வாரபலன் – ஜூலை 15 , 2004 : பொன்குன்னம் வர்க்கி , மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது , அடி உதவுமா , சிவகுமாரின் ‘கொங்குதேர் வாழ்

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

மத்தளராயன்


சனிக்கிழமையன்று விடிகாலைக்கு வெகு முன்பே விழிப்பு வந்து விட்டது. எப்போதும் நாலு மணிக்கு எழுந்திருக்கிறது வழக்கம் என்றாலும், இது அதற்கும் ஒரு மணி நேரம் முன்னால்.

கிடக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தபோது பொன்குன்னம் வர்க்கி நினைவுக்கு வந்தார். மலையாள எழுத்தாளர். தொண்ணூறு வயதைத் தொட்ட அவர் அந்த நேரத்தில் நினைவுக்கு வர ஒரு காரணமும் கிடையாதுதான்.

வர்க்கி எழுதிய எதையாவது படிக்க வேண்டும். அதுவும் உடனே. மனம் பரபரக்க, புத்தக அலமாரியில் தேடியபோது சாகித்ய அகாதமி பதிப்பித்த ஒரு தொகுப்பு கண்ணில் பட்டது. பிரித்த பக்கத்தில் பொன்குன்னம் வர்க்கியின் ‘சப்திக்குன்ன கலப்ப ‘ (ஓசையிடும் கலப்பை) சிறுகதை. ஏழை விவசாயிக்கும் அவன் கண்ணுக்குக் கண்ணாக வளர்க்கும் உழவு மாட்டுக்கும் இடையே உள்ள பந்தத்தைப் பற்றிய அற்புதமான கதை.

அதிகாலை மூன்றரைக்கு அந்தக் கதையை ஒரு வரி விடாமல் படித்து முடிக்கும் போது, நல்ல எழுத்தாளரும் பொதுவுடமையாளருமான வர்க்கியின் பழைய புகைப்படம் மனதில் அழுத்தமாக எழுந்த வண்ணம் இருந்தது.

விடிந்ததும் வந்து விழுந்த ‘மாத்ருபூமி ‘யின் முதல் பக்கத்தில் ‘பொன்குன்னம் வர்க்கி அந்தரிச்சு ‘ என்று தலைப்புச் செய்தியும் படமும். வர்க்கியின் தொண்ணூற்று நாலாவது பிறந்த நாளுக்கு அடுத்த தினத்தில், கோட்டயத்தை அடுத்த பாம்பாடியில் அவர் வீட்டில் வைத்து நிகழ்ந்த மரணம் அது.

வர்க்கிக்கும் மத்தளராயனுக்கும் எழுத்தாளர் – வாசகர் உறவு தவிர, வேறே என்ன தொடர்பு உண்டு ? ஆனாலும் ஏன், எப்படி ?

****

மே மாதம் காலமான தோழர் நாயனாரின் அஸ்தியைப் போனவாரம் கன்யாகுமரியில் மூன்று கடலும் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் கரைத்தார்கள். அஸ்திக் கலசத்தோடு கண்ணூரிலிருந்து கன்யாகுமரி வந்த நாயனாரின் மனைவி சாரதா டாச்சரும், இரண்டு மகன்களும் கேரள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி, மகாதானபுரம் மணி ஐயர் இறுதிச் சடங்குகளை நடத்திக் கொடுக்க, அவை முடிந்தபின் கடலில் இறங்கி அஸ்தி கரைப்பு.

நாயனார் இறந்த மறுநாள் கண்ணூர் பய்யாம்பலம் மாயானத்தில் நடந்த இன்னொரு மதச் சடங்கான ‘குழி மூடல் ‘ நிகழ்வில் கலந்து கொண்ட பொதுவுடைமைக் கட்சிப் பிரமுகர்கள் கன்யாகுமரி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

கம்யூனிஸ்ட் சகாவு நாயனாருக்கு, இறந்தபிறகு இப்படி மதச் சடங்குகள் நடத்தியது பற்றிக் கேரளத்தில் லேசான சலசலப்பு.

உதாரணமாக ‘வாயன ‘ பத்திரிகையில் கேரள முற்போக்குக் கலை இலக்கியச் சங்கத்தைச் சேர்ந்த கே.சி.உமேஷ்பாபு எழுதியிருக்கும் கவிதையான ‘மூடல் ‘ இப்படிப் போகிறது.

மரிச்ச சகாவிண்டெ

குழிமூடல் சடங்கிலெத்திய நேதாக்கள்

டெலிவிஷன் க்யாமரக்களெப் போலெ

உல்சாகத்திலாயிருன்னு.

