வாரபலன் – புத்தக விழாவில் தூசியில்லாமல் -எங்கும் சுற்றி தமிழையே சேவி- ராசி விஷம பலன் – எண்கணிதம் தமிழையா கையில்

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

மத்தளராயன்


அண்ணாசாலை நெரிசலைக் கடந்து ஏழரை மணிக்குக் காயிதே மில்லத் கல்லூரிக்குள் நுழைந்தால் நாலு சக்கர வண்டிகளுக்கு அனுமதி இல்லை. பின் வழியாக வரவேணும்.

ஆணியடித்துக் கட்டை விரலைச் சூப்பிக் கொண்டு பலகை பொருத்திப் புத்தகம் அடுக்கியபடி பல பதிப்பாளர்களும்.

அன்னம் கதிர் தான் முதலில் கண்ணில் பட்டார். மீரா இல்லாத புத்தகக் கண்காட்சி. கண்ணீரை மறைத்துக் கொண்டு அவர் தோளில் தட்டி நடந்தால் தீம்தரிகிட ஸ்டாலில் கருப்பு ஜிப்பாவோடு ஞாநி. கதர்க்கடையில் ஞாநி ஜிப்பா என்று கேட்டு மற்றவர்கள் வாங்கும் அழுக்குச் சிவப்பு எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் ஜிப்பாவை இப்போது அணிவதில்லையாம்.

எதிர்ப்பட்ட எழுத்தாளர் சா.கந்தசாமியோடும், கவிஞர் ‘ழ ‘ ராஜகோபாலனோடும் கை குலுக்கி நடந்தால் தமிழினி பதிப்பகம். சிவகுமார் அசுர சாதனையாகத் தொகுத்த பழந்தமிழ்க் கவிதைகள் தொகுதியும், கவிஞர் ராஜமார்த்தாண்டன் தொகுத்த புதுக்கவிதைத் தொகுதியும் வருது வந்துக்கிட்டே இருக்கு என்றார் தமிழினி வசந்தகுமார். இப்போதைக்கு அட்டை வந்திருக்கு பாருங்க என்றார்.

வேறு என்ன புதுசு என்றேன். ‘உங்க நண்பர் கனடா வெங்கட்ரமணனோட அறிவியல் கட்டுரைகள் தொகுதி நாளைக்கு வெளியாறது. முன்னுரை ஜெயமோகன் ‘.

எழுத்தாளர் பால்நிலவன் சாகித்ய அகாதமி ஸ்டாலுக்குப் போகச் சொன்னார். ஆதவன் மனைவி சாகித்ய அகாதமியிலே வேலை பார்க்கிறாங்க. அவங்க தான் ஸ்டால்லே இருக்காங்க. பேசிட்டு வந்தேன் என்றார்.

விருட்சம் ஸ்டாலில் கவிஞர்கள் அழகியசிங்கருக்கும் ‘லாவண்யா ‘ சத்தியநாதனுக்கும் (இவருடைய ‘இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில் ‘ அபூர்வமான கவிதைத் தொகுதி) ஹலோ சொல்லி நடந்தேன். சபரி ஸ்டால் இல்லை. புத்தகங்கள் ஏழெட்டு இதர ஸ்டால்களில் கிடைக்கிறதாக மொபைலில் பா. ராகவன் சொன்னார்.

காலச்சுவடு பதிப்பகத்தில் நுழைய பழக்கமான சோ டைப் தலை – விமர்சகர் அய்யனார். பூரணியம்மாள் புத்தகம் இரண்டு நாளில் வந்துவிடும் என்றார் (நான் வெளியிட்டுப் பேசி பத்து நாளாச்சே என்றேன்!). உள்ளே புகுந்து அவசரமாக மேய, டி.சி.புக்ஸ் கோட்டயம் – எரணாகுளத்திலிருந்து என்னைத் துரத்திய இரண்டு மலையாளப் புத்தகங்களை – மலையாத்தூர் ராமகிருஷ்ணனின் ‘நெட்டூர் மடம் ‘ மற்றும் மாடம்பு குஞ்ஞுகுட்டனின் ‘அம்ருதஸ்யபுத்ர ‘ – வாங்கிக் கொண்டு நேரம் பார்க்க எட்டரை.

