வாய்ப்பளிக்கும் வஹ்ஹாபிக்கு வந்தனம்

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

மலர் மன்னன்


கரன் தாப்பர் பற்றிய எனது கட்டுரைக்கு அன்பிற்குரிய வாசகர் வஹ்ஹாபி அவர்கள் எழுதிய எதிர்வினையைப் படித்து மகிழ்ச்சியடைந்தேன். திண்ணையில் வெளியான எனது கட்டுரைகள் எல்லாவற்றையுமே அவர் ஊன்றிப் படித்திருப்பது தெரிய வருகையில் மகிழ்ச்சி ஏற்படுவது இயல்பே அல்லவா?

நரேந்திர மோடி அவர்கள் மிகப் பெரும்பான்மை ஆரவுடன் திரும்பவும் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. கரன் தாப்பர் என்னதான் அதிகப் பிரசங்கியாக இருந்தாலும் மோடி உடனடியாகப் பதவியிலிருந்து விலக்கப்பட்டாக வேண்டும் என்று சொல்கிற அளவுக்கு விவரம் தெரியாதவர் அல்ல. மேலும் இன்றைய சூழ்நிலையில் ஒரு மாநில அரசின் மீது மத்திய அரசுக்கு எவ்வளவுதான் காழ்ப்பு இருப்பினும் அதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று திடீரென அகற்ற இயலாது என்பதையும் அவர் அறியாதவராக இருப்பதற்கில்லை. ஆகவே மோடி பதவியிலிருந்து திடீரென அகற்றப்பட வேண்டும் என்பதாகக் கரன் தாப்பர் குறிப்பிட்டதற்குப் பொருள் கொள்வது சாத்தியமில்லை. மேலும் அன்பர் வஹ்ஹாபியே எடுத்துத் தந்துள்ள கரன் தாப்பரின் வரிகளை அப்படியே கீழே தருகிறேன்:

“Only the sudden removal of Narendra Modi can stop this. For he is the agent forcing this change. And whilst he’s with us, he will do just that. I have no doubt Indian politics after Sunday the 23rd is another country. We have to live with new challenges. Some of us have to accept new leaders.”

இதன் தமிழ் வடிவம்:

” நரேந்திர மோடி திடீரென அகற்றப் படுவது மட்டுமே இதனை நிறுத்த முடியும். ஏனெனில் இந்த மாற்றத்தை நிர்பந்திக்கிற முகவர் அவர்தான் (அதாவது ஹிந்துத்துவத்திற்கு எதிரான (போலி மதச் சார்பற்றோர்) அனைவரும் சோனியா தலைமையின் கீழ் ஒன்று திரள வேண்டும் என்கிற மாற்றம்). அவர் (மோடி) நம்மிடையே இருக்கும் பரியந்தம் இப்படித்தான் செய்து கொண்டிருப்பார். ஞாயிறு (டிசம்பர்) 23 க்குப் பிறகு ஹிந்துஸ்தானத்து அரசியல் வேறு தேசத்திற்குரியதாக விட்டது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. புதிய சவால்களுடன் நாம் வாழ்ந்தாக வேண்டும். நம்மில் சிலர் புதிய தலைவர்களை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.”

வேறு தேசம் என்று சொல்வதன் மூலம் கரன் தெரிவிப்பது என்னவென்றால் மோடியின் வெற்றிக்குப் பிறகு ஹிந்துஸ்தானம் ஹிந்துஸ்தானமாகவே ஆகிவிட்டது என்பதுதான்!

எனக்குத் தெரிந்த ஆங்கில மொழிப் பயிற்சிக்கு இணங்கத் தமிழாக்கம் செய்துள்ளேன். மொழியாக்கம் செய்கையில் தொனிக்கும் பொருளுக்கு ஏற்பத்தான் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு மோடி பதவியிலிருந்து திடீரென அகற்றப் பட வேண்டும் என்றுதான் கரன் விருப்பம் தெரிவிக்கிறாரா அல்லது வேறுவிதமாகவா என்பதை அறிவார்ந்த திண்ணை வாசகர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

மோடி இல்லாத ஆண்டு அமைவதாக என வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன வினோத் மேத்தாவின் கருத்திற்கும் அன்பர் வஹ்ஹாபி விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.

கரன் தாப்பர் சார்பில் வஹ்ஹாபி வாதுக்கு வந்திருப்பதன் மூலம் கரன் தாப்பரின் வாய்த்துடுக்கும் ஊடக நெறிமுறைக்கு முரணான போக்கும் புதிதல்ல என்பதை விளக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளது. ஒரு தனிக் கட்டுரையாகவேதான் அதைச் செய்ய வேண்டும். வாய்ப்பளித்த வஹ்ஹாபிக்கு நன்றி.

முகமதியருக்கு அவர்களின் இறைத் தூதரைக் காட்டிலும் மேம்பட்டவர் எவருமில்லை. இறை மறுப்பைக் கூட அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் தம் இறைத் தூதரைப் பற்றி ஒரு சொல் விமர்சனமாக வந்தாலும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். எனவே அவர் பெயரால் அவர்களை அழைப்பது அவர்களுக்கு நியாயப்படி மகிழ்ச்சியையும் பெருமையையும்தான் அளிக்க வேண்டும். நான் பழகியவரை வட மாநிலங்களில் முகமதியர் என்றோ முகமதியம் என்றோ குறிப்பிடுவதை எவரும் ஆட்சேபிப்பதில்லை.

ஹிந்தி என இக்பால் குறிப்பிட்டது ஹிந்துஸ்தானத்தவர் நாம் என்பதாக என்கிற விஷயத்தைத்தான் நினைவூட்டினேன். அன்பர் வஹ்ஹாபி சவூதிக்குப் போனால் அவரை ஹிந்தி என்றுதான் குறிப்பிடுவார்கள். இந்தியன் என்றல்ல!


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்