வானில் திரியும் வால் முளைத்த விண்மீன்கள்

This entry is part [part not set] of 22 in the series 20020707_Issue

சி. ஜெயபாரதன், கனடா


புதிரான வால்மீனைக் கண்டு பூர்வீக மக்களின் அச்சம்!

அண்ட வெளியில் ஒளிமயமாய்ச் சுடர்விட்டுத் தலையும் வாலும் கொண்டு கண்கொள்ளாக் காட்சியாய் எப்போதாவது தென்படும் வால்மீன்கள் [Comets], மக்களிடையே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெரும் அச்சத்தை உண்டாக்கி வந்திருக்கின்றன! அவற்றின் எதிர்பாராத திடார் விஜயம், நூதனத் தோற்றம், மாறுபடும் வடிவம், வியப்பான நகர்ச்சி, யாவும் நாட்டு மன்னரின் மரணம், யுத்தம், பஞ்சம், பூகம்பம் போன்ற கோரச் சம்பவங்களை முன்னறிவிக்கக் கடவுள் அனுப்பும் தூதாக, மாந்தர் அஞ்சிடக் காரண மாயின! சில சமயம் மக்கள் அஞ்சியது போல், ஆபத்துகள் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தும் உள்ளன! பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஒரு வால்மீன் பூமியில் விழுந்து பெரும் பூகம்பம் உண்டாகி அப்போது வாழ்ந்த டைனஸார்கள் [Dinosaurs] அனைத்தும் மடிந்து புதைபட்டுப் போயின! வால்மீன் வருகை அபசகுனம் என்று சில இனத்தவர் எண்ணி வந்தார்கள்!

3000 ஆண்டுகளுக்கு முன்பே சைனா வானியல் ஞானிகள், அக்கால வால்மீன்களின் வருகையைப் படம் வரைந்து குறிப்பெழுதி வைத்துள்ளார்கள்! ஆசிய வானியல் வல்லுநர்கள் ஐரோப்பிய ஞானிகளை விடத் துள்ளியமாக வால்மீன்களின் வருகையைக் கண்டு எழுதி வைத்தது, இப்போது ஒப்பிட்டுப் பார்க்க ஏதுவாக இருக்கிறது. பாபிலோனியன், சைனா, ஜப்பான், கொரியா சரித்திர ஏடுகளில், ஹாலியின் வால்மீனின் [Halley ‘s Comet] பண்டை நகர்ச்சிகள் பதிவாகி இருப்பதால், காலங்களை ஒத்து நோக்க விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருக்கிறது.

ஆண்டுக்குச் சராசரி 4 வால்மீன்கள் விஜயம் செய்து, பரிதியைச் சுற்றிச் செல்கின்றன! கணக்கிட்டுப் பார்த்ததில் கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும் சுமார் 120,000 வால்மீன்கள் அண்ட வெளியில் சுற்றித் திரிந்து, பரிதியை வலம் வருகின்றன என்று யூகிப்பப் படுகிறது!

வால்மீனைக் காணக் கண் கோடி வேண்டும்!

வால்மீனைச் சிறப்புக் காட்சி யாக்குவது, ஒளிமிக்க தலை! பல்லாயிரம் மைல் நீண்ட வெண்ணிற வால்! கிரேக்கர் அதை வெண்ணிறக் கூந்தல் என்று குறிப்பிடுகிறார்கள்! காமெட் [Comet] என்றால் கிரேக்க மொழியில் ‘நீண்ட கூந்தல் ‘ என்று அர்த்தம். வால்மீனின் வால் எப்போதும் பரிதிக்கு எதிராகவே நீளும் என்று 1531 இல் முதலில் கண்டு குறிப்பிட்டவர், பீட்டர் ஏப்பியன் [Peter Apian]. 1577 ஆம் ஆண்டில், டென்மார்க் வானியல் மேதை டைகோ பிராஹே [Tycho Brahe], வால்மீன்கள் விண்வெளியில் அலைந்து சூரியனைச் சுற்றிப் போகும் விண்வெளி அண்டங்கள் [Celestial Bodies] என்று நிரூபித்துக் காட்டினார். பிரிட்டிஷ் விஞ்ஞானக் கணித மேதை, ஐஸக் நியூட்டன் வால்மீன்களின் நகர்ச்சி முறைகள், மற்ற சூரியக் கோள்கள் சுழல்வீதியில் பின்பற்றும் அதே நியதி முறைகளைப் போன்றவைதான் என்று மெய்ப்படுத்திக் காட்டினார். ஈர்ப்பு விசைகளால் ஏறக் குறைய வட்ட வீதியில் பரிதியைச் சுற்றும் துணைக் கோள்களின் விதி முறையில், வால்மீன்கள் நீண்ட நீள் வட்டம் [Elongated Ellipse], பிறைவளைவு [Parabola], விரிவளைவு [Hyperbola] வீதிகளில் நகர்ந்து போவதைக் கணித்துக் காட்டினார், நியூட்டன்.