கம்யூனிசத்திண்டெ நெஞ்சத்து

இங்ஙனே வீண்டும் மண்ணு வீழுன்னதில்

ஓராள்க்கும் ஒண்ணும் தோணியில்ல.

எந்தும் எங்ஙினெயும் நிமஜ்ஜனம் செய்யான்

மறவிகளுடெ ஒரு கன்யாகுமரி

உண்டென்ன கார்யம்

ஆர்க்காணு அறியாத்தது ?

(மறைந்த தோழரின்

குழிமூடல் சடங்குக்கு வந்த தலைவர்கள்

டெலிவிஷன் கேமராக்களைப் போல்

உற்சாகமாக இருந்தார்கள்.

கம்யூனிசத்தின் நெஞ்சில்

இப்படி மீண்டும் மண் விழுந்ததில்

யார்க்கும் எதுவும் தோன்றவில்லை.

எதையும் எங்கேயும் அஸ்தி கரைக்க

மறதி என்ற ஒரு கன்யாகுமரி உண்டென்று

யார்தான் அறிய மாட்டார்கள் ?)

இதற்கிடையே பொன்குன்னம் வர்க்கியின் மரணமும் விவாதத்துக்குரியதாகி இருக்கிறது.

பிறப்பால் கிறிஸ்தவரான வர்க்கி, கோட்டயத்தில் அவருடைய வீட்டு வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். அவருடைய மகள் இருவரும் தந்தையை மாதாகோவில் பிரார்த்தனையோடு, வழக்கமான மதச் சம்பிரதாயப் பிரகாரம் புளிக்கல் செயிண்ட் மேரீஸ் சர்ச் கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். வர்க்கி எழுதிக் கையெழுத்துப் போட்டது என்று ஒரு கடிதத்தை வெளியிட்டார் அந்தச் சர்ச்சின் பாதிரியாரான பங்குத்தந்தை ஜோஸ் நிலத்துமுக்கில் . அதில் ‘நான் ஒரு நாத்திகன் என்று பத்திரிகைகளில் பல முறை செய்திகள் வந்திருந்தாலும், நான் இறந்த பிறகு என்னை செயிண்ட் மேரீஸ் சர்ச்சில் என் மூதாதையரை அடக்கம் செய்த கல்லறை வளாகத்திலேயே புதைக்க வேண்டும் ‘ என்று எழுதியிருந்தது. சாட்சிக் கையெழுத்துப் போட்டவர் வர்க்கியின் நீண்ட கால உதவியாளராக இருந்த வாவேலிக்கல் ஜோயி.

ஜோயி சொல்கிறார் – ‘வர்க்கி இறப்பதற்கு முன் வெற்றுக் கடுதாசுகளில் அவருடைய கையெழுத்தை வாங்கிக் கொண்டார்கள். நானும் கூடச் சிலதில் கையெழுத்துப் போட்டேன். அப்படி வாங்கிய ஒரு காகிதத்தில் இவர்கள் இந்த மாதிரி எழுதியிருக்கிறார்கள். ‘

வர்க்கியின் நண்பர்கள் – முக்கியமாகப் பொதுவுடைமைக் கட்சியினர் இதை ஆதாரம் காட்டி, வர்க்கி அப்படி எழுதவே இல்லை என்கிறார்கள். (ஆமா, வர்க்கி தான் வெத்துப் பேப்பரில் கையெழுத்துப் போட்டார் என்றால் அவர் குடும்பத்தோடு தொடர்பு இல்லாத ஜோய் ஏன் தானும் அப்படிக் கையொப்பமிட வேண்டும் ?)

‘மதச் சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவர் பொன்குன்னம் வர்க்கி. மத குருமார்களைப் பற்றித் தன் எழுத்தில் கடுமையான விமர்சனங்களை வைத்தவர் அவர். ‘அந்தோணி நீயும் அச்சனாயோடா ? ‘ (அந்தோணி, நீயும் பாதிரியாகி விட்டாயோடா ?) போன்ற வர்க்கியின் படைப்புகள் இதற்கு உதாரணம். அவரைக் குரிசுப் பள்ளிக் கல்லறைக்குக் கொண்டு போகக்கூடாது ‘ என்ற இவர்களின் பிடிவாதத்திற்கு வழங்கி ஒரு வழியாக வீட்டுத் தோட்டத்திலேயே வர்க்கியை நல்லடக்கம் செய்து இன்னும் அங்கே மண் உலரவில்லை.