புத்தகக் கண்காட்சி தொடங்கிய முதல் நாள் என்பதால் தூள் கிளம்பாமல், தூசி கிளம்பாமல் காயிதே மில்லத் வளாகத்தில் புத்தக வாசனை மட்டும் பிடிக்க முடிந்ததில் மகிழ்ச்சி. சட்டைப் பைக்குள் ரெண்டு அரை இஞ்ச் ஆணி எப்படி வந்தது என்றுதான் தெரியவில்லை.

*********************************************************************************

எஸ்பொவின் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘ விழாவில் நித்யஸ்ரீ பாரதி பாடல் பாடும்போது கொஞ்சம் மறந்து போய், திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து பாடி, இத்தனை இலக்கியவாதிகளை ஒருசேரப் பார்த்த டென்ஷனில் மிரண்டு போனதாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

மலையாளக் கவிஞர் சச்சிதாநந்தனுக்கு லயித்துப் போக வைக்கும் குரல். பிரதம மந்திரி செங்கோட்டையில் கொடி ஏற்றி வைத்துவிட்டுப் பேசுகிறதுபோல் நிறையச் சம்பிரதாயமாகவே பேசினார். தில்லி சாகித்ய அகாதமி என்ற அரசாங்க ஆதரவு அமைப்பில் ஏழெட்டு வருடம் இருந்தாலும் ரொட்டி, தால் சப்ஜியை மீறி அவ்வப்போது அவருக்குள் இருக்கும் நாடன் மலையாளக் கவிஞரும் தட்டுப்பட்டார். பல மலையாளிகளும் ஒரு plularistic ignorance வசப்பட்டு, தமிழுக்கும் மலையாளத்துக்கும் ஸ்நாநப் பிராப்தி கூட இல்லை என்று சொல்வது வாடிக்கை. தனியாகப் பிடித்து இழுத்துக் கேட்டால் மலையாளத்தின் ஒண்ணுவிட்ட சித்தி தமிழ் என்பார்கள். சச்சி இந்தக் குழுவில் இல்லை. அவர் சொன்ன ‘மகாத்மா காந்தியும், கவிதையும் ‘ நல்ல கவிதை.

உலகில் இரண்டு நிமிடத்துக்கு ஒரு மொழி சாகிறது என்ற புள்ளி விவரத்தை அவர் எங்கே பெற்றார் என்று தெரியவில்லை. குளிர்காலத்தில் தில்லி மத்திய சர்க்கார் ஆப்பீசுகளில் ஸ்வட்டர் தரித்து போன வாரம் குளித்த புத்துணர்ச்சியோடு வரும் சர்க்காரி பாபுக்கள் தரும் புள்ளி விவரங்களை ஒரு சிட்டிகை உப்போடும், முடிந்தால் கூடவே ரெண்டு சொட்டு எலுமிச்சம்பழச் சாறோடும், அரை ஆழாக்கு டெக்வில்லாவோடும் மாந்திவிட்டு மறந்து போவது சிலாக்கியம் என்று சச்சிதாநந்தனுக்குச் சொல்ல வேண்டும்.

ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைத்த (மொத்தம் பதினேழு ஓவியங்கள்) ஓவியர் வீர.சந்தானம், காசி. ஆனந்தன் கவிதை வரிகளை நிறையவும், ஓவிய வரிகளை அப்புறமும் பேச்சில் கொண்டு வந்தார். ஓவியர்கள் இலக்கியம் படிக்கிறார்கள், இலக்கியவாதிகள் ஓவியத்தையும் ஓவியர்களையும் புரிந்து கொள்ள முயல்வதில்லை – புத்தக அட்டைக்குப் படம் போட்டுக் கொடுப்பதோடு ஓவியக்காரர்களோடு எழுத்துக்காரர்கள் தொடர்பைத் துண்டித்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஓங்கி ஒலித்தது அவர் குரலில். நியாயமே இது. (பல எழுத்தாளர்கள் புத்தகங்களின் அட்டையை அது வெளியானதும் தான் பார்க்கிறார்கள். பதிப்பாளர்கள் காட்டினால் தானே ? ராயல்டியையே கண்ணில் காட்டாதவர்கள் அட்டையையா காட்டிவிடப் போகிறார்கள் ?)

