வளர்ந்த அமெரிக்கா, வளரும் இந்தியா

This entry is part [part not set] of 20 in the series 20011118_Issue

சின்னக்கருப்பன்


இனிமே காபூல் நகரத்தில் என்ன நிகழ்ந்தாலும் பரவாயில்லை. தாலிபான் காபூல் நகரத்தை விட்டு ஓடும் போது ஒரே ஒரு விஷயம் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. ஆஃப்கானியர்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள்.

வெகுகாலம் வெடிகுண்டுகளால் தாக்கப்பட்டிருந்த இந்த நகரத்தில் கொண்டாட்டம் வெடித்தது. 5 வருடங்களாக ஆண்டுகொண்டிருந்த தாலிபான் அடக்கு முறை திடுமென்று விலக்கப்பட்டபோது, காபூல் நகரத்தின் மக்கள் தங்களது சுதந்திரத்தை உலகத்துக்கே சொல்ல விழைந்தார்கள். எங்கெங்கு பார்த்தாலும் இந்தி சினிமாப் பாட்டுகள் காதைப் பிளக்கும் அளவுக்கு ஓலமிட்டன. எல்லாச் சிறுவர்களும் ஒளித்து வைத்திருந்த பட்டங்களை வெளியே எடுத்துக்கொண்டு தெருவெங்கும் ஓடினார்கள். கார் ஹாரன் சத்தம் காதைப் பிளந்தது. பை சைக்கிள் வைத்திருந்தவர்கள் கூட அந்த மணியை அடித்து ஒலி எழுப்பினார்கள். சவரக்கடைகளின் முன்னே பெரும் வரிசை தங்கள் தங்களது தாடி மீசைகளை எடுக்க நின்று கொண்டிருந்தது. அங்கும் இங்குமாக பெண்கள் தங்களது பர்தாவை எடுத்து மெல்ல முகத்தை சூரிய வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்கள். அமெரிக்க எதிர்ப்பு தேசங்களில் தலையான தேசமாக இருந்த இந்த ஆஃப்கானிஸ்தானில் எல்லோரும் ‘அமெரிக்கா அமெரிக்கா ‘ என்று கத்தினார்கள்.

இது எவ்வளவு முக்கியமான செய்தி என்பது இந்திய தலைவர்களுக்கு புரிய வேண்டும். இஸ்லாமிய தேசங்களில் இருந்தாலும், ஜாதி மத இனம் மொழி தாண்டி எல்லோரும் விரும்புவது சுதந்திரம் என்பது. மிக மிக சாதாரணமான விஷயங்களுக்கான சுதந்திரம். தனக்கு பிடித்த பாட்டை கேட்க சுதந்திரம் வேண்டும். தனக்குப் பிடித்த விளையாட்டை விளையாட சுதந்திரம் வேண்டும். தனக்குப் பிடித்த உடையை உடுத்திக்கொள்ள சுதந்திரம் வேண்டும்.தனக்குப் பிடித்த பட்டத்தை எடுத்துக்கொண்டு தெருக்களில் ஓட சுதந்திரம் வேண்டும். தான் விரும்புவது போல தன் முகத்தில் இருக்கும் முடியை அஷ்டகோரம் பண்ணிக்கொள்ளவும் சுதந்திரம் வேண்டும். அடக்குமுறையாளர்கள் அருகாமையில் நின்று கொண்டிருக்கும் வரை, இந்த அடக்குமுறையை தங்களது கலாச்சாரம் என்று பினாத்திக்கொண்டிருந்த மக்கள், அவர்கள் நகர்ந்த மறுகணமே தங்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தெளிவாகவே சொல்லி விட்டார்கள். (அடக்குமுறையை அவர்களது கலாச்சாரம் என்று சொல்லிப் பினாத்திய கும்பலில் நானும் அடக்கம்)

