விசாரணை

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue

நாகூர் ரூமி


திடாரென உறக்கம் கலைந்தது. விழிகளை மெல்ல மேலெடுத்துப் பார்த்தேன். முதலில் ஒன்றும் புரியவில்லை. ஒரே இருள். என்னை விட்டு விலகிச் சென்ற காலடி ஓசைகள் காதில் விழுந்த ஞாபகம் வந்தது. சற்று நேரம் இருளுக்கு என்னை பழக்கப்படுத்திக் கொண்டேன். சுற்றி இருப்பவை மெல்ல மெல்ல புலப்பட ஆரம்பித்தன. அப்படி ஒன்றும் ஏராளமான பொருட்கள் சுற்றி இருக்க வில்லை. ஒரே மண்….கட்டி கட்டியாக….மிருதுவாக…..மேலெல்லாம்…. முகமெல்லாம்… உடம்பும் மண்ணில்தான் வெகுநேரம் கிடந்திருக்கவேண்டும். இடுப்புப்பக்கம் செவ்வகமாகய் மரக்கட்டைகள், அடிப்பகுதியில் நாடா நாடாவாகப் பின்னி யாரோ அறுத்திருந்தார்கள். மக்காவில் இருந்து வந்த அத்தர் மணமும். கூடவே கொஞ்சம் தனிமை. பிறகு நிறைந்திருந்த இருள். இவைதான். இடம்கூட கொஞ்சம் நெருக்கடியானதாகத்தான் இருந்தது. ஒரே புழுக்கம். துளிக்கூடக் காற்றில்லை. எப்படி இதில் சமாளிக்கிறேன் ? நீண்டதொரு நெடு மூச்சு விடுவதற்காக முயற்சித்தேன். நாசித்துவாரங்களை ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. எடுத்துப்பார்த்தேன். அத்தர் தடவிய பஞ்சு யாரோ வைத்திருக்கிறார்கள். சே…. ‘ இப்போது நன்றாக மூச்சு விட முடிகிறதே ‘ இந்த இடத்தில் கூட காற்றா…. ? எங்கிருந்து வருகிறது…. ‘

நான் இருக்கும் இடத்தையும், சூழ்நிலையையும் நினைக்க நினைக்க வியப்பாக இருந்தது. கிட்டத்தட்ட தாயின் வயிற்றினுள்ளே இருப்பது போல…. ஆனால் புரண்டு கிரண்டு கைகால்களையெல்லாம் நீட்டி இஷ்டப்படி குறுக்கேயெல்லாம் படுக்க முடியாது போல் உள்ளது. அத்தர் மணம் எங்கேயிருந்து வருகிறது என்று ஆராய்ந்தேன். பிறகு அது என்மேல் இருந்தே என்றும், குறிப்பாக என்மேல் போர்த்தியிருந்த வெள்ளைத் துணியில் இருந்தே என்றும் தெரிந்து கொண்டேன். துணி கடினமான காட்டன். சே…. ‘ என் ரான்சன் ஜிப்பா இருந்தால் எப்படி இருக்கும் ? யாரிதைப் போட்டது…. ? துணியை லேசாகத் தூக்கி கழுத்துக்குக் கீழே பார்த்தேன் முழு நிர்வாணம் சேச்சே…. ‘

எழுந்து உட்கார்ந்தேன். விழிப்பதற்கு முன், அந்த காலடி ஓசைகள் கேட்பதற்கு முன் என்னென்ன சத்தங்கள் கேட்டன என்று ஞாபகப்படுத்திப் பார்த்தேன். காட்சிகள் ஏதும் நினைவில்லை. ஒரே சப்த மயம்…. ஓலங்கள்…. அழுகையும் கூக்குரலும்…. ஒரேயொரு முகம் மட்டும் நினைவில் இருந்தது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. என் மார்பின் மீது முகத்தையும் கைகளையும் பதித்து வெகுநேரம் யாரோ கிடந்தார்கள். அதை நினைக்கும்போது மனதுக்கு சுகமாகவும் இதமாகவும் இருக்கிறது. இப்போது நன்றாக ஞாபகத்துக்கு வருகிறது. கருநீலத்தில் தாவணி போட்ட வெள்ளையும் சிவப்புமான புறா போன்ற முகம். கைகளும் அப்படியே. தஞ்சம் புகுந்ததைப் போல் வெகுநேரம் படுத்திருந்தாள் வாஞ்சையாகத் தலையைக் கோதிவிட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் உடம்பையே அசைக்க முடியவில்லை.

