆனால் கல்யாணியை நான் கொலை செய்யவில்லை. ரிஷிகள் கழுகு ரூபத்தில் வந்து என்னை ரட்சித்துத் துரத்திவிட, நான் அவளை விட்டு விலகி ஓடி, மலைக்குக் கீழே இறங்கி வந்துவிட்டேன். மனசை அடக்காமல் நாசமாப் போனேன். ஆனால், நான் அந்த அறியாப் பெண்ணை கொன்னு போடலை. என் பிதிர்க்கள் சத்யமாக நான் கொலைகாரன் இல்லை.

மலை இறங்கி வந்த இடத்தில் என்னோடு சம்பாஷணை நடத்திய மலையாள பிராமணன் ஒப்படைத்த ஸ்தாலி சொம்பு தற்போது போன இடம் தெரியவில்லை. அது இருந்தாலோ அல்லது அந்த பிராமணன் திரும்பி வந்தாலோ, நான் சொல்வது நிஜம் என்பதை ஏதோ விதத்தில் நிரூபிக்க அதெல்லாம் உறுதுணையாக இருக்கும் என்று என் மனசு சொல்கிறது.

இல்லாத பட்சத்தில், அந்த ரெட்டியக் கன்யகையை நான் படுகொலை செய்யவில்லை என்று சாமி சத்தியமாக இன்னொரு முறையும் தெரிவிக்கிறேன். தூக்கில் போடாது இந்த ஏழை உசிரைக் காப்பாற்ற வேணும். தீவாந்திர சிட்சை கொடுத்தாலும் அதை சொர்க்கமாக எண்ணி அனுபவிக்க இந்த அடிமை சித்தமாக இருக்கிறேன். வேணும் சகல தெய்வங்களின் கடாட்சமும் மன்னிப்பும்.

இப்படிக்கு
மயிலாப்பூர் கஸ்பா வெங்கடேச அக்ரஹார பூர்வவாசி மகாலிங்கய்யன்

(தொடரும்)

eramurukan@gmail.com

Series Navigation