இந்தக்குரல் ஏற்கெனவே கேட்டதுதான். இறுக்கமான அடக்குமுறையை கைக்கொண்டிருக்கும் கொடுங்கோலர்களும் ராணுவ ஆட்சியாளர்களும் ஆளும் நாட்டில், தங்களது உணர்வுகளையும் கருத்துக்களையும் சொல்ல முடியாமல் இருக்கும் போது அமெரிக்காவின் பெயரையே கூவி அழைக்கிறார்கள். எத்தனையோ அவலங்களுக்கு மத்தியிலும், எத்தனையோ சிஐஏ சதிகளுக்குப் பிறகும், எத்தனையோ மோசடிகளுக்குப் பிறகும், லாப நோக்குடைய அமெரிக்க நிறுவனங்களுக்குப் பிறகும், அமெரிக்கா என்ற தேசம் சாதாரண மக்களிடையே சுதந்திரத்துக்கும் வளமைக்கும் சமானமாகவே பார்க்கப்படுகிறது.

சீனாவில் 1989இல் இதே குரல் ஒலித்தது. மாணவர்கள் பீஜிங்கின் வளாகத்தில் சில மணி நேரம் தோற்று வித்த வசந்தக்காற்று இதே குரலையே பாடியது. சுதந்திர தேவி சிலையை கொச்சையாகக் கட்டினார்கள் இந்த மாணவர்கள். ‘மக்களுக்காக, மக்களால், மக்களுடைய நாடு வேண்டும் ‘ என்று தங்கள் ஆர்வத்தை கூறினார்கள். ராணுவ டாங்கிகள் அவர்களை நிறுத்தும் வரை. இந்தக் குரல், அடிப்படை மனிதக் குரல். எல்லோரையும் போல அவர்களும் சுதந்திரத்தை மதித்தார்கள்.

இதே குரல்தான் சோவியத் யூனியனிலும் ஒலித்தது. 70 வருட கம்யூனிஸ அடக்குமுறைக்குப் பின்னர் போரிஸ் எல்ட்ஸின் என்ற அநாகரிக அரசியல்வாதி பாராளுமன்றத்தின் படிக்கட்டுகளில் நின்று ருஷ்ய கொடியை அசைத்தபோதும் இதே குரல் தான் கேட்டது.

இதே குரலே, பர்மாவிலும், தெற்கு கொரியாவிலும் வடக்கு கொரியாவிலும், பிலிப்பைன்ஸ் நாட்டிலும் கேட்டது. இதே குரல் இன்று ஆஃப்கானிஸ்தானின் காபூல் நகரிலும் கேட்கிறது.

இந்தியாவின் தலைவர்கள் இந்த குரலை மதிக்கவேயில்லை என்பதுதான் வருத்தம். பர்மாவின் அடக்குமுறை ராணுவ தளபதிகளோடு கொஞ்சிக் குலவிக்கொண்டும், ஆக்ராவில் பாகிஸ்தானிய ராணுவ அதிகாரியோடு பிரியாணி சாப்பிட்டுக்கொண்டும், இஸ்லாமிய அடக்குமுறை அரசாங்கங்களின் கொடுங்கோலர்களோடு வியாபாரம் செய்து கொண்டும் அவர்கள் இந்தியாவின் இன்றைய நலனையும் பாதுகாப்பையும் பார்க்கிறார்களே தவிர, இந்தியாவின் சுதந்திரக்குரல் எல்லா மக்களின் இதயக்குரலாகவும் இருப்பதை அவர்கள் உதாசீனம் செய்தே வந்திருக்கிறார்கள்.

ஜனநாயகம் நம்மைச் சுற்றி இருக்கும் தேசங்களையும் அதன் மக்களையும் காப்பாற்றும். அந்த நாடுகளில் இருக்கும் ஜனநாயகமே இந்தியாவின் பாதுகாப்பு. ஜனநாயகம் இருக்கும் கனடா தேசத்தைப் பார்த்தோ மெக்ஸிகோ தேசத்தைப் பார்த்தோ அமெரிக்கா பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், சர்வாதிகாரம் இருக்கும் கியூபாவைப் பார்த்து அஞ்சுகிறது.

