விடைபெறமுன்

This entry is part [part not set] of 24 in the series 20090101_Issue

ஸ்ரீபன்


ஆண்டு 2009 ற்கு
நண்பா
விடைபெறுகிறேன்

குருதி தோய்ந்த என் முகத்தை
நீ பார்க்க வேண்டாம்

துன்பங்களும் தோல்விகளும்
அனர்த்தங்களும் அழிவுகளும்
என்னிடமே தங்கிவிடட்டும்

நீ ஓட்டத்திற்கு தயார் எனில்
நம்பிக்கை என்ற கோலை மட்டும்
என்னிடமிருந்து பெற்றுக்கொள்

சுமக்கப்போவது
சிலுவைகளையா சிறகுகளையா
நீயே தீர்மானித்துக்கொள்

என்னைப்போல்
காடுகளிலும் பதுங்கு குளிகளிலும்
அகதியாக அலையாதே
மலைகள் மீதும் காடுகளிலும்
தீப்பந்துகளை வீசாதே
நாடுகளை எரியவிட்டு
குளிர்காயாதே

முடிந்தால் புறாக்களிடம்
சிறகுகளையும் அதன் உதடுகளையும்
கடன் வாங்கு
ஒலிவமரக் கிளைகளை பறித்துக்கொள்
குண்டுகள் துளைக்காத
கவசங்களை அணிந்துகொள்
பற
அலை

எங்கெல்லாம் ஒலிவன் கிளைகளை வீசமுடியுமோ
அங்கெல்லாம் வீசு
எங்கெல்லாம் எரிகிறதோ அங்கெல்லாம்
உன் உதடுகளால் ஊதி அணை
எங்கெல்லாம் சிலுவைகளை காண்கிறாயோ
அங்கெல்லாம் பூக்களைத் தூவு

போதும் மீண்டுமொரு மனிதன்
சிலுவையில் அறையப்பட வேண்டாம்
பதுங்கு குளிகளுக்காய் நிலங்கள் தோண்டப்படவேண்டாம்

முடிந்தால்
சுடுகுழலுக்கு முன்னால் பூக்களை நடு
அரபு தேசத்துக்கு ஒரு மலர்ச்செண்டை அனுப்பு
ஏகாதிபத்தியத்துக்கு சாவுமணி அடி

போ நண்பா
உனக்கான பாதை திறக்கப்பட்டுவிட்டது

கடைசியாக ஒரு வேண்டுகோள்
நான் சொன்ன இத்தனை விடயங்களையும்
உனக்குப்பின் வரப்போகும்
நண்பன் 2010ற்கு
விட்டுப்போகாதே

விடைபெறுகிறேன்
ஆண்டு 2008


stefiny20@hotmail.com

Series Navigation