பெரும்பான்மையான வால்மீன்கள் பிற அண்டக் கோள்களைப் போல் தாமும் சுழன்று, மெதுவாய் நீள்வட்டச் சுழல்வீதியில் சூரியனைச் சுற்றி வருகின்றன. பரிதியை நெருங்கும் போது, வால்மீன் சூரிய ஒளிபட்டு பட்டொளி வீசிப் பறக்கிறது! அதன் வால் மிகவும் சுடர்விட்டு, பரிதிக்கு எதிரே தள்ளப் பட்டு, 200 மில்லியன் மைல் தூரம் கூட நீண்டு போகலாம்! கடவுளின் அற்புதப் படைப்பான வால்மீனைக் காணக் கண் கோடி வேண்டும்!

வால்மீனின் தலை வால் அமைப்பு, பயணப் பாதை, சுற்றும் காலம்

வால்மீன் என்பது வான வீதியில் சுற்றித் திரியும் ஓர் அண்டக் கட்டி [Lumps of Matter]! அவற்றின் தலைக் கருவில் [Nucleus] பனி உறைந்த பாறைகள், அதைச் சுற்றி வாயுக்களும், தூசியும் அடர்த்தியாய்ப் பூசியுள்ளன. கருவைச் சுற்றி ஒட்டியுள்ள வாயுத் திரட்சி, கோமா [Coma] என்று அழைக்கப் படுகிறது. அந்த அண்டக் கட்டிகளில் 30 மைல் விட்டத்திற்கு மேற்பட்ட துணுக்கைக் காண்பது அபூர்வம்! பெரிய வால்மீனின் தலைக்கரு மட்டும் 400 மைல் அகண்டது! அதைப் போர்த்தியுள்ள வாயுத் திரட்சி கோமா, பிரம்மாண்டமாக 80,000 மைல் விட்டம் கொண்டது! நீளும் ஒளிவால் 200 மில்லியன் மைல் தூரம் நீண்டு போகும் வல்லமை உள்ளது! வால்மீனின் வாயுத் திரட்சியில் ஹைடிரஜன், கரி, நைடிரஜன், பிராண வாயு, மீதேன் [Methane CH4], கார்பன் மானாக்ஸைடு [CO], சைனஜென் [Cyanogen C2N2] ஆகிய வாயுக்களும், அம்மோனியா, நீர்ப் பனிக்கட்டியும் உள்ளன. பரிதியின் புறக்களத்தில் [Outer Regions] வால்மீன் செல்லும் போது, வால் சுருங்கி அதன் துணுக்குகள் மிகக் கடுங் குளிரில் உறைந்து, பனிப் பாறையாய் இறுகிப் போகின்றன!

பிரம்மாண்டமான சூரிய மண்டலத்தில், வால்மீன் ஒரு மின்மினியைப் [Glow Worm] போல் ஊர்ந்து, ஆனால் தொடரொளியுடன் மின்னி வருகிறது! வால்மீன்கள் வானில் வேகமாய் எரிந்து வீழும் விண்கற்கள் அல்ல! சூரியன் அருகே வரும் போது சூரியக் காற்றும், கதிர்வீச்சு அழுத்தமும் [Radiation Pressure] வால்மீனின் வாயுக்களைச் சூடாக்கி, அப்பால் தள்ளுகிறது. அதுவே எதிரே வாலாய்ச் சிறிது சிறிதாய் நீள்கிறது! பரிதியின் ஒளிக் கதிர்கள், வால்மீனின் வாயுக்களையும், தூசியையும் வெண்ணிற ஒளியாய் மாற்றுகின்றன! வாயுக்களும் மின் கொடை [Electrically charged] பெற்று, தாமாய்ச் சுடரொளி வீசுகின்றன! பரிதியைத் தாண்டி அப்பால் வால்மீன் போகப் போக, வாலின் நீளமும், ஒளி வீச்சும் குறைந்து, குளிர்ச்சி அடைந்து, வால்மீன் ஒளி மங்கி, வெறும் பனிப் பாறையாய் ஊர்ந்து செல்கிறது!