அதற்குள், கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன – ‘நாயனாருக்கு ஒரு நீதி, வர்க்கிக்கு இன்னொரு நீதியா ? ‘

புகழ் பெற்ற அரசியல் தலைவரோ, நாடறிந்த நல்ல எழுத்தாளரோ, அவர்களுடைய சமுதாய வாழ்க்கையே ஊடகங்களில் வழக்கமாக முன்னிறுத்தப்படுகிறது. ஆனாலும் அவர்களுக்கும் பிரைவசி சார்ந்ததான மனைவி, பிள்ளை, பெண், பேரன், பேத்தி என்று ஒரு தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை உண்டு. பீடத்தில் புகைப்படத்தையோ, மார்பளவுச் சிலையையோ வைத்து வருடம் ஒருநாள் அஞ்சலி என்று மாலை போட்டு மைக்கைப் பிடித்து ஆதரவாளர்கள் பேசுவதோடு மறைந்த தலைவரின் சமூக வாழ்க்கை குறித்த அவர்களுடைய தொடர்பு முடிந்து போகிறது. ஆனால் அவருடைய குடும்பத்துக்கு தொடர்ந்து ஆறாத் துயராகவே இருந்து வரும் ஒரு இழப்பு அந்த மரணம்.

பொன்குன்னம் வர்க்கியின் மரணச் சடங்குகளை அவருடைய குடும்பத்தினர் விரும்பிய விதத்தில் நடத்த மற்றவர்கள் அனுமதிக்காதது ஒரு தரத்தில் வன்முறை என்றே படுகிறது.

நாயனாரையும், வர்க்கியையும் அவர்களுடைய மரணத்துக்கு அப்புறம் இத்தகைய தர்க்கங்களின் மூலம் நினைவு கூர வைப்பது துரதிர்ஷ்ட வசமானது.

****

வெள்ளைக்காரனோ, கருப்பனோ. ஆசியாவோ, அரேபியாவோ, ஆப்பிரிக்காவோ. கடந்து போன நூற்றாண்டுகளில் ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் ஒரே மாதிரி சிந்தித்துச் செயல்பட்டிருக்கிறார்கள். அது குழந்தைகளைப் பெற்றோர் அடித்து வளர்ப்பது பற்றி.

‘அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது ‘ என்றும் ‘Spare the rod and spoil the child ‘ என்றும் இன்னும் எல்லா மொழியிலும் பழமொழி சொல்லி முந்தைய தலைமுறைக்காரர்கள் அடுத்த தலைமுறையை முதுகிலும் பிருஷ்ட பாகத்திலும் அடித்தடித்துத்தான் வளர்த்திருக்கிறார்கள் பெரும்பாலும்.

காலம் மாறிக் கொண்டிருக்கிறது. பள்ளிகளில் கார்ப்பொரல் பனிஷ்மெண்ட் என்று பிள்ளைகளை ஆசிரியர்கள் அடிப்பது கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும் சென்னையில் ஒரு பள்ளி மாணவன் போன ஆண்டு பள்ளியில் இப்படியான கொடுமைக்கு ஆளாகித் தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்புக்கும் பரிதாபத்துக்கும் உரிய செய்தியானது. இவ்விதமான நிகழ்வுகள் திரும்பவும் நடக்காமல் இருக்க எல்லாத் தரப்பிலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளையும் பெற்றோரையும் தீவிரமாக யோசிக்கவும் செயல்படவும் வைத்தது இது.

ஆனாலும், பெற்றோர்கள் தம் குழந்தைகளை அடித்து வளர்ப்பதைப் பற்றி யாரும் இங்கே பெரியதாக யோசிக்கவில்லை. ‘அவங்க பிள்ளை. அடிப்பாங்க. கொஞ்சுவாங்க. நமக்கு என்ன போச்சு ‘ என்று நம் மக்கள் இருக்க, இங்கிலாந்தில் இதையும் வன்முறையாகக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் சட்டம் இயற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

காமன்ஸ் என்ற மக்களவை உறுப்பினர்கள் உற்சாகம காட்டி உருவாக்கிய இந்தச் சட்டப் பிரதி பிரிட்டாஷ் நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் அவையான லார்ட்ஸுக்குப் போன வாரம் போய்ச் சேர்ந்தது. பழமையில் ஊறிய பிரபுக்கள் இன்னும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இருப்பதால் சட்டத்தை அப்படியே ஏற்க முடியாது என்று மேசையில் அடித்துச் சொல்லி விட்டார்கள். அவர்கள் சட்டத்தைத் திருத்தியமைக்கக் கொடுத்திருக்கும் ஆலோசனைகள் ரொம்பவே சுவாரசியமானவை.

