விசித்திர வதை

This entry is part [part not set] of 17 in the series 20010629_Issue

அனந்த்
சித்திர வதையென எத்துணை முறையோ
புத்தகந் தனில்யான் படித்திட லுண்(டு)அது


இத்தனை நாள்வரை எத்தகைத் தெனவென்
சித்த மதனிலு றைத்திடக் காண்டிலன்

இன்றதன் இயல்பினை முழுமையும் உணர
என்றனுக் கெட்டிய(து) ஓரரும் வாய்ப்பு (:

குன்றென நிமிர்ந்தவோர் கொடுமை ஆசான்*
நன்றெது வென்பது நாளும் அறியான்

வந்தன னிந்த வாரப் பயிற்சியின்
மந்த நிலைதனை மாற்றுவன் என்றே

இருப்பின் ஆய ஈருரு ளைகளும்*
பொருப்பினை நிகர்த்த பொல்லா வண்டியும்*

இரப்பரால் ஆய இழுக்குங் கயிறும்
பரப்பிய பாயிலோர் பந்தும்* பிறவும்

அரக்கரும் தீண்ட அஞ்சும் கருவிகள்
இரக்கமொன் றின்றி எம்முன் னிட்டே

எட்டோ டெட்டொடு மீண்டுமோர் எண்முறை*
தட்டா திவற்றைத் தரையில் படாஅது

தூக்கியும் ஓட்டியும் சுழற்றியும் இழுத்தும்
போக்குவீர் பலமணிப் பொழுதினை எனவே

ஆக்கினை செய்தஅவ் வரக்கருக் கரக்கனைத்
தாக்கிட விழையும் துடிப்பினைத் தவிர்த்துக்

கையிரண் டொடியக் கால்வலி கொல்ல
நையப் புடைத்த நிலையினில் வாட்டிய

மடலென மடங்கிப் பலநாள் அழுகிய
புடலம் பழமென உடலது குழைய

வடவை அனலெனச் சுடும்அறை தன்னில்
கடலென வியர்வை காத்திரம் நனைக்க

நாக்கினில் நீரது வற்றிட நேத்திரம்
போக்கினை மறந்து பூமியை நோக்க…

ஐயகோ! இத்தகை அவலம் அடைந்தும்
மெய்யது தன்னைப் பேணிடல் வேண்டுமோ ?

இன்றொடு நின்றது என்னுடற் பயிற்சி!
ஒன்றுந் தெரிந்திலன் போலச் சோர்வற

மன்றில் நடிக்கும் ஈச!
என்றுன் இரகசியம் இயம்புவை எனக்கே.

Series Navigation

அனந்த்

அனந்த்