வாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

மத்தளராயன்


உ.வே.சாமிநதய்யர் எழுதிய ‘ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளைவர்கள் சரித்திரம் ‘ படிக்க எடுத்தேன். இரண்டு பாகங்களும் ஏராளமான செய்யுட்களுமாக அமைந்த இந்தப் புத்தகம் வெளிவந்தே எழுபது வருடமாகி விட்டது. அது சொல்லும் வரலாறு அதற்கும் நூறு வருடம் முன்னால் யமகம், திரிபு, பின் முடுகு வெண்பா, தரவு கொச்சகக் கலிப்பா, தலபுராணம் என்று சதா சுவாசித்துக் கொண்டு இருந்தவர்கள் பற்றியது.

இந்தத் தீவிரத்துக்கு இடையே அந்தக் காலப் பண்டிதர்கள் பலருக்கும் சுபாவமான உரைநடை கைகூடி இருந்திருக்கிறது. உவேசா மாத்திரம் இல்லை, அவரோடு தொடர்புடைய பெரியவர்கள் பலரிடமும் இதைக் காணலாம்.

22.10.1900 தேதியிட்டுப் புதுவையிலிருந்து உவேசாவுக்கு புதுச்சேரி சவராயலு நாயக்கர் எழுதிய கடிதத்தை ‘ தாங்கள் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தை எழுத எத்தனித்திருக்கிறதாக இம்மாதம் 8-ஆம் தேதி திங்கட்கிழமை வெளிப்பட்ட 146 நம்பர் சுதேசமித்திரன் பத்திரிகையால் அறிந்து நான் மெத்தவுஞ் சந்துஷ்டி அடைந்தேன் ‘ என்று தொடங்குவது உதாரணம்.

இது தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் சுழல விட்டுக்கொண்ட (பாக்கெட்டில் ரீசார்ஜபிள் பேட்டரி வைத்திருப்பார்களோ) நம்முடைய நவீனத் தமிழ் இலக்கியப் பிரபலங்களின் ‘பின் பண்டித ‘ அ-கதை உரைநடைக்கு முற்றிலும் மாறுபட்டது.

கொண்டவர் விண்டிலர் – விண்டவர் கொண்டிலர் என்றபடி இவர்கள் கொடுக்கும் இருட்டுக்கடை அல்வாவை விட பழைய ஒரிஜினல் பெங்களூர் எம்.டி.ஆர் பிராண்ட் இன்ஸ்டண்ட் குலோப்ஜாமுன் வகையறாக்கள் சிலாக்கியமானவை.

***

மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்குக் கவிதை கைவாள் இல்லை. முதுகு சொரியும் பூணூலும் இல்லை. மூச்சு விடுவது, மூத்திரம் போவது போல் அது தினசரி வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம்.

சின்ன வயதில் வாவு நாள் (பெளர்ணமி) விடுமுறையின் போது திருச்சிரபுரம் என்ற திருச்சியில் வீட்டுக்கு மளிகை ஜாமான் வாங்கிக் கொண்டு வர நடக்கிறபோது சுங்கச் சாவடி சவுக்கிதார் கேட்ட மாத்திரத்தில் வெண்பா பொழிகிறார். அவர் கொடுத்த இரண்டணா உப்பு, புளியாகிறது.

பிற்பாடு கொஞ்சம் பெயர் பிரபலமாகி, அதைவிடக் கொஞ்சம் போல் வருமானம் ஈட்டி, வீடு கட்டும்போது வாசல் கதவுக்கு மரம் வேண்டுமா – எடு ஏட்டை. அவரிடம் பிரியம் உடைய தனவான் ஒருத்தருக்குக் கவிதை வேண்டுகோள்.