‘சஹாதா…ம்….தூக்குங்க….. ‘ ‘ என்ற குரலைத் தொடர்ந்து நிமிர்ந்த அந்த முகம்… ‘ ஆங்…. அது என் மனைவியல்லவா…. ? தன் குழந்தையைக் கூட பலர் முன்னிலையில் முத்தமிடுவதற்கு வெட்கப்படும் தாயல்லவா அவள்….. ? அவளா இப்படி அலங்கோலமாக…. ‘ அவளுக்கு என்ன ஆயிற்று ? விழியும் முகமும் சிவந்திருந்தன. வார்த்தைகளற்ற அவள் வேதனையையும் பதைபதைப்பையும் நினைத்தால் இந்த மண்சுவர்களை உடைத்துக்கொண்டு ஓடவேண்டும் என்று தோன்றியது. தொலைவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டாலும் இறுக்கமாக என்னை அணைத்துக் கொள்வாளே ‘ இனிமேல் எப்படித் தனியாகத் தூங்கப் போகிறாள் ? கோபம் கோபமாக வந்தது.

மணி இப்போது என்ன இருக்கும் கையைப் பார்த்தேன். வாட்ச் இல்லை. இந்த இருளுக்கு அந்த வாட்சின் ரேடியம் அழகாக ஒளிரும். அந்த அழகைக் காண முடியவில்லையே…. ‘ மணி இப்போது பதினொன்று இருக்குமா….. ?

வீடாக இருந்தால் படித்துக் கொண்டிருப்பேன். அவள் டா போட்டுக் கொண்டு வருவாள். துளிக்கூட நீர் விடாமல் அப்படியே பாலைக் காய்ச்சி வற்ற வைத்து தேயிலை கலந்து ஒரு ஸ்பூன் சாப்பாட்டு நெய்யும் விட்டு…அடடா… இப்போது அவள் என்ன செய்கிறாளோ ? அது சரி, நானில்லாமல் எப்படிச் சாப்பிடுவாள் ? நாங்களிருவரும் ஒன்றாகத் தானே சாப்பிட்டுப் பழக்கம் ?

மரணம் எல்லாப் புதிருக்கும் விடை என்று என் நண்பன் சொல்லுவான். மரணத்தைவிட கவர்ச்சியானது ஒன்றுமில்லையாம். உண்மைதான்…. ‘

அதுசரி…. ‘ ஏதோ ஒரு பாலம் இருக்கும். அது முடியைவிட மெல்லிசாய் இருக்கும். அதில் நடக்கச் சொல்வார்கள். நல்லடியார்கள் நடந்துவிடுவார்கள். தீயவர்கள் நரக நெருப்பில் விழுந்துவிடுவார்கள் என்றெல்லாம் மேடை கிடைத்தபோதெல்லாம் தாடிவைத்த தடியானவர்கள் அழுதுகொண்டே ஒரு மிஃராஜ்தனமான அத்தாரிட்டியுடன் பேசுவார்களே….. ‘ அதெல்லாம் எங்கே… ? இப்போது நேராக அவர்களின் தாடியைப் பிடித்து தரதரவென்று இழுத்துவந்து காட்டி புருடாவா விட்டாங்க….பாருங்க…. ‘ ‘ என்று காட்டவேண்டும் என்று தோன்றியது.

திடாரென்று இரண்டு தோள்களையும் கோடாரியால் பிளப்பது போன்ற வலி. மின்னல் நேரந்தான். ‘யா அல்லாஹ் ‘ என்று முணங்கினேன். டப்பென்று வலி நின்றது. பிறகுதான் கவனித்தேன். இரண்டு தோள்களிலும் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள். ‘கெளபாய் ‘ படத்தில் வரும் குள்ளர்களைப் போன்ற ‘டைனி ‘ உருவங்கள். ஒருவர் படுவெண்மை. அந்த இடத்திற்கே ‘ட்யூப் லைட் ‘ போட்ட மாதிரி. எல்லாம் தெரிந்தன. என் காலுக்கு பக்கத்தில் நெளிந்துக் கொண்டிருந்த புழு கூடத் தெரிந்தது. இன்னொருவர் பயங்கரக் கருப்பு. அவர் என் இடது தோளில். இருவருமே அழகாக இருந்தார்கள். சின்ன முயல்குட்டிகளைப் போல.

