வழித்துணைவன்

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

மைக்கேல்


வீதியின் பார்வைக்கோணத்திற் கேற்ப பிரமாண்டமாக விரிந்திருந்த அந்த விளம்பரத்தட்டியை பார்த்துக்கொண்டிருந்தேன். சிவப்பு நிற டிஐிட்டல் எழுத்தில் ஏதோ ஒரு விளம்பரம் ஓடியது. இடது ஓரத்திலிருந்து வந்த விளம்பரவாசகம் வலது கரையில் மறைந்துபோக மீண்டும் மீண்டும் புதிதாக எழுத்துக்கள் இடது கரையிலிருந்து பிறந்து வந்தன. வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வும் மனித மனத்திலிருந்து இப்படியே மறைந்து போய்க்கொண்டிருந்தால் மீட்டிப்பார்ப்பதற்கு கவலைகள் ஏது.. ? கவலைவிசாரமற்ற வாழ்வு ஆரோக்கியமாக நீண்டுபோகும். அறுபது எழுபது வயதைத் தாண்டிக் குதிக்கவும் கூடும். ஆனால் இந்த முப்பது வயதில் என்னிடம் எவ்வளவு தளர்வு. காரணமில்லாமல் கோபம் வேறு மூக்கிலே முட்டுகிறதே…

சற்றும் இரக்கமில்லாமல் இயங்க மறுத்த டி–வோசிங் மெஷின் மேல்தான் இன்று முதலில் கோபம் வந்தது. பின்னர் கழிவுகள் வெளியேறாமல் அடைத்து மெஷின் இயங்க மறுக்க, கோப்பைகளை கொண்டு வந்து குவித்துக்கொண்டிருந்த பையன்மீது தாவியது. கடைசியில் இந்தச் சுழலில் சிக்கிய என்மீதே வந்து இறுகி நின்றது. ரெஸ்ரோரண்டுக்குள் சம்பிரதாயமாக பரிமாறிக்கொள்ளும் காலைவணக்கம், சுகவிசாரிப்புகள் எல்லாம் வேலை ஏவுவதற்கான குழையடிப்புகளாக கண்ட அநுபவத்தில், வணக்கம் கூறுவதை தவிர்த்து விட்டதன் பின்னர், என்மீது செவ்வுக்கு மர்மமான பகையுணர்வு வந்துவிட்டது. அதன் பலன் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனியாகவே மாய வேண்டியதாயிற்று.

அறுநுாறு பேர்களுக்கு மேல் சாப்பிட்ட எச்சில்தட்டுக்களை இன்று தனியாளாகவே கழுவிய களைப்பும் எரிச்சலும் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டிருந்தது இரவு பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்த என்னிலிருந்து.

இது ஒக்டோபர் மாதத்தின் கடைசிவாரம். குளிர் தன் தாக்குதலுக்கான தயாரிப்பில் இருந்தது. இயற்கையின் சில ஈவிரக்கமற்ற தன்மைகள் அதன் ஒழுங்கமைவிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. வெப்பத்துடன் விடிந்த காலைகள் மெல்ல மெல்ல குளிருடன் வந்தது. இலைகள் பழுக்கத் தொடங்க ஓரிருநாள் மழையும் காற்றும் தொடர்ந்தன. இலைகளை இழந்து நிர்வாணமான மரங்கள் ஒரு கவிஞர் வர்ணித்தது போல வானத்து நட்சத்திரங்களை கூட்டித்துப்பரவாக்க நிமிர்த்தி வைத்த விளக்குமாறு மாதிரி பரிதாபமாக நின்றன.

பெருநகரத்து வியாழன் வெள்ளி இரவுகள் கனத்தவை. அதுவும் சில வீதிகள் இரவில் உறங்காமல் பெருமூச்செறிவன. தேடுதலும் காத்திருத்தலுமாய் செயிண்ட் லோரண்ட்வீதி விழித்திருந்தது. வீதி வெளிச்சத்தில் நழுவி விழும் நிழல்கள் பஸ் ஐன்னலில் சரிந்து ஓடின. பஸ் கடந்து கொண்டிருந்த ஒரு முக்கிய சந்திப்பில் சில பெண்கள் காத்திருந்தனர். அவர்களது உடைகளிலிருந்தே காத்திருப்புக்கான அர்த்தம் புரிந்தது. எத்தனை விதமான மனிதர்களின் பரிமாணங்கள். அவற்றில் ஒழிந்திருந்து குத்திய முட்களின் வேதனைகள் அவர்களிடம் அனுபவங்களாக தங்கியிருக்கும். உண்மையில் மனத்தளவில் கூட அவர்களின்மீது முதல்கல்லை விட்டெறிய மனிதர்கள் இப்பூமியில் இல்லை.

