வாழும் என் கவிதைகளில் ( மூலம் : அந்தானாஸ் ஜோன்யாஸ் )

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

தமிழாக்கம் : புதுவை ஞானம்.


எவ்வளவு காலமாயிற்று கடைசியாக
நீலவானத்தை பரந்த வயல்வெளிகளை
பசுமையான காடுகளை மலர்களை

அந்த மங்கையின் நேசம் நிறைந்த விழிகளைப் பார்த்து.
மஞ்சள் மலர் ஒன்று இரவும் பகலுமாய்
சலசலக்கிறது சாளரத்தின் வழியே
ஆனாலும் ஒரு திருடனைப்போல
மெல்ல மெல்ல அரவமின்றி
அந்தி வேளையில் கருக்கிருட்டில்
ஓசையில்லாமலும் விரைவாகவும் மொட்டவிழ்கிறது.

எவ்வளவு திருடி விட்டது
வாழ்க்கை என்னிடமிருந்து ?.

சலித்துப் போயிற்று என் இதயம் இருட்டில் வாழ்ந்திருந்து
தணலற்றுப் போயின எனது கீதங்கள்.

வாழ்க்கைப் பாதையில் நான் நடையெடுத்து வைக்கையில்
தயங்குவதாகவும் வேகமற்றதாகவும் போய்விட்டன
எனது காலடிகள்.
எங்கே போகிறோம் என்பதே விளங்காமையால்
குருடாகிப் போனேன் நான்.
குருடாகிப்போனாலும் ஒரு நாளும்
மறக்கவில்லை அந்தச் சூரியனை.

இதயத்தின் ஏதோ ஒரு மூலையில்
இன்னும் பசுமையாகவே இருக்கிறது
அந்தச் சூரியன்.

சாவினையொத்த துக்கத்தில் வலுவிழந்து போனபோதும்
பாறையில் முளைத்தெழும் கொடியின் குருத்து போல
சோகத்தில் நடுநடுங்கினாலும் தாளம் போடுகிறது அது
எந்தன் எளிய பாடல்களுக்கு.

அந்த சூரியனை நீலவானத்தை எனது
காதலியின் கூர்மையான விழிகளை
எல்லையற்ற வயல்வெளியை
கண் சிமிட்டும் தாரகைகளை
விரைந்து பறந்தோடும் பறவைக் கூட்டத்தை
எண்ணியெண்ணிப்பொறுமுகிறேன் நான்.

கோடுகள் விழுந்த முகங்களை எண்ணியெண்ணி
இதயம் வெடித்துப் போய் கண்கள் கசிகின்றன
முக்கலோ முனகலோ அல்ல எனது கதறல்கள்
ஆழம் கான முடியாததும்
புல் மூடிய சதுப்பு நிலப்பரப்பினையும் போல
பயங்கரமானவை அவை.

மலிவான பரிவினாலோ மேலும் மலிவான பாராட்டுகளாளோ
அன்றாட வாழ்வின் பரபரப்பினாலோ
ஏமாற்ற முடியாது இதயத்தை.
வாழ்வெனும் சூரியனைக்காண
நெடிதோங்கி வளருகிறது
ஊசி இலை மரத்தைப் போல.

பொறு மனமே….
இன்னொரு மனிதனிடம்
ஏற்றி வைக்க முடியாதது அல்லவா
உன் சோகம்….மேலும்
வேதனை என்பது சாவு அல்லவே.

ஆயாசங்கள் வந்தடைந்த போதிலும்

ஆயுதங்கள் களை பட்ட போதிலும்
கடைசி மூச்சு உள்ளவரை
போராடியே தீருவான்
உண்மை மனிதன்.

பாதை கரடுமுரடானாலும்
சமப்படுத்தி விடுவான் தனது பாடல்களால்.

தலை தாழ்த்தி வணங்குகிறேன் தோழர்களே !
பாதை நெடியதாகவும் அகன்றும் விரிகிறது
இருந்த போதிலும் நடையை எட்டிப்போட்டு
இணைந்து விடுவேன் உங்களுடன்.

வளைந்து வளைந்தும் நெடியதாகவும் இருந்த போதிலும்
தெம்பிருக்கும் எனக்கு இலக்கினை எட்டுதற்கு.
கண்கள் குருடாகிப்போனாலும்
என்ன வழங்குகிறது வாழ்க்கை
என்பதை அவதானிப்பேன்.
அவதானித்தவை அனைத்தும்
வாழும் என் கவிதைகளில்.

மூலம் : அந்தானாஸ் ஜோன்யாஸ் (Antnas Jonyas)-(1923 -1976)
Lithuania.
தமிழாக்கம் : புதுவை ஞானம்.

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்