வெள்ளையாக இருந்தவர் என்னைப் பார்த்து புன்னைகைத்தார். அப்பாடா…. ‘ தனிமை நீங்கியது…. நானும் புன்னகைத்தேன். என் கன்னத்தை அன்பாகத் தட்டி ‘கைஃப ஹாலுக ‘ என்றார். ‘தய்யிபுன் ‘ என்று பதில் சொல்லி இருப்பேன். பி.யு.ஸி யில் அரபிதான் என் இரண்டாம் மொழி. தவிர பஸ்ட் கிளாசில் வேறு பாஸ் செய்திருந்தேன். ஆனாலும் அரபிக் தெரியும் என்கிற தகுதி எனக்கில்லை. எனக்கு அராபிக் தெரியும் என்று நினைத்து பேச்சை அவர் தொடர்ந்தால் நிலைமை சங்கடத்திலும் மவுனத்திலும் முடிந்து விடும். ‘எனக்கு அராபிக் தெரியாது. தமிழும் ஆங்கிலமும் தான் தெரியும். ‘ என்றேன். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின். ‘ஓ.கே. ‘ என்றார் வெள்ளையர்.

‘நீங்கள் வந்தது எனக்குப் பெரும் உதவி என் தனிமை நீங்கியது. ஆனால் நீங்கள் என் தோளிலேயே நின்று கொண்டிருந்தால் என்னால் பேச முடியாது. எதிரே வந்து நின்றால்தான் முகம் பார்த்து வசதியாகப் பேசலாம். ‘

அவர்கள் ஒருவரையொருவர் மறுபடியும் பார்த்துக்கொண்டு ஏதோ முடிவுக்கு வந்தவர்கள்போல எதிரே வந்து அந்தரத்திலே நின்றார்கள். மனிதரல்லாத ஜீவன்களை என் சொல்லுக்குக் கீழ்ப்படிய வைத்துவிட்டேன் என்று பெருமையாக நினைத்தேன்.

‘உன் சொல்லுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து விட்டோம் என்று நினைப்பது தவறு மட்டுமல்ல, நான் என்னும் அகந்தை என்றுமே குற்றம் ‘ என்றார் கருப்பர். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. திறந்த புத்தகத்தைப் படிப்பது போலல்லவா எண்ணங்களைப் படிக்கிறார்கள்… ‘

‘உன்னோடு கலந்து பேச நாங்கள் வரவில்லை. எங்களுக்குப் பின்னால் இருவர் வருவார்கள். உன் விவாதத்தை அவர்களிடம் வைத்துக்கொள். உன் வாழ்க்கையில் நீ செய்த நன்மை தீமைகளை உனக்கு உதாரணம் காட்டவே நாங்கள் அனுப்பப்பட்டோம். ‘

வெள்ளையர் இப்போது பேசினார். இருவர் பேசும்போதும் புன்னகையைத் தவிர வேறு எந்த உணர்ச்சி வெளிப்பாடும் தெரியவில்லை.

‘என் பெயர் கிராமுன். உன் நன்மைகளை நான் எழுதி வைத்துள்ளேன். இவர் காந்திபீன் உன் தீமைப்பட்டியல் அவரிடம். உன்னிடம் சில சாம்பிள்கள் காட்டச் சொல்லி உத்தரவு. எப்படி…. காலவாரியாகப் பார்க்க விரும்புகிறாயா, அல்லது மிக மட்டமான நன்மை முதல் மிகப்பெரிய நன்மை வரை என்று வரிசைப் படுத்தியிருப்பதைக் காட்டவா….. ?

நான் செய்த நன்மை தீமைகளில் மிக மட்டமானவை என்றும் மிகப்பெரியவை என்றும் அவர்கள் எந்த அடிப்படையில் பட்டியல் போட்டுள்ளார்கள் என்று அறியவே ஆவலாக இருந்தது. தெரிவித்தேன். முதலில் நன்மை, என்று சொல்லி கைவிரலை அசைத்தார் கிராமுன். வீடியோ படம்போல என் கண்முன்னே காட்சிகள் விரிந்தன.

