விளிம்பு

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

சூர்யராஜன்


கடற்கரையில் நின்று கொண்டிருந்தான் அவன். கடல் முன்பும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. எப்போதும் இருக்கும். சாஸ்வதம் கரையைத் தொடும் ஒரு அலைக்கும், இன்னொரு அலைக்கும் இடையில் பம்மும் ஏகாந்தம் ஓங்காரமா ? சூன்யப் பிரவேசமா ? மாயச்சுழலா ? அலைகள் வந்து காலை நனைத்தன. பொடி நண்டுகள் மணலைச் சீய்த்துக் கோலம் போட்டன. அதன் வளைகளில் அலை வந்து விலகும்போது காற்றுக் கொப்புளங்கள். அலைகள் வந்து காலைத் தொட்டு மறுபடி பின்வாங்கும்போது ‘வா ‘ என்று அழைப்பது போலிருந்தது. துாரத்தில் தொடுவானம். அசைந்தாடும் கப்பல்கள் சிறு படகுகள். செதில் போல மேகங்கள். ஒன்றிரண்டு கடற்பறவைகள் நீர்ப்பரப்புக்கு சற்று மேலே பறந்து, எம்பிக்குதிக்கும் மீன்களைக் கவ்வி விரைந்தன.

கரையில் செத்தையும், சொள்ளையும் ங்காங்கே குவிந்து கிடந்தன. ஓர் இடத்தில் சிறு கூட்டம். கடலில் விழுந்து உப்பி இறந்துபோன பெண் சடலம். மீன்கள் குதறி அடையாளம் தொியாமல் வெளுத்துப்போயிருந்தது. தற்கொலையாக இருக்கலாம்; கொலையாகவும் இருக்கலாம்.

‘அந்தப் பெண்ணைப் போலக் கடலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாமா ? ‘ என்று யோசித்தான் அவன். எவ்வளவு மோசமான கொடுஞ்செயலை நிகழ்த்திவிட்டு வந்திருக்கிறான். ‘தான் ஒரு கொலைகாரன். சற்று முன்னர் – சில மணித்துளிகளுக்கு முன்புதான் ஒரு மரணத்தை நிகழ்த்திவிட்டு வந்திருக்கிறேன் ‘ என்று சொன்னால் கரையோரத்தில் நிற்பவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் தன்னை ? பயந்து ஓடுவார்களா ? அல்லது வன்மத்துடன் குரூரமாகப் பாய்ந்தோடி வருவார்களா ? பயந்தான். சிாித்தான். எப்பேர்கொந்த நிகழ்ச்சி!. ஒரு இடம் பெண்ணின் கழுத்தில் பட்டுக் கயிற்றைப் போட்டு இறுக்குதல். தன் புஜபலபராக்கிரமத்தின் எல்லைவரை தொடுதல். அதிலே அப்பெண் போராடுகிறாள். முடியவில்லை. மூச்சு முட்டுகிறது. மெலிந்த பச்சைநிற நரம்புகள் கழுத்தில் புடைக்கின்றன. கண்களில் உயிர்க்கெஞ்சல். ஓலமிடுகிறாள். கண்கள் மேலே செருகிக் கொள்கின்றன. மூக்கிலும், வாயிலும் குருதி வழிகிறது. சூடான குருதி. மூச்சு நின்று விட்டது. அவள் கர்ப்பிணி உள்ளே இருக்கிற சிசு, காற்றில்லாமல், இன்னொரு உயிாின் கதகதப்பில்லாமல் தொப்புள்கொடி தொடர்பை நிறுத்திக் கொள்ளும். அவன் வெளியே வந்து கூட்டத்தில் ஒருவனாக் கலந்தான். சுவாசமாக முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

விரல்களில் பிசுபிசுத்த குருதி இன்னும் வெதுவெதுப்பாக இருப்பது போல் உணர்ந்தான். ஆக்கை குருதி துாியோதனின் தொடை பிளந்தான் பீமன். பாஞ்சாலி தொட்டு, விாிந்த வீழ்ந்த நீள் கூந்தலில் தடவிய உதிரம். வலித்திருக்குமா அவனுக்கு ? வலி பொதுதானே ? எதிர்நாயகருக்கு வலிக்காதா ? அதே உதிரம் தானே ? மனிதர்க்குப் பொதுவான அதே உதிரம்தானே ? பீஷ்மனுக்கு அம்புப்படுக்கையில் வலி எப்படி உருக்கியிருக்கும் ? ஜீவமரணப் போராட்டம்.