ஆனால், வருத்தம் என்னவென்றால், ஆசியாவிலேயே ஜனநாயகம் இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. துருக்கியில் ராணுவமே ஜனநாயகத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறது. அதிலிருந்து பாகிஸ்தான் வரை எந்த நாட்டிலும் ஜனநாயகம் இல்லை. பிறகு இந்தியாவிலும் ஓரளவுக்கு இலங்கை நேபாள் தேசங்களில் அரைகுறை ஜனநாயகம் அவ்வப்போது வந்து போய்கொண்டிருக்கிறது. வெகுகாலம் கழித்து இப்போதுதான் ஒரு ஐந்து வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆட்சியை முடித்திருக்கிறார் பங்களாதேஷில். பிறகு அங்கிருந்து வியத்நாம் வரைக்கும் சுதந்திரமோ ஜனநாயகமோ இல்லை. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் ஒருவித அடக்குமுறை பெயரளவுக்கு ஜனநாயகம். ஜப்பானிலும் பிலிப்பைன்ஸ் தேசத்திலும் கொரியாவிலும் அமெரிக்காவின் ராணுவத்தளங்கள் இருக்கின்றன. அதுவும் வலிந்து திணிக்கப்பட்ட ஜனநாயகமே. இத்தனைக்கு மத்தியில் ஒரே ஒரு சுதந்திர ஜனநாயக தேசமாக இந்தியா இருக்கிறது. இது ஆசியாவில் இருக்கும் எல்லா மக்களுக்கும் ஒரு ஆதர்சமாக ஆகியிருக்க வேண்டும். ஆனால், ஜனநாயகம் இருந்தும், பொருளாதார ஜனநாயகம் இல்லாததால், சுதந்திர தொழில் முனைவோர்களைக் கட்டுப்படுத்தும் அதிகார வர்க்கம் இருப்பதால், அந்த ஜனநாயகம் வளமையாக வெளிப்பட முடியாமல் திணறுகிறது. இதனால், ஜனநாயகத்துக்கே ஒரு கெட்ட பெயர்க் கூட வருகிறது.

பொருளாதார சுதந்திரம், அரசியல் சுதந்திரம், (தாலிபானுக்குப் பின்னர்) பொழுது போக்குச் சுதந்திரம் போன்றவை போலவே முக்கியமானது. நம் அரசியல்சட்டத்தில் சொத்துரிமை ஒரு அடிப்படை உரிமையாக எழுதப்படவில்லை என்பது முக்கியமான விஷயம். சோஷலிஸத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த நேரு, சொத்துரிமையை ஒரு அடிப்படை உரிமையாக இந்திய அரசியல் சட்டம் ஏற்கக்கூடாது என்று வறுபுறுத்தினார். அதன் விளைவோ அல்லது வெள்ளையர் விட்டுச்சென்ற ஊழல் அதிகாரிகள் வழித்தோன்றல்களோ, இந்தியாவை பொருளாதார சுதந்திரமற்ற நாடாக இன்று உருவாக்கி விட்டிருக்கிறது.

இதைத் தாண்டி இந்தியா நகரும் வழிக்கான ஒற்றையடிப் பாதை நரசிம்மராவால் உருவாக்கப்பட்டது. அது இன்று ஓரளவுக்கு பெரிதாகி ஆட்டோ ரிக்ஷா போகும் அளவுக்கு ஆகியிருக்கிறது. (அதன் பக்க விளைவுகளான, வட்டி விகிதம் குறைப்பு, வங்கி சேமிப்பால் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் பல முதியவர்களை பாதிக்கிறது.) இது மவுண்ட் ரோடு போல ஆகும் போது நாம் அமெரிக்காவுக்கு சமமாக இருப்போம். அதற்கு, மற்றவர்களால் தயாரிக்க முடியாத பல தொழில் நுட்பங்கள் நம் சொந்தமாக இருக்க வேண்டும். (அமெரிக்காவிடம் கணினிச்சில்லுகளும், விமானங்களும், ராணுவத் தளவாடங்களும், விண்கலங்களும் இருப்பது போல)

நம்முடைய பாதுகாப்பு நம் பொருளாதார சுதந்திரத்திலும், நம் அரசியல் சுதந்திரத்திலும் இருப்பதை உணரும் அதே வேளையில், இந்த சொத்துக்களை அழிக்க உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வரும் ஆபத்துகளை எதிர்த்து காப்பாற்றிக்கொள்ளவும் வேண்டும்.