சாப்பாட்டுக்கு நன்கொடையாக அனுப்பிய புது நெல் வயிற்றில் வாயுத் தொல்லையை உண்டாக்குகிறதா ? அனுப்பியவருக்கு நன்றியோடு தேக அசெளகரியம் குறித்து ஒரு சிலேடை வெண்பா. அடுத்த நாளே பழைய அரிசி மூட்டை வீட்டுக்கு வந்து சேர்கிறது.

தன்னை ஆதரித்த பட்டாச்சுவரம் ஆறுமுகத்தா பிள்ளை ஒரு மிராசுதார் ஐயரிடம் கைமாற்று வாங்கி வட்டிக்கு மேல் வட்டி கூடிப் போய் கடன் தொல்லையில் மூழ்கிக் கொண்டிருந்தபோதும் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் செய்யுள் தான் கைகொடுக்கிறது.

வட்டியைக் குறைக்கச் சொல்லி அந்த மார்வாடி ஐயருக்கு இவர் எழுதிய விருத்தம் ஆறுமுகத்தா பிள்ளை வயிற்றில் பாலை வார்க்கிறது.

இன்றைய சினிமாக் கவிஞர்கள் யாரேனும் ஒரு பாட்டாவது இப்படி எழுதி தண்ட வட்டிக் காரர்களுக்கு விடுத்தால் தயாரிப்பாளர்கள் சீலிங் ஃபேனைத் தேட வேண்டி வராது.

***

நூற்று ஐம்பது வருடத்துக்கு முந்திய வாழ்க்கை பற்றி இந்தச் சரித்திரத்தில் இடம் பெற்ற பதிவுகள் முக்கியமானவை.

சைவ மடத்தில் கிறிஸ்துவர்களும் சகஜமாக நடமாடிக் கல்வி பயின்று வந்திருக்கிறார்கள். சவரிமுத்துப் பிள்ளை கொஞ்ச காலம் சிவகுருநாதப் பிள்ளையாகிறார். அப்புறம் அவர் கல்யாணம் வர, சிவப் பழமான ஆசிரியரே அவரை சவரிமுத்து என்று அருகே விளித்து, கல்யாணத்துக்கு உதவச் சொல்லிப் பத்துக் கனவான்களுக்கு சீட்டுக் கவிதை அனுப்புகிறார்.

பெர்சிவல் பாதிரியார் கேட்டுக்கொண்டபடி இன்னொரு சைவ சமயச் சான்றோரான ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சுப்போட சென்னை வருகிறார். இங்கே யாழ்ப்பாணத் தமிழரைத் துரும்பாகப் பார்க்கிறார்கள். மழவை மகாலிங்கய்யர் விவிலிய மொழிபெயர்ப்பைப் படித்து அதில் பிழையில்லை என்றும் யாழ்ப்பாணத் தமிழ் சிறப்பானதென்றும் சான்று வழங்கிய பிறகே பெர்சிவல் புத்தகம் அச்சாக அனுமதிக்கிறார். விவிலியத்தை மதம் சார்ந்த நூலாகப் பார்ப்பது அப்புறம் தான் தொடங்கி இருக்கும் போல் இருக்கிறது.

ரயிலும், தந்தியும் அறிமுகமான அந்தக் காலத்தில் புதிதாக ஏற்பட்ட போஸ்ட் மாஸ்டர், சிரஸ்ததார், எஞ்சினியர் போன்ற துரைத்தன உத்தியோகங்களில் இருக்கப்பட்டவர்களும் ஒழிந்த நேரத்தில் சுவடியை வைத்துக் கொண்டு கடினமான தமிழ்ப் பாடல்களைப் பதம் பிரித்துப் படிக்க முயன்றிருக்கிறார்கள். அல்லது தக்கவர்களை அணுகியிருக்கிறார்கள்.

தமிழ்ச் செய்யுளில் ஈடுபட்டாலும், இங்கிலீசு நோட் மெட்டில் பாட்டு அமைப்பது கெளரவம் என்று சகலரும் நினைத்திருக்கிறார்கள்.