உத்திராயணம் வரும்வரை காத்திருக்கக் கூடுமா உயிர் வாங்க ? நானும் பீஷ்மனைப் போலத்தான் தந்தைக்காக என் சுகமெல்லாம் விட்டுத்தந்தேன். தகப்பனா அது ? கிழப்பிசாசு. தாய் அந்தப் பாவியிடம் அடிவாங்கியே இளவயதில் செத்தாள். அவனுக்கு அப்போது றுவயது. தாதி வளர்த்தாள் அவனை. தாய் வளர்த்தால் செழிக்கும் சிசு, தாதி வளர்த்தால் உயருமா ?

எத்தனை ஆட்டம் ஆடினான் கிழவன் ? வீட்டுக்கு வெளியே கணிகையரோடு கூடிக்குலவியிருந்த பொழுதுகள் நிறைய. அவன் அப்படியே இருந்திருக்கலாம். என் பீஷ்ம விரதத்துக்கு பங்கம் வந்திருக்காது. அம்பை பிறந்தது வாழவா ? பீஷ்மனின் வாழ்வை அழிக்கவா ? மணம் இல்லாமலாகி சிவனை நோக்கித் தவமிருந்து சிகண்டியாக அம்புவிட்டு, பீஷ்மனின் உயிர் பறிக்கும் குறியானாளே. அது விதியா ?

எத்தனை உயிர் வதைகளைப் பார்த்துவிட்டது பூமி ? ரத்தம் ஊறி, ஊறி ஊற்றுநீர் கூடச்சிகப்பாகக் கொப்புளிக்குமே. பீஷ்மனை விடு – ஞானி ! அபிமன்யு ? எந்த சுகத்தையும் காண்பதற்கு முன்னால் ஒரு போருக்கு களப்பலி வதென்றால் ? அதற்குத் தன்னை ஒப்புக் கொடுத்து முன்வந்த மனம் எப்படிப்பட்டது ? அதற்குப் பிறகு அந்த பூமியில் எத்தனை உயிர்ப்பலிகள் ?

களத்தின் நட்டநடுவே கண்ணன் நின்று கொண்டு அர்ச்சுனனைப் பார்த்து ‘ சொந்த பந்தமெல்லாம் பார்க்காதே. வில்லெடுத்துப் பூட்டு. நாணெடுத்து வீசு. ‘ என்கிறான். எமகாதகன். அந்த மனிதனுக்கென்ன ? சதா உதட்டில் சிாிப்பும், தலையில் மயிற்பீலியும், சுற்றிவரக் கச்சணிந்த கோபியர்களும்தான். ராஜயோகம் தான். யாரையாவது மாட்டிவிட ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பான். னால், அவனே லாயத்தில் துதிரையைக் குளிப்பாட்டிக் கொள்ளு வைக்கிறானே ? ஓஹோ! அந்த ளுக்கும் ரெண்டும் – நல்லது; கெட்டது, உயர்ந்தது; தாழ்ந்தது – வேறில்லை போலும். செகாவ் ஒரு கதையில் எழுதினாரே, ‘கருப்பு, வெள்ளை என்கிற இரண்டு வண்ணங்களைத் தவிர வேறு வண்ணங்கள் தொியாது ‘ அவனுக்கு என்று. அந்த மாதிாி ள் இல்லை போலிருக்கிறது இந்தக் கிருஷ்ணன் எல்லாவற்றையும் சகஜமாக எடுத்துக் கொள்கிறானாக்கும்.

சாி. அவனும் அந்த மாதிாி கொலை செய்த பிறகும் தன்னிடம் எந்த வேற்றுமையும் காணக்கிடைக்கவில்லை அவனுக்கு.