நேரம் விடிகாலை இரண்டரை ஆகியிருந்தது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி மற்றுமொரு பஸ் எடுத்தால்தான் நான் வீடு செல்லமுடியும். அல்லது நடக்கவேண்டும். ஆட்களற்று அமைதி கவிந்த வீதியில் தனியாக நடப்பதை நினைக்கவே வியர்க்கிறது. எதிர்பார்க்கப்படாத அமைதி சங்கடத்தையோ பயத்தையோ ஏற்படுத்தி விடுகிறது. இருப்பினும் கூடடடைய வேண்டும்.

இறங்கினேன்.

நான் செல்லவேண்டிய தடத்தில் பார்வையை ஓட்டினேன். கனவுக்காட்சி போல பனிப்புகார் படர்ந்து வீதி நீண்டு கிடந்தது. இரண்டொரு கார்களின் வெளிச்சத்தைத் தவிர தொலைவில் பஸ் வருவதற்கான அறிகுறி இல்லை.

தரிப்பிடத்தில் நேரசூசியைப் பார்க்கலாமென அருகினில் சென்றேன்.

தரிப்பிடக்கூண்டுக்குள் நின்றான் ஒருவன்.

இளைஞன்..!

லத்தீன் அமெரிக்க இடையர்கள் அணிவது போன்ற தொப்பி இணைத்த ஐாக்கெட். அதன் முழு முதுகிலும் FILA என்ற எழுத்துக்கள் சிவப்பில். கண்களை மூடுமளவுக்கு தொப்பியை இழுத்து விட்டதாலோ என்னவோ முகம் தண்ணி இல்லாத கிணறு போல கனிவற்றிருந்தது. அதில் அலட்சியமாக வளர்ந்திருந்த ஓர் ஆட்டுத்தாடி வேறு. தனியாக உலவுபவை மிக மூர்க்கமாக இருக்குமாமே.. ? யானையும் அப்படித்தான். வீதியில் பஸ்சின் முகமும் தெரிவதாயில்லை. நேரசூசியை பார்க்காததால் எப்போது வருமென்றும் தெரியவில்லை. நேற்றுத்தான் ஒரு வாரப்பத்திரிகையில் படித்தேன். அமெரிக்காவில் 24 நிமிடங்களுக்கு ஒரு கொலை நடைபெறுகிறதாம். இரவுபஸ் எப்படியும் ஒருமணித்தியாலத்திற்கு மேற்பட்ட இடைவெளியில்தான் வரும். ஒரு மணித்தியாலத்தில் இரண்டு இருபத்திநான்கு நிமிடங்கள். நடப்பதே உசிதம். நடந்தேன். காற்று குளிர்க்கரங்களால் அறைந்து சென்றது. இருந்தும் நெஞ்சைச் சற்று நிமிர்த்தியே நடந்தேன்.

ஒரு லைட் கம்பத்தைக் கடந்தபோதுதான் கவனித்தேன் என் நிழலும் சற்றுக்கீழே இன்னொரு நிழலும் வீதியில் விழுந்தது. நகர்ந்தது…! இப்போது உடனே திரும்பிப் பார்க்கவேண்டும். மூளையிலிருந்து கட்டளை போயும் ஏனோ கழுத்துத் திரும்பவில்லை. வினாடி அசைவில் சடாரெனத் திரும்பி குருட்டுப்புள்ளி பார்ப்பதுபோல பார்த்தேன். பஸ்தரிப்பில் பார்த்த அதே உருவம் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. உடம்பு திடாரென வெப்பமாகியதை உணர்ந்தேன். தேர்ந்த உதைபந்தாட்டக்காரனுடையதைப் போன்றதல்ல என்னுடைய மூளை. எதையும் ஆறுதலாகத்தான் தீர்மானிக்கும். எனினும் விரைந்து நடக்கவேண்டும் என்று காலை எட்டப்போட்டேன். ஐாக்கெட்டுக்குள் நுழைத்திருந்த கையை வெளியேவிட்டு சற்று வீசவும் செய்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்.

