வாழ்க மதச்சார்பின்மை

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

அரவிந்தன் நீலகண்டன்


பாஜகவின் இந்த படுதோல்விக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன ? பிரமோத் மகாஜன் ‘தனக்கு தெரியவில்லை ‘ என்றார். தொடக்கத்தில் பாஜக வெற்றி சர்வ நிச்சயம் எனும் நிலையில் களம் இறங்கியது. ஆனால் மூன்று மாதங்களில் நடந்தது என்ன ? தமிழ்நாட்டையும் பின்னர் குமரி மாவட்டத்தையும் பார்த்தால் சில உண்மைகள் புரிகின்றன. தொடக்கத்தில் இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் பாரதம் ஒளிர்வதாக பரவலாக கூறிய மக்கள் பின்னர் ஒளிரவில்லை என அடித்துக் கூறினார்கள். ஏன் ? பாஜகவின் பிரச்சாரம் வெறும் ‘ஒளிர்கிறது ‘ என்ற கோஷத்துடன் நின்றது. உண்மைகளை பிரச்சாரத்தன்மையுடன் மக்களிடம் பாஜக கொண்டு செல்லவில்லை. தேர்தல் காலங்களில் நடந்த தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெற்ற பாஜக தலைவர்கள் நிச்சயமாக ஒளிரவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சன் தொலைக்காட்சி வலை வலுவானது. ஜெயா தொலைகாட்சிக்கு சன் நெட்வொர்க்கின் வலு நிச்சயமாக கிடையாது. சன் டிவியில் கிடைத்த வாய்ப்புகளை பாஜக தலைவர்கள் நழுவவிட்டனர். பாஜகவும் சில துரதிர்ஷடங்களை சந்தித்தது. லக்னோ விவகாரம் ஒரு உதாரணம். ராஜிவ் மரணத்தின் போது தேர்தல் விதிமுறை அமுலாக்கப் போதுகூட மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டதை எதிர்க்காத தேர்தல் ஆணையம் பாஜக மீது சீறிப் பாய்ந்தது. உண்மையில் தேசிய அளவில் தேர்தல் ஆணையம்தான் காங்கிரஸ் கூட்டணியில் வலுவான கட்சியாக விளங்கியது. பல பாஜக விளம்பரங்களை தேர்தல் ஆணையம் முடக்கிப்போட்டது என்கிற உண்மையும் தற்போது வெளிவந்துள்ளது. தான் ஆளும் கட்சியாக இருக்கும் போது கூட தேர்தல் ஆணையத்தை தனக்கு எதிராக செயல்படும் அமைப்பாக உருவாக்கிய பாஜக – பாசிசத்தின் முழு உருவம். தனக்கு எதிரான திரைப்படங்களை தடைசெய்தும், வெளிப்படையாகவே மதஅடிப்படைவாதிகளுடன் கைகோர்த்து நூல்களை தடைசெய்தும், ஜோதிபாசுவின் சரிதையை எழுதியவர்களை பல்கலைக்கழக வைஸ்-சான்சிலர்கள் ஆக்கும் மேற்குவங்கம் முற்போக்கின் பூரண அவதாரம்.இந்நிலையில் மதச்சார்பின்மை மற்றும் சிறுபான்மை வாக்குகள் ஆகியவை குறித்து கூறியாக வேண்டும். ஒரு உதாரணம், குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரான திரு.பொன்.