கடற்கரையை விட்டு நகர்ந்தான். கால்போன இடங்களில் நடந்தான். எதிரே போக்குவரத்து நொிசல். பாக்கெட்டிலிருந்து சிறு உருண்டையை எடுத்து வாயில் போட்டான். அவித்த முட்டை வாசனை வந்தது. ஒரு டாக்கடையில் சிங்கிள் பால் வாங்கிக் குடித்தான். ‘காசு ? ‘ என்றான் கல்லாவிலிருந்தவன். பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டான். பத்து ரூபாய் நோட்டு வந்தது. கொடுத்தான். ‘சேஞ்ஜ் ‘ வாங்கவில்லை. நடந்தான்.

ஒரு குறுகலான தெருவில் லம்பாடிகள் கலைக்கூத்து நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு குள்ளன் அந்தர்பல்டி அடித்துக் கொண்டிருந்தான். நீளவாக்கில், பெருக்கல்குறி போல எதிரெதிரே இரண்டு கனத்த மூங்கில்களை நட்டிருந்தார்கள். குட்டைப் பாவாடை உடுத்திய பெண்ணொருத்தி அந்த மூங்கில்களை இணைத்துக் கட்டிய கம்பிக்கயிற்றின் மீது, குறுக்குவாட்டில் ஒரு நீண்ட மூங்கிலை ஏந்தியபடி நடந்தாள். கூட்டம் கைதட்டியது. அவன் தட்டவில்லை.

இரண்டுபேர் குற்றம் செய்ததாக, அரசன் முன்னிலையில் நிறுத்தப்படுகிறார்கள். தண்டனை தர வேண்டும். அரசன் விநோதமான நிபந்தனை விதிக்கிறான். எதிரெதிரே உள்ள குன்றுகளின் உச்சியில் கயிறு கட்டப்படுகிறது. எவன் கயிற்றின் மீது நடந்து எதிர்ப்பக்கமுள்ள குன்றை அடைகிறானோ, அவனுக்கு தண்டனை கிடையாது. முதல் மனிதன் கயிற்றின் மீது நடந்து எதிர்க்குன்றை அடைந்துவிடுகிறான். அடுத்தவன் சமன் தவறி பள்ளத்தாக்கில் விழுந்து செத்துப்போகிறான். முதலாமவன் விடுதலை செய்யப்படுகிறான். அரசன் சொல்லும் காரணம் ‘சமச்சீரான மனத்துடன் இருந்த முதலாவது ள் கயிற்றில் நடந்து எதிர்க்குன்றை அடைந்து விட்டான். இரண்டாவது ள் அப்படி இல்லை. அவன் குற்றம் செய்திருக்கக்கூடும். எனவே மனப்பதற்றத்தில் சமன்தவறி பள்ளத்தில் விழுந்து இறந்தான் ‘ அவனுக்கு இக்கதை பிடிக்கவில்லை.

அவனுடைய கேள்வி எளிமையானது. ‘குற்றம் செய்வதில் ஒரு சமச்சீரான மனநிலையை ஒருவன் வளர்த்துக் கொண்டுவிட்டால், அவன் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியுமில்லையா ? என்பது. அவன் நிற்கப்பிடிக்காமல் நடந்தான். எந்தக்கேள்விக்குத்தான் எவரால் சாியாக பதில் சொல்ல முடியும் ?

****

இரண்டு

இருட்டு முழுக்க க்ரமித்துவிட்டது. ஒரு கடையில் தேங்காய் பர்பி வாங்கி வாயில் போட்டு மென்றான். ஒரு சர்ச் முன்பு நின்றான். பிரேயர் முடிந்து ட்கள் வெளியே வந்துக்கொண்டிருந்தார்கள். கையில், காலில் கட்டுகளுடன் சில குஷ்டரோகிகள் வழியில் உட்கார்ந்து அலுமினியத்தட்டுகளைக் குலுக்கிக் கொண்டிருந்தனர். ஒருவன் கீழே மல்லாக்கப்படுத்து, கால் மேல் கால்போட்டு ஏதோ துண்டுப்பிரசுரத்தைப் படித்துக் கொண்டிருந்தான். அவனுடைய பாதிவிரல் இடுக்குகளில் நிணம் வழிந்துக் கொண்டிருந்தது. அதன் மேல் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. இன்னொருத்தன் பீடி புகைத்துக் காறித்துப்பிக் கொண்டிருந்தான். பக்கத்தில் மூக்கில்லாத ஒரு பெண் குவளையிலிருந்த சோற்றைத் தன்னுடைய மொட்டையான கைகளினால் எடுத்துத் தின்று கொண்டிருந்தாள். ஒரு கிழவி சற்று றியது போலிருந்த தன் கால்விரல் இடுக்குகளிலிருந்து காய்ந்த தோலைப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தாள். மிகவும் தெளிவான முகத்துடன் சில சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். எவனுடைய குழந்தைகளோ ? இவர்களும் கூடவே இருந்து காலப்போக்கில் நோய்தொற்றி, மற்றவர்களைப் போலவே புழுத்து உதிர்ந்து விடுவார்களோ ? ஒரு படத்தில் பார்த்த ஞாபகம். கணவன், மனைவி இருவரும் பங்காளிகளுடன் தகராறில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் இருக்கிறார்கள். அவள் கர்ப்பிணி. கலைக்கச்சொல்கிறான். அவள் மறுக்கிறாள். ‘நாம் தான் குற்றவாளிகள். குழந்தையின் மீதும் அந்தச் சாயல் படியவேண்டுமா ? ‘ இது கணவனின் கேள்வி. அவனுக்கு, கணவன் சொன்னது நியாயமாகத் தோன்றியது.

