விக்கிரமாதித்யன் கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

விக்கிரமாதித்யன்


கண்டதும் கொண்டதும்

–விக்ரமாதித்யன் நம்பி

என்ன
செய்யவென்றே தெரியவில்லை

ஏதாவது
செய்து கொண்டிருக்கிறான்

என்ன
சொல்லவென்றே புரியவில்லை

என்னவாவது
பேசிக்கொண்டிருக்கிறான்

எங்கு
போகவென்றே திட்டமில்லை

எங்கேயாவது
போய்க் கொண்டிருக்கிறான்

என்ன
சாப்பிட
எப்படி
தூங்க
எவ்வாறு
பணம் சம்பாதிக்க
எவ்விதம்
பத்திரமாய் இருக்க
ஒன்றுமே
ஓர்மையில்லை
கடவுளே
கடவுளே
பிரம்மஹத்தி தோஷம் பிடித்த
சிவனைப் போல
அலைந்து கொண்டிருக்கிறான் இவனும்
அன்னபூரணியின் திருக்கை பார்த்து
இருக்கட்டும்
கண்டதும் கொண்டதும்
அநேகம் அநேகம்
இருந்துவிட்டுப் போகட்டும்

************************************************

மொழியின் அலகு
–விக்ரமாதித்யன் நம்பி

மொழியின் அலகு
சொல்
சொல்லின் அலகு
எழுத்து/ஓசை ஒலி
எழுத்தின்
அலகு மொழி
எழுத்து
சொல்
மொழி

********************************************

இவன் யுவராஜன் போலே

–நம்பிராஜன்

கண்துயில் கெடுக்கும்
கனவே
என்ன செய்யப்போகிறாய்
இன்றிரவு நீ

அமைதியாய்த் தூங்கப்
போகிறோம் நாங்கள்
இனியும் இடமில்லை
கனவுகளுக்கு

அவள்
அநேகம் கனவுகாணலாம்
இவன்
யுவராஜன் போலே

*************************************

பிரச்னை

–நம்பிராஜன்

பிரச்னை என்றால்
பிரச்னைதான்

பிரச்னையில்லையெனில்
பிரச்னையில்லை

பிரச்னையா பிரச்னையில்லையா
என்பதுதானே பிரச்னை

***************************************

நெல்லையப்பன் போல

–விக்ரமாதித்யன்

உச்சபட்ச போதையில்
கண்டதென்ன
உச்சபட்ச போகத்தில்
கொண்டதென்ன
உச்சபட்ச வாழ்வு
என்னது
உச்சபட்ச பேறு
எது என்ன
ஒருகொடியில்
சில பூக்கள் போலவா
அக்கா மகளை மாமன் மகளை கட்டுகிற
சமூகம் நம்மது
வேறொருத்தியைத் தெரிய
நியாயமில்லை
காடென்றால்
கனவில்வருவது போலில்லை
கடலென்றால்
நினைவில் இருப்பது மாதிரியா
ஜீவராசிகள்
ரத்தம்சிந்தக்கூடாது
தாமிரபரணி வற்றினால்
தீ
பிள்ளைமார் தரித்திரம்
பெருந்தீ
ஒரு ஆறுதல்
நெல்லையப்பர் போல
புதுமைப்பித்தன்

**************************************

விரும்புவதெல்லாம்
–விக்ரமாதித்யன் நம்பி

விரும்புவதெல்லாம்
விலகிவிலகிப் போகிறது

விலக்க வேண்டியதெல்லாம்
வேண்டாமலே வருகிறது

விரும்பிச் சேர்த்ததாக
வீணே நினைத்துக்கொள்ள வேண்டாம்

தள்ளமுடியாத
சள்ளையென்று புரிந்துகொண்டால் போதும்

விட்டுவிலகிப்போன கசப்பு
விடவே முடியாத விருப்பு

கவிஞன்
கலங்கித் தவிக்கிறான்

கவிதை
புலப்பமாய்ப் போகிறது

வானமென்றால்
நட்சத்திரங்கள் உண்டு

பூமியெனில்
புல்பூண்டுகள்

எதுவும்
இல்லாத எதார்த்தம்

இவ்வளவு
பொல்லாத சுபாவம்

*******************************

கவிமனம்
–நம்பிராஜன்

தாமிரபரணிப் பக்கத்தில்
இருந்தால் சரி
தாய் அண்டையிலிருந்தால்
போதும்
துணைவி
கூட இருந்தால் நல்லது
பிளைகளோடு
வாழ்ந்தால் சந்தோஷம்
கோயிலுக்குக் கிட்டத்தில்
மொழிக்கு நெருக்கத்தில் இருப்பின் விசேஷம்
கவிதைக்குள்
இருக்கமுடிந்தால் எதேஷ்டம்
நெல்லையப்பருக்கு இல்லையென்றாலும்
காந்திமதிதாய்க்குப் புரியாத கவிமனசு
புட்டார்த்தியம்மன் வெறுமே பேசிக்கொண்டிருக்கமாட்டாள்
பெரிதாகச் செய்துதருவாள் நிச்சயம்

**********************************************

கடலில்
–விக்ரமாதித்யன்

( ‘கவிதைக்கணம் ‘ இரண்டில் படித்த கவிதை)

அநேகம்
தீவுகள்
ஒரு தீவில்
ஒரு ராக்ஷஸன் தன் இனிய ராக்ஷஸியோடு
ஒரு தீவில்
கடவுள்கள் தங்கள்தங்கள் தேவியருடன்
ஒரு தீவில்
சாத்தான் யாரைத் தன்பக்கம் இழுக்க எனும் சிந்தையில்
ஒரு தீவில்
மழலைகள் தம் தாயின் ஸ்தனம் பற்றி
ஒரு தீவில்
ஒரு மகாகவி கழுத்துவரை குடித்தபடி
ஒரு தீவில்
மனுஷிகள் கணவர்களுக்கான காத்திருப்பில்
ஒரு தீவில்
ஆண்கள் நகர் நோக்கிய பயண எதிர்பார்ப்போடு
தீவுகளால்
நிரம்பியிருக்கிறது ஒரு மகாசமுத்ரம்

************

Series Navigation

விக்கிரமாதித்யன்

விக்கிரமாதித்யன்