இராதாகிருஷ்ணன் மதங்களுக்கு அப்பாற்பட்டு செயலாற்றினார். இதன் விளைவாக சில ஹிந்துக்களின் அதிருப்தியைக் கூட சம்பாதித்துக்கொண்டார். மீனவர்கள் (கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் 99% கிறிஸ்தவர்கள்) கேரளத்தில் தாக்கப்பட்ட போது, அந்த சமுதாய கிறிஸ்தவ பங்குத்தந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்று அவர்களுக்காக உடனடியாக கேரள மாநில முதலமைச்சரை சந்தித்து பேசினார். கிறிஸ்தவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வாங்கித்தந்தார். பல கிறிஸ்தவ சமயச் சுற்றுலாதலங்களுக்கு சாலைகள் அமைய வழி செய்தார். ஆனால் நடந்தது என்ன ? தேர்தல் திங்கள் அன்று நடந்தது. ஞாயிறன்று பல தேவாலயங்களில் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு மத அடிப்படையில் வாக்களிக்குமாறு மறைமுகமாகவும் நேரடியாகவும் திருப்பலிக்கு சென்றவர்களுக்கு கூறப்பட்டது. பொன்.இராதாகிருஷ்ணன் சமயங்களுக்கு அப்பால் சென்று செயல்பட்டார். ஆனால் சிறுபான்மை வாக்குகளோ சமய பீடங்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டே விழுந்தன. குமரி மாவட்டத்தில் சிறிதே வளர்ந்து வந்த மதநல்லிணக்கத்தை நாசமாக்கிய பெருமை ‘மதச்சார்பற்ற ‘ பெல்லார்மினுக்கு போய் சேருகிறது. இதே நிகழ்வுகளின் பிரதிபலிப்புகள் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் நடந்திருக்கும். இதற்கான காரணம் என்ன ? குஜராத் ? அல்லது ஜோஷி பாடநூல்களை திருத்தி வெளியிட்டது ? அல்லது மதமாற்றத் தடைச்சட்டம் ? உண்மையில் குஜராத் கலவரங்கள் என்னதான் மதச்சார்பற்றவாதிகள் கூக்குரலிட்டாலும் அவை கலவரங்கள்தான். சமபலமற்ற நிலையில் நடந்த கலவரங்கள் என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் 1984 இல் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகள் – மிகத்தெளிவாக படுகொலைகள். அதில் இறந்த சிறுபான்மையினர் குஜராத் கலவரங்களில் இறந்த மொத்த மக்களைக்காட்டிலும் கூடுதல். அந்த படுகொலைகளில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்தியது. அப்போது ஏன் குஜராத் கலவரங்கள் இந்த சீக்கிய படுகொலைகளைக்காட்டிலும் சிறுபான்மையினரை அதிகம் பாதிக்கவேண்டும் ? போலி மதச்சார்பின்மைவாதிகள் குஜராத்தை குறித்து தொடர்ந்து ஒரு சித்திரத்தை எழுப்பிவந்தார்கள். மும்பையில் ஹிந்துக்களை தீவைத்து எரித்தவர்களுக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கு வலுவின்மையால் தள்ளூபடி செய்யப்பட்ட போது எந்த தன்னார்வ அமைப்பும் அதை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லவில்லை. தமிழ்நாட்டில் ஹிந்து இயக்கங்களைச் சார்ந்தவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டபோது எந்த தன்னார்வ அமைப்பும் அதை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லவில்லை. ஏன் சீக்கிய படுகொலைகளுக்கு காரணமான தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட போது அவை உச்சநீதி மன்றத்திற்கு எடுத்துச்செல்லப்படவில்லை. ஆனால் பெஸ்ட் பேக்கரி வழக்கு மட்டும் ஊடகங்களில் மூலம் மக்கள் மனதிற்கு மிக வலுவாக