தகப்பன் கிழத்திடம் கூடச் சொன்னான் : ‘கல்யாணம் ஏம்ப்பா உனக்கு இந்த வயசுல ? ‘ என்று. கிழம் கேட்கவில்லை. ஏற்கனவே நடுவயதில் இரண்டு கல்யாணம் பண்ணி, அந்தப் பெண்களும் (சித்திகள் ?) இந்த ள் கொடுமை தாங்கமுடியாமல் ஓடிவிட்டார்கள். 65 வயதில் ஹார்ட் அட்டாக் என்று ஸ்பத்திாியில் படுத்தது கிழம். ஒத்தாசைக்கு வந்த நர்சை மனைவியாக்கிக் கொண்டது. அவன் வயதிலேயே அவனுக்கு ஒரு சித்தி. அவளும் கர்ப்பமாகிவிட்டாள். கிழத்துக்கு ரொம்ப ஏத்தம். அவனுடைய வாாிசு உாிமைக்கு ஒரு போட்டி. சொல்ல முடியாது… சித்தியே பிள்ளை பேரை வைத்து எல்லாவற்றையும் சுருட்டிவிடுவாள் அல்லது கிழவனே கூட ‘சொத்து என் சுய சம்பாத்தியம் ‘ என்று அவனுக்கு ஏதும் கொடுக்காமல் நட்டாற்றில் விட்டுவிடலாம். எவ்வளவுதான் சொல்வது ? அவனுக்கு வேறுவழி தொியவில்லை ! சித்திக்கு இது நிறைமாசம். எந்நேரமும் பிரசவம் நடக்கலாம். அவன் அனாதையாகிவிடலாம். திட்டம் போடாமலேயே தன் காாியத்தை நிறைவேற்றிவிட்டான். அநாவசியமாகத் தன்னை ஒரு கொலைகாரனாக்கி விட்டான் கிழவன் என்று அவன் பொறுமினான்.

சற்று நேரத்துக்கு முன்னால் வாயில்போட்ட உருண்டை தன் பணியைத் துவங்கிற்று எனலாம். கால்கள் இற்றுவிடுவது போன்று தக்கையாகின. ரோட்டோரத்தில் அந்தக் குஷ்டரோகிகளில் ஒருவனாகப் படுத்துக்கொண்டான். அந்த இடத்தில் மங்கலான வெளிச்சம் மட்டுமே காணக்கிடைத்தது. எதிர்பாரா தருணத்தில் காதுமடல்கள் ‘ஜிவ் ‘வென்று சூடேறியது. வெட்டித் துடித்தது. அச்சூடு நகர்ந்து கண்கள் உஷ்ணமாயின. மூக்கு நுனியில் வெப்பம் தேங்கி நுழைந்து, கழுத்தில் தயங்கி ஸ்தம்பித்தது. சூடு… உஷ்ணம் …. நெஞ்சில், கையில், விரல்களில், வயிற்றின் குடல்களில், கால்களின் நரம்பில் பெருவிரலில் ஊடும்பாவுமாக உஷ்ணநதி ‘ஸிட் ‘ போலப் பிரவகித்தது. திடாரென்று உள்ளே ஒரு சில்லிப்பு. உறைபனி மழை. உஷ்ணமும் குளுமையும் மாறி மாறி ஓடின. வலது காலை யாரோ இழுத்தார்கள். அது நீளமாகப் போனது. விட்டார்கள். அது ‘எலாஸ்டிக் ‘ போல ‘டப் ‘ பென சுருங்கிக் கொண்டது. கைகளைப் பின்னால் யாரோ முறுக்குவது போலிருந்தது. அவன் எதிர்த்தான். நிமிர்ந்து எழுந்து உட்கார முயற்சித்தான்; முடியவில்லை. என்ன நடக்கிறது என்று உணர முயற்சித்தான் சாத்தியமாகவில்லை. பிரக்ஞை நழுவிற்று. கண்முழிகள் பொிதாகி வெடித்தன, கல் டப்பாசு போல. யானையின் கண்கள் போல இடுங்கிச் சிறுத்தன. வாய்கோணிக் கொண்டு இழுத்தது. இதயத்தின் குறுக்கு வெட்டுப்பகுதியை எடுத்து யாரோ அவனிடம் காட்டினார்கள். அது அவனுடையதுதான். வாங்கிப்பொருத்திக் கொண்டான். கரும்பு பிழியும் யந்திரத்தில் வைத்து, யாரோ ஒரு மனிதனைப் பிழிந்து, நாலு அவுன்ஸ் ரத்தம் கொடுத்தார்கள். குடித்தான். சுவையாக இருந்தது. வெகுட்டியது. குமட்டியது. வாந்தி எடுத்தான். எதிரே ஏதோ மங்கலாகத் தொிந்தது. ஒரு சடலத்தை எாித்துக் கொண்டிருந்தார்கள். அாிக்கும் கண்களைக் கசக்கிக் கொண்டு அருகில் போனான். அவனுக்கும் ஒரு சுருட்டு கொடுத்தார்கள். அய்யனார் அாிவாளுடன் வந்தார். வெட்டியது அவனைத்தானோ ? எதிரே அவன் தலை, கைகள், உடம்பு, கால்கள் தனித்தனியே சிதறிக்கிடந்தன. ஒட்டவைக்க முயற்சித்தான். எடுக்கவே முடியவில்லை. சக்கரம், இருக்கை, குதிரை, அச்சாணி, கொற்றக்குடை எல்லாம் இங்கே. தேர் எங்கே ? ஊழிக்காற்று, பிரளயம், பாலை அனல். புரட்டிப்போட்டது போல் ஊரே சிதிலப்பட்டுக் கிடக்கிறது. அழுகை சத்தம். சிசுவின் பசிக்குரல். கண்ணோட்டுகிறான் – காடு, மலை, கட்டிடங்கள் எல்லாம் புதைந்திருக்க, பூமிக்கு மேலே நீட்டிய ஒரு பெண்கரத்தின் விாிந்த உள்ளங்கையில் அழகான குழந்தை வெட்டவெளியை நோக்கி அழுகிறது. தான் புதைந்தாலும் குழந்தையைக் காப்பாற்றிவிட்டது தாய்மை. ‘காதலி கேட்டாள் ‘ என்று தாயின் இதயத்தை வெட்டி எடுத்து வருகிறான் அவன். வழியில் கல் தடுக்கிக் கீழே விழுகிறான். ‘மகனே பார்த்துப்போ… அடிபட்டால் உனக்கு வலிக்குமே ‘ என்று பதறுகிறது தாயின் இதயம்.

ஏதோ உதறியது. முகபடாம் அணிந்த ராஜயானை மெல்ல நகரும் மழைமேகம் போல அசைந்து வந்து அவன் உடல்பாகங்களை இடறி, நசுக்கிப் போயிற்று. அவனுடைய சித்தி பிரசன்னமாகி, யானையைப் பார்த்து ‘நில் ‘ என்றாள். பெரும்பாறையொத்த யானை பதறித்திகைத்து நின்றது. பயந்து திரும்பி, தத்தளிக்கும் குளத்தலை போலத் தலும்பி நடந்தது. சித்தி, எல்லா உறுப்புகளையும் மாலை கோர்க்க மகிழம்பூ மரத்தினடியில் துாவிக்கிடக்கும் மலர்களைப் போல் சேகாித்துத் தந்தாள். வாங்கி உடுத்திக் கொண்டு அவன் அவனாகினான். நன்றி சொல்ல நிமிர்ந்தான். சித்தி துாரத்தில் போய்க் கொண்டிருந்தாள் கரையும் இசைபோல. முழிப்பு தட்டியது. உடைகள் வேர்வையில் நனைந்து மரப்பட்டை போல ஒட்டியிருந்தன.

சிறுநீர் கழிக்க நினைத்து நடந்தான். வள்ளுவரை வழியில் சந்தித்தான். அவர் வாசுகியோடு வாதாடிக் கொண்டிருந்தார். ‘நான் தினமும் உணவு நேரத்தின் போது சிறு கிண்ணத்தில் நீரும் அருகில் ஊசியும் வைக்கிறேனே… அது, ஏனென்னு கேட்டார்களா ? ‘ என்றாள் வாசுகி. தாஸ்தாயவஸ்கி, சீட்டுக் கட்டை கிழிந்த கோட் பாக்கெட்டில் மறைத்துக் கொண்டு குறுக்கே வந்து சமாதானப்படுத்தினார். ‘தங்கச்சி … இதையெல்லாம் பொிசு பண்ணாதே. ம்பளைங்களுக்கு வெளியில யிரம் பிக்கல் பிடுங்கல் இருக்கும் ‘ என்றார். சண்டை தீர்ந்தபாடில்லை. அவனும் கூடஇருந்து சமரசம் பண்ணிவைத்தான்.

மூன்று

****

நடந்து, நடந்து ரயில் நிலையத்தை அணுகிவிட்டிருந்தான். வழக்கமான துாங்கு மூஞ்சித்தனத்துடன் ரயில்நிலையம் காட்சி தந்தது. ரயிலை நினைத்தாலே அவனுக்கு பயம். ஒரு கல்யாணத்துக்கு அவனும், நண்பர்கள் நால்வரும் மதுரைக்குப்போனார்கள். இரவு ரயில். ‘கூஃபே ‘ புல் தண்ணி பிளேயிங் கார்ட்ஸ் இருபபதிலேயே ‘கட்ஸ் ‘ அதிகமானவன் என்று சொல்லப்பட்ட நண்பன். ‘ஒன்னுக்குப் போயிட்டு வரேன் ‘ என்று புவிஈர்ப்பை உறுதிபண்ணிக் கொள்ள கால் அழுத்தி தள்ளாடிக் கொண்டு சென்றான். கூத்து, கும்மாளத்தில் அவன் திரும்பி வராததை யாரும் கவனிக்கவில்லை. இவனுக்கு மட்டும் ஏதோ ‘நச்சக் ‘ என்ற அதிர்வு – சிறு பொருளின் மீது கனத்த பாரம் ஏறி இறங்கும் உராய்வு உள்ளுக்குள் கசிந்தது. போதையினுாடாக சற்றுநேரம் கழித்து, ‘நண்பனைக் காணவில்லை ‘ என்று தேடினர்.

கக்கூஸ் கதவு மூடியிருந்தது. கம்பார்ட்மெண்ட் கதவு திறந்து காற்றில் ‘டபக் தபக் ‘ என்று அடித்துக் கொண்டிருந்தது. அபாயச்சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார்கள். அடிபட்ட மிருகம் போல முனகி வண்டி நின்றது. கார்டு, டிரைவர்கள் சில பயணிகள் இறங்கினர். அந்தகார இருட்டு. ராக்கோழிகளின் முணுமுணுப்பு. எங்கேயென்று தேடுவது ? கையில் டார்ச்லைட் துாசு பறக்கும் நீளக்குழல் வெளிச்சம். அவன் யதேச்சையாக கம்பார்ட்மெண்ட்டின் படிகளுக்கு அருகிலிருந்த சக்கரத்தைப் பார்த்தான். அதன் விளிம்பில் மூளையின் பிசுபிசுப்பான நிணம் சிறிதும், காய்ந்த ரத்தமும் ஒட்டியிருந்தன. இப்படி இருக்கிறது வாழ்க்கையின் இயல்பு! இருப்பின் நிகழ்வுகள் அப்பதமானவை; அபத்தத்தைத் தவிர வேறேதும் இல்லையென்றே சொல்லிவிடலாம். வாழ்வது தானே வாழ்க்கை ? இது சாவது, வீழ்வது …. எனவே பெயரை மாற்றி ‘வீழ்க்கை ‘ என நாமகரணம் சூட்ட முடிவு செய்து கொண்டான்.

இப்போது வேறு பயம். தன் கொலைக்குற்றம் தொிந்து, யாராவது புலனாய்வு செய்கிறார்களோ என்று சந்தேகக் கண்களுடன் சுற்றுமுற்றும் பார்த்தான். காக்கிச்சட்டை அணிந்த ஒரு மனிதன் வேகமாக இவனை நோக்கி ஓடிவந்தான். கையில் லத்தி. ‘பிடிபட்டு விட்டோம் ‘ என்றே நினைத்தான். ஓட நினைத்து, பம்மிப் பதுங்கினான். ஒரே நிமிடம்.. இதோ.. எாிகல் பூமியின் மீது மோதப்போகிறது. அவ்வளவுதான். ட்டம் க்ளோஸ். சோகமுடிவுக்கு அப்புறம் கூட ‘சுபம் ‘ என்று கார்டு போடும் சினிமாப்படம் போல ‘சுபம் ‘ போட வேண்டியதுதான். அமைதி காதில் ஒலித்தது. ஏதும் நடக்கவில்லை. கண்களைத் திறந்தான் காக்கிச் சட்டை மனிதன் இவனைத் தாண்டிப் பாய்ந்தான். தன் கையிலிருந்த லத்தியை, ஒரு சொறிநாயை நோக்கி வீசியெறிந்தான். நாய் மரணஓலமிட்டு ஓடியது. காக்கிச் சட்டையும் துரத்தி ஓடினான். ஒன்று உயிர் பயம். இன்னொன்று வேலை பயம். இருவாில் நாய் எது என்று குழப்பமாக இருந்தது.

அவனும் ஒரு நாயை வளர்த்திருந்தான். Pet Animal அவன் போலீசால் பிடிக்கப்பட்டு, கோர்ட்டில் துாக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டு சொர்க்கத்துக்குப் போகும்போது நாய் ஏதும் கூட வராது. அது ஒரு நிம்மதி. யாரோ ஒரு சாமி – தருமரா அது ? ‘என் நாயும் கூட அனுமதிக்கப்பட்டால்தான் நான் சொர்க்கத்துக்குள் நுழைவேன் ‘ என்றாராமே ! என்னய்யா அக்கிரமம் இது ?. இதோ, மனுஷனுக்கு ‘அக்கடா ‘ என்று படுக்க ஒரு சிமிண்ட் பெஞ்ச் கிடைக்கவில்லை, ரயில்வே ஸ்டேஷனில். அதது வேலை, வேட்டி இல்லாமல் படுத்துத் துாங்கிறதுகள். வேலையற்றதுகளின் உள்ளங்களிலே விபாீத எண்ணங்கள். ‘இந்த பவிஷில் நாய்க்கு எதற்குங்காணும் சொர்க்கம் ? அந்த மனிரைப்பார்த்தால் எடுத்துச் சொல்லி விளக்கலாம். தருமா…! எங்கேய்யா இருக்கே நீ.. வாய்யா.. வந்து ஒரு Peg சாப்பிடு. வெக்கப்படாம விவரமாச் சொல்லு. என்னா .. பதில் பேசமாட்டேங்குற ? தண்ணி கொண்டார தம்பிங்களை குளத்துக்கு அனுப்பிச்சியே. அருமையா ‘க்ட் பண்ணிட்டேப்பா அந்தக் காட்சில.. படா கேடிய்யா நீ !.

ஒரு பட்ட மரத்தின் அடியில் ஒதுங்கினான். பக்கத்தில் Shunting யார்டு. சில வேகன்கள் நின்றிருந்தன. ஓடும் நேரங்களில் இந்த ரயில்கள் காட்டும் பாவனையும் பதற்றமும் பரபரப்பும் விடுத்து அவை இப்படி கையறு நிலையில் நின்றுக் கொண்டிருப்பதை அவன் ரசித்தான். வெயில் சுட்டொித்தது. ‘ஒன்று – வருகிற ரயிலில் தலை கொடுத்து சாகவேண்டும். அல்லது இந்த ரயிலில் ஏறி எங்காவது ஒாிசா அல்லது பம்பாய்க்குப் போய்விட வேண்டியதுதான். தலைமறைவாக வாழ அதுதான் சிறந்தவழி. னால், இங்கே எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காதே! பரவாயில்லை. என்ஜின்டிரைவாிடம் சொல்லி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ‘ என்று சமாதானப்படுத்திக் கொண்டான். அலைவது தன் விதியா ? வனவாசமா ? முடிசூட்டலுக்கு முன்பு வனவாசம் உண்டு போல்ிருக்கிறது கண்டிப்பாக.

ஸ்டேஷன் மாஸ்டர் வந்தார். எங்கோ தொலைவில் தண்டவாளத்துக்கு வெடிகுண்டு வைத்துவிட்டார்களாம். 19 பேர் சாவாம். இன்னும் இரண்டு நாட்களுக்கு அந்த வழியாக ரயில் போக்குவரத்து கிடையாது என்று அறிவித்துவிட்டுப்போனார். எாிச்சலாக வந்தது அவனுக்கு. தான் இங்கேயே கிடந்து, குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு சாகவேண்டுமா என்று கேட்டுக் கொண்டான். உலகம் ஈவிரக்கமற்று நடந்து கொள்கிறது. தன் மனதுக்குப் பட்டதை சொல்ல செய்ய முடிகிறதா உன்னால் ? புதிய கருத்துக்களை, மாற்று மதிப்பீடுகளை சொல்பவர்களை சிலுவையில் அறைகிறது. கழுவேற்றி வதைக்கிறது. விஷம் கொடுத்துக் கொல்கிறது. சுட்டு சாகடிக்கிறது. ‘யப்பாடா தொலைந்தான் நிம்மதி.. ‘ என்று சுவாசப்படுத்தி நாித்தனத்துடன் ஈர உதடுகளைத் தடவி சப்புக் கொட்டும்போது, லாவா போல நின்று நெருப்பு வெள்ளமாகப் பீாிட்டுக் கொண்டு கிளம்புகிறது. அது கொன்றழிக்கப்பட்டவர்களின் – அப்படிக் கொன்றொழிக்கப்பட்டதினாலேயே மேலும் முக்கியத்துவம் பெற்றவர்களின் கருத்துப்பிரவாகம். அதன் வேகம் சூறாவளியாகக் கிளர்ந்து உலுக்கிவிடுகிறது. ‘என்னைக் கொன்றாலும் அப்படித்தான் கிளம்பிவருவேன் ‘ என்று சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தான். இலக்கின்றி நடந்தான். வழியில் ஒரு உறவினர் பார்த்தார். ‘எங்கே நாலு நாளா உன்னைக் காணலே ? ‘ என்றார். அவன் பேசாமல் நடந்தான். அவர் ஏதோ சொல்லிக் கொண்டு, அவன் பின்னாலேயே வந்தார்.

‘உன் சித்திக்கு பிரசவவலி கண்டிருக்கு. காலையில ஸ்பத்திாில சேர்த்தாங்க. உன் அப்பா உன்னைத் தேடிக்கிட்டிருக்கார் ‘ என்றார்.

ஸ்பத்திாியில் நுழைந்தான். பினாயில் நாற்றம். குரோட்டன்ஸ் சமீபத்தில் ரத்தம் ‘ஸ்ப்ரட் ‘ ன ‘பாண்டேஜ் ‘ துணிக்குப்பை. அப்பா அவனைப்பார்த்தார். வாஞ்சையுடன் பார்த்தது போல இருந்தது. கண்ணாடிக் கதவின் ஊடாக ஓர் காட்சி தொிந்தது. சித்திரை ஸ்ட்ரெச்சாில் படுக்கவைத்து பிரசவ அறைக்குத் தள்ளிச் சென்றனர் நர்சுகள். சித்தி பிரசவவலியில் கத்திக் கொண்டிருந்தாள். வெராண்டாவின் படிக்கட்டுகளில் உறவினர்கள் சிலர் உட்கார்ந்திருந்தனர். அவனும் போய் உட்கார்ந்து கொண்டான்.

—-

Series Navigation

சூர்யராஜன்

சூர்யராஜன்