பொருளாதார சுதந்திரத்துக்கான போராட்டம் பாராளுமன்றத்திலும் உலக வர்த்தக நிறுவனத்தில் முரசொலி மாறனாலும் நடத்தப்படுகிறது. அரசியல் சுதந்திரத்துக்கான போராட்டம் நம் ஒவ்வொருவராலும் நடத்தப்பட வேண்டும்.

உதாரணமாக, நமது அரசியல் சுதந்திரம் நம்மைச் சுற்றி இருக்கும் நாடுகள் ஜனநாயக சுதந்திரம் உடையதாக இருந்தாலே பத்திரமாக இருக்கும். அதற்காக நாம் நம்மைச் சுற்றி இருக்கும் நாடுகளில் ஜனநாயகத்தையும் அரசியல் சுதந்திரத்தையும் ஆதரிக்க வேண்டும். பக்கத்து நாடுகளின் ராணுவங்கள் இந்தியாவுக்குள் பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஏற்றுமதி செய்யும் போது, நாம் அந்த நாடுகளுக்குள் ஜனநாயகத்தையும், சகிப்புத்தன்மையையும், ஒற்றுமையையும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் அல்லவா ?

பர்மா ஜனநாயக மாணவர் அமைப்புகளுக்கும், திபெத் சுதந்திரத்துக்கும், ஜனநாயகத்துக்கும், அடக்குமுறைக்கு ஆட்படும் பாகிஸ்தானின் ஜனநாயக அரசியல் கட்சிகளுக்கும் இந்தியா புகலிடமாக இருக்க வேண்டும். பாகிஸ்தான் எப்படி இந்தியாவில் நடக்கும் பயங்கரவாதத்துக்கு ‘அரசியல் தார்மீக ‘ ஆதரவு அளிக்கிறதோ அது போல, இந்தியாவும் பாகிஸ்தானின் ஜனநாயகத்துக்கு ‘அரசியல் பொருளாதார தார்மீக ‘ ஆதரவு அளிக்க வேண்டும். உதாரணமாக, நவாஸ் ஷெரீப்புக்கும், பெனசீர் புட்டோவுக்கும் முஷாரப்புக்கு கொடுத்த மரியாதையை விட அதிக மரியாதையை அளித்து பேச வேண்டும். ஆஃப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி அமைப்பதே இந்தியாவின் முதல் குறிக்கோள் என்று பறைசாற்ற வேண்டும். பர்மாவில் ஜனநாயக ஆட்சி அமைவதே இந்தியாவின் குறிக்கோள் என்பதை தெளிவாக உலகுக்குக் கூறவேண்டும். இதற்கு அடிப்படைத் தேவையாக இந்தியாவுக்குள் மக்களின் குரல் மதிக்கப்பட வேண்டும். காஷ்மீரில் ஹரியத் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதனை மதிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சி போன்றவைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவை மதிக்கப்பட வேண்டும். தொடர்ந்த ஜனநாயக ஆட்சியே மக்களது சுதந்திரம். அதுவே அவர்களது வெற்றி. ஜனநாயக ஆட்சிமுறை மூலமாகவே மக்கள் தங்களை தாங்களே ஆண்டுகொள்ள வழி அமைக்க வேண்டும்.

எங்கெங்கெல்லாம் சுதந்திரத்தின் வேட்கை இருக்கிறதோ, எங்கெங்கெல்லாம் ஜனநாயகம் வேண்டிய குரல் கேட்கிறதோ, அங்கெல்லாம் இந்தியாவின் ஆதரவுக்கரம் நீட்டப்பட வேண்டும்.

அதுவே இந்தியாவின் எதிர்கால பாதுகாப்புக்கும் வளமைக்கும் காப்பு.

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்