மாம்பழக் கவிச்சிங்க நாவலர் புதுக்கோட்டை அரசர் தொண்டமானைப் பற்றி நோட்டுப் போட்டால், அதே மெட்டில் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதினகர்த்தர் மேல் ‘துஞ்சம் தார் தரு துரைசை யில்வளர் சுப்ரமணிய தயாநிதியே ‘ என்று பாட்டு இயற்றுகிறார். சந்நிதானம் மகிழ, அந்தக் கானத்தை ஓதுவார்கள் மனனம் செய்து தினப்படி அவருக்கு முன்னால் பாடும் வழக்கம் ஏற்படுகிறது.

மடத்து சிவ பூஜைக்கு இடைஞ்சல் வரவழைக்காத அந்த இங்கிலீசு மெட்டு இன்னும் கொஞ்சம் நீண்டு மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர் வண்டானத்தையும் பிடித்துக் கொள்கிறது. அவர் தன்னை ஆதரித்த வள்ளல் மேல் அதே மெட்டுக்குப் பாட்டுக் கட்டுகிறார்.

தமிழ்த் திரை இசையமைப்பாளர்கள் தாம் தத்தகாரத்தில் பல்லவி கொடுத்து எந்தமிழ்க் கவிஞர்களைக் கெடுத்தார்கள் என்பதை இனியும் நம்ப முடியாது போலிருக்கிறது.

***

அந்தக் காலத்தில் காப்பி இருந்ததோ என்னவோ, வித்துவான்களிடம் ஊரில் பொதுவாக மரியாதை இருந்திருக்கிறது. கொஞ்சம் போல் பயமும் அதில் கலப்பு உண்டு.

தலபுராணம் செய்யச் சொல்லி அழைத்த நகரத்தார்கள் பயபக்தியோடு திரண்டு வந்து மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் வேண்டிக் கொள்கிறார்கள் – ‘தயவு செய்து அறம் வைத்துப் பாடி விடாதீர்கள். பாட்டுக்கு மூன்று வரிக்குக் குறைவாகப் பாட வேண்டாம் ‘

இயல்பாகவே நல்ல மனிதராகிய அவர் மாட்டேன் என்று உறுதிமொழி தருகிறார்.

ஆனாலும் காண்ட்ராக்ட் அடிப்படையில் இப்படிப் பாட்டு எழுதப் போகும்போது, ஆதரித்து முன்கை எடுத்த கவர்மெண்ட் உத்யோகஸ்தர்கள் துர்போதனையால் சட்டென்று கையைப் பின்னால் இழுத்துக் கொண்டு எழுத்து வேலையை நிலைகுலைய வைக்கிறார்கள். ருத்ராட்ச மாலையை அடமானம் வைத்துக் கடன் வாங்க வேண்டி வருகிறது.

ஆதரித்துக் கூப்பிட்ட இடத்திலும் ராத்திரி பனிரெண்டு மணிவரை கண் விழிக்க வைத்துச் சாப்பாடு போடுகிறார்கள்.

இத்தனைக்கும் நடுவிலும் மனிதர் அசராமல் மாணவர்களுக்குப் பாடம் சொல்கிறார். இறுதிப் படுக்கையில் கிடக்கும்போது, சாமிநாதய்யர் திருக்கோத்தும்பி படிக்கிறார்.

‘நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாகி.. ‘

நுந்து கன்றென்றால் என்ன ? ஐயருக்குச் சந்தேகம் வருகிறது.

மூச்சு வாங்கப் பிள்ளையவர்கள், ‘விருப்பமில்லாமல் செலுத்தப்பட்ட கன்று ‘ என்கிறார்.

மொழியறிவிலும், கவித்திறத்திலும், தான் கற்றதை எல்லாம் பிறருக்கு வாரி வழங்க வேண்டும் என்று மனதார நினைப்பதிலும் இப்படியான உத்தமர்கள் இனி வரப் போவதில்லை.

***

eramurug@yahoo.com

Series Navigation