மெதுவாய் ஊர்ந்து வரும் வால்மீன், பரிதிக்கு அருகே வருகையில் வேகம் அதிகரிக்கப் பட்டு, உச்சமாகி பரிதிக்கு அப்பால் போகும் போது, வேகம் சிறிது சிறிதாய்க் குறைகிறது! வால்மீன் வாலும் பரிதியை நெருங்க நெருங்க நீண்டும், பரிதியை விட்டு விலக விலகச் சுருங்கியும் போகிறது! அதாவது பரிதியின் அருகே வாலின் நீட்சிக்கும், வால்மீனின் வேகத்திற்கும் ஓர் தொடர்பு உள்ளது! சூரியக் கதிரழுத்தம் வாலை அப்பால் தள்ளுவதால், வால்மீனுக்கு முன்னோக்கி உந்து விசை உண்டாகி, ஏவுகணை [Rocket] போல் விரைவாகச் செல்கிறது!

1956 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரே ஒரு வால்மீன் [Arend-Roland] மட்டும் பரிதியை நோக்கும் வாலைக் கொண்டிருந்தது! ஆனால் அந்த விந்தை வால் சிறிது காலம்தான் [1957 ஏப்ரல் கடைசி வரை] நீடித்தது! அதற்குக் காரணம் அப்போது கண்டு கொள்ள முடிய வில்லை!

சூரிய கோளத்திலிருந்து எழும் மின்கொடைத் துகள்கள் [Electrically Charged Particles] வால்மீனின் வாயுத் திரட்சியைத் [Coma] தாக்கும் போது, வாயுக்கள் ஆவியாகி வால் உண்டாகிறது! பரிதியின் மின்னிலை விசைகள் [Electrostatic Forces] வாலை, பரிதிக்கு அப்பால் வினாடிக்கு 250 மைல் வேகத்தில் விரட்டித் தள்ளுகின்றன! இந்த நியதி முறையில், பரிதியை நேராக நோக்கும் வால் ஏற்பட வழி யிருக்கிறது! [மின்கொடைத் துகள்களில் எதிரானவை கவரும்; நேரானவை விலக்கும்].

பொதுவாக வால்மீன்கள் பரிதியைக் குறிமையமாக [Focus] வைத்து, நீண்ட நீள்வட்ட வீதியில் [Elongated Elliptical Orbit] நகர்ந்து சுற்றி வருகின்றன. திங்கள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, பூமி ஆகிய துணைக் கோள்கள் போல் பரிதியைச் சுற்றி வந்தாலும், வால்மீன்கள் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த துணைக் கோளாகக் கருதப் பட மாட்டா! ஏனெனில் சில வால்மீன்கள், பிறை வளைவு வீதியில் [Parabolic Orbit], அல்லது விரி வளைவு வீதியில் [Hyperbolic Orbit] பரிதியைக் குறிமைய மாகக் கொண்டு ஒருதரம் சுற்றித் திரும்பவும் மீளாது, விண்வெளியில் எங்கோ கண் காணாமல் மறைந்து போய் விடுகின்றன! நீள் வட்டத்தில் சுற்றி வரும் வால்மீன்களும், போகப் போக பளு குறைந்து, வடிவம் சிறுத்து, வால் குறுகி ஒரு நாள் மறைந்து விடுகின்றன!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் வாழ்ந்து வரும் வால்மீன்!