ஊரிலென்றால் என் இளைய நாட்களில் எங்காவது இரவில் நடைப்பயணம் வாய்த்துவிட்டால் பாடுவது வழக்கம். அது நாயையும் பேயையும் விரட்ட. இங்கு எந்த ஐன்னலிலும் வெளிச்சமில்லை. நிலவொளியில் மாடுகள் படுத்திருப்பது தெரிவதுபோல வீதி இருகரையும் கார்கள்தான் நின்றன. எந்தக்கூக்குரலுக்கும் உதவி வராது என்பது நிச்சயம். சிலவேளை யாராவது ஒருவன் பொலிசை அழைக்கலாம். ஆனால் பொலிஸ் வருவதற்கு

முன் காரியம் முடிந்துவிடும்.

பின் தொடர்பவனின் ஆரம்ப எதிர்கொள்ளலின் காட்சிகள்தான் மூளையிலிருந்து வழிந்தன. துவக்கா… ? கத்தியா… ? பணம் மட்டும்தான் குறியாய் இருக்குமா. உயிரும் தேவையாய் இருந்தால்… கேள்விக்கு மேல் கேள்வியாய் மனம் கோர்த்துக் கொண்டே இருந்ததில் உடம்பு தளர்ச்சியடைந்தது. தொலைபேசிக்கு பாவிக்கவென வைத்திருக்கும் குவாட்டரைத் தவிர என்னிடம் பணமேதுமில்லை. இதுவே அவனை எரிச்சலடைய வைத்து அவன் ஆயுதம் பிரயோகிக்கலாம். உயிர் பலியாகும். மனைவியின் கழுத்தை நெரிக்கவேண்டுமென ஆத்திரம் வந்தது. என் பொக்கட் காலியாக இருப்பதற்கு அவளது திருவினைதான் காரணம். சம்பளநாட்களில் குடிகாரப் புருஷன்மாரிடம் காசு வேண்டுவதற்கு சாராயக் கடை முன்னால் மனைவிமார்கள் காவலிருப்பார்களாம். அதேபோல என் மனைவியும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நான் வேலையிலிருந்து வீடு வரும்போது பரந்த சிரிப்பும் கோப்பித்தண்ணியுமாக வரவேற்று எல்லாப்பணத்தையும் வேண்டி விடுகிறாள். சிகரெட்டுக்கும் பியருக்கும் நிறையச் சிலவு செய்து விடுகிறேன் என்ற குற்றச்சாட்டு வேறு கூறியபடி. ஆனால் ஊரிலிருந்து அம்மாவோ அக்காமாரோ திடாரென கொழும்பு வரும்போது மனைவியின் கைதான் என் கவலையைத் தவிர்க்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் யாருடைய கை…!

அவன் எந்த இடத்தில் என்னை நெருங்குவான் என்று ஊகிக்கமுடியவில்லை. பக்கத்தில் ஐீன்தலோன் மெட்ரோ ஸ்ரேசன் வருகிறது. அதனருகில் எப்போதும் ஒரு யூகோஸ்லாவியக் கிழவன் படுத்திருப்பான். (மாஐி மல்யுத்தவீரன். இப்போது வீடற்றவன்.) கிழவன் எந்தவித உதவிக்கும் வரப்போவதில்லை என்றாலும் மூன்றாவது இருப்பில் சற்று துணிவு பிறக்கும் என்ற நினைப்பில் சுற்றுமுற்றும் பார்த்தேன். வழமையாகப் படுத்திருக்கும் இடம் வெறுமையாக இருந்தது. கிழவனைக் காணவில்லை. மைனஸ் 20 குளிரில்க்கூட மஞ்சள் தாடி வெளித்தெரிய துணிமூட்டைக்குள் பொதிந்து போய்க் கிடப்பான். இன்று என் பயணத்தை முடிப்பதற்கு ஏதோ ஒரு சக்தி முனைப்பாக இருக்கிறதோ… ? இதுதான் விதி என்று நினைக்க ஆடுதசைகள் வலுவிழந்து கால்கள் நடுங்கின. என்னிடம் இழப்பதற்கோ பிதொடர்பவனுக்கு கொடுப்பதற்கோ ஒன்றுமேயில்லை. மனைவியும் குழந்தையும்தான் சொத்து. அவர்கள்தான் என் ஆதாரவேர்கள். ஆனால் இன்னும் சில நிமிடங்களில்…

மிகத்தெளிவாக அருகினில் சப்பாத்துச்சத்தம் கேட்டது. காதுகள் ஒரு கடூரமான மனிதக் குரலுக்காய் தயாராகிவிட்டன. ஓடினால் என்ன என்று தீர்மானித்தேன். சுமார் நுாறு மீட்டருக்குள் என்னை எந்தச் சிறுவனாலும் பிடித்துவிட முடியும். அதற்கும் வாய்ப்பில்லை. முடிந்தவரை வேகமாக நடந்தேன்.

அதிக துாரமில்லை. வீட்டிற்கு திரும்பும் சந்திச்சிக்னல் தெரிந்தது. வீடு நெருங்கும்போது மூளை வேறொரு பிரச்சனையை துாக்கிப்போட்டது. சிலபேர் எடுத்த எடுப்பிலேயே எதையும் செய்து விடுவதில்லை. முதலில் கண்காணிப்பு. பின்னர் தாக்குதல். இவன் அந்த வகையைச் சார்ந்தவனோ ? என் அகால வீடுதிரும்பலையும் வீட்டையும் அறிந்து நான் வீட்டிலில்லாத நேரத்தில் வீட்டையுடைத்து களவு செய்ய முனைந்து, மனைவி குழந்தைக்கு ஆபத்து வந்தால்… ? கண்டிப்பாக இவன் வீட்டைத் தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் வைத்துக் கொள்ளக்கூடாது என முடிவெடுத்துக்கொண்டேன்.

வீட்டுக்கு திரும்பும் சந்திப்பில் ஒரு இரவுநேரக் கடையுண்டு. அதற்குள் நுழைந்து கொஞ்சம் நேரங்கடத்திவிட்டு பின்னர் போய்ச் சேர்வதுதான் விவேகம்.

வேகநடையும் பயமும் சேர்ந்து உடம்பு வேர்த்துக் கொட்டியது. கடைவாசலில் நின்று மூச்சைச் சீர்ப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைவதற்கான அழைப்புமணியை அமுக்கினேன். உள்ளுக்குள் இருந்த கடைச்சிப்பந்தி மிகநுட்பமாக என்னை பார்வையால் ஆராய்ந்த பின்னர்தான் கதவைத்திறந்தான். இவனுக்கும் பலத்த பாதுகாப்பு. இரவில் கண்ணாடிக் கூண்டைவிட்டு வெளிவரவே மாட்டான். ஒரு அத்தியாவசியமான பொருளைத் தேடுவதுபோல சில நிமிடங்களைப் போக்கி விட்டு அவனைப் பார்த்து தோளைக் குலுக்கி ஒரு அசட்டுப் புன்னகையையும் தந்து வெளி வந்தேன்.

பின் தொடர்ந்தவனை ரோட்டில் எங்கும் காணவில்லை. வானம் வெளுத்தது போன்று மனது குளிர்ந்தது. பதின்மூன்று மணித்தியாலம் செய்த வேலை அசதிகூட பறந்து போனது. மனதில் பாட்டுக்கூட வந்தது. பயத்தினால் அல்ல…! ஒரு சந்தோசத்தினால்.

மெதுநடை போட்டு சந்தியில் வீட்டுக்கு திரும்பும் போதுதான் கவனித்தேன். அடுத்த பஸ்தரிப்பிலுள்ள நேரசூசியை என்னைப் பின் தொடர்ந்த உருவம் ஆராய்ந்து கொண்டிருந்தது.

***

-மைக்கேல்- 20 – July – 97.

(மேற்படி சிறுகதை 1997ம் ஆண்டு ரொரண்டோவிலிருந்து வெளிவந்து நின்றுபோன ‘தேடல் ‘ இலக்கியச்சஞ்சிகையில் பிரசுரமாகியது)

Series Navigation