‘முதலில் ஒரு நன்மை செய்தால் ஆண்டவன் உங்களுக்கு பத்து நன்மைகளை எழுதுகிறான் ‘ என்ற ஜஉம் ஆவில் கேட்ட சொறபொழிவை அடிப்படையாக வைத்து நான் ஒரு பிச்சைக்காரனுக்குக் காசு போட்ட காட்சி.

‘இதை ஏன் மிக மட்டமான நன்மையாகச் சொல்கிறீர்கள் ? தர்மம் மிக மட்டமானதா… ? ‘

பலனை எதிர்பார்த்து நீ செய்த தர்மம் இது. தரவேண்டும் என்று மட்டும் எண்ணாமல் ஒன்றுக்கு பத்தைப் பெற வேண்டும் என்று செய்தது இது…. ‘

‘இன்னொரு உதாரணம் காட்டுங்களேன் ‘ என்றேன்.

என் ஏழை நண்பனுக்கு நானொரு சட்டை கொடுத்த காட்சி வந்தது. எனக்குக் குழம்பியது. மறுபடியும் தர்மம் மட்டமான நன்மைதானா ? ‘உம் ‘ என்றார் அவர்.

‘இந்த ‘உம் ‘ பொருத்தமானதாயில்லை. நான் எதையும் பெற வேண்டும் என்று சட்டையை அவனுக்குக் கொடுக்கவில்லையே….. ? ‘

‘உண்மைதான்….ஆனாலும் நீ செய்தது தர்மமே அல்ல. அந்த சட்டை உனக்கு வெகு நாட்களாகப் பிடிக்காத சட்டை. அதை நீ வெறுப்பின் காரணமாக அணியாமலேயே இருந்தாய். எனவே அதைக் கொடுத்ததின் மூலம் நீ எந்த தியாகமும் செய்யவில்லை. எந்த இழப்பிற்கும் ஆளாகவில்லை. கொடுத்ததாகவும் இருக்கவேண்டும். அதே சமயம் இழப்பாகவும் இருக்கக்கூடாது என்ற ரீதியில்தான் நீ அந்த சட்டையைக் கொடுத்தாய். அதாவது தரவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் ‘

‘பின் எப்படி அது நன்மையாயிற்று ? ‘

‘உன்னை மீறி அந்த ஏழையை அது சந்தோஷப்படுத்தி விட்டது. அந்த மகிழ்ச்சியை உன் நன்மை கணக்கில் சேர்க்க வேண்டியதாகிவிட்டது. ‘

நான் தோற்று போனதை நினைத்து மெளனமானேன். அடுத்தக்கட்ட நன்மைகள் என நான் புத்தகம் படித்தது ஏதோ ஒரு பள்ளிவாயிலில் தொழுதது முதலியன காட்டப்பட்டது. மறுபடியும் குழப்பம்தான்.

‘நான் எனக்காக புத்தகம் படித்தது எப்படி என் பக்கம் நன்மையாகும் ? சொல்லப்போனால் சுயநலமல்லவா…. ? ‘

‘இல்லை. நீ எல்லாப் புத்தகங்களையும் படித்ததை அது குறிக்காது. காட்சியில் வரும் புத்தகத்தை உன்னை மறந்து படித்தாய். குறிப்புகள் எடுத்தாய். ஆண்டவன் தந்த அறிவின் ஆழங்களைக் கண்டுபிடிக்கும் வேலையில் உன்னையறியாமல் நீ ஈடுபட்டிருந்ததனால் எதையும் பெற வேண்டுமென்ற எண்ணமற்று காலத்தை விரயமாக்காமல் பயன்படுத்திய நன்மை உனக்கு. ‘

‘தொழுகை…. ? ‘ என்றேன்.