கி.மு.239 இல் ஹாலியின் வால்மீனை [Halley ‘s Comet] சைனா வானியல் ஞானிகள் கண்டு தம் ஏட்டில் குறிப்பிட்டுள்ளார்கள். அடுத்து கி.மு.164 இல் அதே வால்மீனைக் கண்டதாக பாபிலோனியன் கல் வெட்டுகளில் காணப் படுகிறது. சமீபத்தில் 1986 [பிப்ரவரி 9 ஆம் தேதி] அதே வால்மீனை மீண்டும் பூமியில் கண்டிருக்கிறார்கள். இனி அடுத்து ஹாலியின் வால்மீனை 2061 ஜலை 28 ஆம் தேதி, பின்பு 2136 மார்ச் 27 பூமியில் காணலாம். அதாவது இந்த வால்மீன் பல நூற்றாண்டுகளாக, 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பரிதிக்கு அருகே மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறது! இப்படி 30 தடவை ஹாலியின் வால்மீன் 2225 ஆண்டுகளாகக் காணப் பட்டு கல்வெட்டுகளிலும், மூங்லில் தாளிலும், புத்தகங் களிலும், மின்கணணிகளிலும் பதிவாகி யுள்ளது! ஹாலியின் வால்மீன் தலைக்கரு மட்டும் 9 மைல் X 2.5 மைல் அளவு கொண்டது.

வான வீதியில் சென்ற 24 வால்மீன்களின் நகர்ச்சி வீதிகளை [Orbits] 1705 இல் நியூட்டன் நியதிப்படிக் கணக்கிட்டு, பிரிட்டிஷ் வானியில் வல்லுநர் எட்மண்ட் ஹாலி [Edmund Halley], 1682 இல் காணப்பட்ட வால்மீன், முன்பு 1607, 1531 ஆண்டுகளில் காணப்பட்ட வால்மீன்களும் ஒன்றேதான் என்று அழுத்தமாகக் கூறினார்! அத்தோடு அதே வால்மீன் 1759 இல் மறுபடியும் திரும்பி வரும் என்று முன்னறிவித்துப் பலரை வியக்க வைத்தார். அந்த வால்மீனை ‘ஹாலியின் வால்மீன் ‘ Halley ‘s Comet] எனப் பெயரிட்டு அழைத்தார்கள். சமீபத்தில் [1986 February 9th] ஹாலியின் வால்மீன் மறுபடியும் சூரியனச் சுற்றிச் சென்றது. அதே ஆண்டு மார்ச் மாதம், இரண்டு ரஷ்ய விண்வெளி ஆய்வுச்சிமிழ்கள் [Soviet Probes], வேகா-1, வேகா-2 [Vega-1, Vega-2], ஈரோப்பிய விண்வெளி ஆணையகத்தின் [European Space Agency] ஆய்வுச்சிமிழ் கியாட்டோ [Giotto], இரண்டு ஜப்பானியரின் விண்சிமிழ்கள் ஆகியவை யாவும், ஹாலியின் வால்மீன் வெகு தூரத்தில் போவதைக் கண்டு படம் எடுத்துள்ளன.

பூகோள மாந்தர் இதுவரைக் கண்டுவந்த சில வால்மீன்கள்

1998 ஆண்டு வரை சுமார் 1400 வால்மீன்கள் அட்டவணையில் பதிவாகி உள்ளன. அவற்றில் பாதிக்கும் குறைவானவை வாலுடன் கண்ணுக்குத் தென்படுபவை. சுமார் 140 வால்மீன்கள் வானில் ஒளிச்சுடர் விட்டு எழில் ஊட்டுபவை. 200 வால்மீன்கள் நீண்ட நீள் வட்டத்தில் [Elongated Ellipse] சுற்றி வருபவை. 60 வால்மீன்கள் குன்றிய சுற்றுக் காலம் உடையவை. 45 குன்றிய சுற்றுக் காலமுடைய வால்மீன்கள் ஒரு முறைதான் கண்ணில் பட்டவை. 295 வால்மீன்கள் பிறைவளைவு [Parabolic] வீதியில் சுற்றுபவை. 70 விரிவளைவு [Hyperbolic] வீதியில் நகர்பவை. பிறை வளைவு, விரிவளைவு வீதிகளில் போகும் வால்மீன்கள், சூரிய ஈர்ப்பு மண்டலத்துக்கு மீண்டும் வர மாட்டா! அவைக் கண்காணா அண்டவெளி எல்லை நோக்கி நகர்ந்து போய்க் கொண்டிருக்கின்றன.