பிள்ளை குட்டிகளை அடிக்காதே, அடிச்சா, ஜெயில்லே போடுவேன்னு துரைமாரைத் தண்டிக்கச் சட்டமாக்கிப் போடுவது சரியே இல்லை மை லார்ட். மாரிலும் தோளிலும் தூக்கி வளர்த்த பிள்ளையை நாலு தட்டு தட்டக் கூடாதுன்னா வேலைக்காகுமா ? ஏற்கனவே பசங்க தறுதலையாப் போய்ட்டு இருக்குதுங்க. அப்பப்ப கொஞ்சம் போல அடிச்சுப் பிடிச்சுக் கண்டித்தால்தான் சரிப்படும்.

பிரபுக்கள் சொகுசான இருக்கைகளில் சாய்ந்த வண்ணம் ஸ்டைலான ஆங்கிலத்தில் ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் ‘ என்று இங்ஙனம் எடுத்துச் சொல்கிறார்கள்.

அப்பப்போ அடிக்கறதுன்னா, சும்மா வலிக்காம லேசா முதுகிலே தட்டறதா ?

ஊஹும். அப்படித் தட்டினா, அப்பச்சி செல்லமாத் தட்டறார்னு பையன் இன்னும் தெம்பாக் குறும்பு செய்ய ஆரம்பிச்சுடுவான்.

பின்னே எப்படி அடிக்கணும் ?

வலிக்கணும் ஓய். வலிக்கத்தானே அடிக்கறது.

ரொம்ப வலிச்சாக் காயமாயிடுமே ? பிள்ளையைக் காயப்படுத்தினா கிரிமினல் குற்றம்னு பிடிச்சுப் போயிட மாட்டாங்களா ?

விவரம் தெரியாமப் பேசாதீங்க. வெள்ளைக்காரக் குழந்தையை முதுகிலேயோ, நாலஞ்சு இஞ்சு கீழேயோ நாலு சாத்து சாத்தினா, இல்லே பிரம்பாலே காலிலே ஒரு விளாசு விளாசினா தோல் சிவந்துதான் போகும். அதுக்குப் பயந்து அடிக்காம இருக்கலாமா ? கவனமா அடியுங்க. அடிச்சு அரை மணி நேரம், ஒரு மணி நேரம் பிள்ளையை வெளியே விடாதீங்க. கால்லே அடிச்சா, அரை நிக்கர் போட்டுட்டு அலைய விடாதீங்க. எவன் கண்ணுலேயாவது பட்டுத் தொலைச்சா விஷயம் விவகாரமாயிடும்.

அரைமணி, ஒரு மணியிலே அடிச்ச இடத்திலே சிவப்பு மாறாட்டா ?

அப்ப ஒண்ணு செய்யுங்க. தலையிலே குட்டுங்க. காதுக்குப் பின்னாலே அடியுங்க. உள்ளங்காலைக் காட்டச் சொல்லி அடியுங்க. விஷயம் வெளியே தெரியவே தெரியாது. அப்புறம் இன்னொரு விஷயம். ஒரேயடியா அடிக்காதீங்க. அப்பப்ப அடியுங்க. ஏதாவது சாக்கு வச்சுக்கணும் அதுக்கு. அம்புட்டுத்தான்.

இதுவரைக்கும் அடிக்காத பிள்ளையை இப்ப எப்படி அடிக்கறது ? அதுவும் அவன் எதுவும் தப்பு செய்யாதபோது ?

இது ஒரு கேள்வியா என்ன ? இதுக்கு முன்னாலே ஏதாவது தப்புப் பண்ணியிருப்பான் இல்லியா ? நல்லா ஞாபகப்படுத்திப் பாருங்க. அது போன வருஷமோ, மூணு வருஷம் முன்னாடி பிள்ளை இடுப்பிலே நேப்கின்னோட தவழ்ந்தபோதோ இருக்கலாம். அட அப்படியே இல்லேன்னாலும், இனிமேல் எப்பவாவது நடக்கலாம். அதுக்காக அட்வான்சா இப்போ அடிக்கலாம். தப்பே இல்லை.

இப்படி பிடிவாதமாகச் சொல்கிற இங்கிலீஷ் பிரபுக்கள் முல்லா நசிருத்தீன் கதையை நிச்சயம் படித்திருப்பார்கள் –

முல்லா பையனிடம் ஒரு கண்ணாடிக் கிண்ணத்தைக் கொடுத்து பக்கத்து அறையில் வைக்கச் சொன்னார். பத்திரமா எடுத்துப் போ. கீழே போட்டு உடைச்சுடாதே. அப்புறம் தலையிலே நாலு குட்டு வைப்பேன் பார்த்துக்கோ. கவனம்.