‘குறிப்பிட்ட காட்சியில் நீ நரகம் தவிர்க்கவோ சொர்க்கம் சேரவோ தொழவில்லை. கடமை என்று கூடத் தொழவில்லை. உன்னை மறந்து இறைவனைப் பணிய வேண்டும் என்ற நன்றி செலுத்தும் பொருட்டு மட்டும் தொழுத கணங்கள் அவை. பிரதிபலனை எதிர்பாராமல் நீ செய்கின்ற அனைத்துக் காரியங்களும் உன் பேரில் நன்மைகளாக எழுதப்படும். ‘

‘குழப்பம் பாதிதான் தீர்ந்துள்ளது. புத்தகம் படிப்பதையும் தொழுவதையும் எந்த அடிப்படையில் இணைக்கிறீர்கள்….. ? ‘

‘ஸின்ஸியாரிட்டி — மன ஒருமைப்பாடு பிரதிபலன் கருதாமை என்ற அடிப்படையில். ‘

பின்பு நான் செய்த மிகப்பெரும் நன்மைகளாக நான்கு காட்சிகள் காட்டப்பட்டன. முதல் காட்சி என் பாட்டியார் மெளத்தானதற்குப் பிறகு நான் அவர்கள் நினைவாக எழுதிய டயரிக்குறிப்பு.

‘பாட்டியார் உயிரோடு இருந்தபோது ஒரு தடவைகூட ஆசையாக, அன்பாக, இறுகக் கட்டியணைத்துக் கொள்ளவே இல்லையே என்று ஆதங்கமாக இருந்தது ‘ என்ற வரிகள் மட்டும் என் குரலிலேயே எனக்குப் படித்துக் காட்டப்பட்டது.

‘இது எப்படி நான் செய்த மிகப்பெரிய நன்மையாகும் ? ‘

‘சக மனிதனின் நன்மைக்கான சந்தோஷத்திற்கான உன் எண்ணம் செயல்பாடு இவைகளைத்தான் மிகப் பெரிய நன்மைகளாக கணக்கில் எடுப்போம். உனது டயரிக் குறிப்பு நீ பாட்டியார் மீது வைத்த அன்பின் அடையாளம். அது மட்டுமல்ல. நீ அந்தக் குறிப்பை எழுதியதற்காக குரான் ஓதி பாட்டியார் பேரில் ஹதியா செய்த நன்மை உன் பாட்டியாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘

அடுத்தது — நான் படித்த கல்லூரி வாசலில் இருந்த நொண்டிப் பிச்சைக்காரப்பையனை ஒருநாள் நான் ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்த காட்சி…. ‘

நான் புன்னகைத்துக் கொண்டேன். ‘இந்தப் பையனுக்கு நான் வாங்கித் தந்தபோது ஒன்றுக்கு பத்து என்று தெரிந்து தானே செய்தேன் ? ‘ என்றேன்.

‘ஆமாம்….. ‘ ஆனாலும் நீ உனக்குள்ளே விவாதித்துக் கொண்டாய். பத்து நன்மைகளை வேண்டிச் செய்வதாகும் என்று செய்யாமல் விடுவது தெரிந்தே அவனை பட்டினி போடுவதாகும். எனவே பத்து நன்மையோ தீமையோ எதுவானாலும் சரி, இன்று எப்படியும் ஒரு வேளையாவது இவன் பசியைத் தீர்த்துவிடுவோம் என்று முடிவுசெய்தே அவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்தாய். எனவே பிரதிபலன் என்ற உணர்வை அறிந்து அதைத்தாண்டி ஒரு சக மனிதனின் சோகம் நீக்கும் செயல்பாடு என்ற அடிப்படையில் அது உண்மையானதர்மமாக — மிகப்பெரிய நன்மையாக எழுதப்பட்டது. ‘

மூன்றாவது காட்சியாக நான் ஒரு புத்தகம் எழுதியதும் பிள்ளைகளுக்கு ஆங்கில இலக்கணம் சொல்லிக் கொடுத்தது.

‘தன்னலம் கருதாது அறிவைப் பரப்பிய சமுதாயத் தொண்டு மிகப் பெரிய நன்மையாகும் ‘ என்றார் கிராமுன்.

நாலாவதாக நான் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை தூக்கம் கலையாமல் முத்தமிட்ட காட்சியும் குழந்தையை வாரியணைத்து முத்தமழை பொழிந்த காட்சியும். இந்த கடைசி உதாரணம் என்னை மிகவும் வியப்பிலாழ்த்தியது. விளக்கம் கேட்டேன்.

