விதைகளை வைத்திருக்கும் செடி கொடி மரங்கள்

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

விக்ரமாதித்யன் நம்பி


மொழியின் உச்சமே கவிதை.

கவிதையே பாஷையின் மேலான வெளிப்பாடு.

உலகின் ஆதிமொழிகள் எல்லாவற்றிலுமே முதல் வெளியீடு ஈரமான கவிதைகளாகத்தாம் இருக்கிறது.

சங்கப்பாடல்கள், வேத உபநிஷதங்கள், அரபுக் கவிதைகள், பாரசீகக் கவிதைகள் இவைபோல மூத்தமொழிகளின் மனக்குரல்கள் இன்றும் அழிக்கமுடியாத வசீகரணம் கொண்டிருக்கின்றன.

இதுதான் நுட்பமான மனம் கொண்டவன் கவிதையில் ஈடுபாடு கொள்ளக் காரணம்.

ஐம்பதுகளின் திரைஇசைப்பாடல்கள்தாம் என் ஆதிகவிதை உறவு.

அந்தப் பாடல்களின் எளிமை, இனிமை, ஓசைநயம்தாம் இன்றளவும் என் கவிதையின் உயிராக, இருப்பாக, சாரமாக இருந்துவருகின்றன.

தமிழ் திரைப்படப்பாடல்கள் தாம் என் விதைநெல்.

எங்கள் ஊர் நிலக்காட்சிகள்தாம் என் கவிதையின் நிலக்காட்சிகள்.

பிறகுபிறகு, நாங்கள் குடிபெயர்ந்துபோன கல்லிடைக்குறிச்சி, சென்னை, வாசுதேவநல்லூர், குற்றாலம், தென் காசி நிலப்பரப்புக் காட்சிகள்.

ஜோதிஷத்திலும் சைவ சமயத்திலும் நம்பிக்கை உண்டான பிற்பாடு, அடிக்கடி சென்றுவரும் தஞ்சை மாவட்ட நிலக்காட்சிகள்.

என் கவிதைகளில் திரும்பத்திரும்பக் கோயில்கள் இடம்பெறுவது என் மனசின் நுணுக்கமான கோலம்தான்.

அண்மைக்காலமாகவே ஸ்தல புராணங்களைத் தேடிப் படித்து வருகிறேன்.

அவற்றின் தொன்மம் உள்ளத்தைக் கவர்வதாக இருக்கிறது.

ஸ்தலப் புராணக்கதைகளின் புனைவு அழகுபட்டதாகத் துலங்குகிறது. இவை என் சமீபத்திய கவிதைகளில் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கின்றன.

என்னையறியாமலேயே தமிழ் நிலப்பரப்புக் காட்சிகள் என் கவிதைகளில் உரியபடி வந்திருப்பது போல, ஸ்தலபுராணக் கதைகளும் தன்னைப்போல வருகின்றன.

எங்கள் அம்மாவுக்கு எழுத/படிக்கத் தெரியாது.

கிராமத்துச் சொல்வழக்குகள், பூர்விகத் தமிழ் இதுபோலத் தன்மைகளை என் கவிதை கொண்டிருக்குமானால், அம்மையின் செல்வாக்குதான்.

அப்பா கலைஞனாகவே வாழ்ந்தவர்கள்.

சாகஸங்கள் நிரம்பிய வாழ்வு.

அடிப்படையில் அன்பான மனிதர்.

படிப்பதிலும் எழுதுவதிலும் மிகுந்த ஆர்வமுள்ளவர்கள்.

அம்மாவும் அப்பாவும்தாம் வாழ்க்கையிலேயே அதிகம் செல்வாக்குச் செலுத்தி வருகிறார்கள்.

எனக்கு ஒன்பது, பத்து வயது நடக்கையில் அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் ஏற்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து இரண்டொரு வருஷத்திலேயே நாங்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படும் சூழ்நிலை உருவாயிற்று.

அக்கா, பெரியதம்பி, என் கல்வி எல்லாமே துண்டிக்கும்படியாயிற்று.

அம்மாவின் வைராக்யம்தான் எங்களைக் காப்பாற்றியது.

அப்பாவுக்கும் எங்களுக்குமான உறவு அன்பும் வெறுப்புமானது.

அப்பாவின் ஆளுமை பிரியம் கொள்ளச் செய்தது.

எங்களைத் தவிக்கவிட்டுவிட்டது மன்னிக்கமுடியாதது.

அப்பாவின் துடி மாயக்கவர்ச்சி கொண்டது.

அம்மாவின் சாதனை வாழவைப்பது.

நாங்கள் எல்லோருமே அம்மாபிள்ளைகளானோம்.

அப்பா தன் இடத்தைத் தானே காலிபண்ணிவிட்டார்கள்.

எங்கள் எல்லோருக்குமே அப்பாவிடம் அளவுகடந்த அன்பு இருந்ததுதான் பிரச்னை.

அப்பாவும் எங்களிடம் கொள்ளை பாசம் வைத்திருந்தார்கள்.

இவ்வாறாக ஒரு தொந்தரவுபட்ட பையன் என்றாகியது.ஜ்

தொந்தரவுக்குள்ளான பிள்ளைகள் கலைஞர்களாகவோ சமூகவிரோதிகளாகவோ மாறுவது தவிக்க முடியாதது.

ஊரைப்போல, நாட்டைப்போல, ஒரு வாழ்க்கை அமைந்திருக்குமானால், எழுத வந்திருக்க மாட்டேன்.

அப்பாவின் வாழ்வும் அம்மாவின் இருப்பும்தாம் என்னை கவிஞனாக்கின.

வளர்ந்து ஆளானபின்னும் மேற்படிப்பு, வேலை, பணம், பெண் எல்லாமே உரிய வயதில் உரியபடி கிடைக்காதுபோய், பின்றும் பின்றும் தொந்தரவுக்க்குள்ளானவனாகவே தொடர்ந்து இருந்து வர நேர்ந்தது கவிஞனாக இருப்பது தவிர்ப்பது வேறு வழியே இல்லை என்றாக்கிவிட்டது.

உடைந்த வீட்டிலிருந்து வந்த

முறிந்த மனம்கொண்ட

நிராசைகள் நிரம்பிய

ஒரு உயிரைக் கடவுள் கவிஞனாகக் கடவது என்று ஆசீர்வதித்து விட்டிருக்கிறான்.

தமிழ்க்கவிதை மரபில் விக்ரமாதித்யன் சாதாரணமானவன்.

இந்த இனமும் மொழியும் உள்ளவரை எனக்கான ஓர் இடம் என்பதே குறிக்கோள்.

சங்கபுலவனுக்கு சமதையாக இருந்தால் சரி.

கபிலர், பரணர், ஒளவை வரிசையில் ஒருவனாக விளங்கினால் போதும்.

கவிதைமட்டுமே என் வாழ்க்கையை அர்த்தப்படுத்துவதாக அமையும்.

கவிஞன் என்பதே என் அடையாளமாகத் துலங்கும்.

தமிழ் ஒன்றுதான் எனக்கு மேன்மை தரும்.

பூக்களைத் தரும் செடிகள்

காய்களைத் தரும் கொடிகள்

பழங்களைத் தரும் மரங்கள்

எல்லாமும்

கூடவே விதைகளையும் வைத்திருக்கும்.

[ ‘குலுக்கை ‘ இலக்கிய அமைப்பின் சார்பாக மார்ச், 2003இல், செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள கிராமத்தில், நடத்திய ஒருநாள் கருத்தரங்கில், கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களும் நானும் கலந்து கொண்டு, படித்த கட்டுரை மீள எழுதப் பெற்றுள்ளது.]

****

Series Navigation