பையன் நாலடி நடப்பதற்குள் முல்லா அவனைத் திரும்பக் கூப்பிட்டார். பையன் தலையில் நங்கு நங்கு என்று நாலு குட்டு குட்டி, சரி போ என்றார்.

எப்படியும் கிண்ணத்தை உடைக்கத்தான் போறான். இதுக்காக மெனக்கெட்டு இவனைத் தேடிப் போய் அப்புறம் குட்டறதை விட இப்பவே முடிச்சுடலாம்னுதான்.

****

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் ‘ என்பது தவிர திருப்பதி திருவேங்கடமுடையான் கோவிலுக்கும் யூத மத குருக்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் ?

‘நாளை திருப்பதிக் குடை யானைக்கவுனி தாண்டுகிறது ‘ என்று நாலாம் பக்கத்தில் ஓரமாகச் செய்தி பிரசுரிக்கும் தமிழ்ப் பத்திரிகைகள் திருப்பதியிலிருந்து கண்டங்களும் கடலும் கடந்து தாண்டிப் போய்ப் பணம் குவிக்கும் ஒரு வஸ்து பற்றிய பிரச்சனை குறித்து மூச்சுக் கூட விடாமல், முடியே போச்சு என்று இருந்து விட்டார்கள். நிஜமாகவே இது முடி போகிற விஷயம் தான்.

வருடத்துக்கு இரண்டு கோடி பக்தர்கள் தரிசனத்துக்காக வரும் கோவில் இது. உண்டியலில் இவர்கள் போடும் இந்திய ரூபாய், டாலர், பவுண்ட், ஈரோ கரன்சி, நாணய, நகைக் காணிக்கை ஒரு பக்கம் மலைபோலக் குவிகிறது. இது தவிர, சீவிச் சிங்காரித்து ஷாம்பு போட்டுப் போற்றிப் பாதுகாத்துத் தலையில் அலங்காரமாக வீற்றிருந்த முடியை மழித்துக் காணிக்கையாக்கி விட்டுச் சந்தனத்தைக் குழைத்துப் பூசிக்கொண்டுதான் பக்தர்களில் பலர் கோவில் தரிசன க்யூவில் காத்திருக்கிறார்கள்.

இப்படி முடி காணிக்கைக்காக வரும் பக்தர்களுக்குச் சேவை செய்யவே ஷிஃப்ட் வைத்துக் கொண்டு செயல்பட அறுநூறு நாவிதர்களை திருப்பதி தேவஸ்தானம் நியமித்திருக்கிறது. உமா பாரதி, வெங்கையா நாயுடு போன்ற அரசியல் பிரமுகர்கள் தொடங்கி அவர்களுக்கு ஓட்டுப் போட்ட, போடாத பொதுஜனம் வரை முன்னால் இருத்தித் தலையைத் தாழ்த்த வைத்து முடிவேயில்லாமல் இவர்கள் தரையில் வீழ்த்தும் முடியின் அளவு மாதாமாதம் பதினெட்டாயிரம் கிலோகிராம் தேறும்.

இந்த முடியை வைத்து எவரெஸ்ட் மலையையே கட்டி இழுத்து நாலு மீட்டர் அந்தாண்டை நகர்த்தி வைக்க யந்திரம் உற்பத்தி செய்து விடலாம். சும்மாவா, முடியை எல்லாம் சுத்தப்படுத்தி, அதைக் கொண்டு விக் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிற வகையில் மட்டும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு மாதம் இரண்டரைக் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

ஏற்றுமதியை ஊக்குவித்து அந்நியச் செலாவணியைப் பெருக்க உதவும் முடி காணிக்கைப் பக்தர் பெருங் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் த்ிருப்பதிக் கோவில் நிர்வாகம் தாராளமாக இரண்டு லட்டு இலவசமாகவே வழங்கலாம்.

குறைந்த முதலீட்டில் வருடம் முப்பது கோடி ரூபாய் திருப்பதிக்குக் கிடைக்கும் இப்படியான தறுவாயில், இரண்டு மாதம் முன்னால் யூத மதகுருக்களான ராபிகள் ஒரு மதக் கட்டளை விதித்தார்கள். அதாவது, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மனித முடியிலால் செய்யப்பட்ட எந்த விக்கையும் யூதர்கள் வாங்கி உபயோகிக்கக் கூடாது. ஏனென்றால் இந்த முடியெல்லாம் விக்கிரக வழிபாடில் பயன்படுத்தப்படுகிறது. (முடியை எடுத்து விட்டுத்தான் இங்கேயெல்லாம் வழிபாடு என்று இவர்களுக்கு யாரும் சொல்லவில்லை போலிருக்கிறது.)

இந்திய முடி ஏற்றுமதியாளர்களை மொட்டையடித்து வருமானத்தை வற்றிப்போக வைக்க யூத குருமார்கள் விதித்த கட்டளையால் ஏற்றுமதி எவ்வளவு குறையும் என்று அரசும் கோவில் நிர்வாகமும் கவலையோடு பார்த்துக்கொண்டிருக்க, போன வாரம் இவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் பத்திரிகைச் செய்தி.

ராபி சொல் யூதர்களின் தலையேறவில்லை. இந்திய விக் தலையை விட்டு இறங்கவும் இல்லை. தொலைக் காட்சியில் தேங்காய் எண்ணெய் விளம்பரங்களில் காட்டப்படுகிறதான, உள்ளங்கையில் ஏந்தி உச்சந்தலையில் பரபரவென்று தேய்க்கக் கொழிந்த முடியெல்லாம் பழங்கதையாகக் கூந்தல் செழித்து வளர்வது போல் முடி ஏற்றுமதி வளம் கொழித்து, சிக்கும் சிடுக்கும் இல்லாமல் சீராகத் தொடர்கிறதாம்.

ஜெய் பாலாஜி.

****

புக்லேண்டுக்குப் புத்தகம் வாங்கக் கிளம்பிக் கொண்டிருந்தபோது, கும்பிடப் போன தெய்வம் ஸ்டாலின் மீசையும் தோளில் துணி சஞ்சியுமாகக் குறுக்கே வந்ததுபோல், தோழர் தினமணி சிவகுமார் வந்து சேர்ந்தார். மனுஷர் சுவாரசியமானவர். அவர் எழுத்தும் அப்படியே. வருடாவருடம் சிவகுமார் தயாரித்து வெளியிடும் தினமணி இசைமலர் பற்றி ஏற்கனவே வாரபலனில் எழுதியது நினைவு இருக்கலாம்.

பழந்தமிழ் இலக்கியம், தற்கால இலக்கியம், கர்னாடக சங்கீதம், பரதம், பத்திரிகையியல், வரலாறு, அரசியல், சமூகவியல் என்று பலதரப்பட்ட ரசனை. ஆழ்ந்த வாசிப்பு. மறைந்த தோழர் பாலன் தொடங்கி பல அரசியல், இலக்கிய, இசையுலகப் பிரமுகர்களுடன் நெருங்கிப் பழகிய அனுபவம். சிவகுமார் எழுத்தைப் போல் அவரைப் பேசவிட்டுக் கேட்டுக் கொண்டிருப்பதும் சுகானுபவம்தான்.

மணிக் கணக்காக எல்லாம் பேசியானதும், கிளம்புகிற சமயத்தில் தோள் மூட்டையைத் திறந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார்.

‘படிச்சுட்டுச் சொல்லுமய்யா ‘.

பழந்தமிழ் இலக்கியத்தை அதன் வீச்சும் ஆழமும் புலப்பட அறிமுகம் செய்யும் விதமாக அவர் எழுதி அண்மையில் வெளியான ‘கொங்குதேர் வாழ்க்கை ‘ அது. தமிழினி வசந்தகுமாரின் தயாரிப்பாக வெளிவந்திருக்கும் நூல். நண்பர் ஜெயமோகன் அதைப் பற்றித் திண்ணையில் எழுதியிருக்கிறார் என்பது நினைவு வர புத்தகத்தை வாங்கினேன். நீள் சதுர வடிவில் பச்சை நிறக் கெட்டி அட்டையும் நல்ல தாளுமாக அந்தக்கால சோவியத் வெளியீடுகள் போல் கையில் பிடித்துப் புரட்டவே சந்தோஷமாக இருந்தது.

ஜெ.மோ ஆரம்பத்திலிருந்து சொல்வதால், நான் கடைசிப் பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்து முதல் பக்கத்தை நோக்கி நகர்ந்தேன்.

கவிதைகளின் தொகுப்பு என்றாலும், பழங்கால உரையாசிரியர்களின் உரைநடையிலும் வெகுவாக ஈடுபட்டு அந்த வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் சிவகுமார்.

திவ்யப் பிரபந்தத்தில் பெரிய திருமொழி.

பள்ளச் செறுவில் கயல் உகளப் பழனக் கழனி அதனுள்ளே

புள்ளு பிள்ளைக்கு இரைதேடும் புள்ளம் பூதங்குடி ..

கூரத்தாழ்வாரின் திருமகனாராகிய பராசர பட்டரிடம் புலவன் ஒருவன் கேட்கிறான் – ‘இப்பாசுரத்தில் பள்ளச் செறுவில் கயல் உகள என்று சொன்னபோதே அந்த வயலில் மீன்கள் அளவற்றுக் கிடந்தமை புலப்படுகிறது. இப்படி இருக்க, கடைசி வரியில் புள்ளு பிள்ளைக்கு இரைதேடும் என்று எப்படிச் சொல்லலாம் ? மீன் குறைவாகக் கிடைத்தால் அன்றோ இரையைத் தேட வேண்டி இருக்கும் ?

பட்டரின் பதில் – பிள்ளாய், நீ கற்றவனாயினும் சொற்போக்கு அறிந்தில்லை போலும். ‘பிள்ளைக்கு இரைதேடும் ‘ என்றுள்ளது காண். அங்குள்ள மண் மிதிமண் ஆகையால் மீன்கள் தூணும் துலாமுமாய்த் தடித்திருக்கும். அவை பறவைக் குஞ்சுகளின் வாய்க்குக் கொள்ளாது. ஆகையால் அவற்றின் வாய்க்குப் பிடிக்கும்படியாக உரிய சிறிய மீன்களைத் தேடிப் பிடிக்க வேண்டியிருக்குமன்றோ ?

தூணும் துலாமுமாய் அர்த்த புஷ்டியோடு கனத்துத் திளங்கும் இந்த உரைவளத்தைக் கடந்து பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தனிப்பாடல்களுக்குப் போனால், சிவகுமார் யானை வற்றலைக் காட்டுகிறார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அந்தக்கால ஊழியர்களின் ஊழலைக் கண்டு கொதித்து ஒரு புலவர் பாடிய அபூர்வமான பாடல் –

கொட்டை கட்டி மானேஜர் செங்கடுவாய் வந்த பின்பு

சுத்த வட்டையானதென்ன சொல்வாய் குருபரனே!

வேலவர்க்கு முன்னிற்கும் வீரவாகு தேவருக்கு

சாயரட்சை புட்டு தவிடோ குருபரனே! – மாநிலத்தில்

காய்கனி கிழங்கு வற்றல் சொல்லக் கேட்டதுண்டு – செந்தூரில்

ரெண்டு ஆனை வத்தலானதென்ன ஐயா குருபரனே.

சாமிக்கு புட்டுக்குப் பதிலாக தவிட்டை நைவேத்தியம் செய்கிற துன்மார்க்கர்கள் கோவில் யானைகளையும் பட்டினி போட்டு வத்தலும் தொத்தலும் ஆக்கி விட்டார்களாம்.

வீடோ என் தேகம் விழும் இடம்தான் வீதிகளோ

காடோ செடியோ என் கண்ணே றகுமானே

என்று தமிழ் சூஃபிக் கவிஞர் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடிய பாடல்களை நூலில் கொடுத்திருக்கும் சிவகுமார், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த இஸ்லாமிய ஞானியாருக்கு சீடர்களாக இருந்தவர்கள் என்று இட்டிருக்கும் பட்டியல் – மகாவித்துவான் சரவணப் பெருமாளய்யர், சிவயோகி ஐயாசாமி முதலியார், வெங்கட்ராயப் பிள்ளை, சபாபதி முதலியார், பாவா லெப்பை.

அதே பதினெட்டாம் நூற்றாண்டுக் கவிஞரான பலபட்டடை சொக்கநாதப் பிள்ளையின் அழகர் கிள்ளைவிடு தூது பற்றிச் சொல்லும்போது, ‘ பலபட்டடை என்பது அன்று அரசாங்கத்தில் இருந்த ஒருவகை கணக்கர் ‘ என்று குறிப்பிடுகிறார் சிவகுமார். சுஜாதா எழுத்தில் பலபட்டடை கொஞ்சம் வித்தியாசமான பிரயோகம் ஆகியிருக்கிறதென்பது நினைவு வருகிறது.

சிவகங்கை சுப்பிரமணியப் புலவர் பாடல் என்று கண்டதும் சொந்த ஊர் அபிமானத்துடன் மத்தளராயன் ஆழ்ந்து படிக்க, புலவர் முப்பத்திரெண்டு வரியில் நுணுக்கமாக, ஆழமாக, விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கும் ஒரே – ரெண்டு விஷயம் – முலைகள். இந்த விஷயமாகப் படிக்கக் கிடைத்த கவிதைகளில் இது போல் வேறெங்கும் கண்டதில்லை என்று துணிந்து சொல்லலாம்.