மதிய அரங்கில் மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவின் நூலை வெளியிட்டுப் பேசிய மாலன், நடுவில் பத்து நிமிடம் அரங்கத்தில் மின்சாரம் போய் இருட்டு வெள்ளத்தில் அமிழ்ந்தாலும் கண் இமைக்காமல் ‘இலக்கியத்திலே இதெல்லாம் சகஜம்ப்பா ‘ என்கிறதுபோல் யாரையும் குறை சொல்லாமல், நேர்த்தியாகத் தொடர்ந்தது மாலனை அறிந்தவர்களுக்கு ஆச்சரியமில்லை. இருட்டிலேயே அவர் பேச்சை ரசித்துக் கேட்டுக் கொண்டு கூட்டம் இருந்தது தான் ஆச்சரியம்.

அதே அரங்கில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவலை அசோகமித்திரன் வெளியிட்டுப் பேசுவதாக இருந்தது சிலபல காரணங்களால் (இதுவன்றோ பொலிடிக்கலி கரெக்ட் ஸ்டேட்மெண்ட்) நடைபெறாமல் போக, மத்தளராயன் மேடையேற்றம்.

மத்தளராயன் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு அடுத்த அரங்க நிகழ்வில் எஸ்.ராமகிருஷ்ணனிடமிருந்து கிளம்பியது. குந்தர் கிராஸோடு இபாவை ஒப்பிட்டதை எஸ்.ராவல் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. குந்தர் கிராஸ் படித்த எஸ்.ரா, இபாவின் நாவலைத் தான் படிக்கவில்லை என்றார். ஆனால் இபாவையும் படித்து, குந்தர் கிராஸையும் படித்த மத்தளராயன், இபா நாவலை குந்தர் கிராஸ் நாவலோடு ஒப்பிடக்கூடாதுன்னா கூடாதுதான்.

தமிழில் இதுவரை மூன்று நாலு நாவல் தான் எழுதப்பட்டிருக்கிறது, அதையும் பக்கத்தில் இரண்டு பேரைக் கலந்தாலோசித்துத்தான் (ரஜினி சார், நாசர் சாரா ?) சொல்ல முடியும் என்று ஓங்கி அடித்தார் எஸ்.ரா. நீளமான ஒரு கதையை எழுதிவிட்டால் நாவலாகாது என்றார். எல்லோரும் அவரவர் வாழ்க்கை அனுபவத்தைத் தான் எழுதுகிறார்களாம். பின்னே லத்தீன் அமெரிக்கக் கிராமத்தில் வாழைச் சாகுபடி பற்றியா எழுதுவார்கள் ?

சம்பிரதாயமான கதையாடல் தான் இதுவரைக்கும் தமிழ் நாவல், தெரியுமோ ? அப்ப கோபல்ல கிராமம் என்ன மொழியில் எழுதப்பட்ட கதை ?

பேசாமல் இனித் தமிழ்ப் படைப்பாளிகள் டிரஷரியில் எட்டு ரூபாய், எண்பது காசு செலுத்தி செலான் வாங்கி, தான் எழுதப் போகும் நாவல் பற்றி ட்ரிப்ளிகேட்டில் பாரம் பூர்த்தி செய்து எஸ்.ராவுக்கு சமர்ப்பித்து மூன்றாம் காப்பியில் அவருடைய அனுமதிக் கையெழுத்தைப் பெற்று நாவல் எழுத ஆரம்பிப்பது உத்தமம். நாவல் பற்றிப் பேச ஆரம்பிப்பவர்கள் ஏழு ரூபாய் பாரம் பார்த்து வாங்கிப் பூர்த்தி செய்யவும்.

சமகாலத் தமிழ்ப் படைப்பாளிகள் நாவல் எழுதி நாசமாகப் போகட்டும். எஸ்.ராவுக்குத் தமிழ் நாவல் பிதாமகர்களின் மேல் என்ன கோபம் ? ராஜமய்யரின் தலையை வத்தலக்குண்டு வெற்றிலை போலக் கிள்ளி அந்தாண்டை கடாசிவிட்டு, மாதவையாவை கமலாம்பாள் சரித்திரத்துக்கு ஆசிரியராக அறிவித்தது ஏன் என்று தெரியவில்லை. மாதவைய்யா ஆவியாக வந்து துணையெழுத்துச் சேர்க்காமல் மதவய்ய என்று கையெழுத்துப் போட்டு மனுச்செய்தாரோ என்னமோ ?

பழைய காம்ரேட்கள் மாஸ்கோவைப் பார்க்கச் சொன்னது போல், எஸ்.ரா முழங்கியதானது – வங்காளத்தைப் பாருங்கள், எகிப்தைப் பாருங்கள், ஜப்பானைப் பாருங்கள்.. அங்கெல்லாம் நாவல் இலக்கியம் எப்படி வளர்ச்சி அடைந்திருக்கிறது தெரியுமா .. இத்யாதி. இப்படிப் பாபா ப்ளாக் ஷீப் பாடியபடி அங்கெல்லாம் போகாமல் ராமகிருஷ்ணன் ரிவர்ஸ் வாமனனாக இரண்டு அடி பின்னால் நடந்திருந்தால் மேடையில் உட்கார்ந்திருந்த நீல பத்மநாபன் மேல் முட்டிக் கொண்டிருப்பார். புள்ளிக்காரன் எழுதிய ‘பள்ளிகொண்டபுரம் ‘ கூட சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் வராது போல.

சரி, இவர் சொல்கிறாரே என்று கொல்கத்தாவுக்கு விமானமேறிப் போய் (மினி பட்ஜெட்டில் கட்டணத்தைக் குறைத்து விட்ட மத்திய அரசு இந்த விஷயத்துக்காக மட்டும் வாழ்க) அங்கே பத்து பெங்காளிகளைக் கேட்டு அவர்கள் ஆனந்த மடத்தில் தொடங்கி லிஸ்ட் கொடுக்க, மூக்கு விடைத்த பதினொண்ணாமவருக்கு மிஷ்டி தோய் ‘ வாங்கிக் கொடுத்துக் கேட்டால் அவர் மூக்கை உறிஞ்சிக் கொண்டு பங்களாதேஷைக் கைகாட்டுவார். அங்கே போனால் மடகாஸ்கரை. அதிலிருந்து ருவாண்டா. அப்புறம் பாப்புவா நியூ கினியாவை நோக்கி அடுத்த கை நீளும். அங்கே கேட்டால் ஆஸ்திரேலியா. யார் கண்டது, அவுஸ்திரேலியாவில் தமிழைக் கைகாட்டலாம். நான் சீக்கிரமே ராச்சாப்பாடு சாப்பிட்டு விடுவதால், எதிர்மனைப் பார்ப்பான் போல் காலம் கழித்துண்டு இலையைத் தெருவில் எறிய மாட்டேன். (ஞானக்கூத்தனுக்கு நன்றி.)

**************************************************************

ஓர் இணையப் பத்திரிகையில் ராசிபலன் – ‘அண்டை வீட்டாரோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் ‘.

என்னதான் இண்டெர்நெட்டும் பிராட்பேண்டும் வந்தாலும் இந்த மாதிரி அடி மூடர்கள் கையில் தான் அதெல்லாம் போய்ச் சேருவது தமிழுக்கு வழக்கமாக வரும் சோதனை.

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் தினமணியில் சாவகாசமாக ராசிபலனை மேய்ந்து கொண்டிருந்தபோது தூக்கிவாரிப் போட வைத்த குறிப்பு – ‘இந்த ராசிக்காரர்கள் வேற்று மதத்தாரிடம் ஜாக்கிரதையாகப் பழகவும் ‘.

கொதித்துப் போய், அப்போது தினமணி கதிர் பொறுப்பாசிரியராக இருந்த ஞாநிக்குத் தொலைபேச அவர் தினமணி ஆசிரியர் சம்பந்தம் சார் எண்ணைக் கொடுத்தார். பெரியவர் வருத்தம் தெரிவித்ததோடு அது போல் நிகழாமல் தடுக்க ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார்.

இப்படியான வக்கரித்த ஜோசியம் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் ஊரில் இருக்கிற எல்லாரையும் டாட்டா பிர்லாவாக நினைத்து, வைரம், கோமேதகம், வைடூரியம் என்று பதினோரு மோதிரம் வாங்கி எல்லா விரலிலும் மாட்டிக் கொள்ள ஆலோசனை தருவது மற்றொரு வகை. மாம்பலம் உஸ்மான் தெரு நகைக்கடைக் காரர்கள் காசு கொடுத்து இது மாதிரி எழுதச் சொல்கிறார்களோ என்று எனக்கு ரொம்ப நாளாகச் சந்தேகம்.

நேற்று ஒரு பத்திரிகையில் சீன ஜோசியம் என்று பிறந்த ஆண்டை வைத்துக் கணித்த ராசிபலன் பார்த்தேன். என் ராசிக்குப் பணவரவு பெருகும் வாய்ப்பு இருக்கிறதாம் (புத்தகம் சிலது அடுத்த மாதம் வருவதால், ராயல்டி கிடைக்கும் என்று தெரிகிறது). பணம் பெருக நான் செய்ய வேண்டியது என்னவென்றால், படுக்கையறையில் ஒரு மாண்டரின் வாத்தை வைத்துக்கொள்ள வேண்டுமாம்.

கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தேன் – மாண்டரின் வாத்துதான்.

அது எப்படி ஒரு வாத்தைப் படுக்கையறையில் வைத்துக் கொண்டு தூங்க முடியும் ? நேரங் கெட்ட நேரத்தில் மேலே தாண்டிக் குதித்து எச்சம் போடும். காதுப் பக்கம் க்வாக் என்று கத்தி ராத்தூக்கத்தைக் கெடுத்து க்வாக்கோ, அசலோ டாக்டரிடம் ஓட வைக்கும். எல்லாவற்றையும் விட வாத்துக்கார வீடு என்று அண்டை அயலில் அடையாளம் காட்ட வைத்துவிடும்.

ஆனாலும் பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட வேணுமானால் வாத்து வேண்டும்.

நீங்க இருக்கறபோது இன்னொரு வாத்து எதுக்கு என்கிறாள் மனைவி.

உன் ராசிக்கு என்ன போட்டிருக்குன்னு பார்க்கிறேன். சிங்கம் புலி இல்லேன்னா அதுலேயும் ஒண்ணு வாங்கிப் படுக்கை அறையிலே கட்டிக்கலாம்.

அவளுக்கும் மாண்டரின் வாத்துதான் படுக்கையறையில் வைக்க வேண்டும் என்று எழுதியிருந்தது. இப்போது ஒரு சந்தேகம். ஆளுக்கு ஒரு வாத்தா, இல்லை பொது வாத்து மதியா ?

மாமியார், மைத்துனி, பக்கத்து வீட்டுத் தாத்தா என்று அடுத்து வரிசையாக பலன் பார்க்க, எல்லா வருடத்தில் பிறந்தவர்களையும் படுக்கையறையில் வாத்தோடு நுழையச் சொல்கிறார்கள். நகைக்கடைக் காரர்களுப் போட்டியாக, வாத்துப் பண்ணைக் காரர்களும் கிளம்பியிருக்கிறார்களோ என்னவோ.

என்ன தான் சொல்லுங்கள். இருபது வருஷம் முன்னால் பத்திரிகை ஜோசியமும் ஆரோக்கியமாகத்தான் இருந்தது.

‘உங்கள் ஜன்மராசியில் சனி பிரவேசித்திருக்கிறார். சனிக்கிழமை சாயந்திரம் கோவிலுக்குப் போய் இரண்டு தேக்கரண்டி எள் எண்ணெய் ஊற்றித் தீபம் கொளுத்தி வைத்துவிட்டு, ஒன்பது தடவை நவக்கிரகத்தைச் சுற்றி வந்தால் சனியால் வரும் தீமை எல்லாம் பனி போல் நீங்கும் ‘ என்று எளிமையாக இருக்கும் அது.

பத்துப் பேர் வழிபட வரும் இடத்தில் விளக்கை ஏற்றி வைக்கச் சொல்வதும், உடற்பயிற்சி செய்ய உந்துவதுமாக அவையெல்லாம் காசு ஆகக் குறைவாகச் செலவு வைக்கிற ஜோசியம். ஏழைக்கும் மன அமைதியையும், மனோதத்துவ ரீதியாக நம்பிக்கையையும் கொடுத்த சமூக ஊழியர்களான அந்தப் பழைய பஞ்சாங்க ஜோசியர்களைக் கைகூப்பித் தொழலாம்.

********************************************************************

ஜோசியர்கள் இருக்கட்டும், இந்த நியூமராலஜிஸ்டுகள் படுத்தும்பாடு தாங்க முடியவில்லை. பழைய நாட்களில் இந்த அறிவுக் கொழுந்துகள் திரைப்படத் தலைப்புகளில் ஒற்றெழுத்தே இல்லாமல் வர ஏகமாக முயற்சி எடுத்துக் கொண்டார்கள். எட்டு எழுத்துத் தலைப்பு உள்ள படம் என்றால் புரடியூசர் வாங்க மாட்டார்கள். ஆகவே வினோதமான தமிழில் தலைப்பு இருக்கப் படம் வரும்.

எந்தக் காலத்திலோ வழக்கொழிந்து போன தும்பிக்கை யானை போன்ற பழைய ‘லை ‘, ‘னை ‘, ‘ளை ‘ எல்லாம் இன்னும் சென்னைச் சுவரில் திரைப்படச் சுவரொட்டிகளில் அழிச்சாட்டியமாக உட்கார்ந்திருக்க – எல்லாம் புதுத்

திரைப்படங்கள் – இவர்களின் சிஷ்யகேடிகள் தான் காரணம்.

இவர்களுக்கு வேலை குறைவு – ‘ஜூட் ‘, ‘சாக்லெட் ‘, ‘ரன் ‘, ‘தூள் என்று தலைப்புக் கொடுத்து விடுகிறார்கள்.

நம் ஊரில் இருந்த வரைக்கும் திருநாவுக்கரசாக இருந்தவர் தில்லிக்குப் போனதும் திருநாவுக்கரசரானது இவர்கள் சொல்லித்தானோ, அறியேன்.

‘This is to inform that I, Adhi Kesavan of ….. will hereafter be known as Adi Keshavan ‘ என்பது போல்

எக்ஸ்பிரஸ்ஸில் ஏகப்பட்ட விளம்பரம் பார்க்கிறேன்.

எங்க பள்ளியில் தமிழய்யா – போன வருடம் தான் இறந்து போனார்- வகுப்பில் இருந்த கேசவன் என்ற நண்பனை, கோபத்திலும், நல்ல மூடில் இருக்கும்போதும் ‘ம..ராண்டி ‘ என்றும், ஆதிகேசவன் என்ற இன்னொரு நண்பனை

‘பழைய ம-ராண்டி ‘ என்றும் விளிப்பார். இந்த ‘அடி கேசவன் ‘ அவர் வசவில் என்ன ஆயிருக்குமோ !. நியூமயிராலஜியின் மகிமையே மகிமை !!

********************************************************************

மத்தளராயன்

eramurukan@yahoo.com

Series Navigation