கொண்டுசெல்லப்பட்டது. ஆனால் சிறுபான்மையினர் எனும் கணக்கில் வரும் கிறிஸ்தவர்கள் ஆகட்டும், இஸ்லாமியர்கள் ஆகட்டும்,இந்த தேர்தலில் வாக்களித்துள்ள விதம் இதனை ஒரு சமயப்போராகவே கண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது. எனவே பெரும்பான்மை சமுதாயம் அவ்வாறு இதனைக் கண்டதா என பார்த்தால் இல்லை. தங்களை ஹிந்துத்வவாதிகளாக கருதும் பாஜக கூட இதனூடே ஓடிய சமயத்தன்மையை கண்டுகொள்ளவில்லை. ஆட்சி எதிர்ப்பு மனப்பங்கோடு சிறுபான்மையினர் வாக்கு அளிப்பு தன்னை இயைவுபடுத்திக்கொண்டது என்றாலும் கூட அவை இரண்டின் குறிக்கோள்களும் வேறு வேறு. திரு.எஸ்.ரா.சற்குணம், மற்றும் பல இஸ்லாமிய அமைப்புகளின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும்போது இந்த எண்ணம் வலுப்படுகிறது. ஜெயா தொலைக்காட்சி விவாதத்தில் திரு.ஞான தேசிகன் என்கிற காங்கிரஸ் தலைவர் ஞானசூனியமாக கூறினார், ‘முஸ்லீம் லீக் ஒன்றும் தனிநாடு கேட்கவில்லை. ஜின்னாதான் தனிநாடு கேட்டார். ‘ மஞ்சள் துண்டு பகுத்தறிவு புகழ் கருணாநிதி ஜின்னா பாகிஸ்தான் கேட்பதற்கு முன்பாகவே ‘நான் பாகிஸ்தான் ஜிந்தாபாத் போட்டேன் ‘ என்றார். அதுவும் சிறுபான்மையர் கூட்டத்தில். அதற்கு கைத்தட்டல்களையும் வாங்கினார். ஆக பெரும்பான்மை சமுதாய அரசியல் தலைவர்களுக்கு மதச்சார்பின்மை ஓட்டு வங்கிக்காக நடத்தப்படும் அரசியல் விளையாட்டு. சிறுபான்மையினருக்கோ மிகத்தெளிவாக தங்கள் குறிக்கோளான ‘இந்தியா ஏசுவுக்கே ‘ அல்லது ‘இஸ்லாமே இந்தியாவுக்கான மார்க்கம் ‘ எனும் நிலைபாட்டினை நோக்கி இந்தியாவை செலுத்துவதற்கான தயாரிப்புக்களம். இதில் சொந்த அரசியல் இலாபத்திற்காக பெரும்பான்மை சமுதாயம் சார்ந்த ‘மதச்சார்பற்ற ‘ தலைவர்கள் தியாகம் செய்வது இந்த தலைவர்களின் வாரிசுகளைப் போலல்லாமல் வெளிநாட்டில் குடியுரிமை பெற்று போய்விடவும் முடியாமல் தான் தன் சொந்த மண்ணில் சிறுபான்மையாக மாற்றப்பட்ட பின்னும் மதம்மாற மனதில்லாமல் மண்ணிழந்து, மானமிழந்து அகதிகளாக வாழப்போகும் இன்றைய பெரும்பான்மை சமுதாயத்தினர். பாஜகவின் தோல்வி காட்டுவது இதுதான். பரவுதன்மையும் அந்நிய பணபலமும் கொண்ட மத அடிப்படையிலான ஓட்டுவங்கிகளால் வெற்றிபெறுபவர்கள் ‘மதச்சார்பின்மை ‘ வேடம் போடுகையில், உண்மையிலேயே மதச்சார்பின்மையின் அடிப்படையில் தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு தேர்தலை சந்தித்த பாஜக தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு பிரச்சார வலுவின்மையும் ஒரு முக்கிய காரணம். பெரும்பான்மை சமுதாயத்தை ஒரு அரசியல்சக்தியாக மாற்ற வேண்டியது பாஜகவின் வெற்றிக்கும், இந்திய சமுதாயத்தின் எதிர்கால வாழ்க்கைக்கும் அவசியம். இல்லையேல் இன்றைய பெரும்பான்மை சமுதாயத்தினரின் எதிர்காலம் அதிர்ஷ்டமிருந்தால் டெல்லியில் சாக்கடை மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் பண்டிட்களின் அகதிமுகாம்களை போலவோ இல்லையேல் பங்களாதேஷில் ஓலம் வெளியே கேட்காமல் நசுக்கி அழிக்கப்படும் ஹிந்துக்களினுடையதைப் போன்றோ ஆகிவிடலாம். பெரும்பான்மை சமுதாய குழந்தைகளின் படங்கள் சர்வதேச அகதிகள் குறித்த விளம்பரங்களில் வெளிவரவும் இடமுண்டு. என்றாலும் என்ன இந்த தேர்தலில் நம் நாடு உலக வரலாற்றிலேயே இல்லாத சாதனையை படைத்துள்ளது. இத்தாலிய அரசியல் தலைவர் ‘இந்திய தேர்தல் முடிவுகள் திருப்தி அளிப்பனவையாக உள்ளன ‘ என கருத்து தெரிவித்துள்ளார். குறுகிய பாசிச எண்ணம் கொண்ட சிலர் ‘இவன் யாரையா இந்திய தேர்தல் முடிவுகள் திருப்தி அளிப்பதாக கூற ? ‘ என குறைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் வாஜ்பாய் பிரதமராகியிருந்தால் இப்படி இந்திய தேர்தல் இத்தாலிய அளவில் ‘திருப்தி அளிப்பதாக ‘ அமைந்திருக்குமா ? இனி தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் இத்தாலிய தலைவர்களுக்கு திருப்தி அளிப்பதாக உள்ளனவா என்பதையும் தன் தேர்தல் விதிமுறைகளில் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஏன் அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் ரோமானிய அனுமதியுடன்தான் வர வேண்டும் என கூறுவது இன்னமும் சாலச்சிறந்தது. உலக வரலாற்றிலேயே ஒரு நாட்டில் குடிமகளாகாமல் வாக்களாராக தன்னை பதிவு செய்து தேர்தல் ஆணையத்தால் பெயர் நீக்கம் செய்யப்பட்ட ஒரு அன்னிய நாட்டு ஏமாற்று பேர்வழி அதே நாட்டில் பிரதமராகும் கூத்தை நடத்தி விட்டது. விரைவில் கொலம்பிய ஸ்பானிஷ் தலைவிகளும் அகில இந்திய காங்கிரஸுக்கு கிடைப்பார்கள். ஆகா இதல்லவா சர்வ தேசியம்! தேசியம் பேசி பாஜகவுக்கு கிடைத்த மவுசை பார்த்து மார்க்சியத்தை இந்திய மண்ணின் மரபுகளுடன் இணைத்து வளர்த்தெடுக்கப் போவதாக பாவ்லா காட்டிய அறிவு ஜீவிகள் இனி அந்த உடான்ஸ்களை விட்டுவிட்டு வகாபி மார்க் இஸ்லாமை போல ISO 9001 சரவதேச சான்றிதழ் பெற்ற அப்பழுக்கற்ற சர்வதேசிய மார்க்சிய ‘தியரி ‘ பேசலாம். ஏற்கனவே சில சிவப்பு அறிவுஜீவிகள் விவேகானந்தர் ஸ்ரீ அரவிந்தர் ஆகியோரெல்லாம் வகுப்புவாதிகள் எனவே அவர்களது தாக்கம் கொண்ட தேசியம் நிராகரிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்கள். விவேகானந்தருக்கு ஒரு வரியும் கார்ல்மார்க்சுக்கு பக்கங்களும் அளிக்கும் மேற்குவங்க பாடபுத்தக முன்மாதிரியில் ‘மதச்சார்பற்ற ‘ பாடநூல்களை தயாரிக்கலாம். இந்திய வெறுப்பு மனவாதியான அச்சுத் பட்வர்த்தனின் பிரச்சார படங்கள் இனி அரசாங்க விவரண படங்களாகிவிடலாம். வாழ்க மதச்சார்பின்மையும் இறக்குமதி வெள்ளைத்தோல் தலைவிகளும். ஒழிக தேசபக்தியும், அந்தமான் சிறைகளில் வாடிய அந்த பழைய பைத்தியகாரர்களும் அவர்களின் நினைவுகளும்.

—-

hindoo_humanist@lycos.com

Series Navigation