‘புனைதரு ரவிக்கையை இறுக்கிக் கிழித்துப் புறப்படும் ‘ அந்த ஸ்தனபாரத்தைப் பார்க்கச் சொல்லி, சிவகங்கை ஜமீந்தார் முத்துவடுகநாதரின் பிரதானியான சுப்பிரமணிய தேசிகரை வேண்டி விரும்பி அழைக்கிறார் புலவர்.

முத்துவடுக நாதரும், வேலு நாச்சியாரும், மருது சோதரர்களும் சிவகங்கையை ஆண்ட காலம் வெள்ளையரின் கிழக்கிந்தியக் கம்பெனிக்கெதிரான புரட்சி செம்மண் பூமியில் வெடித்த பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. முத்துவடுகநாதரின் அமைச்சருக்குக் கும்பினியோடு போராடவே நேரம் சரியாக இருந்திருக்குமாதலால் கொங்கைகளைப் பற்றி அவ்வளவாகக் கரிசனப்பட்டிருப்பார் என்று தோன்றவில்லை. ஆனாலும் என்ன, அந்தக் காலத் தமிழ்ப் புலவர்கள் நிகழ்காலம் கிஞ்சித்தும் பாதிக்காத உலகில் தான் மூச்சு விட்டு உலவிக் கொாண்டிருந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

கவிதையின் எரோட்டிசிசத்துக்கும் இந்தக் காலப் பிரமாண அபத்தத்துக்கும் சேர்த்துக் கோடி காட்டவே சிவகுமார், புனைதரு ரவிக்கையைப் புத்தகத்தில் வைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

சங்க இலக்கியம் ஒரு கடல் போல இருந்ததால் எதைச் சேர்ப்பது, எதை விடுவது என்ற யோசனையில் அந்தப் பரப்பையே நிறையக் குறுக்க வேண்டிப் போனது என்றார் அவர். இரண்டாயிரம் வருட இலக்கியத்தை ஒரு நூலில் தொட்டுக் காட்டும்போது ஏற்படும் சவால் தான் இது. வெற்றிகரமாக அவர் இதைக் கையாண்டிருக்கிறார் என்பதற்கு சாட்சி, சங்க இலக்கியம் தவிர்த்து, தொல்காப்பியம் – பொருளதிகாரத்தில் மேற்கோள் பாடலாக வரும் ‘ ஏனல் காவல் இவளும் அல்லள் ‘ எனத் துவங்கும் அழகான கவிதையை நூலில் கொண்டு வந்தது. குறுந்தொகையிலிருந்து விடுபட்ட பாடலாக இருக்கலாம் என்கிற சிவகுமாரின் வாசிப்புப் பரப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

கடைசிப் பக்கத்திலிருந்து தொடங்கி ரசித்துத் தேன் குடித்த நரியாக, முதல் பக்கத்துக்கு வர, ஐங்குறுநூற்றுப் பாடல். தோழிக்குத் தலைவி சொல்வது.

அன்னாய் வாழி வேண்டன்னை நம் படப்பை

தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு

உவலைக் கூவற் கீழ

மானுண்டெஞ்சிய கலிழி நீரே

தோழி கேள். அவரது நாட்டின் பள்ளத்தில் அடியில் இலைகள் விழுந்து மட்கிக் கிடக்க, மான்கள் குடித்துக் கலங்கி மிஞ்சிய நீர், நம் தோட்டத்தில் கிட்டும் தேன் கலந்த பாலை விட எனக்கு ருசிக்கிறது.

சிவகுமார் வருவதற்குப் பத்து நிமிடம் முன்னால்தான் இந்தக் கவிதையைப் படித்திருந்தேன். ‘புலிநகக் கொன்றை ‘ பி.ஏ.கிருஷ்ணன் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்தப் பாடல் இருந்தது. ஜான் வெர்மீர் என்ற பதினேழாம் நூற்றாண்டு டச்சு ஓவியனின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டு ட்ரேசி செவாலியே எழுதிய ‘முத்துக் காதணி அணிந்த பெண் ‘ என்ற நாவல் குறித்த பி.ஏ.கேயின் அறிமுகக் கட்டுரை அது. ஒரு கதாபாத்திரத்தின் மனநிலை காலப்போக்கில் மாறுவதைக் குறிப்பிட்டு, இந்தக் குறுந்தொகைப் பாடலை ஒப்பிட்டுக் காட்டிக் கட்டுரையை முடித்திருந்தார் பி.ஏ.கே.

இப்பொதெல்லாம் தற்செயலான நிகழ்வுகள் பழகி விட்டன.

(கொங்குதேர் வாழ்க்கை – எஸ்.சிவகுமார் – யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை – விலை ரூ 250)

மத்தளராயன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்