விரிக்கும் நிழலில் தேவதையின் சிறகு

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

ஹெச்.ஜி.ரசூல்


மரங்கொத்திப் பறவையின் அலகில்
எத்தனை மரங்களின் ருசி
மாவடுக்கள் பூத்த மரம்
ஏனென்று ஏதென்று தெரியாமல்
தன் பிஞ்சுகளை எல்லாம்
ஒரு மழையில் உதிர்க்கிறது
காற்றில் படர்கிறேன்
நாலா பக்கமும் சிறகு விரித்து
நின்ற இடத்திலிருந்தே
எனது பறத்தல் தொடர்கிறது.
விரிக்கும் நிழலில் தேவதையின் சிறகு
சப்பாத்திக் கள்ளிகளை ஏளனத்தோடு பார்த்து
வில்வமரம் சொன்னது.
வேலியோரம் கிடக்கும் உனக்கு
முட்களால் ஒரு உடல்
வாழ்நாளில் யாராவது உன்னை
ஒருதடவையாவது கட்டியணைத்து
முத்தம் தர முடியுமா..
எங்கிருந்தோ பறந்து வந்த
பட்டாம் பூச்சி ஒன்று
சப்பாத்திக் கள்ளியின் முட்களில்
செல்லமாய் முத்தமிட்டு சென்றது.
அந்த உயிரில் பரவிய வெறி
உள்ளேயும் வெளியேயும்
நீக்கமற பற்றிப் படர்கிறது.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation