வானத்திலிருந்து வந்தவன் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

நளினி சாஸ்திரி


விண்கலம் ஜூலா பரபரப்பானது. திடாரென்று தொடர்ந்து நியூட்ரினே அலை சிக்னல் வர ஆரம்பித்தது. அந்த திசை நோக்கி ஜூலா பயணம் பாதை மாறியது. அருகாமை கிரகம் சமீபத்தது. சிக்னல் அனுப்பும் கிரகம். உயிரினம் உள்ள கிரகம். இப்போது எச்சரிக்கையாக சிக்னல் மாறவே ஜூலா கொஞ்சம் யோசித்தது. தாய் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. புதிய கிரகத்திலிருந்த ஓர் உயிரினத்தை மட்டும் கவர்ந்து கொண்டு விரைந்து திரும்பிட உத்திரவு வந்தது. ஜீலாவின் ட்ரேப் அமைக்கப்பட்டது. புதிய கிரகத்து உயிரினம் சில நொடிகளில் இடம் பெயர்ந்து ஜுலாவின் ட்ரேப் கண்ணாடிக் கூண்டுக்குள் கண் விழித்தது.

* * * ‘விண்கலம் ஜூலாவிலிருந்து செய்தி வந்துள்ளது. நமது திட்டம் ஏலியன் வெற்றி அடைந்து விட்டது. அதோடு இல்லாமல் அந்த கிரகத்து உயிரினம் ஒன்றினையும் ஜூலா கலம் சுமந்து வருகிறது. இன்னும் சில நாட்களிலே நாம் வேறு கிரக உயிரைப் பார்க்கலாம். ‘

‘ திட்டம் ஏலியன் வெற்றி கொண்டாடப்பட வேண்டும். எல்லோருக்கும் செய்தி செல்லட்டும். வேறு கிரக விருந்தாளியை வரவேற்க தயாராகட்டும் ‘

‘அந்த கிரகம் மிக முன்னேறியதாக இருக்க வேண்டும். நம் ஜூலாவை மடக்கி சமிக்ஞை செய்து இருக்கிறார்கள். அதன் பிறகே ஜூலா அந்தக் கிரகத்தைக் கண்டுள்ளது. ட்ரேப் உபயோகித்து ஓர் உயிரினம் மட்டும் ஜூலாவுக்குள் கொண்டு வரப்பட்டு கண்ணாடிக் கேப்ஸ்யூலில் பாதுகாப்பாக அழைத்து வருகிறார்கள். விருந்தாளியின் புத்திசாலினம் புரிந்து நடத்த வேண்டியது நம் கடமை. கோபத்துக்கு ஆளாகி அந்தக் கிரகத்தின் வலிமை தெரியாமல் சிக்கலில் மாட்டக் கூடாது. ‘

‘வேறு கிரக அறிவுடைய மனிதர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்வது நமது அறிவைப் பெரிதும் விரிவடையச் செய்யும் என்பதில் கூட ஐயமில்லை. ‘

‘நாம் தொடர்பு கொள்ளும் நாகரிகம் நமது நிலையில் கூட இருக்கலாம். அல்லது நமது இயல்பில் நிலைக்கு முற்றிலும் மாறுபட்டு விளங்கும், பிரபஞ்சத்தின் வேறு பகுதியில் வசிப்பவர்களாகவும் இருக்கலாம். அவர்களின் தொழில்நுட்பம் மாறுபட்ட வழிவகையில் வளர்ச்சியடைந்திருக்கலாம். தொடர்பு முறைகளும் அபிவிருத்தியடைந்திருக்கலாம். எனில் அவர்களிடம் தகவல் நிச்சயம் நமது பிரபஞ்ச அறிவை விரிவடையச் செய்யும். ‘

‘நாம் தொடர்பு கொள்ளும் நாகரிகம் நமது நிலையில் கூட இருக்கலாம். அல்லது நமது இயல்பியல் நிலைக்கு முற்றிலும் மாறுபட்டு விளங்கும், பிரபஞ்சத்தின் வேறு பகுதியில் வசிப்பவர்களாகவும் இருக்கலாம். அவர்களின் தொழில்நுட்பம் மாறுபட்ட வழிவகையில் வளர்ச்சியடைந்திருக்கலாம். தொடர்பு முறைகளும் அபிவிருத்தியடைந்திருக்கலாம். எனில் அவர்களிடம் கிடைக்கும் தகவல் நிச்சயம் நமது பிரபஞ்ச அறிவை விரிவடையச் செய்யும். ‘

‘எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் ஆணையிடுகிறேன் ‘ தலைமையகம் தகவல் தந்தது.

* * * ‘நமது அறிவின் வரம்புக்கு அப்பாற்பட்ட எந்த சிந்தனையும் வெறும் யூகம்தான். வரும் கிரகத்து உயிர் நம்மிலிருந்து பெரிதும் வேறுபட்டும் மாறுபட்ட தனிமங்களினால் ஆனதாகவும் இருக்கலாம். ‘

‘எப்படியும் வேறு நாகரிகத்தைக் குறிக்கும் அவர்கள் உயிரியல் வகையிலான பிராணியாகவே இருக்க முடியும். அவர்களும் நம்மைப் போன்ற தோற்றமுடையவர்களாக இருப்பார்களோ ? ‘

‘அந்தக் கிரகத்து நாகரிகம் நம்முடன் தொடர்பு கொள்ள விழைகிறதா இல்லையா என்பது முடிவாகாமல் அக்கிரக உயிரைக் கவர்ந்து வருவது சரியாகப் படவில்லை ‘

‘நம்மைவிட அவர்கள் பலசாலிகளா என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல், அப்பிராணிகள் கவனம் கவர்ந்தது பைத்தியக்காரத் தனமான முடிவு ‘

‘இது தவறான முடிவாக இருந்தால் நமது குலம் முழுவதற்கும் எத்தகைய விளைவுகள் வேண்டுமானாலும் உண்டாகும். ‘ ‘நமது அறிவை விரிவடையச் செய்யும் பொருட்டு இதிலுள்ள அபாயத்தைப் புறக்கணிப்பதே புத்திசாலித்தனம். உலக நாகரீகங்கள் முன்னேறி வரும் நிலையில் நாம் மட்டும் தனிமைப் பட்டு விடக் கூடாது. விரைவாகவோ தாமதாகவோ நமது பிரச்சனைகளை பிரபஞ்ச அளவில் தீர்க்க முயல வேண்டும். அதற்கு இது ஓர் ஆரம்பம் ‘

‘பிரபஞ்ச அறிவிலிருந்து தப்ப முடியாது. மேம்பாடு அடைந்த அந்த உலக உயிர்கள் நம்முடன் தொடர்பு கொள்ளத் தீர்மானித்தால் நாம் எவ்வளவுதான் ஒளுந்து கொள்ள முயன்றாலும் அவை நம்மை மோப்பம் பிடித்து பழிவாங்க வரலாம் ‘ ‘பழி வாங்குவார்கள் என ஏன் எதிர்பார்க்க வேண்டும் அவர்கள் நாகரிகம் லட்சிய மாதிரி அமைப்பாக ஏன் இருக்கக் கூடாது. முதலாவதாக விலை மதிப்பற்ற சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி. இவற்றை நமக்கு அளிக்கலாம். சில விஷயங்களில் நம்மை எச்சரிக்கை கூட செய்யலாம். பிரபஞ்சத்தில் நமது வரலாறு இன்னும் முடிந்துவிடவில்லை. பரிணாம வளர்சியின் அனைத்து சாத்தியக் கூறுகளையும் நாம் பயன்படுத்துவதில்லை ‘

‘அவர்களுக்கு நம்மைப் பற்றி அக்கறை காட்ட வேண்டிய அவசியம் இல்லாமலும் இருக்கலாம் ‘

‘நம்மிடம் ஏதேனும் ஆதாயம் எதிர்பார்க்கலாம். நமது எரிபொருள் அல்லது உணவுக்காக அக்கறை காட்டலாம் ‘.

‘முதல் காரணம் சாத்தியம்தான். நம்மிடம் அக்கறை காட்டாவிடில் நாம் பத்திரமாக இருக்கலாம் ஆனால் அது நமக்கு அவமானமாக இருக்கும். கடைசிக் காரணம்தான் முக்கியமானது. அதில் அபாயம் அதிகம். சிக்கலும் அதிகம் ‘.

விஞ்ஞானிகள் குழு விவாதத்தில் இறங்கியது.

* * *

‘நமது கிரகத்தின் அழிவின் ஆரம்பம் திட்டம் ஏலியன். அதனை நாம் எவ்வளவோ எதிர்த்தும் நிறுத்தாமல் தொடர்ந்தார்கள். விரைவாக வேறு கிரக உயிர் ஒன்று வருகிறது. நம்மை அழிக்கவே அது வருகிறது. ‘

‘மிகச் சரி முன்னேறிய கிரகம் என்று வேறு கேள்வி. அந்த உயிர் மிகப்பெரிய அளவில் வேறு இருக்கிறதாம். பார்க்க வினோதமாகவும் உள்ளதாம். ஜுலா சில தினங்களில் திரும்பி விடும். பார்த்தால் தெரிகிறது. ‘

‘ஒரு வேளை நம்மைப் படைத்தவர்களே அந்தக் கிரகத்தினராக இருக்கலாம். ‘

‘படைத்தவர்களையே சிறை பிடித்து வந்தால் நம்மை அழிக்காமல் விடவா போகிறார்கள் ? ‘

‘ஒரு பிரிவு பயத்தால் தூக்கம் தொலைத்தது.

* * *

‘உனக்குத் தெரியுமா ஜுலா கலத்தில் வேறு கிரக உயிரினம் வருகிறது ‘

‘அதற்கு இன்னும் இரண்டு தினம் உள்ளதே! தெரியாமல் யாரேனும் இருந்தால்தான் ஆச்சரியம் ‘.

‘ஒரு விஷயம் தெரியுமா ? வருவது கடவுள். இது புரியாமல் எல்லாரும் இருகிறார்கள். கடவுள்தான். நம்மைப் போல பலமடங்கு உயரமாக இருப்பார். ‘

‘நீ சொல்லுவதும் சரிதான். அந்த உயிரினம் கூட நம்மை விட மூன்று மடங்கு பெரிதாக இருக்கிறதாமே! ‘ ‘அந்த உயிரின் உடலில் ரோமம் கிடையாதாம் ‘

‘கடவுளேதான்! கடவுள் என்ன சாப்பிடுவார் ? இவர்கள் அதெல்லாம் தயார் செய்து விட்டார்களா ? கடவுள் மொழி என்ன ? ‘ ‘அதெல்லாம் கவலையில்லை. நமது மொழிமாற்றி நம் மொழிக்கு மாற்றிவிடும் ‘.

‘இரண்டு நாளில் வரப்போகும் கடவுளிடம் என்ன கேட்கலாம் ? ‘

‘இப்படி ஒரு பிரிவு தர்க்கம் செய்தது. ‘

* * *

‘இதெல்லாம் ஏமாற்றுவேலை. வேறு கிரகமாவது! உயிராவது! ஜுலா கலம் எங்கும் செல்லவில்லை. நமது கவனத்தைத் திருப்ப முயற்சிக்கிறார்கள். ‘

‘எப்படியும் நாளைக்கு அவர்கள் சொன்ன நாள் ஜுலா வரும் போய்த்தான் பார்க்கலாமே! ‘

‘ஜுலா வரும் ஆனால் எந்த உயிரும் வராது. வேறு வேலை இல்லாவிட்டால் நீ போ. நான் நேரத்தை வீண் செய்ய விரும்பவில்லை. ‘

‘ஒரு பிரிவு நம்ப மறுத்தது.

* * *

அந்த தினம்!

ஜுலா வரப் போகும் தினம்!

வேறு கிரக உயிர் வரப் போகும் மகத்தான தினம்!

கூட்டம் எங்கு பார்த்தாலும் நிரம்பி வழிந்தது. நிற்க இடமில்லை. தொங்க இடமில்லை! எதிர்பார்ப்பு!

எதிர்பார்ப்பு! பரபரப்பு! பயம்!

எல்லாம் கலந்த உணர்ச்சி காற்றில் பரவியிருந்தது. சரியாக 12 மணிக்கு தலைமை விஞ்ஞானி நகர அதிகாரிகளுடன் மற்ற விஞ்ஞானிகள் புடை சூழ வந்து சேர்ந்தார். கூட்டம் ஆவல் நிறைந்த ஆனால் பொறுமையுடன் கூடிய எதிர்பார்ப்புடன் நின்றிருந்தது.

பத்து நிமிடம் கழித்து உயர்ந்த சுருதியுடன் ஓர் ஒலி கிளம்பியது. சமாதான ஒலி.

தரைக்கு வரும் விண்கலம் உருவத்தில் விரைவாகப் பெரிதாக்கிக் கொண்டு கீழே இறங்கியது. அது மெதுவாக மெதுவாக குறிப்பிட்ட மேடையில் மெல்லத் தரை தொட்டு கம்பீரமாகக் காட்சியளித்தது.

நிசப்தம்!

விண்கலக் கதவுகள் விரிந்து, உள்வாங்கி திறந்து வழிவிட்டது. ஒரு கண்ணாடிக் கூண்டு நகர்ந்து வெளுயே வந்தது. அனைத்துக் கண்களும் இமைக்க மறந்தன.

கூண்டு திறந்தது.

சுற்றிலும் பாதுகாப்பு பரவி இருந்தது.

‘இங்கு வருகை தரும் வேறு உலகின் முதல் உயிருக்கு எங்கள் சார்பில் வந்தனம். எங்கள் கிரகம் நட்புடன் உங்களை வரவேற்கிறது. பிரபஞ்ச சமாதானம் வளரட்டும். உங்கள் வரவு நல்வரவாகட்டும் ‘ மொழி மாற்றி தன் பணி செய்தது.

மகிழ்ச்சி ஆரவாரமும் கைத்தட்டல்களும் பெருமளவில் இருந்தன. பல வண்ண வெடிகள் தலைக்கு மேல் வெடித்தன. தலைவர் தனது கைகளில் பட்டுத் துணியினால் சுற்றிய அடையாளப் பரிசு ஒன்றை வைத்திருந்தார். முதல் விண்வெளுத் தொடர்பு ஸ்பரிசம் பெறப் போகும் அவர் கூண்டில் நுழைந்து அமர்திருந்த அந்த உயிரிடம் கை குலுக்கினார். ‘உங்களை வரவேற்பதில் குறைகள் ஏதேனும் இருந்தால் பொறுக்கவும். தங்கள் கிரகம் எது ? தங்கள் யார் ‘ ‘கூண்டிலிருந்து ஆறடி உயரத்திற்கு எழுந்து, கைகளை நீட்டி, சோம்பல் முறித்து,

‘மூதாதையரே வணக்கம்! ‘

பூமிக் கிரகத்திலிருந்து வந்திருக்கும் நான்

ஒரு மனிதன்.

என் பெயர் அசோகன்.

என்ற அவன் சுற்றிலும் லட்சக் கணக்கில் கூடியிருந்த ஓரடி உயரக் குரங்குகளை விநோதமாகப் பார்த்தான்.

* * *

Series Navigation