வால்மீன்களில் பரிதியைக் குன்றிய காலத்தில் [Short Period] சுற்றுபவை, நீண்ட காலத்தில் [Long Period] சுற்றுபவை என்று இருவகை இனங்கள் உண்டு. சில வால்மீன்கள் நேராகக் கண்களுக்கு தென்படுகின்றன. சிலவற்றைத் தொலை நோக்கி மூலமாகத்தான் காண முடியும். 50 தரம் மாந்தர் கண்ணில் பட்ட என்கே [Encke] வால்மீன் எல்லாவற்றையும் விட மிகக் குன்றிய சுற்றுக் காலம் [3.3 வருடம்] உடையது. 11 முறை காணப் பட்ட டெம்பெல் [Tempel] வால்மீன் 5.3 வருடம், 15 தரம் பார்த்த பான்ஸ்-வின்னெகே [Pons Winnecke] வால்மீன் 6.1 வருடம், 10 முறைத் தென்பட்ட டரஸ்ட் [d ‘Arrest] 6.7 வருடம், 14 தரம் கண்ணில் பட்ட [Faye] 7.4 வருடம் குன்றிய சுற்றுக் காலம் கொண்டவை! குன்றிய காலம் கொண்ட 60 வால்மீன்களின் பாதைகள், பூதக்கோள் வியாழனால் பாதிக்கப் படுகின்றன!

இருமுறைத் தெரிந்த வெஸ்ட்பால் [Westphal] 61.7 வருடம், மூன்று தரம் கண்ட ஆல்பர்ஸ் [Olbers] 70 வருடம், 30 முறை கண்டுவரும் பேர் பெற்ற ஹாலி [Halley] 76 வருடம், இருமுறைப் பார்த்த ஹெர்ஸெல்-ரிகோலெட் [Herschel Rigollet] 156 வருடம், இருதரம் வந்த கிரிக்-மெல்லிஸ் [Grigg Mellish] 164 வருடம் நீண்ட சுற்றுக் காலம் பெற்றவை. 1996 இல் சுடர் பெருகிக் காணப் பட்ட வால்மீன் ஹியாகுடேக் [Hyakutake], சூரியனை ஒரு முறைச் சுற்றும் காலம் சுமார் 10,000 ஆண்டுகள் ஆகலாம் என்று கணக்கிடப் பட்டுள்ளது!

வருடத்திற்குச் சராசரி நான்கு வீதம், புதிய வால்மீன்கள் தோன்றி வருகின்றன. இருபதாம் நூற்றாண்டில் மோர்ஹெளஸ் 1908 [Morehouse], ஹாலி 1910 [Halley], விப்பிள் 1937 [Whipple], ஆரென்ட்-ரோலண்டு 1957 [Arend-Roland], ஹூமாசன் 1962 [Humason], இகியா செகி 1965 [Ikeya Seki], டாகோ சடோ கொசாகா 1969 [Tago Sato Kosaka], கொஹெளடெக் 1973 [Kohoutek], வெஸ்ட் 1976 [West], பவல் 1980 [Bowell], ஹாலி 1986 [Halley], ஃபாயே 1991 [Faye] போன்றவை குறிப்பிடத் தக்கவை. வால்மீன்களின் பெயர்கள் கண்டு பிடித்த நிபுணர்களின் பெயரையே கொண்டுள்ளன.

வால்மீன்கள் எங்கே, எப்போது, எப்படித் தோன்றின ?

பூமி தோன்றுவதற்கு முன்பே வால்மீன்கள் பிறந்து அண்ட வெளியில் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக 45 வால்மீன்களின் முதற் பாதைகளை அறிந்து, அவற்றின் தலை வாலில் இருக்கும் பனிப் பாறைகளையும் துணுக்குகளையும் ஆராய்ந்ததில், கீழ்க் கண்ட மூன்று நியதி முறைகளில் வால்மீன்கள் தோன்றி யிருக்கக் கூடும் என்று அனுமானிக்கப் படுகிறது:

ஒன்று: சூரிய மண்டலத்தின் விண்கோள்கள், அல்லது அவற்றின் துணைக் கோள்களில் எழும் எரிமலைச் சிதறலில் [Volcanic Eruptions] உண்டானவை. இரண்டு: அண்டவெளி, பால்வீதி விண்மீன்களில் [Intersteller, Milky Way] உண்டானவை. மூன்று: பரிதியின் ஏற்பாட்டுக்குளே [Solar System] உண்டானவை.

முதல் நியதி, குன்றிய கால வால்மீன்கள் தோற்றத்தின் காரணத்தை விளக்க முடியவில்லை. சூரிய மண்டலத்துக் குள்ளே சுற்றி வரும் பல விண்மீன்கள் தோற்றத்திற்கு, இரண்டாம் நியதி பதில் கூற முடிய வில்லை. மூன்றாவது நியதி மூலம், நீண்ட கால வால்மீன்கள் சூரியக் கொந்தளிப்பு மேகங்களிலிருந்தும்,

குன்றிய கால வால்மீன்கள் பூதக்கோள் வியாழன், சனிக் கோள் ஆகியவற் றிலிருந்தும் பிறந்திருக்கலாம் என்று யூகிக்கப் படுகிறது. பரிதி மண்டலத்தின் புறக்கோள் புளுட்டோவுக்கும் அப்பால், பனிக்குளிர் போர்த்திய புறவெளி வானில், தோற்றத்தின் பின் எஞ்சிய அண்டத்தின் சதையிலிருந்து, வால்மீன்கள் உதித்திருக்கலாம் என்று பல வானியல் ஞானிகள் கருதுகிறார்கள்.

950 இல் டச் வானியல் விஞ்ஞானி ஜான் ஓர்ட் [Jan Hendrik Oort] பரிதியின் புறக்கோள் புளுடோவுக்கும் [Pluto] அப்பால் குவிந்து வால்மீன்களை உற்பத்தி செய்யும், ‘சேமிப்பு முகில் ‘ [Storage Cloud] கூட்டம் ஒன்று இருக்க வேண்டும் என்று அனுமானிக்கிறார். அம்முகிலின் அருகே செல்லும் விண்மீன்கள் [Stars] தமது ஈர்ப்பு விசையின் விளைவால், சேமிப்பில் சிறிது பளுவைப் பற்றி வால்மீனாக மாற்றி, பரிதியை நோக்கி அனுப்பிக் கொண்டிருக்கின்றன, என்பது அவர் அனுமானம். அந்த சேமிப்பு முகிலை ‘ஓர்ட் முகில் ‘ என்று குறிப்பிடுகிறார்கள்.

வால்மீன்கள் முடிவில் ஏற்படுத்தும் பெரும் பிரளயம்!

வால்மீன்கள் மிகச் சிறியவை. ஆமைபோல் மெதுவாக ஊர்ந்து நகர்பவை. மிகச் சிறிய பளு உடையவை. ஆதலால் ஈர்ப்பு சக்தியும் குன்றியவை. பூதக் கோள் களான வியாழன், சனி அருகே நெருங்கும் போது, வால்மீன்களின் பாதைகள் பெருமளவில் பாதிக்கப் பட்டு, அவை விண்வெளியில் வெகு தூர எறியப் படலாம்! அல்லது பூதக் கோள்கள் தம்மிடையே இழுத்துக் கொண்டு, வால்மீனை மோத வைத்துத் தகர்த்துத் தூளாக்கி விடலாம். பரிதியின் அருகே நகர்ந்து செல்லும் போது, வால்மீன் சட்டென அதன் ஈர்ப்பு விசையால் இழுக்கப் பட்டுச் சூரிய கோளத்தில் மோதி, ஒன்றாகக் கலந்து விடலாம்!

முப்பது முறை மாந்தர்களால் மீண்டும், மீண்டும் காணப் பட்டு மிகவும் புகழ்பெற்ற ஹாலியின் வால்மீன் பரிதியை ஒரு முறைச் சுற்றி வரும் காலம் 76 ஆண்டுகள். இருபதாம் நூற்றாண்டில் 1910 இல் காணப் பட்ட ஹாலியின் வால்மீன், மறுபடியும் 1986 இல் வருகை தந்தது. ஆனால் பூதக்கோள் வியாழன், சனி இவற்றை மிகவும் நெருங்கிச் சென்றதால், அந்த வால்மீனின் சில வருகைகள் 15 மாதங்கள் வரைத் தாமதமாயின!

1976 இல் ஒரு மாதம் வானை எழிலூட்டிய வால்மீன் வெஸ்ட் [West], நான்கு துண்டங்களாய் உடைக்கப் பட்டு, இருபதாம் நூற்றாண்டில் இதுவரைக் காணப் படாதக் கோரக் காட்சியாய் அமைந்தது! பைலா [Biela] வால்மீனுக்குத் திடாரென விபத்து நிகழ்ந்தது போல், சில சமயம் காரணம் எதுவும் இல்லாமல் கூட அவை வான மண்டலத்தில் தகர்க்கப் படலாம்!

1994 இல் வால்மீன் சூமேக்கர்-லெவி [Comet Shoemaker-Levy 9] வியாழன் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, 21 பெரும் துணுக்குகளாய் சிதறிப் போனதைப், பூமியின் சுழல்வீதியில் [Earth ‘s Orbit] சுற்றும் ஹப்பிள் தொலை நோக்கிப் [Hubble Space Telescope] படமெடுத்து அனுப்பியது! சிதறித் தெறித்த துணுக்குகள் நிமிடத்திற்கு 220 மைல் வேகத்தில் வியாழ மண்டலத்தில் மோதி, தீக்கோளம் பூமியை விடப் பெரியதாய்க் கிளம்பி, அடுத்து மாபெரும் வெடிப்புகள் நேர்ந்து, 1800 மைல் தூரம் புகை மண்டலம் கிளம்பியதைப் பூகோளத் தொலை நோக்கிகளும் அதே சமயத்தில் பதிவு செய்துள்ளன!

பரிதியை அண்டும் ஒரு வால்மீன், ஒவ்வொரு சமயத்திலும் ஒரு புதிய வாலை உண்டாக்குகிறது! பரிதியின் பக்கம் நகரும் வால்மீனின் சதைப் பிண்டம் [Matter] ஆவியாகி, அதன் பளு குறைந்து கொண்டே போய், வால்மீன் சிறுத்து விடுகிறது! வலுவற்ற வால்மீன் இறுதியில் உடைந்து, எரிகற்களாய் [Meteors] விழுந்து எரிந்து போய்ச் சாம்பலாகின்றன! 1846 இல் சூரியனை நெருங்கிய பைலா வால்மீன் [Biela] இரண்டாக உடைந்து திசை பெயர்ந்து, இரண்டும் தனியாக நகர்ந்ததை 1852 இல் கண்டிருக்கிறார்கள்! பின்பு அவையும் உடைந்து தூள் தூளாகி, எரிந்து போய் விட்டன! சில வால்மீன்கள் இவை போல் எரிந்து சாம்பலாகும் போது, அடுத்து புதிய வால்மீன்கள் தோன்றி பூலோக மாந்தர் கண்களுக்கு ஒளிவீசி விருந்தளிக் கின்றன! ஆண்டுக்கு சுமார் நான்கு புதிய வால்மீன்கள் வீதம் தோன்றி, அவற்றின் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டு வருகின்றன!

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தில் 6 மைல் குறுக்களவு கொண்ட மாபெரும் வால்மீனின் தலைக்கரு [Comet Nucleus] வேகமாய் விழுந்து தாக்கி, ஒரு பிரளயமே உண்டானது! அதன் பயங்கர விளைவுகள்: பூமியே குலுக்கப் பட்டுக் கடலின் அடித்தளத் துணுக்குகள் நீரோடு பொங்கி மேக மண்டலமாய் மேல் எழுந்து, குளிர்ச்சியும், இருட்டடிப்பும் பல காலம் நீடித்து, டைனஸார்கள் [Dinosaurs] போன்ற பல அசுர விலங்குகள் முற்றிலும் மடிந்து புதைபட்டுப் போயின!

அமெரிக்காவில் 15,000-45,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அரிஸோனா பெருங்குழி [Arizona Crater] முக்கால் மைல் [1.2 Km] விட்ட முள்ளது. விண்வெளியிலிருந்து 80 அடி அகண்ட ஓர் இரும்புக்கட்டி [விண்கல் Meteor] வினாடிக்கு 10 மைல் வேகத்தில் விழுந்து பூமியைத் தாக்கி, அப்பெரும் குழியை உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று கணக்கிடப் பட்டுள்ளது! அந்தக் கடும் இடிமோதல் ஏற்படுத்திய குழி, 4 மெகா டன் அணுகுண்டு போட்ட வெடிப்பின் விளைவை ஒத்ததாக இருக்கிறது எனக் கருதப் படுகிறது!

அமெரிக்க விண்வெளித் திட்ட ஆய்வாளர் கார்ல் சேகன்

கார்நெல் பல்கலைக் கழகத்தின் [Cornell University] அண்டவெளிக் கோள் ஆய்வகத்தின் [Laboratory for Planetary Studies] ஆணையாளரும், டேவிட் டன்கன் வானியல் விண்வெளி விஞ்ஞானப் [David Duncan Astronomy & Space Sciences] பேராசிரியருமான, கார்ல் சேகன் [Carl Sagan], நாசாவின் [NASA] அண்ட வெளிப் பயணப் பணிகளில் முதல்வராய் முன்னின்று, புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய அகக்கோள்களின் [Inner Planets] ஆராய்ச்சிக்கு, விண்வெளிக் கப்பல்கள் மாரினர் [Mariner], வைக்கிங் [Viking] திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றினார். வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியு புறக்கோள்கள் ஆராய்ச்சிக்கு, விண்வெளிக் கப்பல்கள் வாயேஜர்1 &2 [Voyager-1 & 2] ஆகிய திட்டங்களின் மகத்தான வெற்றிக்குக் காரண கர்த்தாவானார். அவரது ஒப்பற்ற அரிய விஞ்ஞானப் பணிகளுக்கு, மூன்று முறை நாசாவின் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அடுத்து அகில நாட்டு விண்வெளித் துறை, காலபெர்ட் பரிசு [International Astronautics Prize, Galabert], ஜான் எஃப் கென்னடியின் அண்டவெளித் துறைப் பரிசு ஆகியவையும் அவருக்கு அளிக்கப்பட்டன.

பிரபஞ்சம் [Cosmos] பற்றி கார்ல் சேகன் எழுதிப் பேராதரவு பெற்ற நூலை தொலைக் காட்சித் திரைப் படமாக எடுத்து, 250 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கண்டு களித்து, அதற்கு எம்மியின் பரிசும் [Emmy Award] கிடைத்தது. சிறந்த அந்தப் புத்தகத்திற்காக அவர் புலிட்ஸர் பரிசும் [Pulitzer Prize] பெற்றார். மேலும் சமீபத்தில் அமெரிக்கப் பெளதிகக் குழுவகத்தின் [American Physical Society], அணுவியல் விஞ்ஞானி லியோ ஸிலார்டு நினைவுப் பரிசும் [Leo Szilard Award] கார்ல் சேகனுக்கு அளிக்கப் பட்டது. அவர் அமெரிக்க வானியல் குழுவகத்தின் [American Astronomical Society] அதிபராகவும், அமெரிக்க பூபெளதிகக் கூட்டகத்தின் [American Geophysical Union] அண்டவெளித் துறைப் பகுதிக்குத் தலைவராகவும் பணியாற்றி யுள்ளார்.

தற்போது அவர் உலகின் மாபெரும் விண்வெளி வேட்கையாளர் இணைந்த, அண்டவெளிக் குழுவகத்தின் [The Planetary Society] அதிபராக உள்ளார். 1986 இல் கார்ல் சேகன், அவரது மனைவி ஆன் டுருயன் [Ann Druyan] இருவரும் இணைந்து எழுதிய நூல், ‘வால்மீன் ‘ [Comet] மிகச் சிறந்த தோர் படைப்பு.

ஆதாரங்கள்:-

1. Comet – By Carl Sagan & Ann Druyan [1986]

2. The Space Encyclopaedia

3. The Majesty of The Heavens – By Michael Dempsey & Joan Pick

4. Astronomy – By Larousse

***********************

Series Navigation