‘விழித்துக் கொண்டிருக்கும் மனைவியை முத்தமிட்டால் அது உனது அல்லது அவளது திருப்திக்காக சாதாரண நன்மைதான் உறக்கத்தில் அது கலையாத வண்ணம் நீ முத்தம் இட்ட விதத்தை வைத்துப் பார்க்கும்போது — குழந்தையிடம் நீ காட்டிய நிறைவான அன்பை ஒத்த, எதிர்பார்ப்புக்ளற்ற தன்னில் தானாகப் பொங்கும் பிரவகிக்கும் அன்பு… ஐ… மீன்….. அப்ஸல்யூட் லவ் நாட் ரெஸிப்ரொகேஷன்…. ‘ என்றார்.

அவர் தந்த விளக்கத்திலும் அவரின் அழகான ஆங்கிலத்திலும் வியந்தேன் நான்.

அடுத்து காதிபீன்.

என் பாவங்களை அறிந்து கொள்ளப் போவதில் பயமும் வெட்கமும் அடைந்தேன். மிகப்பெரிய பாவங்களாகக் காட்டப்பட்டவற்றிற்கு எனக்கு விளக்கங்கள் தேவைப்படவில்லை. மிக மட்டமான — அதாவது மிகக் குறைந்தபட்ச தண்டனை மட்டுமே பெறத் தகுதியுள்ள பாவமாக காட்டப்பட்டதற்கு மட்டும் விளக்கம் கேட்டேன். ‘உங்கள் கற்புள்ள ஆங்கிலம் என்னை மிகவும் கவர்ந்தது ‘ என்று எனக்கு ஒருவர் எழுதிய கடிதம் காட்டப்பட்டது.

‘உன்னை ஒருவன் புகழ்ந்திருக்கிறான். அதை ‘பைல் ‘ பண்ணிப் பாதுகாத்து — பார்த்து பார்த்து – நினைத்து – நினைத்து சந்தோஷப்பட்டிருக்கிறாய். அதாவது உனது அறிவில் உனக்கு பெருமை தட்டியிருக்கிறது. நான் என்ற எண்ணத்திற்கு நீ இடம் கொடுத்துப் பாதுகாக்கிறாய். இறைவன் உனக்குக் கொடுத்த அறிவை — அதன் ஆழத்தை மேலும் அறிய முடியாமல் உனக்கு நீயே போட்டுக்கொண்ட முட்டுக்கட்டை அது என்பதை நீ அறியவில்லை. அமானத்தாகப் பெற்றதை உனதென்று எண்ணுதல் பாவம். அறிவு அமானத் என்பதை நீ அறியவில்லை அப்போது என்ற ஒரே காரணத்துக்காக மிகச் சிறியப் பாவப்பட்டியலில் அது சேர்கிறது. ‘

அடேயப்பா… ஒரு கடிதத்தை ‘பைல் ‘ பண்ணியதின் பின்னணியில் இவ்வளவு உள்ளதா ? கிராமுன் — காந்திபீனை என்னிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. என் மனச்சாட்சியின் குரலாக சுய சமாதானங்களாக சுய உறுத்தல் இவைகளின் வடிவங்களாகவே அவர்களை உணர்ந்தேன்.

நான் செய்தமிகப்பெரிய பாவங்களில் நான் செய்த துரோகங்கள், எனக்கு மட்டுமே தெரிந்தவை என்று நான் எண்ணிச் செய்த தவறுகள் — என் கண்களே பார்க்கக் கூசின.

கடைசியாக நான் செய்த மிகப் பெரிய பாவப்பட்டியலில் நான் ஒரு நாள் ஜஉம் ஆத் தொழுதது காண்பிக்கப்பட்டபோது மிக ஆச்சரியமடைந்தேன். தொழுதது பாவமா…. ? அதுவும் மிகப்பெரிய பாவமா….. ? ஒன்றுமே புரியவில்லையே…. ‘

காதிபீன் கூறினார். ‘நீ உண்மையில் தொழவில்லை. இறைவனை அவமானப்படுத்தி இருக்கிறாய்…… அவனை யாரும் அவமானப்படுத்த முடியாது என்றாலும். நீ தொழுகையில் இறைவனை நினைப்பதை விடுத்து வாசலில் கழட்டிப் போட்ட புதுப் ‘பாட்டா ‘ செருப்பையே எண்ணிக் கவலை கொண்டிருந்தாய். இது ஷிர்க்கைவிட மிக மோசமானது. இறைவனை விட செருப்பு மிக முக்கியமாகிவிட்டது. தொழுகையை கேவலப்படுத்தியது மிகப் பெரிய பாவம். ‘

எனக்கு கைகால்களெல்லாம் உதறின. அவர் வார்த்தைகளின் உண்மை என்னை ஸ்தம்பிக்கச் செய்தது.

