வியாபாரிகளாகும் நடிகர்கள்!

This entry is part [part not set] of 31 in the series 20080807_Issue

அக்னிப்புத்திரன்


தமிழ்த் திரையுலகு சம்பந்தப்பட்ட மூன்று செய்திகள் தமிழக ஊடகங்களில் தற்போது சற்றுப் பரபரப்பைக் கூட்டியிருக்கின்றன. ஒன்று தசவதாரம் படத்தைப் பற்றிய இயக்குநர் பாரதிராஜாவின் கடுமையான விமர்சனம். மற்றொன்று குசேலன் திரைப்படத்தைக் கர்நாடகாவில் திரையிடுவதற்காக அங்கே உள்ள கன்னட வெறியர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொண்ட செய்தி. இறுதியாக, நடிகர் விஜயகாந்த் விவசாயி வேடமிட்டு, மேடையிலே தப்பும் தவறுமாக உளறிக்கொட்டிய நிகழ்வு.

இப்படி சினிமா நடிகர்களின் பேச்சு செயல் எல்லாம் நமது ஊடகங்களினால் அவ்வப்போது பெரிதுபடுத்தப்படுவதால் அவர்களும் தங்களை பெரிய ஆட்களாக நினைத்துக்கொண்டு, 2011–ல் நான்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று மார்த்தட்டிக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள்.

இயக்குநர் பாரதிராஜவுக்கு என்ன வயிற்றெரிச்சல். தசவதாரம் நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாகத்தானே வந்துள்ளது.

“தசவதாரம் படத்துல என்னய்யா கதை இருக்கு… இதே வேலையை வேற எவனாவது செய்திருந்தா பத்திரிகைக்காரங்க நீங்கல்லாம் போட்டுக் கிழிச்சிருக்க மாட்டீங்க… இப்ப என்ன பண்றீங்க… குறிப்பிட்ட நடிகரை (கமல்) குளிர்விப்பதற்காக ஆஹா ஓஹோன்னு எழுதறீங்க!” என்று பாரதிராஜா கமல் மீது ஒரு விழாவில் எரிந்து விழுந்திருக்கிறார்.

தொடர்ந்து தோல்வி படங்களைக் கொடுத்து வரும் பாரதிராஜா என்ன அருகதையில் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது யாருக்கும் புரியவில்லை.

தசவதாரம் படம் மக்களுக்குப் பிடித்திருக்கிறது. ஒருமுறைக்கு இருமுறை குடும்பம் குடும்பமாகச் சென்று அப்படத்தைப் பார்க்கின்றார்கள். படமும் வெற்றி பெற்றிருக்கின்றது. ஏன் பாரதிராஜாவிற்கு மட்டும் வயிறு காய்ந்து எரிகிறது? அது ஒரு பொழுதுபோக்குப் படம் அவ்வளவே! அதற்கு மேல் அதில் என்ன எதிர்பார்த்து ஏமாந்தார் பாரதிராஜா?

அதே போல, தனது படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக நடிகர் ரஜினி கன்னட வெறியர்களிடம் மன்னிப்புக் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். நடிகர் என்ற முறையில் அவர் தொழிலில் அவர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. வியாபார நோக்கில் மட்டுமே நடிக்கும்/செயல்படும் நடிகர்களிடம் எதையோ எதிர்பார்த்து அவர்களைத் திட்டுவது விந்தையிலும் விந்தை. தவறு நம்மிடம்தான் உள்ளது. நடிகர்களிடம் ஏதோ பெரிய சக்தி இருப்பதுபோலவும் அவர்களிடம் பெரிதாக எதையோ எதிர்பார்ப்பதும் மக்களிடம் உள்ள மிகப்பெரிய குறையாகும்.

இந்த குறையை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு பணம் பண்ணும் தொழிலில் இறங்கியுள்ள சில நடிகர்கள் தற்போது அரசியலில் முதலீடு போடத் தொடங்கியுள்ளனர். இந்த வரிசையில் நடிகர் விஜயகாந்த், நடிகர் சரத்குமார், நடிகர் கார்த்திக், நடிகர் விஜயராஜேந்தர் என்று ஒரு பட்டியலே நீளுகிறது. மேலும் இப்பட்டியலில் சேர்வதற்கு நடிகர் பிரபு, நடிகர் விஜய் போன்றவர்களும் தயாராகி வருகிறார்கள்.

நடிகைகளில் சிலருக்கும் இந்த ஆசை ஏற்பட்டிருக்கின்றது. நடிகை விஜயசாந்தி, நடிகை ரோஜா, நடிகை ஜெயப்பிரதா போன்ற நடிகைகள் தெலுங்கு தேசத்தில் அதாங்க ஆந்திரவின் அரசியலில் ஈடுபட்டு நல்ல இலாபம் பெற்று வருகின்றனர். மேலும் முன்னாள் நடிகையான ஜெயலிலதா தமிழக அரசியலில் ஈடுபட்டு புகழும் செல்வமும் குவித்திருப்பதைக் கண்ணாலயே கண்டுவிட்டதால் தமிழ்நாட்டில் நடிகை திரிஷா, குஷ்பூ, நமீதா போன்றவர்களும் அரசியலில் ஈடுபடலாமா என்று அவ்வப்போது ஆலோசித்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் முழுமையாக அரசியலில் ஈடுபட முடியாமல் தடுப்பது சினிமா உலகில் அவர்கள் செய்த/செய்யும் முறைகேடான செயல்கள் அம்பலத்திற்கு வந்துவிடுமே என்ற பயமேயாகும்.

சினிமாக்காரர்களில் கமலை மட்டுமே பாராட்டலாம். உலகத்தரமான படங்களைத் தமிழில் எடுக்க முயற்சிக்கிறார். ஏதாவது வித்தியாசமாக செய்கிறார். வித்தியாசமாக நடிக்கிறார். தான் உண்டு தன் தொழில் உண்டு என்றிருக்கிறார். செய்யும் தொழில் புதுமையைக் காட்டிட முற்படுகிறார். தொழில்நுட்பத்தில் புதுமையைப் புகுத்தி மக்களை மகிழ்விக்கிறார்.

ஆனால், இதே சினிமா உலகில் மக்களை ஏமாற்றவும் குறுக்கு வழியில் பணம் ஈட்டவும் ஒரு கும்பல் அரசியல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. வர வர சில நடிகர்கள் செய்யிற அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஆளாளுக்குக் கட்சி ஆரம்பிச்சுட்டு அவனவன் வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டிக்கொண்டு மீட்டிங் போடுகிறார்கள். கண்களில் கறுப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு ஒருவர் மேடையேறி முழங்குகிறார். மற்றும் ஒருவரே தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு சினிமா ஸ்சூட்டிங்கைவிட அற்புதமாக கை கால்களை ஆட்டியும் அசைத்தும் அற்புதமாக நடிக்கிறார். இதையும் ஒரு கூட்டம் கூடி நின்று, வாயைப் பொளந்துகிட்டுக் கேட்டு அல்லது பார்த்து ரசிக்கின்ற அவலநிலை தமிழகத்தில் இன்று நிலவி வருகின்றது.

கூட்டத்தைப் பார்த்ததும் மேடையிலே என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்று தெரியாமல், இந்த நடிகர்களுக்கு ஆவேசம் பிச்சுகிட்டு வந்திடுது. கூடியிருக்கும் கூட்டத்தை குஷிப்படுத்த ஏதேதோ உளறிக்கொட்ட ஆரம்பிக்கின்றனர். அவர்களின் உளறலுக்கு கூட்டம் கைதட்டி விசில் அடித்து உற்சாகப்படுத்துகிறது. இலவசமாக ஒரு சினிமா படப்பிடிப்பைப் பார்த்த திருப்தியில் கூட்டம் கலைந்து செல்லுகிறது. அது மட்டுமில்லை மேலும், இருக்கின்ற அனைத்து டிவி சானல்களும் இவர்கள் முகத்தைத்தான் குளோசப்பில் அடிக்கடி மாற்றி மாற்றி காட்டுகிறார்கள். மக்களும் பார்த்துத் தொலைக்க வேண்டிய கட்டாயம். அந்த தைரியத்திலே இவர்களும் தைரியமாக முதல் போட்டு அரசியல் வியாபாரத்தைத் தொடங்கி விடுறார்கள். வெற்றி பெற்றால் பதவி & ஊழல்…இல்லாவிட்டால் கிடைக்கும் ஓட்டுசதவீதத்திற்கு ஏற்ப பெரிய கட்சிகளிடம் பேரம் பேசி பணம் பெற்றுக்கொண்டு கூட்டணி அமைத்துக்கொள்ள முற்படுகிறார்கள். பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதன் வழியாக, முன்பு கட்சி ஆரம்பிக்க தான் போட்ட முதலை இலாபத்துடன் எடுத்திட முயல்கிறார்கள்.

இளமையில் சினிமாவிலும் முதுமையில் அரசியலிலும் இப்படி கோடி கோடியாய் இலாபம் ஈட்டும் நடிகர்களிடம் ஏமாந்து நிற்பது பாவம் ஒன்றும் அறியாத அப்பாவி மக்களே!


agniputhiran@yahoo.com

Series Navigation

அக்னிப்புத்திரன்

அக்னிப்புத்திரன்