விமர்சனக் கடிதம் – 1 ( திரு.பாரதிமணியின் ‘பல நேரங்களில் பலமனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து)

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

வே.சபாநாயகம்



அன்புள்ள பாரதிமணி அவர்களுக்கு,

வணக்கம். ‘உயிர்மை’ வெளியிட்டுள்ள உங்களது ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத்
தொகுப்பைப் படித்தேன். இதிலுள்ள 23 கட்டுரைகளில் அதிகமும் நான் முன்பே ‘உயிர்மை’ இதழ்களில் படித்ததுதான். எனினும் தொகுப்பில் ஒரு சேரப் படிப்பதில் ஒரு தனித் திருப்தி உண்டல்லவா? ‘ஒரே மூச்சில் படித்தேன்’ என்பது உயர்வு நவிர்ச்சியாகும். நான் முழு லட்டையும் அப்படியே விழுங்கி விடாமல், ஒவ்வொரு துணுக்காய் உதிர்த்து, சீக்கிரம் தீர்ந்துவிடப் போகிறதே என்று நிதானித்துச் சுவைக்கிற குழந்தை மாதிரி, தினமும் கொஞ்சமாய் ரசித்துப் படிக்கிறேன். படிக்கப் படிக்க நான் ரசித்தபடி உங்களது ரசிகர்களோடு பகிர்ந்து கொள்கிற
ஆசையில் தொடர் கடித விமர்சனமாக இதனை எழுதுகிறேன்.

‘கட்டுரை இலக்கியம்’ தி.ஜ.ர வுக்குப்பின் யாரும் திரும்பத் திரும்பப் படிக்கிற வகையில் சுவாரஸ்யமாக
படைக்க முயற்சிக்கவில்லை அல்லது முடியவில்லையோ என்ற ஆதங்கம் எனக்குண்டு. உங்களின்- முன் எழுத்து அனுபவமே இல்லாமல், சுயம்பு லிங்கம்போலத் திடீரென்ற முளைத்த இலக்கியப் பிரவேசம் இந்த தொகுப்பின் மூலம் அந்த ஆதங்கத்தைத் தீர்த்து வைக்கிறது.

‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ தலைப்பே உள்ளடகத்தைப் படிக்கத் தூண்டுவதாக உள்ளது. படித்த பிறகு எவ்வளவு கச்சிதமாய்ப் பொருந்துகிற தலைப்பு என்று தலையாட்டத் தோன்றுகிறது. உங்களுக்குக் கிடைத்த பலதிறப்பட்ட இந்த அரிய அனுபவங்கள் உண்மையில் சாத்தியமா என்று மலைப்பாக உள்ளது. ஆனால் அத்தனையும் சாத்தியமாகி இருப்பதை நம்பித்தான் ஆக வேண்டும் என்பது நம்மை அறியாமலே தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. அட! எத்தனை வித மனிதர்கள் – எல்லா மட்டத்து மனிதர்களும் அது வங்க தேசத்து குடிசைவாழ் இந்தியக் குடியேறிகளாக இருக்கட்டும், வங்கபந்துவின் மகள் ஹசீனா பேகமாகட்டும் – அத்தனை பேரும் உங்களுடனான தொடர்பில் எங்களை அசத்துகிறார்கள்!

ஒவ்வொரு கட்டுரையிலும் நாம் கேள்விப்பட்ட ஆனால் அதிகமும் அறியாத முக்கிய பிரமுகர்கள்
பற்றியும் முற்றும் புதிதாகத் தோன்றுகிற பல தகவல்களுமாய் அடிக்கடி வாசிக்கிறவரைப் புருவம் உயர்த்த
வைக்கின்றன. ‘அருந்ததிராயும் என் முதல் ஆங்கிலப் படமும்’ என்கிற முதல் கட்டுரையில் உங்களது முதல்
ஆங்கிலப்பட அனுபவத்தில் அந்தப் பட இயக்குநர் காட்டிய அக்கரையும் முன்னேற்பாடும், டெக்னாலஜியும் புதிய செய்திகள். கொசுறாக அருந்ததிராய் என்.டீ.டிவி பிரணாப்ராயின் சகோதரி என்கிற தகவலும் பலருக்குத் தெரியாதுதானே!
– தொடர்ச்சி அடுத்த கடிதத்தில்.

Series Navigation

author

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

Similar Posts