கிராமின் சொன்னார். ‘சரி…… எங்கள் வேலை முடிந்துவிட்டது. உனக்கு ஏதாவது சந்தேகமுண்டா…. ? ‘

‘என் பாவ புண்ணியங்களுக்கு உதாரணமாகத்தான் காட்சிகளை காட்டினீர்கள். இதுவரையில் எனக்குப் பாவம் அதிகமா ? புண்ணியம் அதிகமா…. ? ‘

‘அதைச் சொல்வதோ — நிர்ணயிப்பதோ எமது வேலையல்ல ‘

‘கடைசியாக ஒரு கேள்வி. இப்போது மணி என்ன ? ‘

புன்னகைத்தார். பின்பு சொன்னார். ‘இங்கு வருவதற்கு முன்புதான் காலம் — நேரம் இடமெல்லாம் உண்டு. இங்கு வந்தபிறகு நீ எல்லாவற்றையும் கடந்தவனாகிறாய். அஸ்ஸாமு அலைக்கும் ‘ ‘ மறுபடியும் மின்னல் நேரம். தோள் பட்டைகளில் கோடாரியால் பிளக்கும் வேதனை. ‘யா அல்லாஹ் ‘ என்ற என் முணங்கலுக்குப் பின் மீண்டும் என்னைத் தனிமை சூழ்ந்தது.

சிந்தனையில் ஆழ்ந்தேன். என் பாவங்களின் கனம் அழுத்துவதுபோல இருந்தது. நரகவேதனை எப்படியிருக்குமோ ?…. ஆனால் இவ்வளவு பாவங்களை செய்திருக்கிறோம் என்ற நினைவே பெரும் வேதனையை அளித்தது. இரு தோள்களையும் திரும்பத் திரும்ப வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘அஸ்ஸாமு அலைக்கும் ‘ என்ற ஒருமித்த குரல்கள். ஓ… ‘முன்கீர்-நகீரா….. ? ‘ இருவரும் மின்மினிப் பூச்சிகள் போல ஒளிர்ந்தார்கள். இருவருக்கும் சிறகுகள் இருந்தன. காலண்டர் தேவதைகளைப் போல. அல்லது மனிதனின் தீர்க்கதரிசனக் கற்பனையைப் போல.

ஒருவர் என்னை நோக்கி ‘மன்ரப்புக்க ‘ என்றார்.

‘தல்கீன் ‘ எல்லாம் நான் பள்ளியிலேயே ஓதிவிட்டேன். நீங்கள் கேட்கப்போகும் கேள்விகளுக்கு ‘ஸ்டாக் ‘கான பதில்களையும் வைத்துள்ளேன். ‘தல்கீ ‘னில் உள்ளதுதான் ஆனால் உண்மையில் எனக்கு அரபி தெரியாது. என் பதிலை வைத்து நீங்கள் திருப்திகொண்டால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வீர்கள். எனவே தமிழிலேயே கேளுங்கள். அப்போதுதான் உண்மை வரும் ‘ என்றேன்.

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். நான் அடுத்து என்ன கேட்கப் போகிறார்கள் என்று ஆவலாக எதிர்ப்பார்த்தேன். அதற்குள் என்னை யாரோ பிடித்து உலுக்கினார்கள். என் முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவினார்கள்.

கண்களை திறந்து பார்த்தேன். கையில் கிளாசுடன் எதிரே என் மனைவி.

‘எவ்வளவு நேரமா எழுப்பறது…… என்ன மையித்து மாதிரித் தூங்குறீங்க…… ? ‘ என்றாள்.

****

அருஞ்சொற் பொருள்

மய்யத்து — இறந்த உடல்.

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி