விமர்சனக் குரல்களின் உலகம் (நான்காவது ஆணி – மலையாளச் சிறுகதைத்தொகுதி அறிமுகம்)

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

பாவண்ணன்


ஒன்பது மலையாள எழுத்தாளர்களின் பத்துச் சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. ‘நான்காவது ஆணி ‘ என்பது ஆனந்த் எழுதிய சிறுகதையின் தலைப்பாகும். அதுவே தொகுதியின் தலைப்பாகவும் அமைந்திருக்கிறது. தொன்மக்கதையின் பின்னணியில் விமர்சனத் தொனியுடன் ஒரு சிறுகதையை எழுதுவது மிகப்பெரிய சவால். அந்தரத்துக் கயிற்றின்மீது கவனம் பிசகாமல் நடப்பதைப்போல ஒவ்வொரு வாக்கியத்திலும் கூடுதலான எச்சரிக்கை வகித்தபடி எழுதவேண்டிய செயலாகும். அச்சவாலை ஆனந்த் மனப்பூர்வமாக ஏற்று எழுதியிருப்பதை சிறுகதையை வாசித்து முடிக்கும்போது உணரமுடிகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்னும் ஒரே ஒரு தகவலை அடிப்படையாகக்கொண்டு புனையப்பட்டுள்ள இக்கதை ஒரு புறம் கொல்லனின் கோணத்திலிருந்தும் மற்றொரு கோணத்தில் தீர்க்கதரிசியின் கோணத்திலிருந்தும் ஒன்றையொன்று நெருங்கிவந்து முற்றுப்பெறுகிறது. இதனுாடே கூர்மையான சமூக விமர்சனமும் இடம்பெற்றுள்ளதை சிறப்பான அம்சமாகக் குறிப்பிடவேண்டும்.

இயேசுவை சிலுவையில் அறைவதற்காகத் தேவையான கூர்மையும் போதிய நீளமும் கொண்ட நான்கு ஆணிகளைச் செய்வித்துக் கொண்டுவருவதற்காக அரண்மனைப் பணியாளர்கள் புறப்படுவதிலிருந்து தொடங்குகிறது கதை. கூலி கொடுப்பதற்காக வைத்திருந்த எண்பது காசுகளில் நாற்பது காசுகளை மது அருந்துவதில் செலவழித்துவிட்டு எஞ்சிய நாற்பது காசுகளில் நான்கு ஆணிகளைச் செய்துதர நகரத்தில் ஒவ்வொரு கொல்லனுடைய உலைக்களத்திலும் ஏறி இறங்குகிறார்கள். ஆணியின் நோக்கத்தை அறிந்துகொண்ட கொல்லர்கள் யாரும் அந்த வேலையைச் செய்யத் தயாராக இல்லை. அதனால் அவரகள் பணியாளர்களின் வாளுக்கு இரையாக வேண்டியிருக்கிறது. நகரத்துக் கொல்லர்கள் அனைவருமே புறக்கணித்த நிலையில் நகருக்கு வெளியே கூடாரமடித்துத் தங்கியிருக்கும் நாடோடிக் கொல்லனொருவனை நாடிச் செல்கிறார்கள். நாடோடிக் கொல்லன் ஏன் எதற்கு என்ற எந்தக் கேள்வியுமின்றி வேலையைத் தொடங்குகிறான். மூன்று ஆணிகளைச் செய்துமுடித்த நிலையில் பணியாளர்களிடமிருந்து மேலும் அதிகத் தொகையைப் பெறும்பொருட்டு அவர்கள் கொடுத்த பணத்துக்கு அவ்வளவுதான் வரும் என்று வேடிக்கைக்காகச் சொன்னதும் கிடைத்தவரை லாபம் என்று மூன்று ஆணிகளோடு ஓடிவிடுகிறார்கள் அவர்கள். அவர்கள் எடுத்துச் செல்லாத நான்காவது ஆணி அணையாத தன் சிவப்புத் தழலோடு கொல்லனை விடாமல் துரத்துகிறது என்னும் புதிரில் கதையின் பல உள்அடுக்குகளைப் பொருத்தியிருக்கிறார் ஆனந்த்.

நாடோடிகள் சிறுதெய்வ வழிபாட்டாளர்கள். தீர்க்கதரிசியின் வருகையை ஒட்டி அவர்களுடைய வழிபாடு தடுத்துநிறுத்தப்பட்டது. அவர்கள் வணங்கிய விக்கிரகங்கள் பிடுங்கியெறியப்பட்டன. மைய வழிபாட்டைநோக்கி அவர்கள் திசைதிருப்பப்பட்டார்கள். தன் சிறுதெய்வ வழிபாட்டைத் துறக்கநேர்ந்த துன்பத்தோடு நாடோடியாகத் திரிகிற கொல்லனுடைய மனத்தில் அதைத் துறப்பதற்கு ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருந்த இயேசுவை சிலுவையில் அறையத் தேவையான ஆணிகளைச் செய்துதருவதில் மற்றவர்களைப்போல எவ்விதமான குற்ற உணர்ச்சியுமில்லை. மாறாக, போதிய எண்ணிக்கையில் ஆணிகளைத் தராத குற்றத்தை ஞாபகப்படுத்தியபடி நாடோடி வம்சத்தின் கோபமே நெருப்புத் தழலாக காலமெல்லாம் அக்கொல்லனைப் பின்தொடர்ந்தபடி இருக்கிறது. இயேசுவும் இன்னொரு விதமான மனச்சுமையோடு சிலுவையைச் சுமந்து திரிந்தபடி உள்ளார். மனித குமாரனாக தன்னைக் காண மறுக்கிற மக்களிடையே இருக்கப் பிடிக்காமல் தனக்குள் சந்தேகங்களை நிறைத்துக்கொண்டு வாழ்ந்த தோமஸைத் தேடுவதாக அமைந்திருக்கிறது அவர் பயணம். கொல்லனும் இயேசுவும் பல நுாற்றாண்டுகளுக்குப் பிறகு சந்தித்து உரையாடிக்கொள்கிறார்கள். இயேசுவுடனான நேரிடை உரையாடல் கொல்லனுக்குப் பல தெளிவுகதை¢ தருகிறது. தொடர்ச்சியான அலைச்சல் இயேசுவின் பார்வையிலும் பல மாறுதல்களை உருவாக்கியிருக்கிறது. பல நுாற்றாண்டுகளாக மனத்தில் தேங்கியிருந்த பாரத்தை இருவரும் ஒரே தருணத்தில் இறக்கிவைக்கிறார்கள். ஒரு கருத்தே கதையின் மையமென்றாலும் நேர்த்தியான உரையாடல்களின் வலிமையில் கதை மனத்தில் இடம்பெற்றுவிடுகிறது.

தொகுப்பின் மற்றொரு சிறந்த சிறுகதை என்.எஸ்.மாதவனுடைய ‘திருத்தம் ‘. அடங்கிய தொனியில் இக்கதையிலும் ஒரு சமூக விமர்சனம் இழையோடியபடி இருக்கிறது. பாபர் மசூதி தகர்க்கப்பட்ட அன்றைய இரவில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் நடைபெறுவதைப்போல கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. பத்திரிகை ஆசிரியரான சுல்லியாட்டுக்கு அன்று கடுமையான காய்ச்சல். தலையங்கத்தை வேறொருவரை எழுதச் சொல்லிவிட்டு அலுவலகத்தைவிட்டுக் கிளம்புகிறார். வழியில் தன் நெருங்கிய நண்பரான டாக்டர் இக்பாலிடம் காண்பித்து ஊசி போட்டுக்கொள்கிறார். அன்றைய தினச் செய்தியைப் பேசி துக்கம் கலந்த குரலில் விசாரிக்காமல் செல்வதற்காக அக்குடும்பத்தினர் அவருக்கு நன்றி சொல்ல முனைகிறபோது ‘உங்கள் கண்களுக்கு நான் எப்போது இந்துவானேன் ? ‘ என்று பதிலுரைத்தபடி வெளியேறுகிறார். வீட்டுக்குச் செல்லும் முடிவை மாற்றிக்கொண்டு மறுபடியும் அலுவலகத்துக்குத் திரும்புகிறார். சர்ச்சைக்குரிய அமைப்பு தகர்ப்பு என்று பூசி மெழுகியபடி எழுதியிருந்த தலைப்பை அழித்துவிட்டு பாபர்மசூதி தகர்ப்பு என்று திருத்துகிறார்.

இத்திருத்தத்தைச் செய்யத் துாண்டிய மனநிலையை அறிவது என்பது ஒருவகையில் இக்கதையை அறிவதற்குச் சமமாகும். ஏறத்தாழ அரைநுாற்றாண்டுக் காலம் விவேகமான மொழியில் வாக்கியங்களை அமைத்து எழுதியவர் சுல்லியாட். விவேகமான மொழி என்பது வேறு, உண்மையை ஒருவித தயக்கத்தோடும் மாற்றுப் பெயர்களோடும் சொல்வது என்பது வேறு. உண்மை என்பதை உண்மையாகச் சொன்னாலேயே போதுமானது. அதை எவ்வித பூச்சோடும் புனைவோடும் விவேகத்தோடும் சொல்லவேண்டிய தேவையில்லை. சுல்லியாட் எவ்வித பேதங்களிலும் நம்பிக்கை இல்லாதவர். மனிதர்களை மனிதர்களாகவே மதிப்பவர். எவ்விதப் புற அடையாளங்களிலும் பற்றுதல் இல்லாதவர். அதனால்தான் நொறுக்கப்பட்ட பாபர்மசூதியை பாபர்மசூதி என்னும் குறிப்போடேயே சொல்கிற துணிவு பிறக்கிறது. நொறுக்கப்பட்டது ஒன்றாக இருக்க, அதை வெவ்வேறு பெயர்களால் சுற்றி வளைத்துச் சுட்டி அடையாளப்படுத்தி எழுதுவதெல்லாம் கோழைத்தனம். மிகப்பெரிய ஒரு ச்முகப் பிசகை மொழியின் விவேகம் என்னும் பெயரில் மூடிமறைப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. ச்முகப் பிசகைச் சரியாகச் சுட்டிக்காட்டுவதே பத்திரிகையின் அறம். அந்த அறம்சார்ந்து நிற்க விரும்புகிற அவருடைய உள்ளார்ந்த விழைவே அத்திருத்தத்தைச் செய்யத் துாண்டுகிறது.

இந்திய சுதந்தரத் தினத்துக்கு முந்தைய நாளின் இரவு, காந்தியடிகள் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட நாளின் இரவு என வரலாற்றின் எல்லா முக்கியமானதும் சங்கடமானதுமான சந்தர்ப்பங்களிலும் காய்ச்சலில் விழுந்துவிடுகிற சுல்லியாட் மசூதி இடிக்கப்பட்ட அன்றும் காய்ச்சலால் தாக்கப்படுகிறார். அவருடைய காய்ச்சல் அவருடைய மனப்போராட்டத்தின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளலாம். அந்தப் பழைய சந்தர்ப்பங்களில் எல்லாம் உண்மை விவேகமொழியிலேயே வெளிப்பட்டு எவ்விதமான உண்மையான விளைவுகளை உருவாக்காமலேயே போனதைக் கண்கூடாகக் கண்ட கசப்பின் விளைவாக விவேக மொழியின் புனைவிலிருந்து உண்மையை மீட்டெடுத்துக் காட்டும் வேகம் அவரிடம் பிறந்திருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. பேசவேண்டிய பல வரலாற்றுச் சந்தர் ப்பங்களில் உண்மையை மட்டுமே தெளிவாகப் பேசியிருந்தால் கிட்டத்தட்ட அரைநுாற்றாண்டுக்குப் பிறகும் விவேகத்தின் ஆடையை உண்மைக்குப் பூட்டி நிறுத்தும் அவசியம் உருவாகியிருக்காது என்ற எண்ணமும் அவர் மனத்தில் ஓடியிருக்கலாம். அவர் அனைவரையும் மனிதராக மட்டுமே காலமெல்லாம் பார்த்துவருகிறவர் என்னும் தகவலை இக்பாலின் வீட்டில் பேசும் உரையாடல்மூலம் உணர வழியிருக்கிறது. அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட அவருக்குமட்டுமே நாகரிகம் என்கிற பெயராலும் விவேகம் என்னும் பெயராலும் சுற்றிவளைக்காமல் ஒரு சரித்திர அடையாளத்தின் வீழ்ச்சியை அதன் உண்மைப் பெயரோடு தொட்டு எழுதும் மனவலிமை இருப்பதைப் பார்க்கலாம்.

கொச்சுபாவாவின் ‘எப்போது சேர்வோமோ என்னவோ ‘ என்னும் சிறுகதை அங்கதமும் கசப்பும் நிறைந்த கதை. இறந்துபோனவர்கள் முக்கியஸ்தர் ஒருவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தொலைக்காட்சியினர் படம்பிடிக்க வருவதும் பிணவீட்டை கிட்டத்தட்ட ஒரு படப்பிடிப்புத் தளத்தைப்போல அவர்கள் மாற்றி அலங்கோலப்படுத்துவது அங்கதத் தொனியோடு முன்வைக்கப்படுகிறது. படப்பிடிப்புக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் அந்தப் படப்பிடிப்பின்போது ஒவ்வொரு தன்னலக் காரணம் இருப்பது தெரியவரும்போது வேடிக்கையாக இருக்கிறது. மனித மனத்தில் அடங்கியிருக்கும் எதிர்பார்ப்புகளின் பட்டியல் உண்மையில் அநாகரிகத்தின் எல்லையைத் தொடக்கூடியது. மாண்டவர்கள் உரையாடிக்கொள்ளும் இறுதிப் பகுதி அந்த அநாகரிகத்தின் உச்சத்தையே அடையாளப்படுத்திவிடுகிறது. அந்தப் பெற்றோர்களின் மரணம் இயல்பாக நிகழ்ந்த ஒன்றல்ல. பெற்றெடுத்த பிள்ளைகளாலேயே விஷம்வைத்துக் கொல்லப்பட்டவர்கள். ஒருபுறம் தன்னலத்தால் பெற்றவர்களையே கொன்று அவர்களுடைய மரண ஊர்வலத்தைப் படம்பிடிக்க ஏற்பாடு செய்யும் பிள்ளை. இன்னொரு புறத்தில் தன் பங்கேற்பையே மூலதனமாகக் காட்டி என்னென்ன லாபங்கள் அடையமுடியும் என்று மனக்கணக்கிடும் பங்கேற்பாளர்களும் படப்பிடிப்பாளர்களும். மனித வாழ்வைச் செலுத்தும் சக்தியாக தன்னலத்தை அடையாளம் காணும்போது கசப்பே எஞ்சுகிறது. இதே தன்னலத்தின் இன்னொரு வடிவத்தைச் சித்தரித்திருக்கும் படைப்புகளாக சி.வி.பாலகிருஷ்ணனின் ‘மாற்றுஜீவிதம் ‘ சிறுகதையையும் ஹரிகுமாரின் ‘ஒரு தொலைதுார நகரத்தில் ‘ சிறுகதையையும் குறிப்பிடலாம்.

வெவ்வேறு பின்னணியில் அமைந்துள்ள இக்கதைகளின் வாசிப்பனுபவம் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் படைப்பாளிகளைப்பற்றியோ மலையாளத்திலிருந்து தமிழுக்கு இப்படைப்புகளை அறிமுகப்படுத்தியிருக்கும் மொழிபெயர்ப்பாளர்களைப் பற்றியோ ஒரு சிறு தகவலும் இல்லாமல் இத்தொகுப்பு அமைந்துள்ள விதம் மட்டுமே வருத்தத்தைத் தருகிறது.

(நான்காவது ஆணி மற்றும் தற்கால மலையாளச் சிறுகதைகள்

தமிழில் : டி.ஜி.ஆர்.வசந்தகுமார், பிரகாஷ் மேனன் எருத் புக்ஸ், 4/1, ராஜாஜி அவென்யு அனெக்ஸ், வளசரவாக்கம், சென்னை-67. விலை ரூ40)

paavannan@hotmail.com

Series Navigation